"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, June 8, 2020

சிந்தனைக்கு சில

அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.


புதிய முயற்சியாக. சிந்தனைக்கு சில என்று படித்தும், கேட்டும் பிடித்த பாடல்களை இங்கே தொகுத்து தருகின்றோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிந்தித்து பாருங்கள். உங்களுக்குள் வெளிச்சம் கிடைக்கும். ஆம். இவை அனைத்தும் சித்தாந்த முத்துக்கள். ஞானப் புதையல்கள். அருளாளர்களின் அனுபவங்கள். ஆன்மிகம் என்று தேடுவதற்கு ஒன்றும் இல்லை. நம் கையில் தான் இருக்கின்றது. நம் கையில் உள்ள ஆன்மிகத்தை உணர முற்படுங்கள். சரியை, கிரியை, யோகம், ஞானம் எந்த பாதையில் சென்றாலும் தடம் பதித்து செல்ல முற்படுங்கள். 





உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன் 
நிலவு லாவிய நீர்மலி வேணியன் 
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் 
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம். 
- பெரியபுராணம் 


                                                                                                                                                                                                     


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
- திருவாசகம்

 


உண்டதே உண்டு உடுத்ததே உடுத்து
உரைத்ததே அடுத்தடுத்து உரைத்து
கண்டதே கண்டு கேட்டதே கேட்டுக்
கழிந்தன கடவுள் நாள் எல்லாம்
- பட்டினத்தார்


தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி -  கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ!
- பாரதியார்

என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே
என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ?
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.

அண்டர்கோன் இருப்பிடம் அறிந்துஉணர்ந்த ஞானிகாள்
பண்டறிந்த பான்மைதன்னை யார்அறிய வல்லரே?
விண்டவேதப் பொருளைஅன்றி வேறு கூற வகையிலாக்
கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்ப தில்லையே.

தூரம்தூரம் தூரம்என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணும் எங்குமாய்ப் பரந்தஅப் பராபரம்
ஊருநாடு காடுமோடி உழன்றுதேடும் ஊமைகாள்!
நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே!
- சிவவாக்கியர்


தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்த பின்
தன்னை அர்ச்சிக்க தான் இருந்தானே !
- திருமந்திரம்


காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர்
அகண்டா கார சிவ போக மெனும்
பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப்
பூரணமாய் ஏக வுருவாய்க் கிடக்குதையோ
இன்புற்றிட இனி எடுத்த தேகம்
விழுமுன் புசிப்பதற்குச்
சேரவாருஞ் செகத்தீரே.
- தாயுமானவர்

யான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந்தானே.
- திருமந்திரம்

சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு 
அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் 
இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் 
விதியே மதியாய் விடும்  
நல்வழி


ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு 
பேரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு 
சூரையங்காட்டிடை கொண்டு பொய் சுட்டிட்டு 
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே
- திருமந்திரம் 


விட்டுவிடப் போகுதே உயிர் விட்டவுடனே உடலைச் 
சுட்டுவிடப்போகின்றார் சுற்றத்தார் பட்டதுபட் 
எந்நேரமுஞ் சிவனை ஏத்துங்கள் போற்றுங்கள் 
சொன்னேன் அதுவே சுகம்
பட்டினத்தார் 


அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் 
மடக்கொடியாரொடும் மந்தணம் கொண்டார் 
இடப்பக்கமே இறை நொந்தது என்றார் 
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே
- திருமந்திரம் 


உடலினை நிசம் என்று எண்ணி உலகெலாம் ஓடியாடிக் 
கடல்மரக் கலப்பாய்க் கம்பக் காகம் போல் கலக்கமுற்றாய் 
திடமருள் குருவின் பாதம் சிக்கெனப் பிடித்து நின்றால் 
நடமிடு நாகைநாதர் நற்பதம் பணிவாய் நெஞ்சே

- நெஞ்சறிவிளக்கம்

காணவேண்டும் என்றுநீர் கடல்மலைகள் ஏறுவீர் 
ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே? 
வேணும் என்று அவ்வீசர்பாதம் மெய்யுளே தரிப்பிரேல் 
தாணுவாக நின்ற சீவன் தான்சிவம் அதாகுமே.
- சிவவாக்கியர் 

சீவன் என சிவன் என வேறில்லை 
சீவனார் சிவனாரை அறிகிலர் 
சீவனார் சிவனாரை அறிந்தபின் 
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே.
- திருமந்திரம் 

உள்ளத்து ஒருவனை உள்ளுறு ஜோதியை 
உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை 
உள்ளமும் தானும் உடனே இருக்கினும் 
உள்ளம் அவனை உருவறியாதே.
- திருமந்திரம்

திருஉடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம் 
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியே 
உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே 
உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே 
அருஉடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய் 
அப்பாலு மாய்நிறைந்த அருட்பெருஞ்சோ தியனே 
மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா 
வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே.  
- திருஅருட்பா (ஆறாம் திருமுறை)

இரும்பனன் றுண்ட நீர்போல் 
எம்பெரு மானுக்கு, என்றன் 
அரும்பெற லன்பு புக்கிட் 
டடிமைபூண் டுய்ந்து போனேன், 
வரும்புயல் வண்ண னாரை 
மருவியென் மனத்து வைத்து, 
கரும்பினின் சாறு போலப் 
பருகினேற் கினிய லாறே 
- திருமங்கை ஆழ்வார்

எத்தனைதான் கற்றாலும் எத்தனைதான் கேட்டாலும் 
எத்தனை சாதித்தாலும் இன்புறா சித்தமே 
மெய்யாகத் தோன்றி விடும் உலக வாழ்வு அனைத்தும் 
பொய்யாக தோன்றாத போது. 
- சிவபோகசாரம் 

அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு 
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே! - வெருவிப் 
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் 
மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே! 
- அபிராமிஅந்தாதி 

பெற்ற தாய் தனை மகன் மறந்தாலும் 
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் 
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் 
உயிரை மேவிய உடல் மறந்தாலும் 
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் 
கண்கள் இமைப்பது மறந்தாலும் 
நற்றவத் தவர் உள்ளிருந்து ஓங்கும் 
நமசிவாயத்தை நான் மறவேனே 
- திருஅருட்பா

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு 
என்புதோல் போர்த்த உடம்பு. 
- திருக்குறள் (80) 

காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே 
பாலுண் கடைவாய் படுமுன்னே - மேல்விழுந்தே 
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே 
குற்றாலந் தானையே கூறு. 
- பட்டினத்தார் 

நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்! 

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும் 
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று 
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்! 

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் 
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று 
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்! 

தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு 
நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் 
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்! 

துன்பமினியில்லை சோர்வில்லை சோர்வில்லை தோற்பில்லை 
நல்லது தீயது நாமறியோம் நாமறியோம் நாமறியோம் 
அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! 
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்! 
- பாரதியார் 

கருவ டைந்து பத்துற்ற திங்கள் 
     வயிறி ருந்து முற்றிப்ப யின்று 
கடையில் வந்து தித்துக்கு ழந்தை வடிவாகிக் 
     கழுவி யங்கெ டுத்துச்சு ரந்த 
முலைய ருந்து விக்கக்கி டந்து 
     கதறி யங்கை கொட்டித்த வழந்து நடமாடி 
அரைவ டங்கள் கட்டிச்ச தங்கை 
     இடுகு தம்பை பொற்சுட்டி தண்டை 
அவைய ணிந்து முற்றிக்கி ளர்ந்து வயதேறி 
     அரிய பெண்கள் நட்பைப்பு ணர்ந்து 
பிணியு ழன்று சுற்றித்தி ரிந்த 
     தமையு முன்க்ரு பைச்சித்தம் என்று பெறுவேனோ 
இரவி இந்த்ரன் வெற்றிக்கு ரங்கி 
     னரச ரென்றும் ஒப்பற்ற உந்தி 
யிறைவன் எண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன் 
     எரிய தென்றும் ருத்ரற்சி றந்த 
அநும னென்றும் ஒப்பற்ற அண்டர் 
     எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனமேவ 
அரிய தன்ப டைக்கர்த்த ரென்று 
     அசுரர் தங்கி ளைக்கட்டை வென்ற 
அரிமு குந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே 
     அயனை யும்ப டைத்துச்சி னந்து 
உலக மும்ப டைத்துப்ப ரிந்து 
     அருள் பரங்கி ரிக்குட்சி றந்த பெருமாளே 
- திருப்புகழ்  

