"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, July 31, 2022

ஆடிப்பூரம் - ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நேற்று பிற்பகல் 3 மணி முதல் இன்று பிற்பகல்  3 மணி வரை ஆடிப் பூரம் ஆகும். ஆடிப்பூரம் என்றாலே நமக்கு நம்மை ஆளும் ஆண்டாள் தான் எண்ணத்தில் இருக்கின்றார். இதனையொட்டியே இன்றைய பதிவில் நாம் சிந்திக்க இருக்கின்றோம். 

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும்.இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள்  உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.




அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு,  குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை  உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள்  திருவாடிப்பூரம். சைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த  வெள்ளிக்கிழமையின் பெயரைக் கொண்டு அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக  எழுந்தருளியுள்ளாள். இதிலிருந்தே ஆடிப்பூரத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.

பல்வேறு ஆலயங்களில் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக  நடைபெறுகின்றது. இவ்வாறு பத்துநாள் பிரம்மோற்சவம் நடைபெறும் சில தலங்கள், திருவாரூரில் கமலாம்பாளுக்கு, திருநாகையில்  நீலாயதாக்ஷி அம்மனுக்கு, திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகைக்கு. திருமயிலை கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு  அலங்காரம், இரவு விரைமலர் குழல் வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பகவல்லிக்கு வளை காப்பு உற்சவம். மேல் மருவத்தூரில்  ஆதிபராசக்திக்கு ஆடிப்பூரம் மிகப்பெரிய பண்டிகையாக அம்மனுக்கு கூழ் வார்க்கும் பண்டிகையாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.  ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை.

இன்றைய நன்னாளில் அன்னையை தொழுது அன்னையின் அன்பை பெறுவோம்.

இன்றோ திருவாடிப்பூரம்- எமக்காக
வன்றோ இங்காண்டாளவதரித்தாள் - குன்றாத
வாழ்வான வைகுந்தவான்போகந்தன்னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்.

ஆம். இன்று ஆண்டாள் அவதாரம் நிகழ்ந்த நாள். இந்நாளில் நம் மனதை திறப்போம். ஆண்டாள் நம்மை கொஞ்சம் ஆளட்டும்.





ஆண்டாள் தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாக கருதப்படுகிறார்.


மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் ஒரு குழந்தையாக துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சமேத அரங்கநாதர் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், கண்டெடுத்த குழந்தையை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை என்பதாகும்.





இளம் வயதிலேயே, தனக்குத் தெரிந்த சமயம் சார்ந்த கருத்துகள் மற்றும் தமிழ்மொழி போன்ற அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும் தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாகத் தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர்த் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றிக் கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் "இறைவனையே ஆண்டவள்" என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார். 

ஆண்டாள், "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் "இறைவனையே ஆண்டவள்" என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.



கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கோயில் கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது ஆண்டாள் வரலாறு.






ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமை, தத்துவம், பக்தி ஆகியவற்றிக்காக அனைவராலும் போற்றப்படுகின்றது. இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவை ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.

வட இந்தியாவில் ராதாவின் பக்தி பிரபலமாகப் போற்றப்படுகிறது. பெண் பக்தியாளர்களில் மீராபாய் கண்ணனிடம் கொண்ட அர்பணிப்புடன் கூடிய பக்தியைப் போலத் தமிழகத்தில் ஆண்டாளின் பக்தி போற்றப்படுகிறது. 

இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது. இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது. இது வடமொழியில் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததன்மை உடையதாக காணப்படுகின்றது. 




திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மலர் மாலைகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பெருமாளுக்குச் சார்த்துவதற்காக வருடந்தோறும் அனுப்பப்படுகிறது. இவ் வைபவம், தமிழ் மாதமான புரட்டாசியில், திருப்பதி பிரம்மோற்சவம் விழாவில், குறிப்பாகக் கருட சேவை அன்று நடைபெறுகிறது. ஆண்டாள் சூடிய மலர் மாலையைப் பெருமாள் சூடிக்கொண்டு பவனி வருகிறார். இந்த மலர்மாலை, துளசி, செவ்வந்தி மற்றும் சம்பங்கி பூக்களால் தொடுக்கப்பட்டதாக உள்ளது.மேலும், திருப்பதி பெருமாளின் மலர்மாலை, வருடந்தோறும் நடைபெறும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்திற்காக அனுப்பப்படுகிறது. மதுரையில் நடைபெறும் பிரசித்தமான சித்திரைத் திருவிழாவின் போது, ஆண்டாளின் மலர்மாலை கள்ளழகருக்கு அணிவிப்பதற்காகத் திருவில்லிப்புத்தூரிலிருந்து கொண்டு செல்லப்படுகிறது.

திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாளின் இடக்கையில் கிளி இருக்கிறது. இது தினமும் புதியதாக இன்றளவும் செய்யப்படுகிறது. இந்தக் கிளியைச் செய்வதற்குத் தோராயமாக நான்கிலிருந்து நாலறை மணி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இக் கிளியைச் செய்வதற்கு, மாதுளம் மரத்தின் பூக்கள் கிளியின் அலகு மற்றும் வாய்ப்பகுதி செய்வதற்கும், மூங்கில் குச்சிகள் கிளியின் கால் பகுதிக்கும், வாழை மரத்தின் இலைகள் மற்றும் நந்தியாவட்டை மரத்தின் இலைகள் உடல் பகுதி செய்வதற்கும் பயன்படுத்தப் படுகின்றன.


     திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே

     திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே

     பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே

     பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

     ஒருநூற்று நாற்பத்தொரு மூன்றுரைத்தாள் வாழியே

     உயரரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே

     மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே

     வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

-மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post_10.html

ஆடிப்பூரம் - சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post_11.html

முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே - திருஆடிப்பூரம் வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_23.html

 கூடுவாஞ்சேரி திருஆடிப்பூரம் திருவிளக்கு பூஜை, ஆடித்திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_92.html

நம்மை ஆண்டாள் - ஆண்டாள் திருவடிகளே சரணம் ! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_78.html

பிறந்தது ஆடி...பணிவோம் தாயை நாடி.. - 2020 - https://tut-temples.blogspot.com/2020/07/2020.html

 மார்கழி சிறப்பு பதிவு : திருப்பாவையும், திருவெம்பாவையும் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_17.html

 ஸ்ரீ உரகமெல்லணையான் பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_59.html




No comments:

Post a Comment