"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, September 28, 2021

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 6 ஆம் ஆண்டு குருபூஜை விழா

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நாளை புரட்டாசி திருவாதிரை. ஸ்ரீ பாட்டி சித்தர் 6 ஆம் ஆண்டு குருபூஜை விழா நாளை கரூரில் கொண்டாடப்பட உள்ளது. நம் தளத்தில் அவ்வப்போது சித்தர்கள் தரிசனம் கண்டு வருகின்றோம். அருள்மிகு வீரராகவ சுவாமிகள், கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள், போகர், ஸ்ரீ ரோம மகரிஷி , ஸ்ரீ சதானந்த சுவாமிகள், ஸ்ரீ சுப்பையா சுவாமிகள், மண் உண்ட மகான் ஸ்ரீ மல்லையா சுவாமிகள், ஸ்ரீ காவாங்கரை கண்ணப்ப சுவாமிகள் என தொட்டுக்காட்டி வருகின்றோம். இன்று நாம் ஸ்ரீ பாட்டி சித்தர் தரிசனம் பெற இருக்கின்றோம்.

ஸ்ரீ பாட்டி சித்தர் பற்றிய தகவல்கள் நாம் பெறவில்லை. எனவே இங்கு பக்தர்களின் அனுபவத்தை இங்கே அள்ளித் தர இருக்கின்றோம். அதற்கு முன்பாக இதோ..நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஸ்ரீ பாட்டி சித்தர் 6 ஆம் ஆண்டு குருபூஜை விழா அழைப்பிதழை கீழே பகிர்கின்றோம். 

                                         










நாமக்கல்  மாவட்டம் மோகனூரில் காட்டுப்புத்தூர் சாலையில் சுண்டக்கா செல்லியம்மன் கோயில் உள்ளது. அதன் அருகில் பொதுஇடத்தில் ஸ்ரீ பாட்டி சித்தர் அவர்கள் நெடுங் காலமாக இருந்து ஏழை எளிய மக்களுக்கு இரவு பகல் பாராமல் அருள்பாலித்து வந்தார்கள்.

அவர்களுக்கு வானமே கூரையாக  இருந்தது. அவர்களால் நடக்க இயலாது. அவர்களுடைய பெயர், பிறந்த ஊர், உற்றார் உறவினர் உள்ளிட்ட எவ்விதமான பூர்வீகத் தகவல்கள் யாருக்கும் தெரியாது. அவருக்கு ரத்த சம்பந்த உறவினர்கள் யாரும் இல்லை. இது குறித்து அவரிடம் கேட்டால் சித்தர்களுக்கே உரிய பரிபாஷை மொழியில் யாருக்கும் புரியாமல் ஏதாவது கூறுவார். அவர்கள் குளிப்பது வழக்கம் இல்லை என்றாலும் அவரிட மிருந்து நறுமணம் மட்டுமே வரும். சேலத்தில் அடக்கமாகியுள்ள ஸ்ரீ மாயம்மா சித்தர் அவர்களின் பக்தர்களும், பழனிக்கு அருகிலுள்ள கணக்கன்பட்டியில் அடக்கமாகியுள்ள ஸ்ரீ அழுக்குமூட்டை சுவாமிகளின் பக்தர்களும், ஸ்ரீ சீரடி சாய்பாபாவின் பக்தர்களும் மற்றும் வேறு சில ஞானிகளின் பக்தர்களும், அந்தந்த ஞானிகளின்  இக்காலத்தில் வாழும் திருவுருவாக எண்ணி ஸ்ரீ பாட்டி சித்தரைத் தரிசித்துச் செல்வது வழக்கம். ஸ்ரீ பாட்டி சித்தரின் செய்கைகளும், மொழியும் அந்தந்த ஞானிகளை ஞாபகப்படுத்துவதாக இருக்கும். இந்த மாதிரியான சித்தர்களைக் குறித்துத் தமிழின் முக்கியமான நவீன கவிஞரான பிரமிள் ‘தியானதாரா’ என்ற அருமையான புத்தகத்தில் எழுதியுள்ளார்.

நாடெங்கும் புனிதயாத்திரை செய்யும் பக்தர்கள், சித்தர்களின் முக்கியத்துவத்தை அறிந்து, அவர்களின் பார்வைபட்டால் பாவங்கள் பறந்தோடும் என்றும் அவர்களுக்கு ஒருவேளை உணவளிப்பது பெரும்புண்ணியம் என்றும் சித்தர்களைத் தரிசித்து வருவதுண்டு. அவர்கள் நேரம்காலம் பார்க்காமல் வேறுவேலையாக எங்காவது போகும்/வரும் வழியில், நள்ளிரவு நேரங்களில் கூட சித்தர்களைத் தரிசிப்பது வழக்கம்.