கரையில்வீண் கதையெலா முதிர்கருங் காக்கைபோல் 
கதறுவார் கள்ளுண்ட தீக் 
கந்தம் நாறிட வூத்தை காதம் நாறிட வுறு 
கடும் பொய்யிரு காதம் நாற 
வரையில்வாய் கொடுதர்க்க வாதமிடுவார் சிவ 
மணங்கமழ் மலர்ப்பொன் வாய்க்கு 
மவுன மிடுவாரிவரை மூடரென வோதுறு 
வழக்குநல் வழக்கெனினும் நான் 
உரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசுமவ 
ரோடுறவு பெற வருளுவாய் 
உயர்தெய்வ யானையொடு குறவர்மட மானுமுள் 
ளுவப்புறு குணக் குன்றமே 
தரையிலுயர் சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர் 
தலமோங்கு கந்த வேளே 
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி 
சண்முகத் தெய்வ மணியே.  
- திருஅருட்பா 

அறிவு, நோக்கம், செயல்களில் குழம்பியவர்கள் ராட்ஷசதனமான நாத்திக கருத்துகளால் கவரப்படுகின்றனர். 
- பகவத்கீதை 9.12.

சோதித்த பேரோளி மூன்று ஐந்து என நின்ற 
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள் 
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன் என்று 
பேதித்து அவரைப் பிதற்றுகின்றாரே. 
- திருமந்திரம் (110) 

நேற்றுளார் இன்று மாளா நின்றனர் அதனைக் கண்டும் 
போற்றிலேன் நின்னை அந்தோ போக்கினேன் வீணே காலம் 
ஆற்றிலேன் அகண்டா னந்த அண்ணலே அளவில் மாயைச் 
சேற்றிலே இன்னம் வீழ்ந்து இளைக்கவோ சிறிய னேனே 
- தாயுமானவர் 

திருநாள் நினைத்தொழும் நன்னாள் தொழாமல் செலுத்திய நாள் 
கருநாள் என மறை எல்லாம் புகலும் கருத்து அறிந்தே 
ஒரு நாளினும் நின் தன்னை மறவா அன்பர் ஒற்றியில் வாழ் 
மருநாண் மலர்க்குழல் மானே வடிவுடை மாணிக்கமே. 
- திருஅருட்பா (இரண்டாம் திருமுறை)


நில்லாத வற்றை நிலையின என்றுணரும் 
புல்லறி வாண்மை கடை. 
- திருக்குறள் (331) 

நல்வினை தீவினை என்று இரு வகையால் 
சொல்லப்படும் கருவினில் தோன்றி 
வினைப் பயன் விளையுங் காலை உயிர்கட்கு 
மனப் பேர் இன்பமும் கவலையும் காட்டும். 
- மணிமேகலை 

எண்ணவிசாரமில்லாது, விவேகமற்ற சிறுபிள்ளைத்தனமாக நாளைக் கடத்துபவர்கள், கவனமில்லாதவர்கள், செல்வத்தால் மயக்கம் அடைந்தவர்கள் என்னும் இத்தகையவர்களுக்கு இவ்வாழ்க்கைக்கு அப்பால் உள்ள உறுபொருள் புலப்படுவதில்லை. இந்த உலகம் ஒன்றுதான் உண்டு. வேறொன்று இல்லவே இல்லை என்றே அவர்கள் சொல்கின்றனர்! இவ்வண்ணமாக அவர்கள் மரணத்திலிருந்து மரணத்திற்கே அவர்கள் மீண்டும் மீண்டும் அலைந்தேகுகின்றனர். 
- உபநிடதம்


பல்லாயிர மனிதரில் ஒருவன் சித்திபெற முயல்கிறான். முயற்சியுடைய சித்தர் பலரில் ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான். 
- பகவத்கீதை 7.3.

எல்லா உலகமும் என்வசம் ஆயின 
    எல்லா உயிர்களும் என்உயிர் ஆயின 
எல்லா ஞானமும் என்ஞானம் ஆயின 
     எல்லா வித்தையும் என்வித்தை ஆயின 
எல்லாப் போகமும் என்போகம் ஆயின 
     எல்லா இன்பமும் என்இன்பம் ஆயின 
எல்லாம் வல்லசிற் றம்பலத் தென்னப்பர் 
    எல்லாம் நல்கிஎன் உள்ளத்துள் ளாரே. 
- திருஅருட்பா 

கருணைமொழி சிறிதில்லேன் ஈதல் இல்லேன் 
     கண்ணீர் கம்பலை என்றன் கருத்துக் கேற்க 
ஒருபொழுதும் பெற்றறியேன் என்னை யாளும் 
     ஒருவா உன் அடிமைநான் ஒருத்த னுக்கோ 
இருவினையும் முக்குணமும் கரணம் நான்கும் 
     இடர்செய்யும் ஐம்புலனும் காமாதி யாறும் 
வரவரவும் ஏழைக்கோ ரெட்ட தான 
     மதத்தொடும்வந் தெதிர்த்தநவ வடிவ மன்றே 
- தாயுமானவர்


மாடத்து ளானலன் மண்டபத் தானாலன் 
கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன் 
வேடத்து ளானலன் வேட்கை விட்டார் நெஞ்சில் 
மூடத்துளே நின்று முத்தி தந்தானே. 
- திருமந்திரம் (2614) 

உடலுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல் 
கடல்மலை தோறும் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே! 
- பட்டினத்தார்

பாவி என்ற பேர்படைத்துப் பாழ்நரகில் வீழாமல் 
ஆவி என்ற சூத்திரத்தை அறிவது இனி எக்காலம்? 
- பத்ரகிரியார்


எண்ணாயிரத்து ஆண்டு யோகம் இருக்கினும் 
கண்ணார் அமுதினைக் கண்டு அறிவாரில்லை 
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால் 
கண்ணாடி போலக் கலந்து நின்றானே. 
- திருமந்திரம் (603) 

கிழக்கெழுந்து ஓடிய ஞாயிறு மேற்கே 
விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர் 
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில் 
விழக்கண்டும் தேறார் வியன் உலகோரே. 
- திருமந்திரம் (177) 

குளிர் வெப்பம், இன்பம் துன்பம் முதலியவை உடலுக்கு ஏற்படுவது இயல்பானது. இவைகளை பொறுத்துக்கொள் எவன் இன்ப துன்பங்களை சமமாக நினைக்கிறானோ அவனே சாகாநிலையை அடைய தகுதியானவன். 
- பகவத்கீதை 2.14





அற்ப மனமே அகில வாழ்வு அத்தனையும்
சொற்பனங்கள் கண்டாய் உண்மை சொன்னேன் நான்
கற்பனை ஒன்று நில்லா இடத்தே எனைச் சும்மா வைத்திருக்கக்
கல்லாய் நீ தான் ஒரு கவி.
- தாயுமானவர்

என்பில் அதனை வெயில்போலக் காயுமே
அன்பில் அதனை அறம்.
- திருக்குறள் (77) 

தேரப்பா தெருத்தெருவே புலம்புவார்கள்,
தெய்வ நிலை ஒருவருமே காணார்; காணார்;
ஆரப்பா நிலை நிற்கப் போறார்? ஐயோ!
ஆச்சரியம் கோடியில் ஒருவன் தானே!
- அகத்தியர்ஞானம் (1:3) 

விட்டுவிடப் போகுதே உயிர் விட்டவுடனே உடலைச்
சுட்டுவிடப்போகின்றார் சுற்றத்தார் பட்டதுபட்
எந்நேரமும் சிவனை ஏத்துங்கள் போற்றுங்கள்
சொன்னேன் அதுவே சுகம்.
- பட்டினத்தார்

ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச்சடலம் விட்டே என் கண்ணம்மா உன் பாதஞ் சேரேனோ!
- அழுகணிச்சித்தர் 

நாள் என்செய்யும் வினைதான் என்செய்யும் எனை நாடி வந்த
கோள் என்செய்யும் கொடுங்ககூற்று என் செய்யும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
- கந்தர்அலங்காரம் 

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகும் கதியில்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே
- திருமந்திரம் (2104) 

