"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, September 2, 2023

தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில்

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முருகன் அருள் முன்னிற்க, தினம் ஒரு முருகன் ஆலயம் தொடர்பதிவில் தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்  மற்றும்   தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் பற்றி அறிந்து கொண்டோம். இன்றைய பதிவில் திருப்புகழ் தலக் கோயிலாக  திருவள்ளூர் திருவாலங்காடு கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க அருளும் வடாரண்யேஸ்வரர் கோவில் தரிசனமும், அங்கே பாடப்பெற்ற நான்கு திருப்புகழ் படிக்க உள்ளோம்.

கனவாலங் கூர்விழி, புவிபுனல் காலும்,பொன்றா மன்று , வடிவது நீலம் என்று  நான்கு  திருப்புகழ் பாடப்பெற்ற திருப்புகழ் தலமாக திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. முதலில் மேற்சொன்ன நான்கு திருப்புகழ் படித்து மகிழ்வோம்.



திருப்புகழ் 673 கனவாலங் கூர்விழி  (திருவாலங்காடு)

தனதானந் தானன தானன
     தனதானந் தானன தானன
          தனதானந் தானன தானன ...... தனதான

......... பாடல் .........

கனவாலங் கூர்விழி மாதர்கள்
     மனசாலஞ் சால்பழி காரிகள்
          கனபோகம் போருக மாமிணை ...... முலைமீதே

கசிவாருங் கீறுகி ளாலுறு
     வசைகாணுங் காளிம வீணிகள்
          களிகூரும் பேயமு தூணிடு ...... கசுமாலர்

மனவேலங் கீலக லாவிகள்
     மயமாயங் கீதவி நோதிகள்
          மருளாருங் காதலர் மேல்விழு ...... மகளீர்வில்

மதிமாடம் வானிகழ் வார்மிசை
     மகிழ்கூரும் பாழ்மன மாமுன
          மலர்பேணுந் தாளுன வேயரு ...... ளருளாயோ

தனதானந் தானன தானன
     எனவேதங் கூறுசொல் மீறளி
          ததைசேர்தண் பூமண மாலிகை ...... யணிமார்பா

தகரேறங் காரச மேவிய
     குகவீரம் பாகும ராமிகு
          தகைசாலன் பாரடி யார்மகிழ் ...... பெருவாழ்வே

தினமாமன் பாபுன மேவிய
     தனிமானின் தோளுட னாடிய
          தினைமாவின் பாவுயர் தேவர்கள் ...... தலைவாமா

திகழ்வேடங் காளியொ டாடிய
     ஜெகதீசங் கேசந டேசுரர்
          திருவாலங் காடினில் வீறிய ...... பெருமாளே.

திருப்புகழ் 675 புவிபுனல் காலும்  (திருவாலங்காடு)

தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
     தனதன தானந் தாத்த ...... தனதான

......... பாடல் .........

புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி
     புதுமன மானும் பூட்டி ...... யிடையூடே

பொறிபுல னீரைந் தாக்கி கருவிகள் நாலுங் காட்டி
     புகல்வழி நாலைந் தாக்கி ...... வருகாயம்

பவவினை நூறுங் காட்டி சுவமதி தானுஞ் சூட்டி
     பசுபதி பாசங் காட்டி ...... புலமாயப்

படிமிசை போவென் றோட்டி அடிமையை நீவந் தேத்தி
     பரகதி தானுங் காட்டி ...... யருள்வாயே

சிவமய ஞானங் கேட்க தவமுநி வோரும் பார்க்க
     திருநட மாடுங் கூத்தர் ...... முருகோனே

திருவளர் மார்பன் போற்ற திசைமுக னாளும் போற்ற
     ஜெகமொடு வானங் காக்க ...... மயிலேறிக்

குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி
     குதர்வடி வேலங் கோட்டு ...... குமரேசா

குவலயம் யாவும் போற்ற பழனையி லாலங் காட்டில்
     குறமகள் பாதம் போற்று ...... பெருமாளே.


திருப்புகழ் 674 பொன்றா மன்று  (திருவாலங்காடு)

தந்தானந் தாத்தம் தனதன
     தந்தானந் தாத்தம் தனதன
          தந்தானந் தாத்தம் தனதன ...... தனதான

......... பாடல் .........

