"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, August 30, 2023

திருப்பாசுர ஏடு எதிரேறிய திருவிழா - 30.08.2023

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய ஆவணி பௌர்ணமி அன்று மாலை 6 மணிக்கு மேல் திருப்பாசுர ஏடு எதிரேறிய திருவிழா திருவேடகம் ஏலவார் குழலியம்மன் சமேத ஏடகநாதர் திருக்கோயிலில் இன்று நடைபெற உள்ளது. திருமுறைகளை நம் உயிர்த்துணையாக கொண்டு இருக்கும் ஒவ்வொரு அடியாரும் இன்றைய திருப்பாசுர ஏடு எதிரேறிய திருவிழா பற்றி அறிய வேண்டும் என்றே இந்தப் பதிவை அறிய தருகின்றோம். 

திருமுறைகள் என்றால் ஒன்று, இரண்டு இருக்கும் என்று எண்ண வேண்டாம். மொத்தம் பன்னிரு திருமுறைகள் உண்டு. கலியுகத்தில் நமக்கு ஊழ்வினையால் ஏற்படும் துன்பங்களுக்கும், வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து துன்பங்களுக்கும், பிறவி என்னும் மிகப்பெரிய பிணிக்கும், மருந்தாக அமைந்து நம்மைக் காத்து அருள்வது பன்னிரு திருமுறைகள் எனப்படும் சிவ ஆகமங்களாகும். மிகவும் பெருமைமிக்கது, அளப்பரியது, ஆற்றல்மிக்கது. வேத ஆகமங்கள் மற்றும் சைவ சித்தாந்தத்தின் பிழிந்த சாறாக, நமக்கு இன்பம் தரும் நமது தமிழ் மொழியில், அருளாளர்கள் வழியாக இறைவனால் நமக்கு அருளப்பட்டது, பன்னிரு திருமுறை என்னும் தமிழ் வேதம். நம்முடைய துன்பங்கள் அனைத்திற்க்கும் மூல காரணமாக விளங்குவது நம் அறியாமை. அந்த அறியாமையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் பெரிதும் உதவுகின்றன. வினை வயப்பட்டுத் துன்புறும் நாம் திருந்தி உய்யும் பொருட்டு, இறைவன் அருளாளர்களை இப்பூமிக்கு அனுப்பி அவர்கள் வாயிலாக நமக்கு இந்த திருமுறைகளை அருளிச் செய்துள்ளான். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிகுந்த மந்திர ஆற்றல் உடையவை. திருமுறைகளை நாம் பாராயணம் செய்து ஓதுவித்தால், அதில் உள்ள மந்திர ஆற்றல், நம் உயிரில் கலந்து நமது அறியாமையைப் போக்கும். யாராலும் மாற்றியமைக்க முடியாத நம் விதியை, இறைவனின் கருணையினால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். விதியை மதியால் வெல்வது என்பது திருமுறைகளை ஓதுவித்து, இறைவன் அருள்பெற்று, நம் விதியை மாற்றுவதேயாகும்.


பன்னிரு திருமுறைகளால் நம் ஆன்மீக பூமியில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சில:


  • பாண்டிய மன்னன் வெப்பு நோய் தீர்ந்து, கூன் நிமிர்ந்தது. 
  • வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு திறந்து, பின் தாளிட்டது. 
  • பாலை நிலம் நெய்தல் ஆனது. 
  • தேவார ஏடுகள் தீயில் கருகாமல் பச்சையாக இருந்தது, 
  • வைகை ஆற்று வெள்ளத்தில் எதிரே நீந்தியது. 
  • ஆண் பனை பெண் பனையாயிற்று. 
  • எலும்பு பெண்ணாகியது. 
  • விடத்தினால் இறந்த செட்டி உயிர் பெற்றார். 
  • ஆற்றில் போட்டது குளத்தில் கிடைத்தது. 
  • சுண்ணாம்பு காளவாயில் 7 நாட்கள் உயிரோடு இருந்தது. 
  • மதயானையை வணங்கச் செய்தது. கல்லில் கட்டி கடலில் வீசியவர் தெப்பமாக மிதந்து கரை சேர்ந்தது. 
  • நரி குதிரையாகியது. 
  • முதலை விழுங்கிய பிள்ளை 3 ஆண்டுகள் கழித்து மீண்டது. 
  • பிறவி ஊமை பேசியது. 
  • சிவபெருமானே தம் கைப்பட எழுதியது நூலானது. 


