அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நம் தளத்தில் அவ்வப்போது
சித்தர்கள் பற்றியும், சித்தர்களின் குரு பூஜை பற்றியும் பேசி
வருகின்றோம்.சித்தர்கள் - தம் சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள். மனம்,
மொழி,மெய்
கடந்தவர்கள், நம்மை வாழ்விக்க வந்த மகான்கள். நமக்கு குருமார்களும் கூட.
ஒரு குடும்பத்திற்கு குடும்பத்தலைவன் தேவை, ஊருக்கும் தலைவன் தேவை,
நாட்டிற்கும் தலைவன் தேவை, அதே போல் நம்மிடம் உள்ள ஆன்மா உய்வு பெற தலைவன்
தேவை. இங்கே தலைவன் குருவாக வருகின்றார். அதே போல் அனைத்து
ஆன்மாக்களுக்கும் ஒரே தலைவன் என்ற நிலை அல்ல. ஒவ்வொரு ஆன்மாவின்
பரிபக்குவதிற்கு ஏற்ப ஒவ்வொருக்கும் ஒவ்வொரு குருமார்கள்
வாய்க்கின்றார்கள். எப்படி ஒவ்வொருவரின் உடை மற்றவருக்கு பொருந்தாதோ,
குருமார்களும் அப்படித் தான், சிலருக்கு அகத்தியர். சிலருக்கு மகா பெரியவா.
என சொல்லலாம். அந்த வரிசையில் நவகோடி சித்தர்கள் கால் பதித்த பூமி இது.
இன்றைய பதிவில் பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் தரிசனமும், குருபூஜை தகவலும் தர உள்ளோம்.
சென்ற ஆண்டில் நடைபெற்ற 50 ஆம் ஆண்டு குருபூஜையில் கலந்து கொள்ள நமக்கு வாய்ப்பு கிடைத்தது. அன்னப்பிரசாதம் தாத்தா வீட்டில் சாப்பிட்டோம். இதெல்லாம் எளிதாக கிடைக்குமா? அனைத்தும் குருவருளால் மட்டுமே நடைபெற்று வருகின்றது.
நாம் கூடுவாஞ்சேரி அருகில் உள்ள சித்தர்கள் தேடலில் இருந்த போது ஊரப்பாக்கம் அருகில் பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் தரிசனம் பெறலாம் என்று கேள்விப்பட்டோம். இது பல ஆண்டுகளாக நம் தேடலில் இருந்தது.பின்னர் இந்த ஆண்டு மார்ச் மாதம் தீடீரென நமக்கு தரிசனம் கிடைத்தது.முதலில் ஊரப்பாக்கம் சென்று அங்கிருந்து காரனை புதுச்சேரி செல்லும் வழியில் இந்தக் கோயில் இருந்தது கண்டு சென்றோம்.
சுமார் 3 கி.மீ தொலைவில் நம்மை வரவேற்கும் பதாகை கண்டு அங்கிருந்து உள்ளே சென்றோம்.
இதோ கோயிலை அடைந்து விட்டோம்.
இது
தான் பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் ஜீவ சமாதி கோயிலாகும்.
கோயில் நடை சாற்றி இருந்தது. பின்னர் அவருடைய பேரன் திரு ராஜ் அவர்கள்
வந்து கோயிலை திறந்து நமக்கு தரிசனம் பெற உதவினார். அன்றைய தின தரிசன
காட்சிகளை நீங்களும் பெற்றுக் கொள்ளுங்கள்.
இன்றைய
குருபூஜை நன்னாளில் பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் தரிசனம்
பெறுகின்றோம் என்றால் காரணமின்றி காரியமில்லை என்பது தெளிவாக புரிகின்றது
அல்லவா?
உலகப்
பற்றுக்களைத் துறந்து மனத்துள்ளே மாயையை நீக்கி உலகத்துக்குப் பணி செய்து,
'மக்கள் பணியே மகேசன் பணி' எனக் கொண்டு.. தொண்டு புரிந்தவரே ஸ்ரீலஸ்ரீ
எத்திராஜ் ராஜ யோகி சுவாமிகள் ஆவார்.
ஸ்ரீலஸ்ரீ
எத்திராஜ் சுவாமிகள் 06.12.1882 ஆம் ஆண்டு விவசாயக் குடும்பத்தைச்
சேர்ந்த ரங்கசாமி - மயிலம்மாள் தம்பதிகளுக்குப் பிறந்த ஆறு மக்களுள் மூத்த
மகனாய்ப் பிறந்தார்.
