இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் இந்த மாத அதாவது செப்டம்பர் மாத சேவைகள் வழக்கம் போல் தொடங்கியுள்ளோம். நம் தளத்தின் சேவைக்கு அருளுதவி, பொருளுதவி செய்து வரும் அனைவருக்கும் இங்கே நன்றி கூறி மகிழ்கின்றோம். தங்களின் உறுதுணையால் மட்டுமே நம்முடைய சேவைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது, தீப எண்ணெய் சேவை, சின்னாளபட்டியில் மோர் சேவை, அன்னசேவை என தொண்டுகள் தொடர்ந்து வருகின்றது.
சமீபத்தில் கூட பெங்களூரு சத்சங்கத்தில் பக்தர்கள் அனைவரும் ஆறுபடை வீடுகளுக்கும் தோரணமலை தோரணமலை செல்வதற்கு முன் குற்றாலத்தில் நீராடி சென்று முருகனை வழிபட வேண்டும் என்று வாக்குகள் தந்திருக்கின்றார்.
(பெங்களூர் சத்சங்க வாக்குகளும் விரைவில் வெளிவரும்)
முருக வழிபாடு அனுதினமும் கந்தர் அனுபூதியும் கந்த சஷ்டி கவசமும் ஓதி வர வேண்டும் என்றும் உத்தரவு தந்திருக்கின்றார் குருநாதர். இதனையொட்டியே இன்றைய பதிவில் கந்தர் அனுபூதியில் இருந்து மூன்றாம் பாடலை இன்று சிந்திக்க உள்ளோம். kaumaram.com இணைய தளத்திற்கு நன்றி கூறி பதிவினில் செல்வோம்.
(மாயை அற)
மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே.
......... பதவுரை .........
மக மாயை ... வல்லமை மிக்க பெரிய மாயைகளை எல்லாம்,
களைந்திட வல்ல ... நீக்க வல்லவராகிய,
பிரான் ... உயிர்களைவிட்டு பிரியாதவராகிய முருகப் பிரான்,
முகம் ஆறும் ... தன் வாயினால் வழிகளை (உபதேசங்களை),
மொழிந்தும் ... தந்து அருளிய போதிலும்,
அகம் ... வீடு,
மாடு ... பொன் (செல்வம்),
மடந்தையர் என்று ... மாதர் என்று இவைகளை சதா நினைத்து,
அயரும் ... சோர்வு அடையச் செய்கிற,
சக மாயை உள் நின்று ... உலக மாயைக்குள் கிடந்து,
தயங்குவது ஒழிந்திலனே ... கலங்குவதை நான் விடவில்லையே.
[இவ்வுலக வாழ்க்கையைச் சார்ந்த பொய்யான காட்சிகளாலும் நம்பிக்கைகளாலுமான] பெரிய மாயையை நீக்கவல்ல கடவுளான திருமுருகப்பெருமான் தன் ஆறு திருமுகங்களாலும் பல வழிகளில் உபதேசித்து அருளிய தத்துவங்களை, அந்தோ, [மீண்டும் நினைவுகூர்ந்து] சொல்லாமற் போய்விட்டேனே! 'வீடு-துணிமணி-மாதர்கள்' ஆகியவற்றால் [இறுதியில் பெரும் வருத்தத்தைத் தரும் பொய்யான] இவ்வுலக மாயையில் அகப்பட்டுக் கொண்டு அதை உண்மை என்று நம்பி அடியேன் இன்னும் தயங்கிக்கொண்டிருக்கின்றேனே!
......... விளக்கவுரை .........
இந்தப் பாட்டிற்கு பெரும்பான்மையோர் கூறியிருக்கும் உரைகளை இருவகையாகப் பிரிக்கலாம். இவ்விரு உரைகளும் ஏற்புடையதாக இல்லை.
முருகன் ஆறு முகங்களுடன் வந்தருளி உபதேசம் செய்தும் நான் உலக மாயையில் நின்று தயங்குகிறேனே என்கிறது ஓர் உரை.
முருகன் தன்னுடைய திருவாக்கால் ஷடாச்சர உபதேசம் செய்தும் நான் தேற வில்லையே என்கிறது மற்றுமொரு உரை.
இவ்விரு உரைகளையும் நாம் ஏற்றுக்கொண்டால் முருகனுடைய பரிபூரண குருதத்துவம் குறைந்துவிடும். முருகன் ஆறு திருமுகங்களுடன் எழுந்தருளி ஞானோபதேசம் செய்தும் எனக்கு
சம்சார மாயை நீங்கவில்லையே என பொருள் கொண்டால் முருகனின் பரதத்துவத்திற்கு இழுக்கு ஏற்படும்.
உபதேசம் செய்தவர் எப்படிப்பட்டவர், செய்த உபதேசம் எப்படிப்பட்டது என்பதின் தரமே குறைந்துவிடும். ஆறு என்பதை எண் வரிசை எனக் கொண்டதினால் வந்த குழப்பம் இது.
தமிழ் செம்மொழியில் ஆறு என்பதற்கு, வழி .. மார்க்கம் என்றும் பொருள். சகலவற்றிக்கும் முதல் காரணமாய் இறைவனின் ஐந்தொழில்களுக்கும் (ஆக்கல், காத்தல் அழித்தல், மறைத்தல்,
அருளுதல்) ஏதுவாயிருக்கும் மகமாயை குடிலை, குண்டலிணி, விந்து எனப்படும். இறைவனின் ஆற்றல் அவனுடன் ஒன்றி இருக்கும் வரை அதற்கு சக்தி எனப்படும். பிரிந்து இருக்கும் நிலைதான் மகா மாயை.
இப்படிப்பட்ட மகா மாயையை அடக்கி ஒடுக்க வல்ல முருகன் தன் வாயால் ஆன்மாக்கள் உய்யும் வழியை 18 வகைகளாக நிர்மாணித்து இருக்கிறான்.
அவை ...
வேதங்கள் .. 4,
சாத்தரங்கள் .. 6,
புராணங்கள் கந்தர்வம் வித்தை .. 8.
ஆக .. 18.
இந்த அஷ்டதச வித்தைகளை நமக்காக இறைவன் படைத்திருந்தும் நாம் அவற்றைக் கடைபிடிக்காமல் பிரபஞ்ச மாயையின் சொரூபமான பொன், பெண், மண் என்கிற மோக வலையில் சிக்கி தவிக்கிறோமே என நமக்காக அருணை முனிவர் இரங்குகிறார்.
முருகா! எந்தனுக்கு ஏதும் தெரியாது. மனிதனாகப் பிறந்து விட்டோம். அனைத்தும் நீயே! அனைத்தும் நீயே செய்து தா! அனைத்தும் நீயே செய்து கொண்டிருக்கிறாய். இன்னும் செய்து தா!
என்று வேண்டி பணிந்து கந்தர் அநுபூதி படிப்போம்.
திருச்சிற்றம்பலம்
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2024/04/04092023-1.html
No comments:
Post a Comment