இவ்வாறாக பெங்களூர், சென்னை, திருச்சி, மதுரை, கோவை என நாலாப்புறங்களி லிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் பாட்டியைத் தரிசிப்பதுண்டு. “நாடிசோதிட ஏடு பார்த்தோம். அதில் மோகனூருக்கு அருகில் ஸ்ரீ பாட்டி சித்தர் இருக்கிறார், அவர் உண்மையான ஞானி என்றும், அவரைக் கண்டு தரிசியுங்கள் என்றும் இருந்ததால் வந்தோம்“ என்று கூறி சென்னையைச் சேர்ந்த சங்கீதா உணவக உரிமையாளர் வந்ததாக, ஸ்ரீ பாட்டி சித்தர் இருந்த இடத்துக்கு அருகில் ரைஸ் மில் வைத்திருக்கும் குடும்பத்தினர் தெரிவித்தனர். மோகனூரில் காவிரிக்கரையிலுள்ள மிகப் பழமையான புகழ்பெற்ற சிவன் கோயில் குருக்கள்களிலும்  ஸ்ரீ பாட்டி சித்தருக்குப் பக்தர்களில் உண்டு. முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு நீண்ட ஜடாமுடியுடன் இதே பாட்டி சித்தர் அந்த கோயிலுக்கு அவ்வப்போது வருவது வழக்கம் என்றும் சில பக்தர்கள் தெரிவித்தனர். அவ்வூரிலேயே மேலும் சில, தங்களை வெளிக்காட்டிக்கொள்ளாத, உண்மையான பக்தர்களும் ஸ்ரீ பாட்டிக்கு உண்டு. கேரளா கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருவதுண்டு.





நாமக்கல் மாவட்டம் மோகனூர் நமது பகவான் பாட்டி சித்தர் வெட்ட வெளியில் இருந்து அருளாட்சி புரிந்த ஊர்.. பாட்டி இங்கு சுமார் 27 ஆண்டுகளாக இருந்ததாக இதுவரை கருதப்படுகிறது... இதில் முன்னுக்குப் பின்னான கருத்துக்களும் பல உள்ளன..


நாமக்கல் மோகனூர் நாவலடியான் கோயில் முன்பும் சுண்டக்கா செல்லியம்மன் கோயில் முன்பும் பல ஆண்டுகளாக வெட்டவெளியில் மழை வெயில் புயல் என எதற்கும் அசைந்து கொடுக்காமல் இயற்கையோடு இயற்கையாக பசி தாகம் போன்ற இயற்கை உணர்வுகளையும் தாண்டி பக்தர்களுக்கு அருளாசி புரிந்து இருக்கிறார்கள் அனைவராலும் அன்புடன் "பாட்டி" என்று அழைக்கப்பட்ட பாட்டி சித்தர்...

பலர் இங்கு பாட்டியை ஏதோ ஒரு ஆதரவற்ற பெண்மணி... குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள் என்று கருதி இருக்கிறார்கள்...

பாட்டியின் முழு வரலாறும் வெளிவரும்வரை ஓர் முடிவுக்கு வராமல் இருப்பது நலம்...
இனி மோகனூர்...

இறைவனே நேரடியாக நின்று படைத்தானோ....?

எனக் கருதும் இயற்கையான சூழல்....

சுற்றிலும் எங்கும் பச்சைப்பசேல் என விவசாயம்...

கள்ளம் கபடம் இல்லா மக்கள்....

அம்மக்களின் மனம் போல் உயர்ந்து நிற்கும் தென்னை...

வெறும் கைகளால் அள்ளி குடிக்க தோன்றும் ஆற்றுநீர்...

அந்நீரின் சலசலப்பு...

கிரகஸ்தன்னையும் தவ வாழ்வை மேற்கொள்ள செய்யும் ஓர் அற்புதம்....

தன்னுள் பார்த்து தவம் புரியும் முனிவன் நாடும் இடம்...

தேடினாலும் கிடைக்காத தெய்வங்கள்...

கோயில்கள்...

கோயிலின் மணியோசைகள்...

எங்கும் அமைதி..... பேரமைதி...

அழகு....