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இந்த மூன்றும் வேண்டவே வேண்டாம். வீனான இந்த ஆசைகளை விடுத்து நன்னெறியில் வாழ்ந்து இறைவன் அருளை பெற முற்படுங்கள்.
- திருவருட்பிரகாச வள்ளலார்

உடம்பினை முன்னம் இழுக்கு என்றிருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே!!
- திருமந்திரம் 

ஏட்டிலே எழுதும் நூல்கள் எத்தனை படித்தும் நீதான்
காட்டிலே எறித்த திங்கள் கானல் நீற் சலம்போல் ஆனாய்
நாட்டிலே தெய்வம் என்று நடந்து அலையாமல் உந்தன்
கூட்டினில் நாகை நாதர் குறிப்பு அறிந்து உணர்வாய் நெஞ்சே.
 - நெஞ்சறிவிளக்கம்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
- திருக்குறள் 

நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்,
வாழவேணும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே?
காலன்ஓலை வந்தபோது கைகலந்து நின்றிடும்
ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே!
- சிவவாக்கியர் 

வீனான பயல்களுட மார்க்கம் கேளு
வெளியில் உள்ள கோயிலுக்குள் பூந்து பூந்து
கோணாமல் கும்பிடுவர் ஒன்றும் காணார்
குறும்பர் அவர் அலைகின்ற மார்க்கம் ஏதோ
நாணாமல் நாணுகின்ற மடையரப்பா
நாய் போலத் திரிவார்கள் தலங்கள் தோறும்
தோணாது முழுகுவார் தீர்த்தம் என்று
துறையேதும் காணாத மடையர் தானே
- திருவள்ளுவர் ஏணி ஏற்றம்

மெய் தான் அரும்பி, விதிர்விதிர்த்து, உன் விரை ஆர் கழற்கு, என்
கை தான் தலை வைத்து, கண்ணீர் ததும்பி, வெதும்பி, உள்ளம்

பொய் தான் தவிர்ந்து, உன்னை, 'போற்றி, சய, சய, போற்றி!' என்னும்
கை தான் நெகிழவிடேன்; உடையாய்! என்னைக் கண்டுகொள்ளே.
#திருவாசகம்

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிஎண்ணி ஏழைநெஞ்சம்
புண்ணாகச் செய்தது இனிப் போதும் பராபரமே
- தாயுமானவர்

கற்ற மேலவரொடும் கூடி நில்லேன் கல்வி
     கற்குநெறி தேர்ந்து கல்லேன்
கனிவு கொண்டுனது திருவடியை ஒருகனவிலும்
     கருதிலேன் நல்லன் அல்லேன்
குற்றமே செய்வது என் குணமாகும் அப்பெருங்
     குற்றம் எல்லாம் குணம் எனக்
கொள்ளுவது நின்னருட் குணமாகும் என்னில் என்
     குறைதவிர்த்து அருள் புரிகுவாய்
பெற்றமேல் வருமொரு பெருந்தகையின் அருளுருப்
     பெற்றெழுந் தோங்கு சுடரே
பிரண வாகார சின்மய விமல சொரூபமே
     பேதமில் பரப் பிரமமே
தற்றகைய சென்னையிற் கந்த கோட்டத்துள்வளர்
     தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
     சண்முகத் தெய்வ மணியே.
- திருஅருட்பா (தெய்வமணிமாலை) 

யானே என்னை அறிய கிலாதே,
யானே என்தன தேஎன்று இருந்தேன்;
யானே நீ:என் னுடைமையும் நீயே;
வானே ஏத்தும்எம் வானவர் ஏறே!
- திருவாய்மொழி 

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்.
- நல்வழி 

எருவாய் கருவாய் தனிலே
     யுருவா யிதுவே பயிராய் ...... விளைவாகி
இவர்போ யவரா யவர்போ யிவரா
     யிதுவே தொடர்பாய் ...... வெறிபோல
ஒருதா யிருதாய் பலகோ டியதா
     யுடனே யவமா ...... யழியாதே
ஒருகால் முருகா பரமா குமரா உயிர்கா
     வெனவோ ...... தருள்தாராய்
முருகா வெனவோர் தரமோ தடியார் முடிமே
     லிணைதா ...... ளருள்வோனே
முநிவோ ரமரோர் முறையோ வெனவே
     முதுசூ ருரமேல் ...... விடும்வேலா
திருமால் பிரமா வறியா தவர்சீர்
     சிறுவா திருமால் ...... மருகோனே
செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்
     திருவீ ழியில்வாழ் ...... பெருமாளே.
- திருப்புகழ் 

அல்லா என்பார் சில பேர்கள்
     அரன் அரி என்பார் சில பேர்கள்
வல்லான் அவன் பரமண்டலத்தில்
     வாழும் தந்தை என்பார்கள்
சொல்லால் விளங்கா நிர்வாணம்
     என்றும் சிலபேர் சொல்வார்கள்
எல்லாம் இப்படிப் பலபேசும்
     ஏதோ ஒருபொருள் இருக்கிறதே
- நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

பேயரே எனக்கு யாவரும் யானும் ஓர்
பேயனே எவர்க்கும் இது பேசி என்
ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே
- குலசேகராழ்வார்

பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!
- தொண்டரடிப்பொடி ஆழ்வார்

ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலார்
ஆனந்த மானடம் ஆரும் அறிகிலர்
ஆனந்த மானடம் ஆரும் அறிந்தபின்
தான் அந்தம் அற்றிடம் ஆனந்தமாமே
- திருமந்திரம் 2796

நீரிற் குமிழிபோல் நிலையற்ற வாழ்வைவிட்டுன்
பேரின்பக் கருணைவெள்ளம் பெருக்கெடுப்ப தெக்காலம்
- மெய்ஞ்ஞானப் புலம்பல்

ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான்நி லாவி யிருப்பனென் னாதனைத்
தேன்நி லாவிய சிற்றம் பலவனார்
வான்நி லாவி யிருக்கவும் வைப்பரே.
- தேவாரம் 

கொண்டல்வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி-அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே.
- திருப்பாணாழ்வார்

காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங்
     காடுகள் புக்குந் ...... தடுமாறிக்
காய்கனி துய்த்துங் காயமொ றுத்துங்
     காசினி முற்றுந் ...... திரியாதே
சீவ னொடுக்கம் பூத வொடுக்கம்
     தேற வுதிக்கும் ...... பரஞான
தீப விளக்கங் காண எனக்குன்
     சீதள பத்மந் ...... தருவாயே
பாவ நிறத்தின் தாருக வர்க்கம்
     பாழ்பட வுக்ரந் ...... தருவீரா
பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்
     பாடலை மெச்சுங் ...... கதிர்வேலா
தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்குஞ்
     சோலை சிறக்கும் ...... புலியூரா
சூரர் மிகக்கொண் டாட நடிக்குந்
     தோகை நடத்தும் ...... பெருமாளே.
- திருப்புகழ் 

வாசியென்று மூச்சதனை வயிறுப்பவேயூதிக்
கூசி முகங் கோணிக் குருடாவார் - நாசி நுனி
தன்னை அறிந்து தவத்தில் இருக்காதார்
என்ன இருந்தும் இனி.
- ஞானவழிவெண்பா


மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்.
- ஒளவையார்

ஒன்றும் மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை
நான் இன்று மறப்பனோ ஏழைகாள்? - அன்று
கருஅரங்கத் துட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்கம் மேயான் திசை
- பொய்கை ஆழ்வார் 

சிவம்:-
சிவம் என்பதற்குப் பொருள் சச்சிதானந்தம்.
சச்சிதானந்தம் என்பது சத்து + சித்து + ஆனந்தம்.

