அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
ஆலய தரிசனம் அரும்மருந்து ஆகும். இன்று நாம் தரிசித்து வருகின்ற ஆலயங்கள் ஒவ்வொன்றும் பலரின் தியாகத்தால் , பக்தி சிரத்தையால் நம் கண் முன்னே நிற்கின்றது. வாய்ப்பு கிடைக்கும் போது இது போன்ற பாடல் பெற்ற தலங்களுக்கு சென்று வாருங்கள். ஊட்டி,கொடைக்கானல் போன்ற இன்பச்சுற்றுலா எப்போது வேண்டுமானால் செல்லலாம். ஆனால் இறைச்சுற்றுலா செல்வதற்கு அவனருள் வேண்டும். தற்போது கூட மனவருத்தம் கொள்ளும் அளவிற்கு ஒரு செய்தி கேள்விப்பட்டோம். சித்தன் அருள் - 978 பதிவில் அகத்தியப்பெருமானும், லோபாமுத்திரையும் கல்யாண தீர்த்தத்தை விட்டு விலகினார்கள்! என்று நாம் கேட்டதும் நம் மனம் சொல்லமுடியா துயருற்றது.எல்லாம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமானின் செயல்.எதனால் அகத்தியர் பெருமான் அந்த இடத்தை விட்டு சென்றரோ அவர் மட்டுமே அறிவார். மீண்டும் குருநாதர் அகத்தியர் பெருமான் வந்து அதே இடத்தில் அன்னை ஸ்ரீ லோபா முத்திரை தாயுடன் வந்து அமரும் நாள் தான் அந்த கல்யாண தீர்த்தத்திற்கு சிறப்பு. கடந்த 5 ஆண்டுகளாக குருநாதர் தரிசனம் கல்யாண தீர்த்தத்தில் பெற்று வருகின்றோம். முதன் முதலில் அகத்திய அடியார்களை சந்தித்து, நமக்கு சித்தர்கள் வழியில் பயணிக்க கல்யாண தீர்த்தம் தரிசனமே வித்திட்டது எனலாம். 2020 ஆம் ஆண்டு மாசி மகம் முந்தைய நாள் நாம் நம் குழு நண்பர்களோடு தரிசனம் செய்தது இன்னும் நம் மனதில் மகிழ்வாய் உள்ளது.
இது போன்ற பழமை வாய்ந்த ஆலயங்களுக்கு சென்று ஆன்ம தரிசனம் பெறுங்கள். அது போன்ற ஒரு தலம் பற்றிய செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.
2020 சிவராத்திரி தரிசனத்தில் பஞ்சேஷ்டி நோக்கி சென்று, சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ வாலீஸ்வரர் ஆலயம் சென்று அம்மையப்பனை தரிசித்து, பதிகங்கள் பாடி பக்தி பரவசம் பெற்றோம்.இங்கே நம் தளம் சார்பில் இலுப்பெண்ணை கொடுத்தோம்.இந்த ஆலயத்தை நாம் தரிசிக்க பெரும்பாடு பட்டோம் என்றே சொல்ல வேண்டும். ஏற்கனவே குருக்களிடம் பேசி இருந்தாலும் நம்மால் சரியாக கோயிலின் இருப்பிடம் கண்டுபிடிக்க இயலவில்லை. இணையத்திலும் எந்த வழித்தட தகவல் இல்லை. நாம் செல்லும் நேரம் இரவு 11 மணி என்பதால் குருக்களுக்கு அழைத்து நாம் அவரை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. கோயில் சரியாக பஞ்சேஷ்டி அகத்தியர் கோயிலுக்கு எதிரே உள்ள வழியில் சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது. நாம் அந்த பாதை தாண்டி சென்று விட்டோம். மீண்டும் இதே பாதைக்கு திரும்பி வந்து, கோயிலை நோக்கி சென்றோம். நாம் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை. அருளை அள்ளினோம். சிவ புராணம் படித்தோம், மேலும் சில பதிகங்கள் பாடினோம்
செங்குன்றம் அருகே பஞ்செட்டி அடுத்த நத்தம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீ திருவாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்குள்ள இறைவன் சர்ப்ப தோஷம் நீக்குபவர். இவ்வாலயத்தில் உள்ள நந்தியெம்பெருமான் தலை சாய்க்காது நிமிர்ந்து இரு கால்களும் முட்டிபோட்டு அமர்ந்துள்ளார். இங்கு பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டால் சுருட்டபள்ளி சிவன் கோயிலில் கலந்துகொண்டதன் மூன்று மடங்கு பலன் என்று நந்திஆரூடம் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் இன்று நடைபெற்று வரும் 9 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வழிபாட்டில் கலந்துகொண்டு சிவனருள் பெற்று வரலாம்.
ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ வாலிஸ்வரர் ஆலயம் - 9 ம் ஆண்டு வருஷாபிஷேகம்
அன்னப்படையல் நெய்க்குள தரிசனம்.
19.1.2021 தை மாதம் 6 ம் தேதி செவ்வாய்க் கிழமை
விசேஷ அபிஷேகம் காலை 11 மணி
சக்ஸ்ரநாம அர்ச்ச்னை மாலை 3 மணி முதல் 4.00 வரை.
அன்னப்படையல் மாலை 6.00 மணி
தீபாராதனை மாலை 6.30 மணி
நெய்க்குளத்தில் அம்மன் தரிசனம் 6.39 மணி முதல் 7.30 மணி வரை
பிரசாத விநியோகம் இரவு 8 மணி
அனைவரும் வருக
எல்லாம் வல்ல ஈசன் அம்பாள் அருளினைப் பெறுக!
No comments:
Post a Comment