இயற்கைத் தாய் பெற்றெடுத்த இளையமகள் "மோகனூர்"...

இப்படிப்பட்ட அழகு வாய்ந்த இடத்தில் பாட்டியின் அவதாரம் தோன்றியதாகக் இதுவரை கருதப்படுகிறது...

சற்று நிற்க...!

இந்த இடத்திற்கு முந்தைய வரலாறும் பாட்டியின் ஆசியால் வெளி வரும் காலம் வரும்...
அதுவரை பொறுமை கொண்டு காத்திருப்போம்...

மோகனூர் அருகில் உள்ள கிராமம் கொமரி பாளையம்...

அக்கிராமத்தைச் சார்ந்தவர்கள் சுப்ரமணியம் மணிமேகலை தம்பதியினர்...

பாட்டியை சாலையின் ஓரத்தில் பலமுறை பார்த்திருந்தாலும் பாட்டியை சந்திக்கும் நேரம் அதுவரை அவர்களுக்கு வரவில்லை...

காரணம் பாட்டியிடமிருந்து அழைப்பு வரவில்லை...

மகான்கள் அழைக்காமல் யாரும் அவர்களை சந்திக்க முடியாது என்பது ஆன்மீக விதி...

உறவினர் ஒருவர் இல்லம் தேடி வந்து பாட்டியின் அற்புதத்தை கூற பாட்டியை சந்திக்க வேண்டும் அவர் தரிசனத்தை பெற வேண்டும் என ஆவல் பிறந்திருக்கிறது...

வந்தவர் என்னதான் கூறினார் என்று பார்ப்போம்...

ஒருவர் தனது மனைவியின் ஊனமுற்ற சகோதரியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருக்கு சேர வேண்டிய சொத்துக்களை தனது மாமனார் குடும்பத்திடம் இருந்து எழுதி வாங்கிக் கொள்கிறார்...
பிறகு திருமணம் செய்து கொள்ளாமலேயே தனது இல்லத்தில் பராமரித்து வருகிறார்.. பல வருடங்கள் ஓடி விடுகிறது...

பாட்டியை காண அவர் மோகனூர் வரும்பொழுது பாட்டி அவரைத் திட்டி

"சொத்தை எழுதி வாங்கிட்டு கல்யாணம் பண்ணாம இருக்கியாடா..."
உருப்படுவியா ...? குடும்பம் விளங்குமா...?

என்று திருமணம் செய்யாமல் வாழ்வதால் வரும் பாவங்களைப் பற்றி தனது பாணியில் எடுத்துரைக்க 
மனம் திருந்திய அவர் விரைவில் அப்பெண்ணை திருமணம் செய்கிறார்...

இருவரும் அப்பொழுது கிட்டத்தட்ட முதியவர்கள்...

இவையெல்லாம் எப்படி பாட்டிக்குத் தெரியும் என்று சிந்திக்கின்றார்கள்...

இச்சம்பவத்தை வந்த உறவினர் சுப்பிரமணியம் மணிமேகலை தம்பதியினரிடம் விவரிக்க இருவரும் பாட்டியை காண பயணமானார்கள்...

பாட்டி என்னும் படகில் பயணிப்போம்...






2003 ஆம் ஆண்டில் பாட்டி சித்தர் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டு மோகனூரில் சுண்டக்கா செல்லாண்டியம்மன் கோயில் முன்புறம் சாலையோரத்தில் மழை வெயில் என்று இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து கொண்டிருந்த பாட்டியை காண சென்றோம்....

அப்போது பாட்டி எங்கள் இருவரையும் பார்த்து

"நீங்க ரெண்டு பேரும் வருவீங்கன்னு எனக்கு நேற்று தெரியும்..."
என்றார்கள்...

மேலும் எங்களைப் பார்த்து
"இட்லியும் கறி குழம்பு வைத்துக் கொண்டு வா...."
என்றார்கள்...

நாங்கள் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டுவீடு திரும்பி அடுத்த நாள் இட்லியும் கறிக் குழம்பும் செய்து கொண்டு பாட்டியை காண சென்றிருந்தோம்...

பாட்டி சாப்பிட்டார்கள்...

எங்களது மகன் ராஜா அப்பொழுது தொழில் அமையாமல் படிப்பதா அல்லது வேலைக்கு செல்வதா அல்லது தொழில் பார்ப்பதா என்ற ஒரு குழப்பமான நிலையில் வெளிநாட்டில் லண்டனில் படிப்பதற்கு விண்ணப்பித்து விட்டு விசாவிற்காக காத்திருந்தோம்...

