அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் நம் தளம் சார்பில் அனைத்து அறப்பணிகள் சிறப்பாக நடைபெற்று
வருகின்றது. இதற்கு அருளுதவி, பொருளுதவி செய்து வரும் அனைத்து அன்பர்களுக்கும் முதலில் நன்றி கூறி மகிழ்கின்றோம். ஐப்பசி மாத ஆயில்ய பூஜை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர்
கோயிலில் சிறப்பாக நடைபெற்றது. வழக்கம் போல் பதிவின் முழுமையில் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய பெருமான் தரிசன அருள் நிலையை இணைத்துள்ளோம். நேற்றைய குருநாள் அன்னசேவையாக 22 அன்பர்களுக்கு காலை உணவாக பருப்பு சாதமும், வடையும் குருவருளால் கொடுக்க பணிக்கப்பட்டோம். இன்றைய
பதிவில் மீண்டும் அகத்தியம் பற்றி சில துளிகளை பேச உள்ளோம். அகத்தியம் என்றாலே அன்பு..அன்பு என்றாலே சிவம் ..சிவமும் அகத்தியமும் ஒன்று தான் என்று நாம் உணர வேண்டும். இந்த நிலை அடைய நாம் குருவின் பதம் போற்ற வேண்டும். குருவின் பாதம் பற்ற வேண்டும். இதனைத் தான் கீழ்கண்ட பாடலின் மூலம் நாம் உணர்ந்து வருகின்றோம்.
என்று மகான் ரோமரிஷி தனிப்பாடலாக நமக்கு உபதேசம் அளித்துள்ளார். உலகிலேயே ஒப்பற்ற மகானை நாம் குருவாக பெற்றுள்ளோம். ஓராண்டுக்கு
மேலாக நம் குருநாதரை ஆயில்ய வழிபாட்டில் பூசித்து வருகின்றோம். புற வழிபாடு
நாம் செய்வதன் நோக்கமே நாம் இன்னும் அக வழிபாடு நோக்கி திரும்ப வேண்டும்
என்பதற்கு தான்.
நெஞ்சார மனதில் நினைப்பவருக்கு நிழல் போன்று இருப்பவர்.அதாவது நிழல்
என்றால் பகலில் மட்டும் தெரியும்.இங்கே இரவு பகல் பாராது, நம்முடனே இருந்து
வழி காட்டும் அருட்குரு அகத்தியர்.நம் குலம் தழைக்க, செல்வம் மட்டும்
தராமல், அதனோடு சேர்த்து மிக மிக முக்கியமான செல்வமான ஆரோக்கியமும்
தருகின்ற அக குரு ஆவார்.இதனை நாம் தற்போது கண்கூடாக உணர்ந்து அனுபவித்து
வருகின்றோம்.அகத்தியரின் நாமம் சொல்ல,சொல்ல நம் அகம் ஒளி பெறுகின்றது.அகம்
ஒளிர,ஒளிர புற செயல்கள் மிளிரும் என்பதே ஆன்றோர் வாக்கு. அகத்தில் உள்ள
ஈசனை உயிர்ப்பிக்க செய்தால் அகத்தியம் மிளிரும்.அகத்தியம் மிளிர அகத்தியர்
அருள் காட்டுவார்.இன்னும் சற்று ஆழமாக சிந்தித்துப் பார்க்கலாமா?
மகான் கொங்கணவர் பாடலில் இருந்து
தான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான்
தர்மத்தின் வழி சொல்லிக் கருணை வைப்பான்
ஊன் என்ற மந்திரமே உபதேசித்து
உண்மையுடன் சுழி முனையிலே இருக்கும் என்று
கோன் என்று சிவ ரூபம் கண்ணில் காட்டி
கோபமென்ற முனை போக்கி ஆசை போக்கி
தான் என்ற ஆணவங்கள் தன்னைப் போக்கி
நாடுவார் குருநாதன் மோட்சம் தானே
அகத்தியர் பற்றி திருமூலர் கூறியது....