பொன்றாமன் றாக்கும் புதல்வரும்
     நன்றாமன் றார்க்கின் றுறுதுணை
          பொன்றானென் றாட்டம் பெருகிய ...... புவியூடே

பொங்காவெங் கூற்றம் பொதிதரு
     சிங்காரஞ் சேர்த்திங் குயரிய
          புன்கூடொன் றாய்க்கொண் டுறைதரு ...... முயிர்கோல

நின்றானின் றேத்தும் படிநினை
     வுந்தானும் போச்சென் றுயர்வற
          நிந்தாகும் பேச்சென் பதுபட ...... நிகழாமுன்

நெஞ்சாலஞ் சாற்பொங் கியவினை
     விஞ்சாதென் பாற்சென் றகலிட
          நின்தாள்தந் தாட்கொண் டருள்தர ...... நினைவாயே

குன்றால்விண் டாழ்க்குங் குடைகொடு
     கன்றாமுன் காத்துங் குவலய
          முண்டார்கொண் டாட்டம் பெருகிய ...... மருகோனே

கொந்தார்பைந் தார்த்திண் குயகுற
     மின்தாள்சிந் தாச்சிந் தையில்மயல்
          கொண்டேசென் றாட்கொண் டருளென ...... மொழிவோனே

அன்றாலங் காட்டண் டருமுய
     நின்றாடுங் கூத்தன் திருவருள்
          அங்காகும் பாட்டின் பயனினை ...... யருள்வாழ்வே

அன்பால்நின் தாட்கும் பிடுபவர்
     தம்பாவந் தீர்த்தம் புவியிடை
          அஞ்சாநெஞ் சாக்கந் தரவல ...... பெருமாளே.


திருப்புகழ் 676 வடிவது நீலம்  (திருவாலங்காடு)

தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
     தனதன தானந் தாத்த ...... தனதான

......... பாடல் .........

வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி
     வரவிடு தூதன் கோட்டி ...... விடுபாசம்

மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டு
     மதிகெட மாயந் தீட்டி ...... யுயிர்போமுன்

படிமிசை தாளுங் காட்டி யுடலுறு நோய்பண் டேற்ற
     பழவினை பாவந் தீர்த்து ...... னடியேனைப்

பரிவொடு நாளுங் காத்து விரிதமி ழாலங் கூர்த்த
     பரபுகழ் பாடென் றாட்கொ ...... டருள்வாயே

முடிமிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங் காட்டில்
     முதிர்நட மாடுங் கூத்தர் ...... புதல்வோனே

முருகவிழ் தாருஞ் சூட்டி யொருதனி வேழங் கூட்டி
     முதல்மற மானின் சேர்க்கை ...... மயல்கூர்வாய்

இடியென வேகங் காட்டி நெடிதரு சூலந் தீட்டி
     யெதிர்பொரு சூரன் தாக்க ...... வரஏகி

இலகிய வேல்கொண் டார்த்து உடலிரு கூறன் றாக்கி
     யிமையவ ரேதந் தீர்த்த ...... பெருமாளே.

கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க அருளும் திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க அருளும் வடாரண்யேஸ்வரர் கோவில் முருகப்பெருமான்

அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோவில்

திருவாலங்காடு-631210

திருவள்ளூர் மாவட்டம்

இருப்பிடம்: திருவள்ளூர் 20 கிமீ, சென்னை கோயம்பேடு 57 கிமீ


மூலவர்: வடாரண்யேஸ்வரர், தேவர் சிங்கப்பெருமான்

அம்பாள்: வண்டார்குழலி, பிரம்மராளகாம்பாள்

திருப்புகழ் நாயகன்: முருகப்பெருமான்

தேவியர்: வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: பலா மரம், ஆலமரம்

தீர்த்தம்: முத்தி

பாடியவர்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அப்பர், காரைக்கால் அம்மையார், அருணகிரிநாதர் (4)


தலமகிமை:

திருவள்ளூர் நகரிலிருந்து 20 கிமீ தொலைவிலும், சென்னை கோயம்பேட்டில் இருந்து 57 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள திருவாலங்காடு எனும் ஊரில் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க அருளும் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க அருளும் வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் மூலவர் வடாரண்யேஸ்வரர் அம்பாள் வண்டார்குழலியுடன் அருளாட்சி செய்கின்றார். நடராஜப்பெருமான் ஊர்த்தாண்டவம் திருக்காட்சி அருளிய சிறப்பு தலமிது. நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் ஐம்பெரும் அம்பலங்களில் இத்திருத்தலம் ரத்தின சபை ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காளி பீடம். வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்லா வகையான இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தல புராணம்.

திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற 248-வது சிவாலயமாகும் இத்தலம். இறைவனால் அம்மையே என அழைக்கப் பெற்று சிறப்பிக்கப் பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, ஈசனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோவில் இது. அதனால் இத்தலத்திற்கு வரும் திருஞானசம்பந்தர் ஊருக்குள் கால் பதிக்க அஞ்சி ஊர் எல்லையிலேயே தங்கி பாடி அருளிய தலமிது. சுந்தரரும் தன் கண்களை இழந்த பின். இத்திருத்தல எல்லையிலேயே தங்கி பாடல் பாடிய தலம். இத்தலத்தில் திருநாவுக்கரசரும் பாடியுள்ளார். காரைக்கால் அம்மையார் 11-ம் திருமுறை அருளிய தலமாகும்.

காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார். திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று சொல்லப்படும். வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராஜர் மற்ற தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார்.

அருணகிரி பெருமான் இக்கோவில் திருப்புகழ் தெய்வம் முருகப்பெருமானை போற்றி 4 பாடல்களை பாடியுள்ளார். அவை 1. கனஆலம் கூர்விழி மாதர்கள் …, 2. பொன்றா மன்றாக்கும் புதல்வரே …, 3. புவிபுனல் காலும் காட்டி சிகியோடு வானும் சேர்த்தி …, 4. வடிவது நீலம் காட்டி முடிவுள காலன் கூட்டி …. என்று தொடங்கும் பாடல்கள் ஆகும். தலைவலி மருந்தீடு காமாலை சோகை சுரம்’ என்று துவங்கும் பழனி திருப்புகழ் பாடலில் “மாகாளி நாண முளம் அவைதனில் நடித்தோனை’ என்ற அடிகளில் திருவாலங்காட்டில் சிவபெருமான் ஆடிய போட்டி நடனத்தில் காளியை தோற்கடித்த வரலாற்றை அருணகிரிநாதர் தெரிவிக்கிறார்.

தல வரலாறு:

ஒருமுறை காளிக்கும், சிவனுக்கும் (நடராஜர்) நடனப் போட்டி நடந்தது. சிவபெருமானை விட நன்றாக நடனமாடி வந்த காளி கடைசியில் நடராஜர் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் காலை மேலே நேராகத் தூக்கியவுடன் காளியான சக்தி வெட்கித் தலைகுனிந்து தோற்றுப் போனாள். ஆலமரங்கள் நிறைந்த இக்காட்டில் நடனமாடியதால், இத்தலத்திற்கு திருவாலங்காடு என பெயர் வந்தது. எனவே இங்கு கோவில் கண்ட ஈசனின் நாமம் வடாரண்யேஸ்வரர் ஆகும்.

சிவபெருமானின் தாண்டவக் கோலத்தைக் காணத் தவமிருந்த சுனந்த முனிவருக்கு திருவாலங்காடு தலத்தின் பெருமையை சிவபெருமான் எடுத்துக் கூறி அங்கு சென்று தவமியற்றக் கூறினார். அதன்படி சுனந்தர் திருவாலங்காடு வந்து கடும் தவமியற்றினார். நெடுங்காலம் செல்லவே அவர் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றி புல் வளர்ந்து அதன் உச்சியில் முஞ்சிப் புல்லும் (நாணல்) வளர்ந்து விட்டது. அதனால் அவருக்கு முஞ்சிகேசர் என்ற பெயரும் வந்தது. அதே நேரம் சிவனின் திருக்கரத்தில் ஆபரணமாக இலங்கிய கார்கோடகன் என்னும் பாம்பு ஈசனின் கையிலேயே நஞ்சைக் கக்கி விட்டது. அக்குற்றத்திற்காக அந்தப் பாம்பையும் திருவாலங்காடு சென்று தவமியற்றக் கட்டளையிட்டார் ஈசன்.