முத்தமிழ் கலைஞர்:-
அக்கால திண்ணைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரையில் படித்து வரும்போதே
தமிழ் மொழியில் அதிக ஆர்வம் கொண்டு ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டும்,
பக்திப் பாடல்கள் பாடுவது, ஆன்மீக நாடகங்களில் நடிப்பது என கலை,
இலக்கியம்,நாடகம் ஆகியவற்றில் பங்கெடுத்து இயல், இசை,நாடகம் என்னும்
முத்தமிழிழும் அதீத புலமை பெற்றவராகவே விளங்கி வந்தார்.
பக்தி பாடல்களைக் கீர்த்தனைகளாகப் பாடியும்,ஸ்ரீ ரேணுகாதேவி, ஸ்ரீ கங்கை
அம்மன் வரலாறுகளைத் தெருக்கூத்து நாடகங்களாகவும் அரங்கேற்றி, மக்கள் மனதில்
ஆன்மீக விதைகளை விதைத்து வந்தார்.
மதுரை தமிழ் சங்கத்தில் ஸ்ரீலஸ்ரீ எத்திராஜ் ராஜ யோகி சுவாமிகளுக்குக்
"கவிபாடும் சாற்று மன்னன்" என்று முத்தமிழ் சங்கத்தினரால் சுவாமிகளைப்
பாராட்டிப் பட்டம் வழங்கப்பட்டது.
கலைகளில் ஞானம்:-
ஸ்ரீலஸ்ரீ எத்திராஜ் ஸ்வாமிகள் தம் 16வது வயதில் சித்தர்கள் பலரை அணுகி
அவர்களுக்குத் தொண்டுகள் பல புரிந்து ஜோதிடம், வைத்தியம், மாந்திரீகம் என
அனைத்துவித கலைகளையும் கற்றுத் தேர்ந்தார்.
இந்தியா முழுவதும் உள்ள ஊர்களுக்குச் சென்று நோயுற்ற மக்களுக்கு மூலிகை வைத்தியங்கள் செய்து அவர்களை குணப்படுத்தி வந்தார்.
ஸ்ரீ குகை நமச்சிவாயர்:-
சுவாமிகள் தனது 33-ம் வயதில் பல ஞானியர்களிடம் ஞான உபதேசம் பெற்று, காசி
வாசி சிவானந்த குருவையும், திருவண்ணாமலை குகை நமசிவாயரையும் குருவாக ஏற்ற
சுவாமிகள், இல்லறத்தைத் துறந்து துறவு பூணும் எண்ணத்துடன் அருணையில் ஞான
ஜோதி ஏற்றும் திருஅண்ணாமலை குகையினுள் தவம் மேற்கொண்டிருந்த
குகைநமச்சிவாயரை சந்தித்தே ஆகவேண்டும் என்னும் உறுதியோடு குகையினுள் சென்று
அங்கேயே இரவு முழுவதும் தங்கியிருந்தார்.
குகையினுள்
இருந்த குகை நமச்சிவாயர் கண்விழித்து இவருக்கு ஆசி வழங்கி, "உனக்குத்
துறவறம் ஏற்க துறவு ஞானம் இல்லை; இல்லறவாசியாக இருந்து.. இல்லறஞானம் ஏற்று
வேண்டுவோர்க்கு வேண்டுவன செய்து அவர்களை வழி நடத்துவாயாக" என்று சுவாமிகளை
அவரது இல்லற தர்மத்தைக் கடைபிடித்து ஒழுகும்படி அறிவுறுத்தினார்.
குருவின் ஆணை:-
சுவாமிகளும் தம் குருவின் ஆஞ்ஞைப்படி தம் சொந்த ஊரான காரணைப் புதுச்சேரி
வந்து சேர்ந்து மணமுடித்து இல்வாழ்வினூடே மக்களுக்குச் சித்த வைத்தியம்
செய்தும்,ஆன்மீகத் தொண்டாற்றியும், மூலிகை ரகசியங்களைக் கற்றுத் தந்தும்,
ஞான மார்க்கத்தை உபதேசித்தும் 87 சீடர்களைப் பெற்றார். ஸ்ரீ பெரும்பூதூர்
அருகே சுமந்திரமேடு என்னுமிடத்தில் 32 சென்ட் விளைநிலத்தை ஒரு சீடர்
குருதட்சணையாக சுவாமிகளுக்கு வழங்கினார். மற்றுமொருவர் இரண்டு சென்ட்
நிலத்தை குருதட்சணையாக வழங்கினார். அவற்றையெல்லாம் சுவாமிகள் அவ்வூரார்
நலம் பெற வேண்டி அவ்வூர் மக்களுக்கே அவற்றைத் தானமாக வழங்கி விட்டார்.