சி - சத்து (எல்லாம் உள்ளதாய் விளங்குவது)
வ - சித்து (எல்லாம் விளங்குவதாய் உள்ளது)
ம் - ஆனந்தம் (இந்த இரண்டினாலும் நிரம்பிய இன்பம்)
- திருஅருட்பா (வசனபாகம்)

காடே திரிந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தை சுற்றி
ஓடே எடுத்தென்ன? உள்ளன்பி லாதவர் ஓங்குவிண்ணோர்
நாடே இடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே
- பட்டினத்தார்

இவ்வுலகில் உள்ள இன்பங்கள் அனைத்தும் அழியக்கூடியவை. எல்லா இன்பங்களும் இறுதியில் துன்பத்தையே தரும்.
- ரமண மகரிஷி

மனமது செம்மை யானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மை யானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மை யானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மை யானால் மந்திரம் செம்மை யாமே.
- அகத்தியர்ஞானம்

பதிவின் நீளம் கருதி அகத்தியர் ஞானம் பாடலோடு நிறைவு செய்கின்றோம். உலகெலாம் என்று பெரியபுராண பாட்டில் ஆரம்பித்து அகத்தியர் ஞானத்தோடு நிறைவு செய்தது நம்மிடம் இல்லை. தமிழில் உள்ள சில பக்தி நூல்களில் இருந்து சில பாடல் வரிகளை இங்கே தொகுத்துள்ளோம். சித்தர்பாடல்களும் இங்கே சொல்லப்பட்டுள்ளன.இவற்றில் சில உங்களுக்கு தெரிந்த பாடல்களாக இருக்கலாம். உங்களுக்கு பிடித்த, கருத்தை கவர்ந்த பாடல்களை மீண்டும் மீண்டும் அசை போடுங்கள். நிச்சயம் உங்களுக்குள் உள்ள இருள் நீங்கி வெளிச்சம் பிறக்கும் என்பது உறுதி.

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

 TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

Sunday, June 7, 2020

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன்

அனைவருக்கும் அன்பு  வணக்கம். 

இன்று வைகாசி மூலம்  நட்சத்திரம். இந்த ஆண்டு கூடுமானவரையில் அடியார்களின் பூசை தொகுத்து தந்து வருகின்றோம். அந்த வரிசையில் இன்று திருஞானசம்பந்தர் பெருமான் பற்றி அறிந்தோம். இன்றைய தினம் அற்புதமானதும். இதோ இன்று மேலும் ஆறு அடியார் பற்றி சிந்திக்க இருக்கின்றோம்.  அவர் தான் திருநீலநக்க நாயனார் ஆவார் .அடியார் தம் பெருமை சொல்லவும் பெரிதே..கேட்க கேட்க திகட்டாது. படிக்க படிக்க இன்பம் தரும். 

இவங்க இல்லன்னா சிவம் இல்லை ன்னு சொல்ற அளவுக்கு பக்தி நெறி மட்டும் காட்டாம முக்தி நெறி காட்டுனவங்க தான் இவங்க.புரிஞ்சு இருக்கும் னு நினைக்கிறோம். இவங்கள கெட்டியா பிடிச்சுக்குவோம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா சிவ புண்ணியம் செய்தவங்க. இவர்களோட அடியொற்றி நாமும் இனிமே நமது கடமைகளை செய்ய முயற்சி செய்யணும்.

திருநீலநக்க நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.



திருநீலக்கர் காவிரி நாடாகிய சோழநாட்டில் சாத்தமங்கை என்னும் ஊரில் அந்தணர் குலத்திலே பிறந்தார். இவர் வேதத்தின் உள்ளுறையாவது சிவபெருமானையும், சிவனடியார்களையும் அன்பினால் அருச்சித்து வணங்குதலே எனத் தெளிந்து கொண்டார். அதனால் நாள்தோறும் சிவாகம விதிப்படி சிவபூசை செய்வித்தல் முதலாக எவ்வகைப்பட்ட திருப்பணிகளையும் செய்து வந்தார்.

இவ்வாறு ஒழுகும் திருநீலநக்கர் திருவாதிரை நட்சத்திரம் கூடிய ஒரு நாளிலே சிவபூசை முடித்துக்கொண்டு சாத்தமங்கையில் அயவந்தி என்னும் கோயிலிலே எழுந்தருளியுள்ள பெருமானை அருச்சிக்க விரும்பினார். பூசைக்கு வேண்டும் பொருட்களைத் தம் மனைவியார் எடுத்துக்கொண்டு உடன்வரத் கோயிலை அடைந்து அயவந்தி ஈசரை முறைப்படி பூசித்து இறைவர் திருமுன் இருந்து திருவைந்தெழுத்தினைச் ஓதினார். அப்பொழுது சிலந்தி ஒன்று அயவந்தி ஈசர் திருமேனியில் விழுந்தது. அதுகண்ட நீலநக்கரின் மனைவியார் விரைந்து சென்று அதனைப்போக்க வாயினால் ஊதித் தள்ளினார்.

நாயனார் அச்செயலைக்கண்டு தன் கண்ணை மறைத்து அறிவிலாதாய்! நீ இவ்வாறு செய்தது ஏன்? என்று சினந்தார். சிலந்தி விழுந்தமையால் ஊதித்துமிந்தேன் என்றார் மனைவியார். நீ சிவலிங்கத்தின் மேல் விழுந்த சிலந்தியை வேறொரு வகையால் விலக்காமல் எச்சில்பட ஊதித்துமிந்தாய். இத்தகைய அருவருக்குஞ் செய்கை செய்த யான் இனித் துறந்தேன். நீங்கி விடு என்றார். மனைவியரும் அதுகேட்டு அஞ்சி ஒரு பக்கம் ஒதுங்கினார்.

நீலநக்கர் பூசையை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பினார். மனைவியார் அவருடன் வீடு செல்ல அஞ்சி ஆலயத்தில் தங்கியிருந்தார். அன்று இரவு நீலநக்கர் துயிலும் பொழுது அயவந்திப் பெருமான் கனவில் தோன்றித் தம் திருமேனியைக் காட்டி உன் மனைவி ஊதித்துமிந்த இடம் தவிர மற்றைய எல்லா இடங்களிலும் சிலந்தியின் கொப்புளம் என்று அருளினார். நீலநக்கர் வணங்கி விழித்தெழுந்து ஆடிப்பாடி இறைவனது திருவருளை வியந்து உள்ளமுருகினார். விடிந்தபின் ஆலயத்திற்குச் சென்று இறைவனை இறைஞ்சி மனைவியாரையும் உடனழைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினார்.

நீலநக்கரும் முன்னரிலும் மகிழ்ந்து அரன்பூசை நேசமும், அடியாருறவும் கொண்டவராய் வாழ்ந்து வந்தார்.



அந்நாளில் சீர்காழிப் பிள்ளையாரின் சீரை உலகெலாம் போற்றுவதை அறிந்தார். தாமும் திருஞானசம்பந்தரின் திருப்பாதத்தைப் தம் தலைமிசைச் சூடிக்கொள்ள வேண்டுமெனும் விருப்புடையவரானார். இவ்வாறு விரும்பியிருந்த வேளையில் சண்பையார் மன்னர் திருத்தலங்கள் பலவற்றையும் வழிபட்டுவரும் வழியில் சாத்தமங்கையை அடைந்தார். சம்பந்தப் பிள்ளையார் வரும் செய்தியறிந்த திருநீலநக்கர் அப்பொழுதே மகிழ்ந்தெழுந்து கொடிகள் தூக்கி, தோரணம் நாட்டி, நடைபந்தலிட்டு வீதியெல்லாம் அலங்கரித்தார். தாமும் சுற்றமுமாய்ச் சென்று சம்பந்தரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அழைத்து வருவோமென ஆசை கொண்டார். பிள்ளையார் எழுந்தருளிய பெருமைக்குத் தக திருவமுது செய்வித்து மகிழ்ந்திருந்தார். அன்றிரவில் சம்பந்தர் தம்மனையில் தங்குவதற்கு வேண்டுவதெல்லாம் அமைத்தார். சம்பந்தரும், திருநீலகண்டத் திருப்பாணர் தங்குவதற்கோர் இடம் கொடுத்தருளுமாறு பணித்தார். அப்பணிப்பிற்கு இன்புற்றுத் தாம் வேள்வி செய்யும் வேதிகையின் அருகிலேயே பாணருக்கும், பாடினியாருக்கும் இடம் கொடுத்தார் அவ்வந்தணனார். அப்பொழுது வேதிகையிலுள்ள நித்தியாக்கினி முன்னரிலும் மேலாக வலஞ்சுழித்து எரிந்தது. பாணர் மனைவியாருடன் வேதிகையருகில் பள்ளிகொண்டார்.

சம்பந்தப் பிள்ளையார் மறுநாள் எழுந்து அயவந்திப் பெருமானை வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார். அத்திருப்பதிகத்திலே நீலநக்கரையும் சிறப்பித்துப் பாடியருளினார்.