விசா பெறுவதற்கு காலதாமதமாகி கொண்டிருந்த காலம் அப்பொழுது...
நாங்கள் எங்களது மகனின் எதிர்காலம் பற்றி கேட்க பாட்டி எங்களைப் பார்த்து..

"வெளிநாடு போயி நல்லா படிப்பான்...
நான் பார்த்துக்கிறேன்...."
என்றார்கள்...

பாட்டியிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஆசிர்வாதம் பெற்று வீடு திரும்பினோம்...
வீடு திரும்பிய எங்களுக்கு பாட்டி இப்படி சொல்லி இருக்கிறார்கள்...
என்ன நடக்கும்...?
எப்படி நடக்கும்... ?
விசா காலதாமதமாகி கொண்டிருக்கிறது... இத்தனை நாள் வராத விசா இனிமேல் எப்படி வரும்..?
என்ற சிந்தனையில் ஓரிரு நாட்கள் கழிந்தது...


பாட்டி எங்களைப் பார்த்து பையனைப் பார்த்து கொள்கிறேன்... வெளிநாடு போவான்... என்று கூறிய இரு தினங்களுக்குப் பிறகு...

அதுவரை காலதாமதமாகி கொண்டிருந்த விசா உடனடியாக வந்து சேர்ந்தது...

எல்லையில்லா ஆனந்தம் அடைந்தோம்...

பாட்டியின் ஆசீர்வாதத்தால் தடைபட்டுக் கொண்டிருந்த விசா பல தடைகளை உடைத்து வந்து சேர்ந்தது...

நன்றி கூறுவதற்காக பாட்டியை காண மீண்டும் சென்றோம்... பாட்டி ஆசிர்வாதம் செய்தார்கள்...
எங்களது மகன் ராஜா மேற்படிப்பிற்காக MBA படிக்க லண்டன் சென்று விட்டு பத்திரமாக திரும்பி வந்தார்.. அவருக்கு தொழிலும் பாட்டியின் ஆசீர்வாதத்தால் அமைந்தது..

2003 ஆம் ஆண்டில் சுண்டக்காய் செல்லாண்டியம்மன் கோயில் முன்புறம் பாட்டி சித்தர் அவர்கள் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்கள்... நாங்கள் சந்தித்த காலகட்டங்களில் இயற்கை உபாதைகளை அவர்கள் அமர்ந்திருந்த இடத்திலேயே கழித்து இருப்பார்கள் அவர்களால் அதிக தூரம் நடக்க இயலவில்லை...

அவர்கள் கழித்த இயற்கை உபாதைகளை அருகிலேயே பார்த்திருக்கிறோம்...
ஒரு சிறு துர்நாற்றம் வீசாது...

சித்தர்களின் மலம் மற்றும் சிறுநீர் துர்நாற்றம் வீசாது என்று கேள்விப்பட்டிருக்கிறோம்...
ஆனால் அன்று தான் நேரில் பார்த்து உணர்ந்தோம்...

சிறிது நேரம் பாட்டியிடம் அமர்ந்து மலத்தை கவனித்து பார்த்தபோது மல்லிகைப்பூ மணம் வீசியது...
நாங்கள் வீடு திரும்பியபின் அடிக்கடி நினைத்து பார்ப்பதுண்டு...

பாட்டி குளிப்பதில்லை அதன் சிறு துர்நாற்றமும் வீசியதும் கிடையாது..

பாட்டியை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கும்...

பாட்டியை காண்பதற்கு வெளியூரில் இருந்தும் நிறைய பக்தர்கள் வருவார்கள்...

உணவு பொட்டலங்களை கொண்டுவந்து கொடுப்பார்கள்... சிலர் கொடுப்பதை மட்டும் வாங்கி சாப்பிடுவார்கள்..

பலர் கொடுப்பதை தூக்கி வீசி எறிந்துவிடுவார்கள்...

துண்டு புகையிலையை வாயில் மென்று துப்பி விடுவார்கள்...

சில நேரங்களில் பாட்டி அமர்ந்து இருந்த இடத்தின் கீழே உள்ள மண்ணை எடுத்து சாப்பிடுவார்கள்...
பாட்டியைச் சுற்றி சில மூட்டைகள் இருக்கும்...

பல பக்தர்கள் கொண்டு வந்து கொடுக்கும் உணவு பொருள்களின் பாத்திரங்களும் அங்கேயே இருக்கும்...

