"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, September 17, 2023

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அனைவருக்கும் மீண்டும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கின்றோம். தற்போது நாம் பஞ்ச பூத தலங்களுள் நிலத்திற்கு உரிய தலமான காஞ்சிபுரத்தில் உள்ளோம். குருவருளால் இன்றைய நம் குழுவின் சேவைகள் சிறப்பாக நடைபெற முழுமுதற் கடவுளாம் கணபதியை வணங்கி தொடங்குவோம். இன்றைய விநாயகர் சதுர்த்தி நன்னாளில் இன்னும் சில விநாயகர் வழிபாட்டிற்கு உரிய பாடல்களை இன்றைய பதிவில் சிந்திக்க உள்ளோம்.  காஞ்சிபுரம் என்றாலே குமரக்கோட்டம் நினைவில் வருகின்றது அல்லவா? அதிலும் குறிப்பாக நம் சொந்த புராணமான கந்த புராணம் கிடைத்த தலம் குமரக்கோட்டம் ஆகும். அதில் முதல் பாடலான கணபதி வழிபாட்டு பாடலை முதலில் காண உள்ளோம்.

திகடச் சக்கரம் செம்முகம் ஐந்துளான்,
சகட சக்கரத் தாமரை நாயகன்,
அகட சக்கர இன்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! 

என்று கந்தபுராணத்தில்  உள்ள விநாயகர் காப்பு கொண்டு இன்றைய பதிவை ஆனைமுகன் அருள் கொண்டு தொடங்குவோம். இப்பாடலுக்கு தானே இறைவன் விளக்கமளித்துள்ளார். சரி..இனி கந்த புராண நிகழ்விற்கு செல்வோம்.

கச்சியப்ப சிவாச்சாரியர் காஞ்சிபுரத்தில் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் காஞ்சிபுரத்தில் இருக்கும் குமரக் கோட்டத்தின் அர்ச்சகரான காளத்தியப்ப சிவாசாரியாரின் குமாரர். வடமொழி, தென்மொழி என இரு மொழிகளிலும் வல்லவராக இருந்த கச்சியப்பரின் கனவில் முருகன் தோன்றி தமிழர்கள் கந்த புராணத்தின் பெருமையை தமிழில் படித்து ஆனந்திக்கும் வண்ணம் இந்தப் புராணத்தை இயற்ற ஆணையிட்டார்.

தன்னால் முடியுமா என்று தயங்கிய கச்சியப்ப சிவாச்சாரியருக்கு கந்த புராணத்தின் முதல் அடியான ‘திகடச் சக்கரம் செம்முகம் ஐந்துளான்’ என்னும் பதங்களை அசரீரியாக முருகப்பெருமானே எடுத்து கொடுத்தார்.

‘திகடச் சக்கரம்’ என்றால், ‘திகழ் தசக்கரம்’ என்று பொருள். அதாவது, திகழ்கின்ற பத்து கரங்களை உடையவன், செம்முகம் ஐந்து உடையவன் என்று விநாயகப் பெருமானைக் குறிப்பிடுகிறது இந்த வரி. அதையே தொடக்கமாகக் கொண்டு கச்சியப்பர் பாடத் தொடங்கினார்.

திகட சக்கரச் செம்முக மைந்துளான்

சகட சக்கரத் தாமரை நாயகன்

அகட சக்கர வின்மணி யாவுறை

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்

விளக்கம் : திகழ்கின்ற பத்து கரங்களையும் ஐந்து செம்முகங்களையும் உடையவன், சக்ராயுதத்தை உடையவன், தாமரைமேல் வீற்றிருப்பவன், எங்கும் நிறைந்திருப்பவன், விகட சக்கரனாகிய அந்த விநாயகனின் பாதங்களை வணங்குவோம்!

இவ்வாறு தொடங்கி கச்சியப்பர் கந்தனின் வரலாறஂறை இனிய பாடல்களாக எழுதத் தொடங்கினார். நாளும் நூறு நூறு பாடல்கள் எழுதி பரமன் தாளில் பணிவுடன் வைப்பார். மறுநாள் ஓலைச்சுவடிகளின் பாடல்களில் மெருகேற்றும் திருத்தங்கள் சில காணப்படும்.