சம்பந்தப்பெருமான் சாத்தமங்கையின்றும் புறப்பட்டபோது அவரோடு தொடர்ந்து செல்லவே நீலநக்கர் விரும்பினார். ஆனால் பிள்ளையார் அவரை அங்கேயே இருந்து அயவந்திப் பெருமானைப் பூசிக்குமாறு அருளிய வாக்கினை மீறவியலாது தம் உள்ளத்தைப் பிள்ளையாருடன் செல்லவிட்டுத் தான் அயவந்தியில் தங்கினார். சம்பந்தர் திருப்பாதம் நினைந்த சிந்தையராய் பூசனையை முன்னரிலும் சிறக்கச் செய்தார். முருகனார் ஆளுடைய அரசு, சிறுத்தொண்டர் ஆகிய நாயன்மாருடனெல்லாம் அளவளாவி உடனுறையும் இன்பம் பெற்றார்.

இவ்வண்ணம் ஞானசம்பந்தரால் பேரன்பு அருளப்பெற்ற திருநீலநக்கனார் அவர் தம் திருமணத்திற்குப் புரோகிதம் பார்க்கும் பேறு பெற்றார். அந்த நல்லூரிப் பெருமணத்திலேயே சோதியுட் புகுந்தார்.

"ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன்”

  மீண்டும் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

 அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html

 பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்

அனைவருக்கும்  அன்பு வணக்கம். 

இன்று வைகாசி மூலம்  நட்சத்திரம். இந்த ஆண்டு கூடுமானவரையில் அடியார்களின் பூசை தொகுத்து தந்து வருகின்றோம். அந்த வரிசையில் இன்று திருஞானசம்பந்தர் பெருமான் பாதம் சரணடைவோம். அடியார் தம் பெருமை சொல்லவும் பெரிதே..கேட்க கேட்க திகட்டாது. படிக்க படிக்க இன்பம் தரும். 



இவங்க இல்லன்னா சிவம் இல்லை ன்னு சொல்ற அளவுக்கு பக்தி நெறி மட்டும் காட்டாம முக்தி நெறி காட்டுனவங்க தான் இவங்க.புரிஞ்சு இருக்கும் னு நினைக்கிறோம். இவங்கள கெட்டியா பிடிச்சுக்குவோம். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா சிவ புண்ணியம் செய்தவங்க. இவர்களோட அடியொற்றி நாமும் இனிமே நமது கடமைகளை செய்ய முயற்சி செய்யணும்.



நால்வர் துதியோடு பதிவிற்குள் செல்வோமா?

 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!

- உமாபதி சிவாச்சாரியார்




 இப்பாடலில், ஒவ்வொரு அடியும், சைவக்குரவர்களில், ஒவ்வொருவரைக் குறிக்கும்.
சைவத் திருமுறைகளைப் பாடத்துவங்குமுன், சைவக்குரவர், நால்வரையும், வாழ்த்துவது மரபாகும்.

1.பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
இந்த அடி, சம்பந்த பெருமானைக் குறிப்பதாகும்.
பூமியை ஆளுகிற அரசன், (கூன் பாண்டியனின்), வெப்பு நோய் தீர்த்த, சம்பந்தரின் ( சரண் புகுபவர்களின் காவலனின்), கழலடிகளைப் போற்றுவோம்.

2.ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி :
இந்த அடி அப்பர் பெருமானைக்குறிப்பதாகும்."கற்றுணைப் பூட்டி ஓர், கடலில், பாய்ச்சினும், நற்றுணையாவது நமச்சிவாயவே.." என்று உலகுக்கு விளங்க வைத்த திருநாவுக்கரசர் அடிகளைப் போற்றுவோம்.

3.வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி :
திரு நாவலூரில் பிறந்த சுந்தரரின், (வன் தொண்டரின்), பாதங்களைப் போற்றுவோம்.
இறைவனைப் பாடும் போது, வசை மொழிகளால், (பித்தா !) எனப் பாடியதால், வன் தொண்டர், என்ற பெயரும், சுந்தரருக்கு உண்டு.

4. ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி :
உலகம், உய்ய, தம், அன்பால், இறைவனைச் சிக்கெனப்பிடித்த, திருவாதவூரில் பிறந்த மாணிக்க வாசகரின், திருவடிகளைப் போற்றுவோம்.

 சரி. இனி சம்பந்தர்  பதம் படிப்போம்.


திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (தமிழில் அறிவுசேரர் என்று பொருள் தரும்.), அல்லது சம்பந்தர் சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதல் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். 


திருஞானசம்பந்தர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், அந்தணர் மரபிலே, கவுணியர் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் பகவதி அம்மையார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் பாடினார் என்பது தொன்நம்பிக்கை.

சம்பந்தமூர்த்தி சுவாமிகள் பாடிய தலங்களுள் முக்கியமான தலம் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆகும். இக் கோயிலை அவர் கரக்கோயில் எனப் பாடியுள்ளார். தமிழ்நாட்டில் கரக்கோயில் எனப்படும் ஒரே கோயில் மேலக்கடம்பூர் மட்டுமே.

ஆச்சாள்புரக் கல்வெட்டுத் தகவல்படி, திருஞானசம்பந்தரின் மனைவி பெயர் சொக்கியார்.

அற்புதங்கள்
  1.     மூன்றாம் வயதினிலே உமையம்மையாரிடம் திருமுலைப்பால் உண்டமை.
  2.     சிவபெருமானிடத்தே பொற்றாளமும், முத்துப்பல்லக்கும், முத்துச்சின்னமும், முத்துக்குடையும், முத்துப்பந்தரும், உலவாக் கிளியும் பெற்றது. வேதாரணியத்திலே திருக்கதவு அடைக்கப்பாடியது.
  3.     சமணர்களை வெற்றி கொள்ள வேண்டி மதுரை சென்ற போது, மதுரைக்குக் கிழக்கு வாயில் வழியாகச் செல்ல வேண்டும் என்று கருதி, மதுரையின் கிழக்கு எல்லையாக விளங்கும் திருப்பூவணத்தின் (தற்போது திருப்புவனம் என்று அழைக்கப்படுகிறது)வைகை ஆற்றின் வடகரையை வந்து அடைந்தார், ஆற்றில் கால் வைக்க முயன்ற போது ஆற்று மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சி அளித்தன, எனவே அங்கு நின்றபடியே தென்திருப்பூவணமே என முடியும் பதிகம் பாடினார், சிவபெருமான் நந்தியை சாய்ந்திருக்கச் சொல்லி காட்சி அருளினார், இதனால் திருப்பூவணத்திலே நந்தி இன்றும் முதுகு சாய்ந்தே உள்ளது. வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள சிவலிங்கத்தை வடகரையில் உள்ள ஆடித்தபசு மண்டபத்தில் நின்றே இன்றும் தரிசிக்கலாம். வைகை ஆற்றின் குறுக்கே ஆயிரக்கணக்கான சிவலிங்கங்கள் புதையுண்டு கிடக்கின்றன, அவற்றை இன்றும் மக்கள் கண்டெடுக்கின்றனர்.
  4.     அபாலை நிலத்தை நெய்தல் நிலமாகும்படி பாடியது.
  5.     பாண்டியனுக்குக் கூனையும் சுரத்தையும் போக்கியது. தேவாரத் திருவேட்டை அக்கினியில் இட்டுப் பச்சையாய் எடுத்தது. வைகையிலே திருவேட்டை விட்டு எதிரேறும்படி செய்தது. சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது.
  6.     விடத்தினால் இறந்த வணிகனை உயிர்ப்பித்தது.

ஞானப்பால் உண்டமை



ஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாண்டு நிறையப் பெற்ற பின்னர் ஒரு நாள் காலை தந்தையாருடன் சீர்காழி திருகோயிலின் திருக்குளத்திற்குச் சென்றார். சிவபாத இருதயர் மைந்தனைக் கரையில் அமரச்செய்து நீருள் முழ்கி அகமருடஜெபம் செய்தார்.

