அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
முருகன் அருள் முன்னிற்க, தினம் ஒரு முருகன் ஆலயம் தொடர்பதிவில் தினம் ஒரு முருகன் ஆலய தரிசனம் கண்டு, திருப்புகழ் படித்து வருகின்றோம். தற்போது வரை 3 திருப்புகழ் தரிசனம் கண்டு வந்துள்ளோம்.
1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - 3 திருப்புகழ்
3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - 4 திருப்புகழ்
ஆதவித பாரமுலை மாதரிடை நூல்வயிற
தாலிலையெ னாமதன ...... கலைலீலை
யாவும்விளை வானகுழி யானதிரி கோணமதி
லாசைமிக வாயடிய ...... னலையாமல்
நாதசத கோடிமறை யோலமிடு நூபுரமு
னானபத மாமலரை ...... நலமாக
நானநுதி னாதினமு மேநினைய வேகிருபை
நாடியரு ளேயருள ...... வருவாயே
சீதமதி யாடரவு வேரறுகு மாஇறகு
சீதசல மாசடில ...... பரமேசர்
சீர்மைபெற வேயுதவு கூர்மைதரு வேலசிவ
சீறிவரு மாவசுரர் ...... குலகாலா
கோதைகுற மாதுகுண தேவமட மாதுமிரு
பாலுமுற வீறிவரு ...... குமரேசா
கோசைநகர் வாழவரு மீசடியர் நேசசரு
வேசமுரு காவமரர் ...... பெருமாளே.
அருள்மிகு குறுங்காலிஸ்வரர் திருக்கோவில்
கோயம்பேடு (கோசைநகர்)
சென்னை-600107
இருப்பிடம்: சென்ட்ரல் ரயில் நிலையம் 10 கிமீ
மூலவர்: குறுங்காலீஸ்வரர், குசலவபுரீஸ்வரர்
அம்மன்: தர்மசம்வர்த்தினி, அறம் வளர்த்த நாயகி
நாயகன்: சுப்பிரமணியர்
தேவியர்: வள்ளி, தெய்வானை
தீர்த்தம்: குசலவ தீர்த்தம்
தல விருட்சம்: பலாமரம்
புராணப் பெயர்: கோசைநகர்
பாடிய அருளாளர்: அருணகிரிநாதர்
தலமகிமை:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 11 கிமீ தொலைவில் பூந்தமல்லி செல்லும் வழியில் திருப்புகழ் திருத்தலமான கோசைநகர் உள்ளது. தற்போது கோயம்பேடு என்று அழைக்கப்படுகிறது. காசிக்கு நிகரான இத்தலத்தில் மூலவராக குறுங்காலீஸ்வரர், தாயாராக தர்மசம்வர்த்தினி வீற்றிருந்து அருளுகின்றனர். திருப்புகழ் தெய்வமான சுப்பிரமணியர் தேவியருடன் எழுந்தருளியுள்ளார். இம்மூர்த்திக்கு அருணகிரியார்: ‘கோசைநகர் வாழ வரும் ஏசடியர் நேச! வேச முருகா… அமரர் பெருமாளே!’ என்று திருப்புகழ் பாடல் பாடியுள்ளார்.
‘கோயம்பேடு என்ற ஊரும் இல்லை
குறுங்காலீஸ்வரர் என்ற பேரும் இல்லை
வடக்குப் பார்த்த சிவனும் இல்லை
மடக்குப் போன்ற லிங்கமும் இல்லை’ என்பார்கள்.
இதை விளக்கிய ஆலய அர்ச்சகர் சசிகுமார் சிவாச்சார்யர். ‘‘உலகத்துல கோயம்பேடுங்கிற பேர் கொண்ட ஊர் இது ஒண்ணுதான். பொதுவா ஒரு ஊர்ல சிவபெருமானுக்கு இருக்கற பேரு, இன்னொரு ஊருல இருக்கும். ஆனால், இந்த ஈஸ்வரனோட பேரு, வேறு எங்கும் இல்லை. வடக்கு நோக்கி, எழுந்தருளியுள்ள மூலவராக ஈஸ்வரன் இருப்பது இங்குதான். அடுத்தது, மடக்குப் போன்ற லிங்கம். இங்குள்ள ஈஸ்வரனின் லிங்க பாணம் ஒரு மடக்கையை (பானை மூடப் பயன்படும் மூடியை) கவிழ்த்தது போல் இருக்கும். இதுவும் இங்குள்ள சிறப்பம்சம்!’’