வெயில் மழை என எதற்கும் அஞ்சாமல் பொருட்படுத்தாமல் வெட்டவெளியில் பாட்டி சித்தர் அமர்ந்திருந்தார்கள்...

கடுமையான மழை பெய்த போது கூட பாட்டி எங்கேயும் சென்று ஒதுங்கவில்லை...

நனைந்து கொண்டே தான் அமர்ந்திருந்தார்கள்.. கடுமையான கோடை காலத்திலும் அங்கேயேதான் அமர்ந்திருந்தார்கள்...

பாட்டியின் உடை அரைகுறையாகத் தான் இருக்கும்..சிலநேரங்களில் நிர்வாணமாகத்தான் தோன்றினார்கள்...

பாட்டியை காண்பதற்கு ஆசி பெறுவதற்கு சினிமா துறையில் இருந்தும் சில பிரபலங்கள் வந்தார்கள்...




நாங்கள் செல்லாண்டியம்மன் கோயில் முன்பு சாலையோரத்தில் அமர்ந்திருந்த பாட்டியை காண்பதற்கு அவ்வப்போது சென்று ஆசி பெற்று திரும்புவது வழக்கம்..

2009 ஆம் ஆண்டில் கொடுமுடியில் உள்ள டாக்டர் நடராஜன் அவர்கள் தோட்டத்திற்கு பாட்டி சித்தர் சென்ற பிறகு சில மாதங்கள் சென்றபின் நாங்கள் சென்று பார்த்து வர வேண்டும் என்று மனதில் தோன்றியது...

கொடுமுடியில் உள்ள டாக்டர் நடராஜன் ஐயா அவர்கள் தோட்டத்திற்கு சென்றிருந்தோம்... (அல்லது) பாட்டி எங்களை வர வைத்தார்களா என்றும் புரியவில்லை...

நாங்கள் இருவரும் புகையிலையும் தின்பண்டங்களும் வாங்கி கொடுத்தோம்... அப்போது பாட்டி என்னை (சுப்ரமணியம்)

எனது இரு கன்னத்தில் மாறி மாறி குழந்தையை அடிப்பது போல்

"தோட்டம்.... காடு..... தோட்டம்.... காடு...தோட்டம்...காடு....தோட்டம்.... காடு...தோட்டம்.... காடு..."
என்று கூறிக்கொண்டு மாறி மாறி அடித்துக் கொண்டு சிறிது நேரம் இருந்தார்கள்...
பிறகு

"நான் இருக்கிறேன்... போய் வா..."
என்றார்கள்...

பாட்டி கூறியதை பார்க்கும் பொழுது எனக்கு ஏதோ தோட்டத்தில் நடக்கப் போகிறது என்று மற்றும் புலனாகியது...

பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு இருவரும் மோகனூர் இல்லம் திரும்பினோம்...
அடுத்த நாள் நான் தோட்டத்தில் விவசாய வேலையை கவனிப்பதற்கு தோட்டத்திற்குச் சென்று இருந்தேன்...

திடீரென தோட்டத்தில் எங்கிருந்தோ வந்த ஒரு பெரிய நாகம் என் முன் படமெடுத்து நின்றது...

ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்துவிட்டேன்...

அடுத்த சில நிமிடங்களில் சுதாரித்துக் கொண்டேன்...

என் இரு கைகளையும் எடுத்து வணங்கி
பாட்டியை மனதில் நினைத்து கொண்டு.
..
"பாட்டி....ஏனம்மா இப்படி பயமுறுத்தல்லாமா..?"
என்றேன்...

உடனே மனித தலை அளவுக்கு படம் எடுத்திருந்த நாகம் திரும்பி சென்று மறைந்துவிட்டது...
எனக்கு வந்தது பாட்டியா அல்லது சாதாரண நாகமா என்றெல்லாம் தெரியாது...
ஆனால் ஏதோ ஒரு நினைவில் பாட்டியை அந்த இடத்தில் நினைத்து விட்டேன்...
நாகம் திரும்பிச் சென்றது...

எனக்கு வரவிருந்த ஆபத்தை நீக்குவதற்கு எங்களை கொடுமுடி வரவைத்து என் கன்னத்தில் மாறி மாறி அடித்தார்களா...?

தெரியவில்லை...

அல்லது நாகமாக காட்சி கொடுத்தார்களா...?