ஜீவ முக்தி:-
ஸ்ரீலஸ்ரீ எத்திராஜ் ராஜ யோகி சுவாமிகள் தமது 87 சீடர்களிடம் தாம்
ஜீவமுக்தி அடையும் நாளை முன்னதாகவே அறிவித்தார்.அதன்படி 1970-ஆம் ஆண்டு
கார்த்திகை மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் ஜீவ முக்தி அடைந்தார்.
சுவாமிகள் குறிப்பிட்டபடி முக்தி அடைந்ததும் அவரது சீடர்கள் சுவாமிகளைக்
காரணைப் புதுச்சேரியில் சுவாமிகளுக்குச் சொந்தமான இடத்தில் மாமரத்தின் கீழ்
சமாதி செய்வித்தனர். சுவாமிகளின் கூற்றுப்படி சமாதி செய்வித்தபின் ஒரு
வருடம் கழித்துத் தம் சமாதியைத் திறந்து பார்க்கும் படியும், அச்சமயம்
தனது சரீரம் கெடாமல், உயிரோட்டமாய் இருப்பின் அதனை அபிஷேகித்து, பூஜித்து
வழிபட வேண்டும் என்றும் தம் சீடர்களிடம் கூறியிருந்தார்கள்.
அதன்படியே
87 சீடர்களும் ஓராண்டுக்குப் பின் வந்து சமாதியைத் திறந்து பார்த்த போது
சுவாமிகளின் தேகம் சிதையாது,அழியாதுஅப்படியே இருந்தது.சீடர்கள்
சுவாமிகளுக்கு 108 அபிஷேகங்கள் செய்வித்து,ஆராதனை செய்து வழிபட்டுப் பின்
சுவாமிகளின் குடும்பத்தினரிடம் சுவாமிகளைத் தொடர்ந்து பூஜித்து வருமாறு
சொல்லிச் சென்றனர் .
பின்னர்
மீண்டும் ஒரு முறை பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் தரிசனம்
பெற்றோம். அப்போது நம் தளம் சார்பில் விளக்கேற்ற இலுப்பெண்ணை டின் ஒன்று
வாங்கிக் கொடுத்துள்ளோம்.
சமாதி பீடம்:-
ஸ்ரீலஸ்ரீ எத்திராஜ் ராஜ யோகி சுவாமிகளின் சமாதி பீடத்தில் பஞ்சலோக சிலாரூபமும், சிவலிங்கமும் அமைக்கப்பட்டு பூஜித்து வருகின்றனர்.
பூஜைகள்:-
ஸ்ரீலஸ்ரீ
எத்திராஜ் ராஜ யோகி வம்சாவளியினர் தொடர்ந்து சுவாமிகள் ஜீவசமாதி அடைந்த
நட்சத்திரமான கார்த்திகை உத்திரம் நட்சத்திர நாளில் சிறப்பாக குருபூஜை
நடத்தியும்,சித்ரா பௌர்ணமி அன்று சிறப்பு அபிஷேகமும்,அன்னதானமும் செய்து
வருகின்றனர்.
பிரார்த்தனை:-
ஸ்ரீலஸ்ரீ
எத்திராஜ் ராஜ யோகி சுவாமிகள், தம்மை நம்பி கோரிக்கைகளுடன் வருபவர்கள்
தனது ஜீவசமாதி பீடத்தை ஒன்பது முறை சுற்றி வந்து தலத்திலிருந்து பிடி மண்
எடுத்துச் சென்று வழிபட்டு வர பிரார்த்தனை நிறைவேறும் என்று திருவாக்கும்
உரைத்துள்ளார்கள். சுவாமிகளின் சமாதி பீடத்தை மூன்று தலைமுறையினர்
தொடர்ந்து வழிபாடுகள் செய்து வருகின்றனர்.தற்சமயம் சுவாமிகளின்
கொள்ளுப்பேரன் ஜீவசமாதி பீடத்தை பூஜித்துத் தொண்டாற்றி வருகின்றார்.
அமைவிடம்:-
சென்னை தாம்பரத்திற்கு அண்மையில் ஊரப்பாக்கம் அருகில் உள்ள காரணைப் புதுச்சேரியில் சுவாமிகளின் ஜீவபீடம் அமைந்துள்ளது.
அனைவருக்கும் குருவருளும் திருவருளும் கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.
ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html
நினைத்ததை
நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் -
04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html
அருமை
ReplyDeleteஓம் ஸ்ரீ குருவே சரணம்.
Deleteதங்களின் கருத்திற்கு நன்றி ஐயா