அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சித்தர்கள் நம்மை வாழ்விக்க வந்தவர்கள். பார்ப்பதற்கு பித்தர்கள் போன்று தோன்றலாம்.
சிவத்தை ஜீவனில் உணரும் போது பித்தம் தெளிந்து சித்தம் வெளிப்படும். சிலர்
குருவாக, சிலர் சற்குருவாக, சிலர் சத்குருவாக என வாழையடி வாழையாய் ஞானம்
போதிக்க வருபவர்கள். சென்னையில் மட்டுமா சித்தர் பரம்பரை உள்ளது என்று
நினைத்த நமக்கு தமிழ் நாடு என்ற அளவில் விரிந்து பார்த்தோம். அத்தனையும்
தாண்டி பாண்டிச்சேரியில் இன்னும் உயிர்ப்பாக சித்தர்களின் அருளை உணர
முடிகின்றது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் சித்தர்களின் பாதம் பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது. தமிழ்நாடு முழுதுமே ஞான பூமி. சிவ பெருமானின் 64 திருவிளையாடல் தமிழ் நாட்டில் தானே நடைபெற்றது. இதனால் தான் தென்னாடுடைய சிவனே போற்றி என்றும் போற்றி வருகின்றோம்.
இந்த வரிசையில் நாம் பல சித்தர்கள்,மகான்கள், ஞானியர்கள் தரிசனம் நம் தளத்தில் பெற்று வருகின்றோம். இன்றைய பதிவில் இன்று (08.09.2021) 186 ஆவது குருபூஜை காணும் மடப்புரம் மகான் ஶ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் பற்றி அறிய இருக்கின்றோம். மகப்பேறுவுக்கும், குரு பரிகாரத்துக்கும் சிறந்த தலம் என்று நாம் அறிந்த செய்தியை இனி காண உள்ளோம்.
திருவாரூரில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமி கோவில் தேரும் கமலாலய குளமும் புகழ் பெற்றவை. ஆனால் திருவாரூருக்கு இன்னோர் அடையாளமும் இருக்கிறது. அதுதான் சித்தர் ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவ சமாதிமடம். இது திருவாரூர் நகரின் மடப்புரம் பகுதியில் ஓடம்போக்கி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் பிறந்த ஊர் திருச்சி அருகே கீழாலத்தூர். பெற்றோர் சிவ சிதம்பரம் பிள்ளை - மீனாம்பிகை. சுவாமிகள் திருவண்ணாமலை ஈசனின் அருளால் பிறந்தமையால் 'அருணாசலம்' என்றே பெயர் சூட்டினர்.
அருணாசலத்திடம் குழந்தைகளுக்கே உண்டான எந்த குணங்களும் இல்லை. பல நேரங்களில் பத்மாசனம் அமர்ந்து நிஷ்டையில் மூழ்கி விடுவார். பிறந்த குழந்தை 5 வயதாகியும் பேசவில்லை! இதை குறித்து பெற்றோர் மிகவும் கவலை கொண்டனர்.
ஒருநாள் அவர்களது வீட்டுக்குத் ஒரு துறவி வந்தார். அவரிடம் பெற்றோர் தங்கள் கவலையை தெரிவித்தனர். முற்றும் உணர்ந்த அந்தத் துறவி, தவத்தில் ஆழ்ந்திருந்த சிறுவன் அருணாசலத்தை நோக்கி பெற்றோரை பேசச் சொல்கிறார்.
அவர்களும், 'மகனே! ஏன் கண்களை மூடிக்கொண்டு பேசாமல் இருக்கிறாய்?' என கேட்டனர்.
சிறுவன் அருணாச்சலம் முதல் முதலாக வாய் திறந்து, 'சும்மா இருக்கிறேன்!' என்றான்.
இப்பொழுது துறவி, 'சும்மா இருக்கின்ற நீ யார்?' என்று கேட்க, 'நானே நீ! நீயே நான்!' என்று பதிலளித்தான்.
வியந்துபோன பெற்றோரிடம் துறவி, 'இவன் ஊமை அல்ல! உலகை உய்விக்க வந்த மகான்!!' என்று கூறி விடைபெற்றார்.
சுவாமிகள் பள்ளியில் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, நிஷ்டையில் ஆழ்ந்து விடுவார்! ஆசிரியரை கேட்டால், 'படித்தாயிற்று' என்று கூறுவார். அதை சோதிக்க ஆசிரியர் கேட்கும் அத்தனை
கேள்விக்கும் பதில் சொல்வார்!
ஒருமுறை ஆசிரியருக்கு வந்த ஆபத்தை முன்கூட்டியே சொல்லி காப்பாற்றுகிறார்! சுவாமிகளின் ஞானத்தை அறிந்த ஆசிரியர் அவர் முன் அமர மறுத்தார். இதனால் சுவாமிகளும் பள்ளியை துறந்தார்.
வீட்டையும் துறந்து, நாடெங்கும் பல இடங்களில் உலவி பல அற்புதங்களை நிகழ்த்தினார். பக்தர்களால் குரு தக்ஷிணாமூர்த்தி என்று பக்தியோடு வழங்கப்பட்டார்.
சுவாமிகளின் மகிமைக்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறலாம். சுவாமிகளின் பக்தர் அருணாசலம் என்பவர் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பந்தல் அமைக்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, உயரமான இடத்திலிருந்து கீழே தவறி விழுகிறார். சாரத்தில் இருந்து அவர் நழுவும் போதே,
'தட்சிணாமூர்த்திக்கு அபயம்!!!' என்று ஒலித்தார்.
அதே நேரத்தில் திருவாரூர் தியாகராஜர் கோயில் குளக்கரையில் அமர்ந்திருந்த தட்சிணாமூர்த்தி சுவாமிகள், திடீரென தனது வலது கையை உயரத் தூக்கி, கனமான ஒரு பொருளை இறக்கி வைப்பது போல் வைத்து விட்டு, 'தட்சிணாமூர்த்தியை நம்பினால், தட்சிணாமூர்த்தி என்ன செய்வான்?' என்கிறார்.
இதை நேரில் பார்த்த அன்பர்களுக்கு பொருள் விளங்கவில்லை. மறுநாள் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து அன்பர் அருணாச்சலம் ஓடிவந்து சுவாமிகள் காலில் விழுந்து, 'சுவாமி, நேற்று 30 அடி உயரத்திலிருந்து விழுந்தும் எனக்கு எந்த அடியும் இல்லை! யாரோ தாங்கிப் பிடித்து தரையில் இறக்கி வைப்பதைப் போல உணர்ந்தேன்!' என்று கூறினார். அப்பொழுதுதான் சுவாமிகளின் மகிமை மற்றவர்களுக்கு விளங்கியது.
1835 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 12 ம் நாள் உத்திரம் நட்சத்திரம் புதன்கிழமை குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் அன்பர்களிடம், 'முடிந்தது! முடிந்தது!! முற்றிலும் முடிந்தது!!!' என்று கூறி அகண்ட பரிபூரண சச்சிதானந்த இறைவனுடன் கலந்தார்.
அனைத்து சித்தர்களையும் போற்றுவோம்.ஏனெனில் சித்தன் போக்கு சிவன் போக்கு சிவன் போக்கு அல்லவா?
திருவாரூரில் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவ சமாதி இருக்கும் இடத்தை காட்டும் Google Map Link கீழே உள்ளது.
Sri Guru Dhakshinamurthy Mutt
Madappuram, Thiruvarur, Tamil Nadu 610001
No comments:
Post a Comment