இத்திருத்தலம் ஆதி பிரதோஷ தலம் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகிறது. ஒரு முறை சித்தம் கலங்கி சிவபெருமானின் அருளால் தெளிவடைந்த நந்தியம் பெருமான், இங்கு மூக்கணாங்கயிறுடன் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் நடைபெறும் பிரதோஷம் மிகவும் விசேஷம். பிரதோஷ தினத்தில் இங்குள்ள குறுங்காலீஸ்வரரை தரிசித்தால் ஆயிரம் பிரதோஷம் தரிசித்த பலன் கிட்டும். குறிப்பாக சனிப் பிரதோஷமன்று ஈசனை வழிபட்டால் ஒரு கோடி பிரதோஷங்கள் தரிசித்த பலன்கள் கிட்டும்.
இராமபிரானின் மகன்களான லவன், குசன் இருவரும் பூஜித்த தலம் இதுவாகும். முன் மண்டப தூண்களில் ராமாயண காட்சிகளி விளக்கும் சிற்பங்கள் கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளன. மேலும் முன் மண்டப தூண் ஒன்றில் ஆற்றல் மிக்க சரபேஸ்வரர் வீற்றருளியுள்ளார். ஞாயிறு மாலை ராகு கால நேரத்தில் நடைபெறும் சரபேஸ்வரர் பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. ஏராளமான பக்தர்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர். எதிரிகள் தொல்லை அகலுகிறது. இவருக்கு அருகில் அணையா தீபம் ஒன்று உள்ளது.
லவகுசர்கள் "கோ' எனப்படும் அரசனாகிய ராமனின் குதிரைகளை, "அயம்' என்னும் இரும்பு வேலியால் கட்டி வைத்த தலமென்பதால் இத்தலம் "கோயம்பேடு' என பெயர் பெற்றது. "பேடு' என்றால் "வேலி' எனப் பொருள். வடக்கு நோக்கி இக்கோவில் இருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது. பித்ருதோஷம் உள்ளவர்கள் குசவ தீர்த்தத்தில் பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் செய்து கொள்கிறார்கள். பெற்றோருக்கு நீண்டநாள் தர்ப்பணம் செய்யாதவர்கள், அவர்கள் மறைந்த திதி, நட்சத்திரம் தெரியாதவர்கள் இங்கு எந்தநாளிலும் தர்ப்பணம் செய்யலாம்.
தல வரலாறு:
சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான திருத்தலமான குறுங்காலீஸ்வரர் கோவில் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ளது. முன்னோரு காலத்தில் சோழ மன்னன் ஒருவன், இந்த பகுதியை தேரில் பவனி சென்றவாறு கடந்து போனபோது அந்த தேரின் சக்கரம் லிங்கத்தின் மீது ஏறி, குருதி வெளிப்பட்டதை கண்டு அதிர்ச்சியுற்ற மன்னன் அங்கு பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, அதனை வணங்கி அங்கு கோவிலும் எழுப்பினான். மன்னரின் தேர்ச்சக்கரம் ஏறியதால் அந்த லிங்கத்தின் திருமேனி குறைந்து குறுகிய வடிவில் காணப்பட்டது ஆகவே இங்கு சிவன் குறுகியவடிவில் காட்சி தருவதால் அவருக்கு ‘குறுங்காலீஸ்வரர்’ என்ற திருப்பெயர் உண்டானது.