தந்தையைக் காணாமையாலும், முன்னைத்தவம் தலைக்கூடியதாலும் திருத்தோணிச்சிகரம் பார்த்து “அம்மே! அப்பா!” என்று அழைத்தருளி அழுதருளினார். அப்பொழுது, திருத்தோணிபுரபெருமான் உமா தேவியாரோடும் விடைமிதமர்ந்து காட்சி கொடுத்தார். உவமையிலாக் கலை ஞானமும் உணர்வரிய மெய்ஞானமும் கலந்த திருமுலைப்பால் ஊட்டுவாயாக எனப்பெருமான் பணித்தார். அப்படியே பெருமாட்டியும் எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி உண் அடிசில் என ஊட்டினார். ஞானம் உண்ட பிள்ளையார் சிவஞானச்செல்வராய்த் திகழ்ந்தார்.

எண்ணரிய சிவஞானத்

தின்ன முதங்குழைத் தருளி

உண்ணடிசில் எனஊட்ட

உமையம்மை எதிர்நோக்கும்

கண்மலர்நீர் துடைத்தருளிக்

கையிற்பொற் கிண்ணமளித்

தண்ணலைஅங் கழுகைதீர்த்

தங்கண்ணார் அருள்புரிந்தார்.

(பெரிய புராணம் பாடல் 1970)

சிவனடியே சிந்திக்குந்

திருப்பெருகு சிவஞானம்

பவமதனை அறமாற்றும்

பாங்கினி லோங்கியஞானம்
உவமையிலாக் கலைஞானம்
உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர்
தாமுணர்ந்தார் அந்நிலையில்
(பெரிய புராணம் பாடல் 1973)


பிரம தீர்த்தில் நீராடிய சிவபாத இருதயர், பால்வழிய நின்ற பிள்ளையைப் பார்த்து “யார் கொடுத்த எச்சிற்பாலை உண்டாய்?” எனக் கோல் கொண்டோங்கினார். உடனே ஞானசம்பந்தர் தமக்குப் பால் கொடுத்த பரம்பொருளை அடையாளங்களுடன் சுட்டித் “தோடுடைய செவியன்” என்ற திருப்பதிகம் பாடினார்.

பொற்றாளம் பெறல்

சில நாள் கழித்துத் திருக்கோலக்காவிற்கு எழுந்தருளினார். கையினால் தாளம் இட்டு “மடையில் வாளை” என்ற திருப்பதிகம் பாடினார். பாட்டிற்கு உருகும் பரமன் கை நோவுமென்று ஐந்தெழுத்து வரையப்பெற்ற பொற்றாளம் அளித்தருளினார். இவர் பெருமை கேட்ட மக்கள் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டினர். முதலில் தமது தாய் பிறந்த ஊராகிய திருநனிபள்ளி சார்ந்தார். பிள்ளையார் பெருமையைக் கேள்வியுற்ற திருநீலகண்ட யாழ்ப்பாணர், தம்முடைய மனைவியோடு சீர்காழிக்கு வந்து தரிசித்தார். அவரது பாடல்களுக்குத் தாம் யாழ் வாசித்தார். அது முதல் பிள்ளையாருடனிருந்து பிள்ளையார் பாடல்களையெல்லாம் யாழில் அமைத்து வாசித்து வரலானார்.


முத்துச்சிவிகை முதலியன பெறல்

திருஞானசம்பந்தர் தில்லை முதலிய பல தலங்களையும் தரிசித்து நடுநாட்டில் உள்ள திருநெல்வாயிலரத்துறை சார்ந்தார். களைப்பினால் மாறன்பாடியில் அமர்ந்து அன்றிரவு நித்திரை செய்தார். அரத்துறைப்பெருமான் முத்துச்சிவிகை, முத்துக்குடை, சின்னம் முதலியவற்றை அருளினார்.
சோதிமுத்தின் சிவிகை சூழ்வந்துபார்
மீதுதாழ்ந்து வெண்ணீற்றொளி போற்றிநின்று
ஆதியா ரருளாதலில் அஞ்செழுத்து
ஓதி ஏறினார் உய்ய உலகெலாம்
- பெரியபுராணம் பாடல் – 2119

அவற்றை இறையருளெனப் பெற்ற ஞானசம்பந்தர் “எந்தை ஈசன் எம்பெருமான்” என்ற திருப்பதிகம் பாடிப்பரவினார்.


உபநயனம்

உபநயனப் பருவத்தில் உலகியலுக்கேற்ப ஞானசம்பந்தருக்கு உபநயனம் நடைபெற்றது. ஓதாதே வேதம் உணர்ந்த உயர் ஞானசம்பந்தர், அங்கு வந்திருந்த மறையோர்கட்கு உள்ள ஐயங்களை அகற்றி, வேத முடிபாகிய ஐந்தெழுத்தின் பெருமையைத் துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும் என்ற திருப்பதிகமாகப் பாடி விளக்கியருளினார்.


முத்துப் பந்தல் பெறல்

ஞானசம்பந்தரது பெருமையைக் கேள்வியுற்ற திருநாவுக்கரசரும் ஞானசம்பந்தரைக் காண்பதற்குச் சீர்காழிக்கு எழுந்தருளினார். பிள்ளையாரும் அவரை எதிர்கொண்டழைத்தார். இருவரும் அருட்கடலும் அன்புக்கடலும் ஆம் எனத் திகழ்ந்தனர். பின்னர், ஞானசம்பந்தர் திருப்பாச்சிலாச்சிராமம் பணிந்து கொல்லிமழவன் மகளைப் பிடித்து நின்ற முயலகன் என்னும் நோயைப் போக்கினார். திருச்செங்கோடு என வழங்கும் திருகொடிமாடச் செங்குன்றூர் சென்ற போது அடியவர்களை விஷஜுரம் பற்றியது. திருநீலகண்டத்திருப்பதிகம் பாடி அவ்விஷ நோயைப் போக்கினார். பிள்ளையார் பட்டீச்சுரத்தை அடைந்தபோது வெயில் மிகுதியாயிருந்ததால் திருவருளால் சிவபூதம் ஒன்று முத்துப்பந்தல் கொடுத்தது.


பிற அற்புதங்கள்

பிறகு திருவாடுதுறை சார்ந்தார். தந்தையார் வேள்வி செய்தற்குப் பொருள் வேண்டினார். “ஆவடுதுறை அரனை இடரினும் தளரினும்” என்ற பதிகத்தால் போற்றினார். பொற்கிழி பெற்றுச் சிவபாத இருதயரிடம் “தீது நீங்க நல்வேள்விசெய்க” எனக்கொடுத்தார். திருநீலகண்ட யாழ்பாண்ரின் தாய் பிறந்த ஊராகிய தருமபுரம் சென்று தரிசித்தார். “மாதர்மடப்பிடியும்” என்ற பதிகத்தால் பதிக இசை யாழிலடங்காமையை விளக்கியருளினார். திருமருகல் சேர்ந்தார். கணவனாக வர இருந்த வணிகன் விஷந்தீண்டி இறந்ததால் கதறி அழுதாள் ஒரு நங்கை. அந்நங்கையின் துயரைத் துடைக்க எண்ணிச் “சடையாய் எனுமால்” என்ற திருப்பதிகத்தைப் பாடி வணிகனை உயிர்பெற்று எழச்செய்தார்.


படிக்காசு பெறல்

பிறகு திருச்செங்காட்டங்குடி, திருப்புகலுர் தரிசித்தார். திருநாவுக்கரசரைக் கண்டு அவர் வாயிலாக ஆரூரில் நிகழ்ந்த ஆதிரைச் சிறப்பைக் கேட்டு ஆரூரானைத் தொழுதார். பிறகு அப்பரும், சம்பந்தரும் திருவீழிமிழலை சேர்ந்தனர். அவ்வூர்ப்பெருமான், தோணியப்பரைப் போல் காட்சி தந்தார். அது கண்ட இருவரும் அவ்வூரிலேயே சிலநாள் தங்கினர். அப்பொழுது நாட்டில் பஞ்சம் உண்டாயிற்று. பரமன் அளித்த படிக்காசு கொண்டு இருவரும் ஆயிரக்கணக்கான அடியார்களுக்குப் பறைசாற்றிச் சோறளித்தனர்.


திருமறைக்காட்டில் அற்புதம்


பிறகு (வேதாரணியம்) திருமறைக்காடு சென்றனர். நேரே கும்பிட எண்ணியவர்களாய் மறைகளால் பூசித்து அடைக்கப்பட்டிருந்த கதவினைத் திருநாவுக்கரசர் பாடலால் திறக்கச்செய்து, தாம் அடைக்கப்பாடினார். அது முதல் திறக்கவும் அடைக்கவுமாக இருந்து வருகிறது அக்கதவு.