கச்சியப்பர் சங்கர சம்ஹிதையிலிருந்து முதல் ஆறு காண்டங்களாகிய (உபதேச காண்டம் நீங்கலாக) சம்பவ காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் முதலியவை மட்டும் கந்த புராணத்தில் சேர்த்தார். சிவாச்சாரியார் தான் இயற்றிய 10,345 பாடல்களைை மேல் கூறிய ஆறு காண்டங்களாகப் பிரித்தார்.

நூலை இயற்றி முடித்த பின் அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அரங்கேற்றத்தின்போது, இறைவனை வணங்கி ‘திகட சக்கரம்’ என்ற அந்தப் பாடலை அவர் வாசித்ததும், ஒரு புலவர் 'திகட சக்கரம் எனல் என்ன?’ என்று கேட்டார். ‘திகழ் தசக்கரம் என்று பொருள்,’ என்றார் கச்சியப்பர். 'ழகரமும் தகரமும் சேரும் போது டகரமாக மாறும் சந்தி இலக்கண முறை தொல்காப்பியத்தில் அல்லது பின் வந்த இலக்கண நூல்களில் இல்லை என்று புலவர்கள் வாதித்தனர். ஆகவே, கந்தபுராண அரங்கேற்றம் அப்படியே நின்றது.

அன்று இரவு, அவர் கனவில் மீண்டும் முருகன் வந்தான். ‘நாளை அந்தப் புலவரின் சந்தேகம் சரியான முறையில் தீர்க்கப்படும்‘ என்றான். மறுநாள், அரங்கேற்றம் தொடரவேண்டிய நேரம். புலவர் ஒருவர் சபையில் கையில் வீரசோழியம் என்ற நூலுடன் நுழைந்து அந்த நூலின் சந்திப் படலத்தில் பதினெட்டாவது செய்யுளில் “திகடசக்கரம்“ என்று தொடரும் இலக்கண விதி இருக்கிறது என்று எடுத்துரைத்தார். திகழ் + தசக்கரம் = திகட சக்கரம் என்பதற்கான இலக்கணம் அங்கே குறிப்பிடப்பட்டிருந்தது. திருப்தி அடைநஂத புலவர்கள் திரும்பி பார்த்தால், வந்தப் புலவரைக் காணவில்லை. அவையினர் இலக்கணப் பிழை உள்ளதாகச் சொன்னவர்களின் சந்தேகத்தைத் தீர்க்க கச்சியப்பரின் காவியத்துக்கு முதல் அடி எடுத்துக்கொடுத்த முருகனே நேரில் வந்தது புரிந்து மெய் சிலிர்த்து போனார்கள். இதற்குப் பிறகு நூல் சிறப்பாக அரங்கேறியது. அரங்கேற்றி முடிக்க ஓர் ஆண்டு ஆனது. குமரகோட்டத்துப் பிரபுக்கள் கச்சியப்ப சிவாசாரியாரைக் கந்தபுராண நூலோடு பல்லக்கில் ஏற்றி சிறப்பித்தனர். 

இத்தகு சிறப்புமிக்க விநாயகர் காப்பு பாடலை தினமும் வழிபாட்டில் இணைத்து வளம் பல பெறுவோமாக!

 

அடுத்து மீண்டும் கந்தபுராணத்தில் இருந்து விநாயகர் பாடலை பாடி மகிழ்வோம்.


மண்ணுல கத்தினிற் பிறவி மாசற

எண்ணிய பொருளெலா மெளிதின் முற்றுறக்

கண்ணுத லுடையதோர் களிற்று மாமுகப்

பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.


எல்லாத் தேவர்கட்கும் முன்வைத்துப் பேசப்படுபவனே, யானையின் முகத்தையுடையவனே, முத்தி யின்பத்தின் நலங்களைச் சொன்னவனே, தூய மெய்யான சுகத்தையுடையவனே, மன்னவனே, அறிவான் மேலாயவனே, ஐந்து கைகளையுடையவனே, சிவந்த சடைமுடியை உடையவனே, தன் மயமாக வுள்ளவனே, உன் திருவடி எங்கட்கு காப்பிடமாகும் என்று பொருள்பட வள்ளல் பெருமான் இயற்றிய திருவருட்பா மூன்றாம் திருமுறை இரண்டாம் தொகுதியான  சிவநேச வெண்பாவில் இருந்து ஒரு பாடலை காண உள்ளோம் 


முன்னவனே யானை முகத்தவனே முத்திநலம்
சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே- என்னவனே
சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
தற்பரனே நின்தாள் சரண். 




திருவருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பாவிலிருந்து மீண்டும் ஒரு பாடலை படிக்க உள்ளோம்.

கலைநிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்

சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவறு மொருபரை சரணம் சரணம்
உமைசிவை அம்பிகை சரணம் சரணம்

அரஹர சிவசுத கணபதி சரணம்
அடியவர் வினைகெட அருள்பவ சரணம்
நினைபவர் பவமற நினைபவ சரணம்
நெடியவன் விழிதரு நெடியவ சரணம்

வலவையை மருவிய புயதர சரணம்
வடிவினி லுயரிய பெரியவ சரணம்
முறைதெரி மறையவ நிறையவ சரணம்
முடியடி தெரிவரு முதியவ சரணம்

சரணம் சரணம் கணபதி சரணம்
சரணம் சரணம் கஜமுக சரணம்


இது போன்று பல அரிய பாடல்களை நாம் தினமும் வழிபாட்டில் இணைத்து வரவேண்டு நாம் வேண்டுவோம்.

இந்த வழிபாட்டில் TUT மதுரை யாத்திரையில் நமக்கு கிடைத்தற்கரிய பொக்கிஷமாக கணபதி கவசம் கிடைத்து. இதனை நம் அன்பர் திரு.நாகராஜன் ஏகாம்பரம் அவர்கள் வழங்கினார்கள். இன்றைய பதிவில் கணபதி கவசம் பகிர்கின்றோம். அன்பர்கள் நித்திய வழிபாட்டில் இணைத்து குருவருளும், திருவருளும் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ விண்ணப்பம் வைக்கின்றோம்.






அடுத்து ஒளவையார் பாடிய விநாயகர் அகவல் படித்து இன்றைய பதிவை முழுமை செய்வோம். விநாயகர் அகவல் தமிழ் மூதாட்டியான அவ்வைப் பாட்டியால் விநாயகரைக் குறித்து பாடப் பெற்றது. எல்லா இடத்திலும் இருக்கும் பிள்ளையாரின் தோற்றப் பெருமைகள், யோகாசன மூச்சுப் பயிற்சி ஆகியவை பற்றி இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.வழிபாடு மற்றும் யோகாசன பயிற்சியின் மூலம் தன்னையும், இறைவனையும் அறியும் நிலை பற்றி விநாயகர் அகவல் விளக்குகிறது.

இனி அனைவரும் விநாயகர் அகவல்  பாராயணம் செய்ய இருக்கின்றோம்.


விநாயகர் அகவல் பாடல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

 வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

 
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!

 
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

 
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

 
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

 
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றும் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

 
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

 
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

 
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்

 
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

 
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்

 
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

 
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!


இன்றைய நன்னாளில் அனைவருக்கும் , நம் தள வாசகர்களுக்கும், நம் சேவைகளில் பங்கு கொண்டு உறுதுணையாய் இருக்கின்ற அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். 


வாய்ப்புள்ள அன்பர்கள் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் கலந்து கொண்டு, இல்லத்திலும் விநாயகரை வரவேற்று ஒளவைப் பாட்டி கூறியது போல் , கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி, சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டும் , சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டும் அருள்நிலை பெற வேண்டுவோம்.

திருச்சிற்றம்பலம்

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

முன்னவனே யானை முகத்தவனே - விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_16.html

மூத்தோனை வணங்கு - விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2021/09/blog-post_9.html

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_59.html

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி, விநாயகர் சதுர்த்தி - சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் பாதம் போற்றுவோம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_22.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் சதுர்த்தி பெருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_35.html

 விநாயகர் சதுர்த்தி தின விழா ...தொடர்ச்சி (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1_30.html

 TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temples.blogspot.com/2019/08/tut_29.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 8 - திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/8.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 7 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/7.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - https://muthukumaranbami.blogspot.com/2022/04/316.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

விதியை வெல்வது எப்படி? - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் 7 - https://tut-temples.blogspot.com/2022/02/7-7.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஆறாம் நாள் 6 - https://tut-temples.blogspot.com/2022/02/7-6.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஐந்தாம் நாள் 5 - https://tut-temples.blogspot.com/2022/02/7-5.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4 - https://tut-temples.blogspot.com/2022/02/7-4.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

No comments:

Post a Comment