இன்னும் பல எண்ணற்ற அற்புதங்களை செய்துள்ளது பன்னிரு திருமுறை. திருமுறையே சைவநெறிக் கருவூலம், செந்தமிழ் வேதம். இவற்றுள் வைகை ஆற்று வெள்ளத்தில் நீந்தியதை திருப்பாசுர ஏடு எதிரேறிய திருவிழாவாக இன்றைய ஆவணி பௌர்ணமியில் கொண்டாடி வருகின்றார்கள்.

சோழவந்தான் அருகே திருவேடகம் ஏலவார் குழலியம்மன், ஏடகநாதர் சுவாமி கோயிலில் ஆவணி உற்சவம் நடக்கிறது. 

"ஏழாம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த மன்னன், வெப்ப நோயால் பாதிக்கப் பட்டார். நோய் நீங்கி மன்னன் சுகமடைய, திருஞானசம்பந்தர் மதுரை வந்தார். அங்கு சமணர்களுக்கும், திருஞானசம்பந் தருக்கும் அனல்வாதம், புனல் வாதம் நடந்தது. இதில் வைகை ஆறு தண்ணீரில் விடப்பட்ட ஞானசம்பந்தரின் "திருப்பாசுர பதிக ஏடு', நீரை எதிர்த்து நீந்தி நின்றது. அந்த இடத்தில் சிவன் ஆலயம் இருந்தது. அதனால் "திருஏடு நின்ற இடம்' என அழைக்கப் பட்டது. காலப்போக்கில் இது திருவேடகம் என மாறியது'. இந்நிகழ்ச்சியை குறிக்கும் வகையில், பல ஆண்டுகளாக நடக்கும் இந்த "ஏடு எதிரேறிய' திருவிழா, ஆக.30 ஆவணி பவுர்ணமியன்று மாலை ஆறு மணிக்கு திருவேடகம் வைகை ஆற்றில் நடக்கிறது. காலை 10 மணிக்கு சுவாமி, அம்மன், திருஞானசம்பந்தர், பஞ்சமூர்த்திகளுடன் வீதிஉலா சென்று, வைகை ஆற்றில் எழுந்தருளி அருள்பாலிப்பார். 




Read more at: https://m.dinamalar.com/detail.php?id=68380





ஆவணி பௌர்ணமி  அன்று வையை ஆற்றில் ஏடு எதிரேறிய நன்னாள்.

"எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும்" என்று தம்பிரான் திருமகனார் , திருவுடைய பிள்ளையார் தம் திருக்கையால் இட்ட ஏடு , பொருபுனல்  வையை ஆற்றில் நீர் கிழித்து போய் , இருநிலத்தோர்க்கெல்லாம் "இது பொருள்" என்று காட்டி 

ஆற்றின் தென்கரையை தீக்ஷ மண்டபமாக்கி , தென்னவனுக்கு திருநீறளித்து , மதுரை மக்களும் அணிந்து, சைவ சமயமே மெய்ச்சமயம் என்று ஏற்றுப்போற்றி ஒழுகிய தினம்.

மேற்படி நிகழ்வு , ஆவணி பௌர்ணமியில் தான் நடந்தது என்று பெரிய புராண பிரமாணம்  இல்லாதெனினும் , திருவேடக சிவாலயத்தின் ஐதீக மரபின் வழி இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.

இந்நாளில் மதுரை மக்கள் எந்நாளும் போற்ற வேண்டிய இருபெரும் தகையோர்

1, வளவர்கோமான் திருவுயிர்த்தருளுஞ் செல்வப் பாண்டிமாதேவியாரும் 

2, குரைகழல் அமைச்சனாராங் குலச்சிறையாரும் 

ஆவர்.

அன்னோர்களின் அளவற்ற கருணையினாலன்றோ பாலறா வாயர் , தமிழ்நாட்டிற்கு எழுந்தருளி சைவ ஸ்தாபனம் செய்ததும், அற்புதம்! அற்புதம்! என அரும்பெரும் பொருந்திசைத் திருப்பதிகம் பாடி நம்மையெல்லாம் உய்வித்ததும் ஆம்.