இதன் சூட்சுமமும் எங்களுக்கு புரியவில்லை...

ஏதோ ஒருவகையில் பாட்டி நாமக்கல் மோகனூர் இல் இருந்து கொடுமுடி டாக்டர் தோட்டத்திற்கு சென்ற பிறகும் எங்களை வரவைத்து காத்தருளியதோடு மட்டுமல்லாமல் இன்றும் ஜீவசமாதி அடைந்த பிறகும் காத்து அருள்கிறார்கள் என்பது மட்டும் உறுதி....உறுதி....

தான் தான் செய்து பக்தர்களை காத்தருள்கிறோம் என்பது கூட பக்தனுக்கு தெரியக்கூடாது என்று எண்ணுகிறார்கள் பாட்டி...








நாமக்கல் மாவட்டம் மோகனூரில் சுண்டக்கா செல்லாண்டியம்மன் கோயில் அருகில் சாலையோரத்தில் பாட்டி சித்தர் அமர்ந்திருந்தபோது பல பேருந்து ஓட்டுனர்களும் நடத்துனர்களும் பாட்டிக்கு சாப்பாடு கொடுத்து சென்றிருக்கிறார்கள்...

வழிப்போக்கர்கள் பக்கத்து ஊர் காரர்களும் உண்ண உணவு கொடுத்திருக்கிறார்கள்...
அக்கம்பக்கத்தினரும் பல வருடங்களாக உணவு கொடுத்திருக்கிறார்கள்...

சுண்டக்காய் செல்லாண்டி அம்மன் கோயில் அருகில் உள்ள ஊர் கொமரிபாளையம்...
அங்கு கிராமத்தினரால் அன்புடன் ஈசா என்று அழைக்கப்படுபவர் ஈஸ்வரி அம்மாள்...
கிராமத்து முதிய பெண்மணி...

அதற்கேற்றார்போல் உடை.....

கண்களில் ஒளி...

முகத்தில் புன்னகை...

ஒல்லியான தேகம்...

கள்ளங்கபடமற்ற எளிமை...

சூழ்ச்சிகள் நிறைந்த உலகில் எதார்த்தம்...

அன்புடன் உபசரிப்பு...

கலகலப்பான பேச்சு...

பசியோடு இருந்தால் உணவு கொடுத்து உதவும் மனப்பான்மை...

முதிய வயதிலும் கடின உழைப்பு...

தெய்வ பக்தி....

கூடவே பாட்டியின் மீது தீரா காதல்...

வெகுளித்தனமான பேச்சு...

யாராக இருந்தாலும் முக்கியமாக முதியவர்கள் ஆக இருந்தால் ஓடி ஓடி உதவி செய்யும் குணம்...
அவ்வப்போது தலையில் ஜடாமுடி விழுவதும் அதை மொட்டை அடிப்பதுமாக ... தோற்றம்
இவையே ஈசா என்றழைக்கப்படுகின்ற ஈஸ்வரி அம்மாளின் தோற்றம் மற்றும் குணாதிசியம்...
பாட்டி உடனான அனுபவங்களை பற்றி ஈசா என்கிற ஈஸ்வரி அம்மாள் கூறும்போது

நான் விவசாய வேலைக்குச் செல்லும் பொழுதெல்லாம் பாட்டியை பார்த்துவிட்டுத்தான் செல்வேன்... மலமும் சிறுநீரும் கழித்து வைத்திருப்பார்கள்.. ஆனால் ஒரு சிறு துர்நாற்றம் கூட வீசாது...
நான் நன்கு கவனித்து இருக்கிறேன்... அதை வைத்துத்தான் பாட்டியிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது... அவர் சித்தராக இருக்கக்கூடும் என்று இங்குள்ளவர்கள் கருதினார்கள்...

வாரம் ஒருமுறை பாட்டியை குளித்து விடுவேன்... என்னை மட்டும் பாட்டி திட்டியது கிடையாது.... வாமா.. போமா ...என்று தான் பேசுவார்கள்...

எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கும்...

பாட்டியிடம் திட்டு வார்த்தை வாங்காமல் இருந்தது நான் ஒருத்தியாக தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்...

மிகுந்த அன்போடு தான் என்னை நடத்தினார்கள்... எனது மகனைப் பேரன்... பேராண்டி...என்றுதான் பேசுவார்கள்...

நான் பாட்டி கழித்து வைத்திருந்த இயற்கை உபாதைகளை என் வெறும் கைகளாலே அகற்றுவேன்...
பாட்டியின் கை கால் கழுவி விடுவேன்...

