அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
திகடச் சக்கரம் செம்முகம் ஐந்துளான்,
சகட சக்கரத் தாமரை நாயகன்,
அகட சக்கர இன்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!
என்று கந்தபுராணத்தில் உள்ள விநாயகர் காப்பு கொண்டு இன்றைய பதிவை ஆனைமுகன் அருள் கொண்டு தொடங்குவோம். இப்பாடலுக்கு தானே இறைவன் விளக்கமளித்துள்ளார். சரி..இனி கந்த புராண நிகழ்விற்கு செல்வோம்.
கச்சியப்ப சிவாச்சாரியர் காஞ்சிபுரத்தில் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் காஞ்சிபுரத்தில் இருக்கும் குமரக் கோட்டத்தின் அர்ச்சகரான காளத்தியப்ப சிவாசாரியாரின் குமாரர். வடமொழி, தென்மொழி என இரு மொழிகளிலும் வல்லவராக இருந்த கச்சியப்பரின் கனவில் முருகன் தோன்றி தமிழர்கள் கந்த புராணத்தின் பெருமையை தமிழில் படித்து ஆனந்திக்கும் வண்ணம் இந்தப் புராணத்தை இயற்ற ஆணையிட்டார்.
தன்னால் முடியுமா என்று தயங்கிய கச்சியப்ப சிவாச்சாரியருக்கு கந்த புராணத்தின் முதல் அடியான ‘திகடச் சக்கரம் செம்முகம் ஐந்துளான்’ என்னும் பதங்களை அசரீரியாக முருகப்பெருமானே எடுத்து கொடுத்தார்.
‘திகடச் சக்கரம்’ என்றால், ‘திகழ் தசக்கரம்’ என்று பொருள். அதாவது, திகழ்கின்ற பத்து கரங்களை உடையவன், செம்முகம் ஐந்து உடையவன் என்று விநாயகப் பெருமானைக் குறிப்பிடுகிறது இந்த வரி. அதையே தொடக்கமாகக் கொண்டு கச்சியப்பர் பாடத் தொடங்கினார்.
திகட சக்கரச் செம்முக மைந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்
விளக்கம் : திகழ்கின்ற பத்து கரங்களையும் ஐந்து செம்முகங்களையும் உடையவன், சக்ராயுதத்தை உடையவன், தாமரைமேல் வீற்றிருப்பவன், எங்கும் நிறைந்திருப்பவன், விகட சக்கரனாகிய அந்த விநாயகனின் பாதங்களை வணங்குவோம்!
இவ்வாறு தொடங்கி கச்சியப்பர் கந்தனின் வரலாறஂறை இனிய பாடல்களாக எழுதத் தொடங்கினார். நாளும் நூறு நூறு பாடல்கள் எழுதி பரமன் தாளில் பணிவுடன் வைப்பார். மறுநாள் ஓலைச்சுவடிகளின் பாடல்களில் மெருகேற்றும் திருத்தங்கள் சில காணப்படும்.
கச்சியப்பர் சங்கர சம்ஹிதையிலிருந்து முதல் ஆறு காண்டங்களாகிய (உபதேச காண்டம் நீங்கலாக) சம்பவ காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் முதலியவை மட்டும் கந்த புராணத்தில் சேர்த்தார். சிவாச்சாரியார் தான் இயற்றிய 10,345 பாடல்களைை மேல் கூறிய ஆறு காண்டங்களாகப் பிரித்தார்.
நூலை இயற்றி முடித்த பின் அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அரங்கேற்றத்தின்போது, இறைவனை வணங்கி ‘திகட சக்கரம்’ என்ற அந்தப் பாடலை அவர் வாசித்ததும், ஒரு புலவர் 'திகட சக்கரம் எனல் என்ன?’ என்று கேட்டார். ‘திகழ் தசக்கரம் என்று பொருள்,’ என்றார் கச்சியப்பர். 'ழகரமும் தகரமும் சேரும் போது டகரமாக மாறும் சந்தி இலக்கண முறை தொல்காப்பியத்தில் அல்லது பின் வந்த இலக்கண நூல்களில் இல்லை என்று புலவர்கள் வாதித்தனர். ஆகவே, கந்தபுராண அரங்கேற்றம் அப்படியே நின்றது.