திருஞானசம்பந்த சுவாமிகள்  - திருக்கடைக்காப்பு  

3 -ஆம் திருமுறை  - திருஆலவாய் (மதுரை) பதிகம் 3.054  
வாழ்க அந்தணர், வானவர், ஆன்

பண் - கௌசிகம்   

சமணர்கள் தங்கள் ஏடு எரிந்து சாம்பலானதைக் கண்டு மன்னனை நோக்கி ஓர் வாதினை மும்முறை செய்து உண்மை காணுதலே முறையாகும். ஆதலால் இருதிறத்தாரும் தத்தம் சமய உண்மைகள் எழுதிய ஏட்டினை ஆற்றில் இடும்போது எவருடைய ஏடு எதிரேறிச் செல்கின்றதோ அவர்கள் சமயமே மெய்ச்சமயம் எனக் கொள்ளலாம் என்றனர். அப்பொழுது அமைச்சர் குலச்சிறையார் இதிலும் தோற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பு யாது எனக் கேட்டார். சமணர்கள் இவ்வாதில் தோல்வியுற்றோமானால் எங்களை இவ் வேந்தன் கழுவேற்றி முறை செய்யலாம் என்றனர். மன்னனும் உடன் பட்டான். ஞானசம்பந்தரும் சமண முனிவர்களும் வைகையாற்றின் கரையை அடைந்தனர் முதலில் சமணர்கள் தங்கள் சமய உண்மை யாகக் கூறும் அஸ்தி நாஸ்தி என்ற வசனத்தை எழுதி ஆற்றிலிட்டனர். அம்மொழி ஆற்று நீரோட்டத்தை எதிர்க்கும் ஆற்றலின்றி நீர் ஓடும் நெறியிலேயே விரைந்தோடிற்று. அதனைக் கண்ட சமணர்கள் நீவிரும் உமது சமய உண்மையை எழுதி நீரில் இடுக எனக்கூறினர். ஞான சம்பந்தர், திருப்பாசுரம் எனப்படும் வாழ்க அந்தணர் என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்து, அதனை ஏட்டில் எழுதச் செய்து அவ் ஏட்டை ஆற்றில் இட்டருளினார். ஏடு வைகை ஆற்று வெள்ளத்தைக் கிழித்து எதிர் ஏறிச் சென்றது.

வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!
வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக!
ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே
சூழ்க! வையகமும் துயர் தீர்கவே! [ 1]

அரிய காட்சியராய், தமது அங்கை சேர்
எரியர்; ஏறு உகந்து ஏறுவர்; கண்டமும்
கரியர்; காடு உறை வாழ்க்கையர்; ஆயினும்,
பெரியர்; ஆர் அறிவார், அவர் பெற்றியே? [ 2]

வெந்த சாம்பல் விரை எனப் பூசியே,
தந்தையாரொடு தாய் இலர்; தம்மையே
சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால்;
எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ! [ 3]

ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும்
கேட்பான் புகில், அளவு இல்லை; கிளக்க வேண்டா;
கோள்பாலனவும் வினையும் குறுகாமை, எந்தை
தாள்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்க, தக்கார் [ 4]

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா; சுடர்விட்டு உளன், எங்கள் சோதி;
மா துக்கம் நீங்கல் உறுவீர், மனம்பற்றி வாழ்மின்!
சாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே [ 5]

ஆடும்(ம்) எனவும், அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும்(ம்) எனவும், புகழ் அல்லது, பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும்(ம்) அறுக்கும்(ம்) எனக் கேட்டிர் ஆகில்,
நாடும் திறத்தார்க்கு அருள் அல்லது, நாட்டல் ஆமே? [ 6]

கடி சேர்ந்த போது மலர் ஆன கைக் கொண்டு, நல்ல
படி சேர்ந்த பால்கொண்டு, அங்கு ஆட்டிட, தாதை பண்டு
முடி சேர்ந்த காலை அற வெட்டிட, முக்கண் மூர்த்தி
அடி சேர்ந்த வண்ணம்(ம்) அறிவார் சொலக் கேட்டும் அன்றே! [ 7]

வேதமுதல்வன் முதல் ஆக விளங்கி, வையம்
ஏதப்படாமை, உலகத்தவர் ஏத்தல் செய்ய,
பூதமுதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே! [ 8]

பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட, வாடி
பேர் ஆழியானது இடர் கண்டு, அருள் செய்தல் பேணி,
நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்குப்
போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே! [ 9]

மால் ஆயவனும் மறைவல்லவன் நான்முகனும்
பால் ஆய தேவர் பகரில், அமுது ஊட்டல் பேணி,
கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிது ஆய் எழுந்த
ஆலாலம் உண்டு, அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே! [ 10]

அற்று அன்றி அம் தண் மதுரைத் தொகை ஆக்கினானும்,
தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர்ப்
பற்று இன்றிப் பாங்கு எதிர்வின் ஊரவும், பண்பு நோக்கில்,
பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே! [ 11]

நல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன், நல்ல
எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல்,
பல்லார்களும் மதிக்கப் பாசுரம் சொன்ன பத்தும்,
வல்லார்கள், வானோர் உலகு ஆளவும் வல்லர் அன்றே!  [12]