அமுக்கியும் விடுவேன்...

சிலநேரங்களில் அங்கே கிடந்த மண்ணை எடுத்து சாப்பிடுவார்கள்...

நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்...

எனது வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து கொடுத்தேன்...

ஓரிரு வாய் சாப்பிடுவார்கள்...

புகையிலை கொடுத்தால் ஒரு துண்டை வாயில் போட்டு விட்டு மீதியை கோயிலின் காம்பவுண்ட் சுவற்றுக்குள் வீசி விடுவார்கள்...

நான் குளிப்பாட்டி விட்டால் எதுவும் சொல்ல மாட்டார்கள்...

குளிப்பாட்டி விட்டு உடை மாற்றி விடுவேன்...

பாட்டின் உடலிலிருந்து சிறிதுகூட குளிக்காமல் இருந்ததற்கான துர்நாற்றம் அடிக்காது...

வேறு யாரேனும் போய் செய்தால் சண்டைக்கு வந்து விடுவார்கள்...

தடி எடுத்து அடித்து விடுவார்கள்...

துரத்தி விடுவார்கள்...

அதனால் பக்கத்தில் செல்வதற்கு பயந்துதான் இருந்தார்கள்...

பல நேரங்களில் நிர்வாணமாக படுத்து இருப்பார்கள்...

நான் சென்று உடையை சரி செய்து விட்டு வீட்டிற்கு வருவேன்...

பாட்டியிடம் போனால் திட்டுகிறார்கள் என்று பலர் ஒதுங்கியே போய்விடுவார்கள்...

பாட்டிக்கு வெட்டவெளி தான் வீடு...

மழை வெயில் புயல் காற்று இடி மின்னல் எல்லாம் பாட்டியை கண்டுதான் நடுங்கின...
பாட்டி ஒருபோதும் நடுங்கியதாய் தெரியவில்லை...

அவ்வளவு இருட்டில் பாட்டி தன்னந்தனியாய்...

பெண் சிங்கம் போல் தான் கர்ஜித்தார்...

சில நேரங்களில் அருகில் உள்ள புதரில் கண்களை மூடிய நிலையில் இருப்பார்கள்...

கைகளை ஊன்றி நகர்ந்து நகர்ந்து தான் செல்வார்கள்...

டயர் வண்டி ஏறி காலில் முறிவு ஏற்பட்டிருந்தது...

சில நேரங்களில் சத்தமாக பாடுவார்கள்..

சிலநேரங்களில் மெதுவாக..

பல வருடங்கள் இப்படியே ஓடின...

நான் பாட்டியிடம் எதுவும் கேட்டதில்லை...

கேட்கவும் தோன்றவில்லை...

எனக்குத் தேவையுமில்லை...

என் வாழ்வு எளிமையானது...

தேவையோ குறைவானது...

ஆனாலும் என் வாழ்விலும் இறைவன் சோதனை வைத்தான்...

துடியாய் துடித்துப் போனேன்...




அமைதியாய் தேவைகள் அதிகம் இல்லாமல் போய்க் கொண்டிருந்த எனது வாழ்வில் எனது மகன் ஒரு பிரச்சனையில் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சிக்கிக் கொண்டான்...

வீட்டிற்கு வர முடியாத நிலைமை...

எனது மகனை அடித்து விட்டார்கள்...

துடித்து விட்டேன்...

அழுதுகொண்டே பாட்டியிடம் ஓடினேன்...

நான் பிரச்சினையை கூறுவதற்கு முன்பே...

"பயப்படாதே... நான் இருக்கிறேன்... பேரனை நான் கூட்டிக் கொண்டு வருகிறேன்..."
என்றார்கள்...

அதேபோல் ஓரிரு தினங்களில் அந்தப் பிரச்சினையை முடித்து எனது மகனை பத்திரமாக வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தார்கள்...

செய்வினை பிரச்சனை ஒன்றும் இருந்தது...பாட்டியே அதைப் பற்றி கூறி நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்கள்...

அதன் பாதிப்பில் இருந்து எங்களை காப்பாற்றினார்கள்...

பாட்டி இல்லை என்றால் குடும்பமே சிதைந்து இருக்கும்...

இன்று எனது மகன் குழந்தைகளுடன் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கக் காரணம் பாட்டிதான்...

பாட்டியிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு இருந்தும் இதைத் தவிர வேறு எதுவும் நான் பாட்டியிடம் கேட்கவில்லை....