காலனையும் கைக்குள்ளே அடக்கிக்கொண்டு
கருணை என்ற கடல் தனிலே ஆட்சி செய்து
ஞாலமதில் ஞானத்தை காத்து நின்று
ஞானிகளை ஆக்கி நின்ற ஞானத்தேவே...
தேவே நின் திருவடிகள் மூலன் இப்போ
தெரிவிப்பேன் குருமுனியின் ஆசியோடு
கூறிடுவேன் தலைவா நின் அடியைப் போற்றி
குருமுனியே திருமுனியே அறிந்தவர்க்கு...
அறிந்தவர்க்கு அறக்கடலாய் விளங்குவாரே
அருள் என்றல் அகத்தியன் தான் வணங்குவோர்க்கு
குறிப்பறிந்து குறை நீக்கும் குருவே கும்பன்
குந்தகத்தை உடைத்தெறியும் அருளே கும்பன்...
கும்பனருள் நிகர் சொல்ல எவருமில்லை
குகனும் சிவன் தனக்கு நிகர் அருளைத் தந்தார்
எம்மறையும் அவர் உரைத்தால் பின்தான் சொல்வோம்
ஏழு என்றால் நாங்கள் எல்லாம் கரத்தைக் கட்டி...
கட்டி நின்று கால் பற்றி ஆசி கேட்போம்
கடாட்சமென்றல் அவர் ஈந்தால் உண்டு என்போம்
சட்டிசுட வேண்டுமென்றால் கும்பனைக்கேள்
சாகாவரம் வேண்டுமென்றால் கும்பனைக்கேள்...
கும்பனைக்கேள் குடும்பமுடன் ஞானம் சொல்வார்
கோடிலக்கம் வேண்டுமா கும்பனைக்கேள்
எம்மானும் கும்பனே எல்லோர்க்கும் தான்
எங்களுக்கு வாசி தந்த வாசி கும்பன்...
கும்பன் தான் ஔடதமும் நவக்கோளும் தான்
கும்பன் தான் குவலயமே வேறு ஏது
கும்பன் என்றால் ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம்
குறுகி நின்று நடு நடுங்கும் பராக்கிரமங்கள்...
பராக்கிரமம் இகபரமும் சொல்வார் கும்பன்
பாடிட்டால் மாற்றம் சொல்ல எவனும் இல்லை
பராக்கிரமும் வாளையைப் போல் அளிப்பார் கும்பன்
பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்...
கும்பன் சொன்னால் குளவிகூட குதிரையாகும்
குருமுனிக்கு கிரியாவும் கடுகாய் நிற்கும்
கும்பனையே வணங்கியோர்க்கு குறைகளண்டா
குறையில்லா காப்பாக இருப்பார் என்றும்!
புலிப்பாணி சித்தர் பாடலாக
ஆசியதும் கூறுகின்ற என் குருநாதா
அடிபணிந்து புலிப்பாணி உரைப்பேனிப்போ
பாசமுடன் அகத்தியனின் அருளை வேண்டி
பகலிரவாய் நாமத்தை செபித்துக் கொண்டு
செபித்து திரிகின்ற மக்கள் நீங்கள்
சிறப்புடன் இப்புவியில் வாழ்வீரப்பா
தப்பில்லா கலியுகத்தில் உயர்ந்து வாழ்வீர்
தவமுனி அகத்தியனை நினைத்துவிட்டால்
நினைத்தாலே ஈரேழு சென்ம பாவம்
நீங்கிடுமே என்றுமே போகர் சொன்னார்
மகான் திருவள்ளுவர் பாடலில்
நினைவுகொண்ட முனிவரெல்லாம் தவமிருந்து
நானிலத்தில் தவம் செய்து அகத்தியம் கண்டார்
அகத்தியத்தை கண்டதொரு முனிவரெல்லாம்
அகிலத்தில் ரிஷிகளாய் வாழ்வார் இன்று
ஜெகத்திலே மாந்தர்கள் அகத்தியத்தை
சிறப்புடன் பூசித்தால் தேவராவார்
தேவராவார் என்றுமே வள்ளுவர் சொன்னார்
அடுத்து சிவ வாக்கியர்
தெரிந்திட்ட மாந்தர்கள் பூசை செய்து