பாண்டி நாட்டில் சைவம்

பாண்டி நாட்டில் நெடுமாற பாண்டியன் சமண சமயம் சார்ந்து இருந்தமையை மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் என்ற இருவர் வாயிலாகத் தெரிந்து மதுரைக்குப் புறப்பட்டார். நாளும் கோளும் நலமில்லாதிருந்தும் உமையொருபாகன் உள்ளத்து விருப்பத்தால் “அவை நல்ல நல்ல” என “கோளறுபதிகம்” பாடி, ஏகினார். பாண்டியன் வெப்புநோயை “திருநீற்றுப் பதிகம்” பாடி அகற்றினார். அனல் வாதத்தை பச்சை பதிகம் பாடியும், புனல் வாதத்தாலும் சமணர்களை வென்றார்.
பாண்டிய மன்னனையும், பாண்டி நாட்டு மக்களையும் சைவம் தழுவச்செய்தார். பாண்டி நாட்டில் உள்ள தலங்களைத் தரிசித்தார். சோழநாடு மீண்டார். பிறகு, பல தலங்களைத் தரிசித்து திருப்பூந்துருத்தி அடைந்தார்.. அப்பர் சுவாமிகள் இவரது சிவிகையைத் தாங்கியமையறிந்து உடனே கீழிறங்கி இருவரும் அளவளாவி இருந்தனர். திருஒத்தூரில் ஆண் பனைகளைப் பெண் பனைகளாக்கிக் காய்க்கச் செய்தார்.


எலும்பைப் பெண்ணுருவாக்கல்

மயிலாப்பூர் சிவநேசச் செட்டியாரின் மகள் பூம்பாவை பாம்பு தீண்டி இறக்க, அவளது எலும்பைக் குடத்தில் சேமித்து வைத்தார் சிவநேசர். அதனை அறிந்த ஞானசம்பந்தர் திருக்கோயில் முன் அக்குடத்தை கொணர்வித்து “மட்டிட்ட புன்னை” என்ற பதிகம் பாடி உயிர்ப்பித்தார். 

 சோதியிற் கலத்தல்

பெற்றோர் விருப்பத்திற்கிணஙக, வேத நெறியில் நின்று, நம்பியாண்டார் நம்பிகள் திருமகளை மணமகளாக ஏற்று இந்த இல்லொழுக்கம் வந்து சூழ்ந்ததே இவள் தன்னோடும் "அந்தமில் சிவன் தாள் சேர்வன்" என்ற கருத்தமையக் கல்லூர்ப்பெருமணம் என்ற பதிகம் பாடினார். பெருமானது அசரீரியின்படி மனைவியோடும் உடன் வந்தாரோடும் வைகாசி மூல நன்னாளில் அங்குத் தோன்றிய சோதியில் கலந்தார்.
கோயில்  

திருஞான சம்பந்த மூர்த்தி கோயில் ஒன்று தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் பேய்க்கரும்பன்கோட்டை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது இக்கோயில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு சிறப்பாக கட்டப்பட்டது இக்கோயிலில் சம்பந்தரே மூலவராகவும் உற்சவ மூர்த்தியாகவும் உள்ளார் வருடாவருடம் வைகாசி மாதத்தில் இக்கோயிலில் இவ்வூர் மக்களால் சிறப்பாக திருவிழா நடத்தப்பட்டு உற்சவ மூர்த்தி பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு வீதிகளில் உலாவருவார், மேலும் மார்கழி மாதத்தில் தினமும் அதிகாலையில் இவ்வூர் தேவார அடியார் குழுவால் தேவார பாடல்களும் பதிகங்களும் பாடப்பெற்று சம்பந்தருக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன.



திருஞானசம்பந்தரை பல்லக்கில் சுமக்கும் அப்பர்


இத்தலம் தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் புலவன்காடு என்ற ஊரிலிருந்து கிழக்கே ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. தஞ்சையிலிருந்து 35 கிலோமீட்டர் தெற்கில் உள்ளது இவ்வூர் முற்றிலும் விவசாயத்தை தொழிலாக கொண்ட உரந்தை வளநாட்டின் ஒரு பகுதியாகும்.காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் திருமேற்றளித் தெருவில் திருஞானசம்பந்தர் திருக்கோவில் ஒன்று உள்ளது.


 மீண்டும் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

 TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html


விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html


எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

 அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html

 பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html

Friday, June 5, 2020

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

உம்மாச்சி தாத்தா என்று செல்லமாக குழந்தைகளாலும் மகா பெரியவா என்று அனைத்து பக்த கோடிகளால் அன்புடன் அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியான ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 127-வது ஜெயந்தி  தினம் அதாவது அந்த மகா பெரியவா அவதரித்த தினம் இன்று.

காஞ்சிபுரம் என்றவுடன் நமது சிந்தனைக்கு முதலில் நிற்பது ஸ்ரீ காமாட்சியும் "உம்மாச்சி" தாத்தாவும்தான். அதற்கு பிறகு தான் காஞ்சிபுரம் பட்டு, இட்லி, சிற்பங்கள் இவை அனைத்தும். அது யாருங்க "உம்மாச்சி தாத்தா"என நீங்கள் கேட்டால், நீங்கள் தமிழகத்திற்க்கு புதியவர் என அர்த்தம். காஞ்சிபுரத்திற்க்கு சென்று "உம்மாச்சி தாத்தா" யாருன்னு ஒரு குழந்தையிடம் கேட்டால் கூட மகா பெரியவாள காமிக்கும்.

இன்றைய பதிவில் மகா பெரியவா உடனான சில செய்திகளை அறிய உள்ளோம்.



நம் வாழ்வில் திக்குத் தெரியாது இருக்கும்  போது வழி காட்டிக் கொண்டிருக்கும் மகா பெரியவா தரிசனம்.



மகா பெரியவாவின் அருள் மொழிகளோடு பக்தி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று ஐந்தறிவு ஜீவன் உணர்த்தும் சம்பவத்தை அப்படியே தருகின்றோம்.



1927 ஆம் ஆண்டில் காஞ்சி மடத்திற்கு ஒரு நாய் வந்தது. மகாபெரியவரின் பார்வையில் அது பட்டது. அது அங்கேயே இருக்கட்டும் என சொல்லிவிட்டார்.

அந்த நாய் மடத்தில் கொடுக்கும் உணவை மட்டுமே சாப்பிடும். மடத்திற்கு வருபவர்கள் என்ன கொடுத்தாலும் சாப்பிடாது. தெருப்பக்கம் போனாலும் அங்கே கிடைப்பவற்றையும் உண்ணாது. தினமும் அதை குளிப்பாட்டி, நெற்றியில் திலகமிடுவார்கள். பெரியவரைக் காணவரும் பக்தர்களுக்கு எந்த இடைஞ்சலும் செய்யாது. மடத்தின் கால்நடைகளையும் பொருட்களையும் பாதுகாக்கும். மடத்து ஊழியர்கள் கண்ணயர்ந்துவிட்டால் அது தூங்காமல் விழித்திருக்கும். நாயின் இந்த குணத்தை அறிந்த மகா பெரியவா ஒவ்வொரு நாள் மாலையிலும் புன்னகையுடன், “நாய்க்கு உணவு கொடுத்தாகிவிட்டதா?” என்று வாஞ்சையுடன் கேட்பார்.



சில நேரங்களில் ஊழியர்கள் உணவிட மறந்துவிட்டால் பட்டினியாகவே கிடக்கும். பெரியவா உபவாசம் (விரதம்) இருக்கும் நாட்களிலும் அது சாப்பிடாது.

பெரியவா மற்ற ஊர்களுக்கு முகாமிட பல்லகில் செல்லும்போது,  பல்லக்கின் அடியிலேயே நாயும் செல்லும். யாத்திரை கிளம்பினால், அவருடன் செல்லும் யானையின் கால்களுக்கு இடையில் நடக்கும்.