தல அமைப்பு:

ராஜகோபுரம் 5 நிலைகளுடன் கிழக்கு நோக்கி உள்ளது. நுழைந்தவுடன் இடப்புறம் வல்லப கணபதி அருள்கின்றார். அடுத்து கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. கருவறையில் வடாரண்யேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கின்றார். வலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலி தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். வண்டார் குழலி - வண்டுகள் மொய்க்கும் வகையில் வாசமுள்ள கூந்தலையுடைய அன்னை ஆகவே இத்தலம் தலைக்குரிய திருமுடி தலமாக கூறப்படுகிறது. இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயிலின் மேற்புறம் சிவபெருமானின் ஐந்து சபைகளும் அழகிய சுதைச் சிற்பங்களாக காட்சி தருகின்றன. கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை அருளுகின்றனர். சண்டிகேஸ்வரர் தனி சந்நிதியில் அருள்கின்றார்.

எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள நடராஜ பெருமான் உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும். எதிரில் நிலைக்கண்ணாடி ஒன்று உள்ளது. அருகில் சிவகாமி காரைகால் அம்மையார் திருமேனிகள் உள்ளன. நடராஜர் சந்நதிக்கு எதிரே காளியின் சந்நிதி இருக்கிறது. காளியை வழிபாடு செய்த பின் மூலவரை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும். மேலும் சூரியன், அதிகார நந்தி, விஜயராகவப் பெருமாள், அகோர வீரபத்திரர், சப்த கன்னியர், நால்வர், முஞ்சிகேசர், பதஞ்சலி முனிவர், எண்வகை விநாயகர், பஞ்ச லிங்கங்கள், சஹஸ்ரலிங்கம், கஜலட்சுமி, வாகனமின்றி பைரவர் தனித்தனி சந்நிதிகளில் அருள்கின்றார்.

திருப்புகழ் தெய்வம் முருகப்பெருமான் இக்கோவிலில் 3 இடங்களில் அருள்பாலிக்கின்றனர். ஆலய முகப்பில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகர் அருளாட்சி செய்கின்றார். அடுத்து ஆலய உட்பிரகார சுற்றில் முதலில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக அருளாட்சி செய்கின்றார். மூன்றாவது கருவறை மூலவர் பின்புறத்தில் வலது கோடியில் முருகப்பெருமான் தேவியர் இருக்க மயில் உடனிருக்க அருள்பாலிக்கின்றார்.

திருவிழா

மார்கழி திருவாதிரை (3 நாள்), பங்குனி உத்திரம் (10 நாள்), ஐப்பசி பவுர்ணமி, மகா சிவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம், பிரதோஷம், பவுர்ணமி

பிரார்த்தனை:

கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க, நடனக்கலைகளில் தேர்ச்சி பெற, திருமணத்தடை அகல, சனி தோஷம் நீங்க

நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்

திறக்கும் நேரம்:

காலை 6-9


படம் 1 - 805 கணவன் மனைவி ஒற்றுமை ஓங்க அருளும் திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் முருகப்பெருமான்


படம் 2 - 805 நடனக்கலைகளில் தேர்ச்சி பெற அருளும் திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜப்பெருமான் ஊர்த்துவத் தாண்டவம்

நடனக்கலைகளில் தேர்ச்சி பெற அருளும் திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் மற்றும் முருகப்பெருமானை தொழுவோம் !

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

விதியை வெல்வது எப்படி? - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் 7 - https://tut-temples.blogspot.com/2022/02/7-7.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஆறாம் நாள் 6 - https://tut-temples.blogspot.com/2022/02/7-6.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஐந்தாம் நாள் 5 - https://tut-temples.blogspot.com/2022/02/7-5.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4 - https://tut-temples.blogspot.com/2022/02/7-4.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

 தேடிக் கண்டுகொண்டேன் - திருஅங்கமாலை  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_13.html

திருவாசகத் தேன் பருகலாம் வாரீர்  - https://tut-temples.blogspot.com/2022/01/blog-post_10.html

வேண்டத் தக்க தறிவோய்நீ - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_13.html

No comments:

Post a Comment