பலவினைகள் நீங்கியே பல்லாண்டு வாழ்ந்தார்
பாருலகில் பலசிறப்பு அகத்திய நாமம்
அகத்திய நாமமதும் செபித்து நின்றால்
அகிலத்தில் வினையில்லா சேய் பிறக்கும்
புகழுடன் சிவவாக்கியர் கூறி நின்றார்
பல்லாயிரம் ஆண்டு காலம் வாழ்வதற்கு
வாழ்வதற்கு அகத்திய நாமம் பெருமருந்தாகும்
விளக்கமுடன் கூறினார் ஔவையார் தானும்
பாம்பாட்டி சித்தர்
தாழ்வில்லா அகத்தியரை வணங்கி நின்றால்
தரணியிலே மரணமில்லா வாழ்வார் என்று
என்றுமே கூறி நின்றார் பாம்பாட்டி சித்தர்
புலிப்பாணி சித்தர்
இப்படியே சித்தர்கள் முனிவர்களெல்லாம்
நான்கு யுகங்களாய் அகத்தியர் மகிமை
நல்லதை கூறியே யுகம் போற்ற வாழ்ந்தார்
மச்சமுனி சித்தர்
போற்றிடவே மும்மூர்த்தி தேவர்களும்
புனிதமுள்ள சித்தர்களும் ரிஷிகளெல்லாம்
குற்றமில்லா கணபதியும் முருகனோடு
கண்டதொரு தேவதைகள் கணங்களோடு
கணங்களுடன் பூதங்கள் நவக்கோள்கள்
குவலயத்தில் காண்பதொரு நிறங்களெல்லாம்
மணம் வீசும் நறுமணங்கள் திசைகள் பத்தும்
முழுமையும் இவ்வுலகம் அகத்தியம் என்று
என்றுமே கூறிட்டார் மச்சமுனி நூலும்
மீண்டும் புலிப்பாணி சித்தர் வாயிலாக
இவ்வளவு அற்புதங்கள் ஒன்றென்றால் அகத்திய நாமம்
என்றென்றும் நாமத்தை செபித்து விட்டால்
செபித்தோர் முதல் இலட்ச மக்கள் பலனடைவார்
அடைந்திடும் நாமத்தை உலகோர்கெழுதி
அறிய செய்வோர் அகத்தியருக்கும் சேயுமாவார்
எடுத்துரைக்க இதுகாலம் போராதப்பா
இதுக்கொரு விதியுண்டு சித்தர் கேட்க
சித்தர்கட்கு எடுத்துரைப்போம் அறிவீர்கள் நீங்கள்
சிவபெருமான் பார்வதியும் மகிழ்ந்துமிப்போ
ஒதிடவே புலிபாணி ஓடிவந்தேன்
உலகில் நீங்கள் உயர் செல்வ நிதிகளோடு
நிதிகளுடன் அதிர்ஷ்டங்கள் பெற்று வாழ
நிதி தெய்வம் இலக்குமியை வணங்கியாசி
ஒதிடவே உயர் ஞானம் கல்வி காண
உலகிலே சரஸ்வதியை வணங்கி ஆசி
ஆசியதுவுடன் பார்வதியை போற்றுகிறேன்
அருள் பொருள் இன்பமதும் நிறைவு காண
பாசமுடன் தினங்காத்து நல்வழி காட்ட
பரமசிவன் அருள் முனிவர் அகத்தியர் போற்றி
போற்றியே வணங்குகின்றேன் புலிப்பாணியிப்போ
புவிதனிலே அகத்தியத்தை வணங்கிவிட்டால்
நிறைவுபெற்ற மரணமில்லா வாழ்வடைவீர்
நினைத்தவண்ணம் நிதி செல்வம் குன்றா வாழ்வு
வாழ்வதனில் உலகமுள்ள காலம்மட்டும்
வாழ்ந்திடும் உங்கள் குடி செழித்து நன்றாய்
அழகுபட ஆனந்தமாய் வாழ்வீர் என்றும்
இந்த பாடல்களையெல்லாம் பார்க்கும் போது எப்பிறவியில் நாம் செய்த புண்ணியம் நம்மை நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் நோக்கி கொண்டு வந்து உள்ளது. இதற்கே நாம் நாம் நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானுக்கு கோடான கோடி நன்றிகளை இங்கே சமர்பிப்போம்.
என்னை நம்பியவர்களை அகத்தியன் கைவிட்டதாக சரித்திரம் இல்லை!!!!! இந்த ஒரு வாசகம் அகத்தியர் அடியவர்களுக்கு திரு வாசகம் தான்!!!!
கர்ம
வினைகளின் படியோ கோள்களின் சாராம்சத்தின் படியோ மலை போல வரும் துன்பங்கள்
கூட அகத்தியன் பெயரைச் சொன்னால் பனி போல விலகி ஓடும் இது நிதர்சனமான
உண்மை!!!!
ஸ்ரீராமன், ஸ்ரீ கிருஷ்ணன், சபரிநாதன்
ஐயப்பன், முருகன் முதலான இறை மனித வடிவம் எடுத்து வரும் பொழுது உபதேசங்கள்
செய்து ஒவ்வொரு சூழ்நிலையிலும் உடன் இருந்து வழிநடத்தியவர் நம் குருநாதர்
அகத்திய பெருமான்!!!!
சித்தர்களுக்கெல்லாம்
தலைமை சித்தனாய் இருந்து கொண்டு வழிகாட்டியும் சப்தரிஷிகளுக்கும் சர்வ
நாயகனாய் இருந்து சகலமும் செய்து கொடுத்தும்!!!
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் முதல்வனாக இருந்து முனைப்பாக இருந்து வழிநடத்தி சென்றும்
இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? நம் அகத்தை தூய்மை செய்து தினமும் குருநாதரின் உபதேசத்தை கடைப்பிடிக்க வேண்டும். இதனைத்தான் தான் திருமூல தெய்வம் முதல் படியாக தெளிவு குருவின் திருமேனி காண்டல் என்று உபதேசம் செய்கின்றார். நாம் அனைவரும் குருவின் திருமேனியை முதலில் புறத்தில் பார்த்து பார்த்து பழக வேண்டும். இது புறப் பூசையாகவும் அமையும். பின்னர் இந்த நிலையில் இருந்து அகப்பூசையாக குருவின் திருமேனி காண வேண்டும். இதற்கும் நாம ஜெபமாக ஓம் அகத்தீசா! ஓம் அகத்தீசா!! கும்பமுனியே! தஞ்சம் தாயே!! அகத்தீசா! அபயம் தாயே!! என்று மனதில் இருத்த வேண்டும்.
இந்த நிலையே சரணாகதி நோக்கி நாம் செல்வதற்கான வழி ஆகும். முதலில் நம் மனதை அன்பால் நிரப்பி, குருநாதரின் திருமேனி கண்டு கண்டு தெளிவு பெற முயற்சிப்போமாக! இதனைத் தான் கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகஸ்தியர் ஆயில்ய பூசையில் நாம் கண்டு வருகின்றோம். இன்னும் நாமும் புறப்பூசையில் தான் நிற்கின்றோம். இம்மாத குருநாதர் தரிசனத்தில் மீண்டும் மீண்டும் பரிபூரண சரணாகதி அடைய நாம் பிரார்த்தனை செய்வோமாக!
குரு பக்தி செய்வோம். குறைவின்றி வாழ குருவருள் நம்மை வழிநடத்திட வேண்டி
பிரார்த்திக்கின்றோம்.எண்ணும் எண்ணம் யாவிலும் அன்பை நிறைப்போம். இது ஒன்றே
நம்மை அடுத்த நிலைக்கு இட்டு செல்லும். அன்பே அகத்துள் கொண்டால் சத்தியம்
பிறக்கும். சத்தியம் பிறந்து விட்டால் அகத்தியம் மிளிரும். அகத்தியம்
மிளிர்ந்தால் ஜெயம் தானே!
No comments:
Post a Comment