ஒரு நாள், பெரியவா ஒரு ஊரில் முகாமிட்டிருந்தபோது சிறுவன் ஒருவன் அதன் மீது கல்லை வீசியதில் காயம் ஏற்பட்டது. நாய் வலி தாங்காமல் குறைத்துக்கொண்டே இருந்தது. பெரியவருக்கு தெரிந்தால் என்னாகுமோ என பயந்த மடத்து அதிகாரிகள், “நாயை ஏதாவது ஊரில் விட்டு வந்துவிடுங்கள்,” என்று உத்தரவிட்டனர்.

ஊழியர்களும் அதை பிடித்துக்கொண்டு, 40 கி.மீ. தள்ளி இருந்த ஒரு கிராமத்திற்கு கொண்டு சென்று கட்டிப் போட்டுவிட்டனர். ஆனால், நாய் விட்டதா என்ன,,,, கட்டை அறுத்துக்கொண்டு, ஊழியர்கள் மடத்திற்கு திரும்பும் முன்பே, வேறு ஏதோ வழியில் முகாமுக்கு வந்துவிட்டது.

அன்று முதல், அது உயிர் வாழ்ந்த வரை, மகா பெரியவரைத் தரிசிக்காமல் சாப்பிட்டதில்லை. பெரியவரைத் தரிசிக்க வரும் பக்தர்களெல்லாம் இந்த அதிசய நாயையும் பார்த்துவிட்டே செல்வார்கள்.



பக்தி என்பதே நன்றி மறவாமை தான்! ஆம்… நன்றி மிக்க இந்த நாயின் பக்தி நமக்கு நன்றி நமக்கும் நன்றி மறவாமல் இருக்க பாடம் கற்றுத் தருகிறது.



* மக்களுக்குத் தொண்டாற்ற விரும்புபவர்களின் மனதில் சாந்தமும், ஊக்கமும் இருக்க வேண்டும். முகத்தில் புன்னகை தவழ வேண்டும்.

* நாம் ஒவ்வொருவரும் தினமும் பசுவுக்கு ஒரு பிடி புல்லாவது கொடுக்க வேண்டும். இது மிகச் சிறந்த தர்மம்.

* தர்மத்தை பலன் கருதிச் செய்ய வேண்டாம். பலன் கொடுக்க வேண்டியது ஈஸ்வரன் வேலை.

* பக்தி செய்வதால் கடவுளுக்கோ, மகான்களுக்கோ லாபம் இல்லை. எல்லாம் நமக்குத் தான்.

* தர்மம் செய்வதாக இருந்தால் நினைத்தவுடன் உடனே செய்து விடுங்கள். தாமதித்தால் மனம் மாறிவிட வாய்ப்புண்டு.

* அந்தரங்க சுத்தம் இல்லாமல் செய்யும் எந்த செயலும் அதற்குரிய பலனை தருவதில்லை.

* நமக்கு இரு கைகள் இருக்கின்றன. ஒருகையால் கடவுளின் திருவடிகளைப் பிடித்துக் கொள்ளுங்கள். மற்றொரு கையால் உலக விஷயங்களில் ஈடுபடுங்கள்.

* பணத்திற்காக அலைவது மட்டுமே வாழ்க்கையல்ல. தினமும் கொஞ்சநேரமாவது இறைசிந்தனையுடன் இருக்கவேண்டும்.

எப்பேர்ப்பட்ட சிந்தனைகளை நம் பேசும் தெய்வம் அருளி உள்ளார்கள். மீண்டும் மீண்டும் படித்து வாழ்வின் புரிதலை உணர்வோமாக


நம் அன்பர் திரு.சுதன் காளிதாஸ் அவர்களின் காய் வண்ணத்தில் மிளிரும் அருள் காட்சிகளை மேலே இணைத்துள்ளோம். அவரருக்கு நம் தளம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இன்று பாண்டிச்சேரி ஸ்ரீ லோபாமாதா அகத்தியர் ஞானம் இல்லத்தில் ஸ்ரீ மஹா பெரியவா மற்றும் ஸ்ரீ நீலகண்டதீக்ஷிதர் இரண்டு மகான்கள் வைகாசி அனுஷம் மஹா குரு பூஜை சிறப்பாக நடைபெற்றது. சில அருள்காட்சிகளை கீழே இணைத்துள்ளோம்.
















அடுத்து  எஸ்.கோதண்ட ராம சர்மா  படைத்த ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ நூலில் இருந்து சில அற்புதங்களை தர உள்ளோம். மீண்டும் மீண்டும் படித்தால் தான் மனுஷ தெய்வத்தின் மகத்துவம் புரியும்.

வான்மழை பெய்ய திருப்பராய்த்துறை:-

மழையே பெய்யவில்லை. தண்ணீர்ப் பஞ்சம். நகராட்சிக் குழாய்களில் சொட்டுத் தண்ணீர் கூட வரவில்லை; மக்களின் கண்களிலிருந்து வெள்ளமாய் வழிந்தது, கண்ணீர்.

சென்னை வர்த்தகப் பிரமுகர், பெரியவாளை தரிசனம் செய்யக் காஞ்சீபுரம் வந்தார். அத்யந்த பக்தர். தொழில், வர்த்தகமேயானாலும், நெஞ்சில் ஈரப்பசை இருந்தது. ‘என்னுடைய வியாபாரம் நன்றாக நடக்கணும்’ என்று கேட்கவில்லை; ‘எசமானே! மழை இல்லமால் சனங்கள் கஷ்டப்படறாங்க. பெரியவங்க அனுக்ரகம் பண்ணனும்’ என்று மனமுருகப் பிரார்த்தித்தார்.

பெரியவாள் கனிவுடன் பார்த்தார்கள்.

‘அகண்ட காவேரிக் கரையில், திருப்பராய்த்துறை என்று ஒரு சிவக்ஷேத்திரம் இருக்கு. பாடல் பெற்ற ஸ்தலம். தேவாரப் பதிகங்களில், திருப்பராய்த்துறை ஸ்வாமி பேரில் ஒரு பதிகம் இருக்கு. ஓதுவார்களுக்குத் தெரியும். அந்தப் பதிகத்தை, மேக ராகக் குறிஞ்சிப் பண்ணில் சில நாட்கள் பாடி வரச்சொல்லலாம். மழை பெய்யும்: ஜனங்கள் சௌக்கியமா இருப்பா…’

பெரியவாளின் வாக்கு, நிரந்தரமான பலன் கொடுக்கக்கூடிய தெய்வக் கட்டளை.

தேவைப்பட்டால், இன்றைக்கும், திருப்பராய்த்துறை பதிகத்தை மேகராகக் குறிஞ்சியில் பாடி மழையைக் கொண்டுவரலாமே?

பெரியவா இதற்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும்.

நூற்றெட்டுக் குடம் தண்ணீர் அபிஷேகம் செய்யலாமே:-

பெல்லாரி அருகில் வேணிவீராபுரம் என்று ஒரு கிராமம். விவசாயத்தை நம்பிப் பிழைக்கும் ஜனங்கள். மழை இல்லை என்றால் ஜீவனம் இல்லை.

பெரியவர்களிடம் வந்து (கன்னடத்தில்) முறையிட்டார்கள்.

”உங்க கிராமத்திலே சிவன் கோயில் இருக்கா?”

”இருக்கு…”

”நூற்றெட்டுக் குடம் தண்ணீர் அபிஷேகம் செய்யுங்கோ… சிவ சிவன்னு சொல்லிண்டு பண்ணினா போறும்… சன்னதியிலேயே உட்கார்ந்துகொண்டு சிவநாம ஜபம், சூரியோதயம் ஆகிற வரையிலும்…”

பெரியவர் உத்தரவிட்டபடி, மறுநாள் சிவாராதனம் நடந்தது. அதற்கு மறுநாள் வானம் பொத்துக்கொண்டு மழைக் கொட்டியது.

வான்மழை பெய்ய அருள் மழை பொழிகின்ற மகா பெரியவாவின் தரிசனம் வேண்டுகின்றோம். அட..இன்றைய நன்னாளில்  பௌர்ணமி அன்னதானம் 25 நபர்களுக்கு காலை உணவாக நம் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT  குழு சார்பில் வழங்கப்பட்டது. பொருளுதவி செய்த அனைவருக்கும் நன்றி.












மீண்டும் மீண்டும்  மகா பெரியவாவிடம் குருவருள்,திருவருள்  வேண்டி பிரார்த்திக்கின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-


 TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html