அன்று இரவு, அவர் கனவில் மீண்டும் முருகன் வந்தான். ‘நாளை அந்தப் புலவரின் சந்தேகம் சரியான முறையில் தீர்க்கப்படும்‘ என்றான். மறுநாள், அரங்கேற்றம் தொடரவேண்டிய நேரம். புலவர் ஒருவர் சபையில் கையில் வீரசோழியம் என்ற நூலுடன் நுழைந்து அந்த நூலின் சந்திப் படலத்தில் பதினெட்டாவது செய்யுளில் “திகடசக்கரம்“ என்று தொடரும் இலக்கண விதி இருக்கிறது என்று எடுத்துரைத்தார். திகழ் + தசக்கரம் = திகட சக்கரம் என்பதற்கான இலக்கணம் அங்கே குறிப்பிடப்பட்டிருந்தது. திருப்தி அடைநஂத புலவர்கள் திரும்பி பார்த்தால், வந்தப் புலவரைக் காணவில்லை. அவையினர் இலக்கணப் பிழை உள்ளதாகச் சொன்னவர்களின் சந்தேகத்தைத் தீர்க்க கச்சியப்பரின் காவியத்துக்கு முதல் அடி எடுத்துக்கொடுத்த முருகனே நேரில் வந்தது புரிந்து மெய் சிலிர்த்து போனார்கள். இதற்குப் பிறகு நூல் சிறப்பாக அரங்கேறியது. அரங்கேற்றி முடிக்க ஓர் ஆண்டு ஆனது. குமரகோட்டத்துப் பிரபுக்கள் கச்சியப்ப சிவாசாரியாரைக் கந்தபுராண நூலோடு பல்லக்கில் ஏற்றி சிறப்பித்தனர்.
இத்தகு சிறப்புமிக்க விநாயகர் காப்பு பாடலை தினமும் வழிபாட்டில் இணைத்து வளம் பல பெறுவோமாக!
இந்த வழிபாட்டில் TUT மதுரை யாத்திரையில் நமக்கு கிடைத்தற்கரிய பொக்கிஷமாக கணபதி கவசம் கிடைத்து. இதனை நம் அன்பர் திரு.நாகராஜன் ஏகாம்பரம் அவர்கள் வழங்கினார்கள். இன்றைய பதிவில் கணபதி கவசம் பகிர்கின்றோம். அன்பர்கள் நித்திய வழிபாட்டில் இணைத்து குருவருளும், திருவருளும் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ விண்ணப்பம் வைக்கின்றோம்.
மேலும் இன்றைய TUT திருநெல்வேலி நவகைலாய யாத்திரையில் சுமார் 500 கணபதி கவசம் அச்சிட்டுள்ளோம். வழக்கம் போல் நாம் தரிசனம் செய்யும் கோயில்களில் சிவபுராணம் புத்தகம், கணபதி கவசம் என கொடுக்க குருவருளால் பணிக்கப்பட்டுள்ளோம். ஒவ்வொரு நொடியும் குருவின் கருணை கண்டு மெய் சிலிர்க்கின்றோம். இது வாழ வழி காட்டும் குருவின் பாதங்களை என்றும் வணங்கி மகிழ்கின்றோம்.
விநாயகர் காப்பு
(திகட சக்கர)
திகட சக்கரச் செம்முக மைந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம். ...... 1
(உச்சியின் மகுட)
உச்சியின் மகுட மின்ன வொளிர்தர நுதலி னோடை
வச்சிர மருப்பி னொற்றை மணிகொள் கிம்புரி வயங்க
மெய்ச்செவிக் கவரி தூங்க வேழமா முகங்கொண் டுற்ற
கச்சியின் விகட சக்ர கணபதிக் கன்பு செய்வாம். ...... 2
சுப்பிரமணியர் காப்பு
(மூவிரு முகங்கள்)
மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி
ஏவருந் துதிக்க நின்ற விராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்
சேவலு மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி. ...... 3
நூற் பயன்
(இந்திர ராகி)
இந்திர ராகிப் பார்மே லின்பமுற் றினிது மேவிச்
சிந்தையி னினைந்த முற்றிச் சிவகதி யதனிற் சேர்வர்
அந்தமி லவுணர் தங்க ளடல்கெட முனிந்த செவ்வேற்
கந்தவேள் புராணந் தன்னைக் காதலித் தோது வோரே. ...... 4
வாழ்த்து
(வான்முகில் வழாது)
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம். ...... 5
ஆகத் திருவிருத்தம் - 5
No comments:
Post a Comment