உலக நன்மையின் பொருட்டு வேள்விகள் , அர்ச்சனைகள் , வழிபாடுகள் ஆகியவை செய்யும் அந்தணர்கள் வாழ்க . அவ்வேள்விகளைச் சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்கள் வாழ்க . வேள்வி , வழிபாடு இவற்றிற்குரிய பஞ்ச கௌவியங்களையும் , திருநீற்றினையும் அளிக்கும் பசுக்கூட்டங்கள் வாழ்க . வேள்வியின் பயனால் குளிர்ந்த மழை பொழிக . சிவாலய பூசை முதலியவற்றை அழியாது காத்துவரும் மன்னனின் செங்கோலாட்சி ஓங்குக . வேள்விகளால் வரும் நலங்களை அடைய வொட்டாது கேடுவிளைவிக்கும் அயனெறிகளிலுள்ள தீயவை ஆழ்க . உயிர்கள் யாவும் சிவன் நாமத்தை ஓதுக . இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக .

பாச ஞானத்தாலும் , பசு ஞானத்தாலும் காண்பதற்கு அரியவர் . பதிஞானத்தால் உணரும் மெய்யன்புடைய அடியவர்க்கு அவர் திருமேனி தரித்து வந்து , நெருப்பேந்திய கையர் , ஏறுகந்தேறுவர் , கண்டமும் கரியவர் , காடுறை வாழ்க்கையராய் எளிதிற்காட்சி அருளுவர் . ஆயினும உலகத்தையே தம் வடிவமாகக் கொண்ட பெரியவர் . அவருடைய தன்மையை யாவரால் அறிந்து கொள்ள முடியும் ?

இறைவன் வெந்த சாம்பலை வாசனைப் பொடியெனப் பூசியவர் . தந்தையும் , தாயுமில்லாதவர் . தம்மை இடையறாது சிந்திப்பவர்கள் வினையைத் தீர்ப்பவர் . அத்தகைய எம் தந்தையாரான அவரின் பண்புகளை எவ்வகைக் கூற்றால் கூறுவது .

இறைவன் பக்குவமுடைய உயிர்கட்கு அருள்புரிகின்ற தன்மையும் , பழமை வாய்ந்த புகழ்களும் கேட்கவும் , சொல்லவும் தொடங்கினால் அளவில்லாதன . ஆதலால் அவைபற்றிய ஆராய்ச்சி வேண்டா . எம் தந்தையாகிய இறைவனின் திருவடிகளைச் சார்ந்து வணங்கி அவன் புகழ்களைக் கேட்கும் அடியவர்கட்குக் கோள்களாலும் , தீயவினைகளாலும் துன்பம் உண்டாகாது . தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க - என்றது திருவடி ஞானம் கைகாட்ட அதனுள் அடங்கி நின்றுணர்வதாகிய நிட்டை கூடல் என்னும் நான்காவது ஞானநிலை .

இறைவனை அன்பால் வழிபடும் ஞானிகளே ! அனுமானப் பிரமாணத்தாலும் உரையளவையாலும் இறைவனை மிகுதியாகச் சோதிக்க வேண்டா . அவன் ஊனக்கண் கொண்டு நோக்கப்புறத்தே சோதிவடிவமாகவும் , அன்போடு கூடி அகத்தால் ஞானக்கண் கொண்டு நோக்க உள்ளொளியாகவும் விளங்குபவன் . அவனை விரைவில் வந்து சார்ந்து , மனம் ஒன்றி வழிபட்டுப் பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள் . இறைவன் அளவைகளால் அறியப்படும் ஆராய்ச்சிக்கு அப்பாற் பட்டவன் .

இறைவன் திருநடனம் புரிவதும் , மார்க்கண்டேயருக்காகக் காலனைக் காலால் உதைத்ததும் , வேதங்களை அருளிச் செய்ததும் ஆகிய செயல்கள் புகழ் கருதியா , மன்னுயிர்களின் தீவினைகளை நீக்குவதற்கா , பிறப்பை அறுத்துப் பிறவா நெறியை அளிப்பதற்கா என்று கேட்பீராயின் , இவை தன்னைச் சார்ந்த அடியார்கட்கு அருள் செய்வதற்கேயன்றி வேறு காரணத்தாலல்ல என்று உறுதியாகக் கூறலாம் . இறைவன் உயிர்களிடத்துக் கொண்ட அளப்பருங் கருணையே அவன் செயல்கட்குக் காரணம் .