பொன்னோ பொருளோ எதுவும் கேட்டதில்லை...

சில வெளியூர் அன்பர்கள் பாட்டியிடம் வேண்டுதல்கள் வைப்பார்கள்...பிரச்சினை தீர்ந்தவுடன் பாட்டிக்கு தங்கத்தில் சங்கிலி செய்து கொண்டுவந்து போட்டார்கள்..

பாட்டியை பார்க்க வருபவர்களுக்கு பாட்டி விரும்புவர்களுக்கு அதை கொடுத்துவிடுவார்கள்...

ஒருமுறை என்னை அவர்கள் மடிமீது உட்கார வைத்து தலையெல்லாம் தடவிவிட்டு ஆசீர்வதித்தார்கள்... மகளைப் போல் தான் நடத்தினார்கள்...

எனக்கு சில நேரங்களில் சாமி வந்துவிடும்... பாட்டி அதைப் பற்றி என்னிடம் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்கள்...

"இனிமேல் தாலி போட வேண்டாம்... அதை கொண்டு போய் பேரன் கிட்ட கொடுத்திடு..."
என்றார்கள்...

அன்றிலிருந்து இன்றுவரை பாட்டி கூறியதை அப்படியே கடைபிடிக்கிறேன்...

ஒரு முறை என்னிடம் பாட்டி...

"உன்கிட்ட குழந்தை வரம் கேட்டு வர்றவங்களுக்கு.... நீ... குழந்தை வரத்தை கொடு.... கிடைக்கும்...."
என்று கூறி ஆசீர்வாதம் செய்தார்கள்...

மேலும் என்னை
"இனிமேல் செருப்பு அணிய வேண்டாம்.."
என்றார்கள்..

பாட்டி கொடுத்த வரத்தை மகிழ்ச்சியுடன் இரு கைகளையும் கும்பிட்டு நான் பெற்றுக் கொண்டேன்...

பாட்டி மோகனூரில் இருந்து கொடுமுடி சென்ற பிறகு மோகனூரை சார்ந்தவர்கள் என்னிடம் குழந்தை வரம் வேண்டி வந்தார்கள்...

மோகனூர் கோயிலில் அன்னதானம் போட சொன்னேன்... அடுத்த வருடம் குழந்தை கிடைக்கும் என்றேன்...

அதே போல் அவர்களும் அன்னதானம் போட்டு அடுத்த வருடம் குழந்தை பாக்கியம் அவர்களுக்கு கிடைத்தது...

இன்னொரு தம்பதியினரும் குழந்தையில்லாமல் என்னை அணுகினர்..

அவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைத்தது...

எனக்கு பணம் கொடுத்தார்கள்... வாங்க மறுத்து விட்டேன்...

இதை நான் சொல்லும்வரை (பதிவிடும் வரை) இருவர் மட்டுமே என்னை அணுகி இருந்தனர்...

இருவருக்குமே குழந்தை பாக்கியம் கிடைத்தது...இதற்குக் காரணம் பாட்டி எனக்கு கொடுத்த வரமே...
நான் பணமோ வேறு பொருட்களையும் வாங்கிக் கொள்வதில்லை... பாட்டி எனக்கு கொடுத்ததை உலகத்திற்கு கொடுக்கின்றேன்...

இந்த அற்புதங்களை படிப்பவர்களுக்கு பாட்டியின் அருளால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கட்டும்...

பாட்டியை தியானிப்போம்...
ஓம் குழந்தை வரம் அருளும் பாட்டி சித்தர் போற்றி போற்றி....

அப்பப்பா ..பார் போற்றும் பாட்டி சித்தரின் அற்புதங்கள் படிக்க..படிக்க நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இனிவரும் பதிவுகளில் பாட்டி சித்தரின் அற்புதங்களை தொடர்வோம். 

பாட்டி சித்தர் ஜீவசமாதி இருப்பிடம்:

கரூர் பேருந்து நிலையத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் தான்தோன்றிமலை பேருந்து நிறுத்தம் உள்ளது.. அதன் அருகிலேயே அரசு மயானம் உள்ளது...மயானத்தில் பாட்டி சித்தர் ஜீவசமாதி உள்ளது.. அங்கு கேட்டால் கூறுவார்கள்.

காலையில் 6 மணி முதல் மாலை 5 மணி வரை செல்லலாம். 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 116 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2021/09/116.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

No comments:

Post a Comment