இராமாயணகாலத்தில் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் லவன், குசன் என்ற தன் குழந்தைகளுடன் சீதை இந்த பகுதியில் வாழ்ந்த பொழுதில், அஸ்வமேத யாகத்திற்காக பகவான் ராமபிரான் அனுப்பிய குதிரைகளை பிடித்த லவகுசர்களிடம் இருந்து அவற்றை மீட்க வந்த ராமரிடம், வந்திருப்பது யார் என்பதை அறியாத லவ குசர்கள் அவரை எதிர்த்து போரிடுகிறார்கள் இறுதியில் வால்மீகியால் சமாதானம் ஏற்பட்டு உண்மையை லவகுசன் அறிந்துகொண்டார்கள். பெற்ற தந்தையை எதிர்த்து போரிட்ட காரணத்தால் அவர்களை பித்ரு தோஷம் பிடித்துகொள்ள, வால்மீகியின் அறிவுரைப்படி லவனும் குசனும் சிவலிங்கம் ஒன்றை உருவாக்கி வழிபாடு செய்கிறார்கள், சிறுவர்களான லவ-குசனும் எளிதாக வழிபாடு செய்வதற்க்கு ஏற்றவாறு ஈசன் தன் லிங்கத்திருமேனியை குறுக்கிக் கொண்டு குறுங்காலீஸ்வரராய் காட்சி அளித்தார்.
தல அமைப்பு:
கருவறை வாயிலின் துவாரபாலகர்களைக் கடந்து சிறிய ஆவுடையாரின் மேல் சுமார் நான்கு அங்குல உயரம் கொண்ட பாணம் அழகு. லவ, குசர் ஸ்தாபித்து வணங்கி வழிபட்ட குறுங்காலீஸ்வரர் (குசலவபுரீஸ்வரர்) வடக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அம்பாள் தர்மசம்வர்த்தினி (அறம் வளர்த்த நாயகி) பாசம், அங்குசம், வரதம், அபயம் தாங்கிய நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். இடது காலை முன்னோக்கி வைத்தபடி தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்ய, காட்சி தருவது சிறப்பம்சம். இடப்பக்கம் துயர் தீர்க்கும் தும்பிக்கை விநாயகர் வலப் பக்கம் பாலசுப்ரமணியர் அருள்கின்றனர்.
தட்சிணாமூர்த்தி கோஷ்டத்தின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருக்கிறார். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். மேலும் மகாவிஷ்ணு, துர்க்கை, விநாயகர், ஜுரகரேஸ்வரர், அகத்தீஸ்வரர், இன்னொரு விநாயகர், சாஸ்தா, சிவலிங்கம், லட்சுமி, சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர், ஞானசரஸ்வதி, நாகர்கள் நடராஜர், சூரியன், சந்திரன், வீரபத்திரர், கபால பைரவர், நவக்கிரகங்கள், அப்பர், ஞானசம்பந்தர் அருள்கின்றனர்.
திருப்புகழ் தெய்வம் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமண்யராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற முருகன் இவர். எனவே, சந்நிதியின் உள்ளேயே அருணகிரிநாதருக்கும் ஒரு சிலா விக்கிரகம் இருக்கிறது. இதன் அருகில் அண்ணாமலையார் சந்நிதி உள்ளது.
திருவிழா:
மகா சிவராத்திரி, திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, ரத சப்தமி, கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பிரதோஷம், பவுர்ணமி, கிருத்திகை, சஷ்டி, ஞாயிறு (சரபேஸ்வரர் பூஜை)
பிரார்த்தனை:
திருமணம் கை கூட, குறைகளற்ற வாழ்வு வேண்டி, எதிரிகள் தொல்லை அகல, பித்ரு தோஷம் நீங்க, குடும்ப ஒற்றுமை ஓங்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
திறக்கும் நேரம்:
காலை 5.30-12 மாலை 4.30-8.30
படம் - 600 ஒரு கோடி பிரதோஷ பலன்களை அருளும் முருகன் திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில்
சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர், திருப்புகழ் தெய்வம் முருகப்பெருமானை மனமுருகி வேண்டுவோருக்கு குறைகளற்ற வாழ்வு தருவர்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!