சண்டீசர் நறுமணமுடைய மலர்களைத் தூவிப் போற்றி , நல்ல பசுவின் பால் கொண்டு மணலாலான சிவலிங்கத்திற்குத் திருமுழுக்காட்டத் தந்தை கோபம் கொண்டு காலால் இடற , சிவபூசைக்கு இடையூறு செய்த கால் மீது அருகிலுள்ள கோலை எடுத்து ஓச்ச , அது மழுவாக மாறிக் காலை வெட்டினாலும் , முக்கண் மூர்த்தியான் சிவபெருமான் அவ்வடியவருக்குத் திருவடிப்பேற்றினை அளித்தருளியதை அறிவு சால் அன்பர்கள் அன்றே சொல்லக் கேட்டோம் அல்லமோ ?

வேதத்தை அருளிச் செய்தவனாய் , வேதப் பொருளாகவும் விளங்கும் சிவபெருமானை முதல்வனாகக் கொண்டு , குற்றம் செய்யாது நன்னெறியில் நிற்கும் பொருட்டு உலகத்தோர் அவனைப் போற்றிசைக்க , பூத நாயகனான அவனைப் போற்றிச் சூதமுனிவர் அருளிச் செய்த பதினெட்டு புராணங்களும் ஒழுக்கத்தைப் போதிப்பனவாகும் .

கடல்போல் பெருகியுள்ள இப்பூவுலக மக்கள் பகைவர்களால் நலிவுறுத்தி அலைக்கப்பட , அவர்கள் துன்பத்தை அறிந்து அருள் செய்ய விரும்பி , தான் கண்துயிலும் கடலைவிட்டுப் பூமிக்கு வந்து , தம்மைத் தன்நெஞ்சிடமாகக் கொண்ட திருமாலுக்கு அவர் வேண்டுகோளுக்கிணங்கக் காத்தல் தொழில் நன்கு நிகழப் பேராற்றல் மிகுந்த சக்கராயுதப் படையைச் சிவபெருமான் ஈந்தது மெய்யான புகழ் அன்றோ ?

திருமாலும் , நான்மறைகளையும் நன்கு கற்ற பிரமனும் , பலராகிய தேவர்களும் சொல்வதற்கரிய அமுதுண்ண விரும்பி , பாற்கடலைக் கடைய அரிதாய் எழுந்த ஆலகால விடத்தை உண்டு , தேவர்களைக் காத்து அருள்செய்தவர் சிவபெருமான் .

சிவபெருமான் முன்னர்க்கூறிய புகழுரைகட்கு மட்டுமன்றி , மதுரையில் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தருளியவர் . சிவபெருமானே முழுமுதற்பொருள் எனத் தெளிவு பெறாதவர்கள் தெளிவுபெறும் பொருட்டு வாதத்தில் உண்மைகாண ஞானசம்பந்தர் இட்ட ஏடு பற்றற்ற சிவஞானிகளின் மனம் பிறவியாற்றை எதிர்த்துச் செல்வது போல , வையையாற்றை எதிர்த்துச் சென்ற தன்மையை நோக்கில் , இடபவாகனத்தின் மீதேறிய சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்பது உண்மையாகும் . ஆதலால் அவர்பால் அன்பு செய்தல் கடன் என்பது குறிப்பு . ஞானசம்பந்தர் சமணர்களோடு புனல்வாதம் செய்ததற்கும் , அப்போது அவரிட்ட ஏடு வையையாற்றை எதிர்த்துச் சென்ற அற்புத நிகழ்ச்சிக்கும் இப்பாடலே அகச்சான்றாகும் .

சிவஞானிகள் வாழ்கின்ற புகலி எனப்படும் சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் , மெய்யன்பர்களால் நன்கு வணங்கப்படும் சிவபெருமானைப் போற்றிப் பாடிய பாடல்கள் பலராலும் மதிக்கப்படும் திருப்பாசுரம் ஆகும் . இதனை ஓத வல்லவர்கள் வானுலகை ஆளும் வல்லமை பெறுவர் .

நன்றி: http://thevaaram.org

திருஞானசம்பந்ததேவ நாயனார் திருவடிகள் போற்றி!

ஸ்ரீ மங்கையற்கரசி அம்மையார் பொற்பாதங்கள் போற்றி!!

ஸ்ரீ குலச்சிறை நாயனார் திருவடிகள் போற்றி!!

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் 7 - https://tut-temples.blogspot.com/2022/02/7-7.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஆறாம் நாள் 6 - https://tut-temples.blogspot.com/2022/02/7-6.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஐந்தாம் நாள் 5 - https://tut-temples.blogspot.com/2022/02/7-5.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4 - https://tut-temples.blogspot.com/2022/02/7-4.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

Read more at: https://m.dinamalar.com/detail.php?id=68380

No comments:

Post a Comment