"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, January 20, 2021

நல்வினையாற்ற 19 வழிகள் - உளம் ஆற உழவாரப் பணி செய்திடுவோம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

பொதுவாக நாம் பார்க்கும் போது, இன்று கர்மா என்ற சொல் மிக சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருந்து வருகின்றது. நம்மில் அன்றாடம் உறவாடும் நபர்களிடம் இது பற்றி பேசினால், கர்மாவா? என்று கேலி பேசுவது உண்டு. தலைவலியும் திருகு வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும். அது போல் தான் இந்த கர்மா. கர்மா என்ற ஒன்று உண்டு என்றால் எப்படி நாம் அதிலிருந்து எப்படி வெளிவருவது..என்பது போன்றெல்லாம் நாம் சிந்திப்பதுண்டு. பொதுவாக கர்மா என்பது வினை..நாம் செய்யும் செயல். அவ்வளவே..

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு உண்டு. அது நல் விளைவாக இருந்தால் நம் கர்மா நல்ல கர்மா என்றும் தீய செயலாயின் தீய கர்மா என்றும் பொருள் கொள்ளலாம். அடுத்தவன் எக்கேடு கேட்டால் நமக்கென்ன என்று நினைப்பது கூட தீய கர்மா என்றே கொள்ளப்படும். நாம் சேமித்து வைத்திருந்த காட்சிப்படங்களை பார்த்துக் கொண்டிருந்த போது, சட்டென்று நம் கண்ணில் நல்வினையாற்ற 19 வழிகள்  என்ற தொகுப்பு கிடைத்தது. அதனை அப்படியே இங்கே பகிர்கின்றோம். இதில் ஏதேனும் ஒரு கருத்தையாவது கைக்கொள்ள ஆசைப்படுங்கள். ஆசையே நம்மை நல்வினையாற்ற வைக்கும்.பதிவின் இறுதியில் மீள்பதிவாக கொடுத்துள்ளோம். அதில் உள்ள 19 வழிகளில் இன்றைய பதிவில் சுற்றுப்புற குப்பையகற்று என்ற நிலையில் பதிவைத் தொடர விரும்புகின்றோம்.


 சரி. பதிவின் உள் செல்வோமா?


முதல் முத்தே..அருமையான ஒன்று. வாழ்தல் என்றால் என்ன ? கொடுப்பது தான் வாழ்க்கை. ஆனால் நாம் தினமும் பெறுவதற்கு தானே துடியாய்த் துடித்துக் கொண்டு இருக்கின்றோம். கொடுத்துப் பார். வாழ்வியல் புரியும் .கொடுக்க வேண்டும் என்ற உடன் பொருளாதார ரீதியில் நம்மிடம் ஒன்றும் இல்லையே என்று நினைக்க வேண்டாம். உங்கள் எண்ணத்தால் கூட கொடுக்கலாம்.


வாரத்தின் ஏழு நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் நம் எதிர்பார்ப்பை தவிர்க்கலாம். அன்றைய தினம் நீங்கள் விரதம் இருப்பது கூட இன்னும் உங்களை கடவுளிடம் கொண்டு சேர்க்கும்.


என்னப்பா? இதெல்லாம் ஒரு குறிப்பா? என்று ஏளனமாக நினைக்காதீர். இன்றைய சூழலில் நாம் ஒவ்வொருவரும் தேவையைத் தாண்டி தான் பொருட்கள் வைத்திருக்கின்றோம். அலைபேசி வந்த புதிதில் அனைவரிடமும் ஒன்றே ஒன்று இருந்தது. "ஜியோ" வந்த பின்பு அனைவரிடமும் இரண்டு,மூன்று அலைபேசிகள் ( நம்மையும் சேர்த்து தான் )..ஆனால் ஒரு அலைபேசியை நாம் உபயோகித்தால் போதுமானது. இது போல் தான் ஆடைகள். அனைத்து உபயோகமற்ற ஆடைகளை எடுத்து மூட்டையாக கட்டி வைத்திருப்போம்.  அவற்றை தானமாக கொடுக்க ஒரு நல்ல நாள் பார்த்துக்  கொண்டே இருப்போம். எல்லா நாளும் நல்ல நாளே.


நம் சுற்றுப்புற குப்பையகற்று. இது புறத்தில் நிகழ, நாம் முதலில் அகக் குப்பையகற்ற வேண்டும். அகமும்,புறமும் வேறு வேறு அல்ல என்று நாம் உணர வேண்டும்.

ஆம்... சுற்றுப்புறத்தை நாம் எவ்வாறு தூய்மையாக வைத்துக் கொள்கின்றோம் என்பதை பொறுத்தே நம் வாழ்வின் தரம் அமைகின்றது. இன்று நாம் வாழ்க்கையின் தரத்தை சோதித்துப் பார்த்தால் வெறும் கேள்விக்குறியே மிஞ்சும். வாழ்க்கையின் தரத்தை இப்போது நாம் பார்ப்பதில்லை. மாறாக வாழ்க்கையில் இன்பம் துய்க்கும் பொருட்களின் எண்ணிக்கையைத் தான் நாம் இப்போது எண்ணிப் பார்க்கின்றோம். சுற்றுபுறத்தூய்மை அமைந்தால் நம் வாழ்வின் தரம் மேம்படும். 

முதலில் நாம் நம் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். தற்போது பார்க்கும் போது வீடு சுத்தமாக இல்லை.கணிப்பொறி,அலைபேசி இவை நம்மை நம் நேரத்தை சாப்பிட ஆரம்பித்து விட்டது.தினமும் வீட்டை சுத்தம் செய்யும் பழக்கம் போய் இப்போது வாரம் ஒரு முறை என்றாகி விட்டது. வீடு என்றால் லட்சுமி கடாக்ஷம் இருக்கும்படி இருக்க வேண்டும். சுற்றுப்புறத் தூய்மையில் நம் வீடு சுத்தம், வீட்டில் கோலம் போடுதல், வீட்டில் விளக்கேற்றுதல் என அனைத்தும் இருக்கின்றது. வீடு சுத்தம் என்பது சரி...வீட்டில் கோலம் போடுதல், வீட்டில் விளக்கேற்றுதல் எப்படி இதில் வரும் என்ற கேள்வி நம்முள் எழுகின்றது அல்லவா?

ஆம். வீட்டில் கோலம் போடுதல், வீட்டில் விளக்கேற்றுவதும் சுற்றுப்புறத்தை தூய்மை செய்வது ஆகும். அதிகாலையில் நம் மனது சுத்தமானால் தான் துயிலெழ முடியும். அதிகாலை துயிலில் வீட்டை சுத்தம் செய்வது சுற்றுப்புறத்தை தூய்மை செய்வது ஆகும். இதே போல் வீட்டில் விளக்கேற்றும் போது நாம் நம் சுற்றுப்புறத்தை பஞ்ச பூதத்தால் தூய்மை செய்கின்றோம். இவற்றை செய்வதின் மூலம் நம்மை சுமக்கும் இந்த பூமிக்கு நன்றியும் சொல்கின்றோம்.

இது மிக மிக அடிப்படையான ஒன்று. இனிமேல் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் வீட்டில் விளக்கேற்றுங்கள். இதன் மூலம் நீங்கள் பல விளக்கங்களை பெறுவீர்கள். ஆன்மிக வழியில் பார்க்கும் போது அருட்பெருஞ்சோதி வழிபாடும் இதனைத் தான் நமக்கு அடிப்படையில் சொல்கின்றது. இதனையும் தாண்டி நாம் அடுத்து சுற்றுப்புறத்தை உழவாரப்பணி செய்து தூய்மையாக்கலாம்.

 உழவாரப் பணி அப்படி என்றால் என்ன என்று கேட்பவர்கள் இருக்கலாம். அவர்களுக்காக சில செய்திகளை இங்கே பகிர உள்ளோம்.

பொதுவாக நமது கண்ணுக்கு எட்டாத கர்மவினைகள் பிடியில் சிக்கி உழலும்  கோடான கோடி மக்களின் விமோசனத்திற்காக இக்கலியுக நிகழ்வில் உழவாரப்  பணி  அருமருந்தாக அமைந்துள்ளது . ​உழவாரப்பணி நிறுவிய அப்பர் திருநாவுக்கரசர் கிபி 7-ம்  நூற்றாண்டு  வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது

உழவாரப்பணி மூலம் மனித மனது செம்மை நிலைக்கு வரும். கல் மண் அப்புறப்படுத்தி ஆலயத்தை நாம் செம்மைப் படுத்துவது போல் நம் கர்ம வினை போன்றவற்றை நீக்கி இறைவன் நம் மனத்தை செம்மைப் படுத்துகிறான். இறைவன் நாம் பிரபஞ்சத்தில் வாழ நமக்கு வழி செய்து கொடுப்பது போல, ஆலயங்களை சுத்தப்படுத்தி நாம் இறை தொண்டு ஆற்ற வேண்டும்.

ஆன்மீகப்  பார்வையில் பார்க்கும் போது உழவாரப்பணி இறைவனுக்கு நாம் செய்யும் தொண்டு ஆகும். கர்மவினைகள் நீக்கி நம்மை செம்மை படுத்துகிறது. மற்றொரு விதத்தில்  கோவில் ஆனது பல ஆயிரம் மக்கள் வந்து போகும் ஒரு புண்ணிய வழிபாடு தலம் ஆகும். இங்கு வரும் பக்தர்களுக்காக கோவிலை சுத்தப்படுத்தி மக்கள் தொண்டு ஆற்றுகின்றோம்.எவ்வாறு பார்த்தாலும் உழவாரப்பணி இக்கலியுகத்தில் இறை அருள் பெற சிறந்த ஒரு மார்க்கம் ஆகும்.

மனிதன் கடைத்தேறுவதற்கு எத்தனையோ வழிகாட்டுதல்களை சடங்குகளை சம்பிரதாயங்களை பிரார்த்தனை முறைகளை, கூறியிருந்தாலும் இவை எல்லாவற்றையும் விட சிறப்பும் மகத்துவமும் மிக்கது திருக்கோவில்களை சுத்தம் செய்யும் உழவாரப்பணி.

நாம் கேட்பவற்றை தரும் அந்த பரம்பொருளுக்கு இது ஒரு வகையில் நாம் செய்யும் பதில் மரியாதை. மேலும் உழவாரப்பணி என்கிற கைங்கரியத்தை செய்வதன் மூலம் இறைவனை நாம் நமக்கு கடன்பட்டவனாக்கிவிடுகிறோம்.



ஆம் ..உழவாரப்பணி செய்ய செய்ய நம் உள்ளமும் ஆறும். கர்ம வினையின் தாக்கம் குறையும். நம்மை சுற்றி எப்போதும் இனபம் சூழும். இனி நம் தளம் சார்பில் செய்த உழவாரப்பணி பற்றி பேச விரும்புகின்றோம். 

தேடல் உள்ள தேனீக்கள்  குழுவின் மூலம் அன்னசேவை செய்து கொண்டிருந்த நேரத்தில் 2016 ஆண்டு  ஜூன் 5 ம் தேதி  ( 05.05.2016) அன்று பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஸ்ரீ பெரிய முத்து மாரியம்மன் கோவிலில்  குருவருளால் செய்தோம்.

எப்படி ஆரம்பித்தோம் என்று தெரியவில்லை. ஆனால் பெருங்களத்தூரில் உள்ள நண்பரின் முயற்சியால் இந்த உழவாரப்பணி செய்யும் வாய்ப்பு கிட்டியது. உளமார இந்த உழவாரப் பணி தற்போது வரை நம் தளத்தின் வாயிலாக நடைபெற்று வருகின்றது. இன்னும் உழவாரப்பணிக்கென்று கருவிகள் கூட நாம் வாங்கி வைக்கவில்லை. நமக்கே இது ஆச்சர்யம் தான். எங்கு உழவாரப்பணி செய்ய நமக்கு இறையருள் கூட்டுவிக்கின்றதோ, அங்கு முன்கூட்டியே சென்று பார்த்து வருவோம். அதற்கு முன்னர் உழவாரப்பணி கருவிகள் வாங்கி வைத்து விடுவோம். பணி நிறைவில் அந்த கருவிகளை அந்த கோயிலுக்கே மீண்டும் கொடுத்துவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளோம்.

பெருங்களத்தூரில் தொடங்கிய முதல் உழவாரப்பணி குருவருளால் தற்போது வரை பல கோயில்களில் நடைபெற்று வந்துள்ளது.

1. பெருங்களத்தூர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ பெரிய முத்து மாரியம்மன் கோவில் 
2. அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஆதிகாரணீஸ்வரர் ஆலயம் பெருங்களத்தூர் 
3. கூடுவாஞ்சேரி நூலகம் 
4. கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் கோயில்
5. பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில்
6. ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யர் கோயில் 
7. குழந்தைவேலர் சித்தர் கோயில், மயிலாப்பூர் 
8. பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் ஆசிரமம் 
9. கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமரத்து விநாயகர் திருக்கோயில் 
10. குன்றத்தூர் திருஊரகப்பெருமாள் திருக்கோயில் 
11. கொளத்தூர் திருமால் மருகன் ஆலயம்
12. ஆப்பூர் ஸ்ரீ நித்ய கல்யாண ப்ரஸன்ன வெங்கடேச பெருமாள் கோயில் 
13. குன்றத்தூர் ஸ்ரீ கந்தலீஸ்வரர் ஆலயம் 
14. கொளத்தூர் ஸ்ரீ வில்வநாயகி சமதே  ஸ்ரீ துளஷீஸ்வரர் ஆலயம்

மேற்கண்ட கோயில்களில் நாம் உழவாரப்பணி செய்திருக்கின்றோம். அதிலும்  குன்றத்தூர் திருஊரகப்பெருமாள் திருக்கோயிலில் வருடந்தோறும் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு உழவாரப்பணி செய்து வருகின்றோம். கொளத்தூர் திருமால் மருகன் ஆலயதில் 2 முறையும், குன்றத்தூர் திருஊரகப்பெருமாள் திருக்கோயிலில் 2 முறையும், கொளத்தூர் ஸ்ரீ வில்வநாயகி சமதே  ஸ்ரீ துளஷீஸ்வரர் ஆலயதில் உழவாரபாணியோடு மரம் நடு விழாவும், பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் ஆசிரமதில் மூன்று முறையும் செய்துள்ளோம். இவற்றில் நாம் வெளியூர் சென்று செய்த பணிகளாக ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யர் கோயில் , கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் கோயில், பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் என அடங்கும். 

நம் உழவாரப்பணியின் சிறப்பாக சிறப்பு தரிசனம் நமக்கு கிடைத்து வருகின்றது என்று சொல்லலாம். ஓதி மலை யாத்திரையில் நமக்கு உழவாரப்பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது.  அடுத்து  பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் உழவாரப்பணி அங்கு ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழாவிற்காக நமக்கு அருளப்பட்டது. இதே போன்று குன்றத்தூர் உழவாரப்பணி என்றால் கண்டிப்பாக ஸ்ரீ கந்தலீஸ்வரர் ஆலயம், திருஊரகப்பெருமாள் கோயில், குன்றத்தூர் முருகப் பெருமான் என கிடைத்து விடும். தற்போது நாம் செய்த ஆப்பூர் உழவார்ப்பணியில் நமக்கு ஒரு நாள் யாத்திரையாகவே அமைந்தது. அனைத்தும் குருவருளால் என்று நமக்கு உணர்த்தப்பட்டும் வருவதை நாம் கண்கூடாக காண்கின்றோம்.

இங்கே நாம் சொல்லி இருப்பவை சில துளிகள் மட்டுமே. ஒவ்வொரு உழவாரப்பணியின்  போது  நம்முடன் வந்து உறுதுணையாக இருக்கும் அன்பர்களுக்கு இங்கே நாம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். எப்படி ஆரம்பித்தோம் என்று புரியவில்லை. ஆனால் மூன்றாண்டு  நிறைவில் மன மகிழ்வுடன் வாழ்தலுக்கான புரிதல் கிடைத்துள்ளது.

குன்றத்தூர் திருஊரகப் பெருமாள் உழவாரப்பணி காட்சிகள் கீழே தருகின்றோம்.




















அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஆதிகாரணீஸ்வரர் ஆலய உழவாரப்பணி கீழே தருகின்றோம்.





























                                                         நம் நண்பர் சத்யராஜின் சேவை



ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு உழவாரப் பணியை செய்து கொண்டிருந்தார்கள் 







குழந்தையும் தெய்வமும் ஒண்ணு என்று சொல்வார்கள். இங்கே இந்த குழந்தை தெய்வத்திற்கு தன் பணியை செய்கின்றது. தெய்வம் இங்கே இந்த குழந்தையிடம் கடன் பெறுமோ? என்று நமக்கு தோன்றுகின்றது.



கோமுக தீர்த்த பகுதி சுத்தம் செய்த காட்சி. அன்றைய தினம் முதன் முதலாக கோமுக வழிபாடும் செய்தோம்.







இங்கே நீங்கள் காண்பது ஒரு துளி மட்டுமே... உழவாரப்பணி செய்வது, அந்த சேவையை பற்றி பேசுவது என்றால் நமக்கு ஒரு பதிவு போதாது. அவ்வளவு செய்திகள் உண்டு. இந்த ஆண்டில் நாம் மீண்டும் உழவாரப்பணி செய்ய குருவிடம் விண்ணப்பம் வைத்து இந்தப் பதிவின் மூலம் நம் பிரார்த்தனையை சமர்ப்பிக்கின்றோம்.


மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

நல்வினையாற்ற 19 வழிகள் - தானம் செய்ய பழகு - https://tut-temples.blogspot.com/2020/09/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - எதிர்பார்ப்பினைத் தவிர் - https://tut-temples.blogspot.com/2020/03/19_31.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

2 comments: