"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, November 10, 2021

கிளார் - அருள்தரும் அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் தரிசனம் பெறலாமே!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தை தொடர்ந்து பார்த்து வரும் அன்பர்களுக்கு நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் அருள் பற்றி நன்கு புரிந்து இருக்கும் என்று நாம் நம்புகின்றோம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வழிபாடு நமக்கு நம் குருநாதர் ஸ்ரீஅகத்திய பெருமானால் உணர்த்தப்பட்டு அருளப்பட்டு வருகின்றது. தற்போது ஷஷ்டி வழிபாடு சிறப்பாக அனைத்து தலங்களிலும் நடைபெற்று உள்ளது. ஒவ்வோராண்டும் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் நாம் ஷஷ்டி வழிபாடு செய்வது வழக்கம். இம்முறை இதனை தவற விட்டு விட்டோம் என்றே கருதுகின்றோம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டில் நவராத்திரி வழிபாடும், காவேரி துலா ஸ்நானம் மிக மிக சிறப்பாக குருவருளால் நமக்கு கிடைத்தது.இப்படி தான் ஒவ்வொரு வழிபாடும் நம் குருநாதர் அருளால் நம் தளத்திற்கு கிடைத்து வருகின்றது. இந்த வரிசையில் காஞ்சிபுரம் மாவட்டம், கிளார் கிராமத்தில் அருள்தரும் அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலய ஸம்வத்ஸாரபிஷேகம் அழைப்பிதழ் பகிர்வது வழக்கம். இந்த ஆண்டில் இந்த வழிபாடு 08.11.2021 திங்கட்கிழமை அன்று மிக மிக சிறப்பாக நடைபெற்றது. நம் தளம் சார்பில் சிறு தொகை வழங்கி, இந்த வழிபாட்டில் இணைய குருவருள் நம்மை பணித்ததை கண்டு மெய் சிலிர்க்கின்றோம். 


பதிவில் நிறைவாக நேற்றைய வழிபாட்டு தரிசன அருள்நிலைகளை அனைவரும் கண்டு இன்புற வேண்டுகின்றோம்.

உலகிலேயே ஒப்பற்ற மகானை நாம் குருவாக பெற்றுள்ளோம். ஓராண்டுக்கு மேலாக நம் குருநாதரை ஆயில்ய வழிபாட்டில் பூசித்து வருகின்றோம். புற வழிபாடு நாம் செய்வதன் நோக்கமே நாம் இன்னும் அக வழிபாடு நோக்கி திரும்ப வேண்டும் என்பதற்கு தான்.

நெஞ்சார நினைப்பவர்களுக்கு நிழல் போன்று தொடர்ந்து வருபவர் நம் அகத்தியர். குலம் தழைக்க உதவுபவர். இதற்கு தேவையான அருட்செல்வத்தை அள்ளித்தருபவர் இவர்.

  நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை
       நீங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!


நெஞ்சார மனதில் நினைப்பவருக்கு நிழல் போன்று இருப்பவர்.அதாவது நிழல் என்றால் பகலில் மட்டும் தெரியும்.இங்கே இரவு பகல் பாராது, நம்முடனே இருந்து வழி காட்டும் அருட்குரு அகத்தியர்.நம் குலம் தழைக்க, செல்வம் மட்டும் தராமல், அதனோடு சேர்த்து மிக மிக முக்கியமான செல்வமான ஆரோக்கியமும் தருகின்ற அக குரு ஆவார்.இதனை  நாம் தற்போது கண்கூடாக உணர்ந்து அனுபவித்து வருகின்றோம்.அகத்தியரின் நாமம் சொல்ல,சொல்ல நம் அகம் ஒளி பெறுகின்றது.அகம் ஒளிர,ஒளிர புற செயல்கள் மிளிரும் என்பதே ஆன்றோர் வாக்கு. அகத்தில் உள்ள ஈசனை உயிர்ப்பிக்க செய்தால் அகத்தியம் மிளிரும்.அகத்தியம் மிளிர அகத்தியர் அருள் காட்டுவார்.

சென்னை வேலூர் நெடுஞ்சாலையில் தாமல் அருகில் இடதுபுறம் திரும்பி ஒரு ஆறு கி.மி செல்லவேண்டும். வழியெங்கும் பசுமையான வயல்வெளிகள். பாலாற்றின் கிளை ஆறான வேகவதி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த கிராமம். காஞ்சியில் இருந்து சுமார் 15 km தொலைவில் அமைந்துள்ளது.இருபுறமும் நெற்பயிர்களுக்கு நடுவே ஒத்தையடிப்பாதையில் 300 மீட்டர் நடந்து சென்றால், மரங்கள் அடர்ந்த ஒரு சிறிய தோப்புக்குள் சுமார் 70% வரை புதியதாக கட்டப்பட்டிருந்த கோயில்.



அடர்ந்த தோப்புக்குள் சுமார் 20 வருடங்களுக்கு முன் ஒரு பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்ட மிக அருமையான கண்கவர் ஷோடசலிங்கத் திருமேனி. சென்னையைச் சேர்ந்த ஓர் அம்மையாரின் அறிவுரையின்படி வெளியில் எடுக்கப்பட்டு மேற் கூரை அமைத்து பிரதோஷ வழிபாடுகள் மட்டும் நடந்துகொண்டிருந்தன. பிறகு சில வருடங்களுக்கு முன்னால் திருக்கழுக்குன்றத்தில் நாடி சுவடி மூலம் அகத்திய மாமுனிவரால் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்ட இறைவன் என்று அறியப்பட்டது.
மேலும், காஞ்சி புராணத்தில் வேகவதி ஆற்றுப்படுகையில் அறம்வளர்நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நியர் படையெடுப்பினால் ஆலயம் சிதைக்கப்பட்டுள்ளது. வேகவதி ஆற்றின் வெள்ளப்பெருக்கினால் ஊர் முழுமையாக அழிந்தபோதும், அகத்தீஸ்வரர் மட்டும் நிலைத்துள்ளார். அம்மன், நந்தியெம்பெருமான், கோஷ்ட தேவதை மூர்த்தங்கள் புதியதாக செய்யப்பட்டு தற்போது ஜலவாசத்தில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஓலைச்சுவடி மூலம் இத் தலம் ஒரு பரிகாரத் தலமாக அறியப்படுகிறது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவதற்கும், ஊனமுற்றோர் மற்றும் காது கேளாதவர்களுக்கும் இது ஒரு பரிகாரத்தலம் என்று அகத்தியர் நாடியில் அருளியுள்ளார்.

சில வருடங்ளுக்கு முன் பூமியிலிருந்து கிடைக்கபெற்ற ஷோடசலிங்கம் இங்கே  பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு 11.11.2018 கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது.




சரி. குருநாதரின் உத்திரவை நம்மால் மறுக்க முடியுமா என்ன? தேவைப்படும் அளவில் தற்காலிகமாக பூசைப் பொருட்கள் வாங்கி விட்டோம். தமிழகம் முழுதும் ரெட் அலெர்ட் என்று வேறு அறிக்கை செய்து இருந்தார்கள். நமக்கு நம் குருநாதர் பச்சைக் கொடி (கிரீன் அலெர்ட்) காட்டிவிட்டார் ..வேறென்ன? காலை 7 மணி அளவில் காஞ்சிபுரம் சென்றோம்.

அங்கிருந்து நண்பரை அலைபேசியில் அழைத்தோம்.  பின்னர் வேலூர் செல்லும் பேருந்தில் ஏறி பாலுச்செட்டி சத்திரம் இறங்கினோம். அங்கிருந்து மற்றொரு நண்பரின் உதவியால் கிளார் கோயிலுக்கு சென்றோம்.




பசுமை சோலையில் பச்சை வண்ண நாயகனாக அகத்தியரை தரிசித்தோம். மூலிகை நந்தியிடம் வேண்டினோம்.


அங்கணன் கயிலைகாக்கும்
அகம்படித் தொழின்மை பூண்டு
நம்குரு மரபிற்கெல்லாம்
முதற்குரு நாதனாகி
பங்கயம் துலபநாடும் வேத்திரப்படை பொறுத்த செங்கயமும்
பெருமாள் நந்தி சீரடி கமலம் போற்றி


அடுத்து ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதியரை தரிசித்தோம்.






எத்துணை முறை பார்த்தாலும் நம் கண்களுக்கு போதவில்லை.



அடுத்து பேராற்றலை பரப்பிக் கொண்டிருக்கும் அகத்தீஸ்வரர் தரிசனமும், அறம் வளர் நாயகி அருளும் பெற்றோம். எப்படி நம்மை இன்று அழைத்து, நமக்கு குருவருளும்,திருவருளும் நம் குருநாதர் கொடுத்துள்ளார் என்று பார்க்கும் போது காரணமின்றி காரியமில்லை என்பது புரிந்தது.
அந்த வகையில் இந்த நாள் இனிய நாள் ஆகும்.
































இன்னும் கந்த ஷஷ்டி தரிசனப் பதிவுகளை அருள விண்ணப்பம் வைக்கின்றோம்.

ஓம் ஸ்ரீ லோபமுத்திரை தாயார் சமேத அகஸ்தியர் குரு திருப்பாதங்கள் சரணம் சரணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அருள்தரும் அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் தரிசனம் பெறலாமே! - ஸம்வத்ஸாரபிஷேகம் அழைப்பிதழ் - 2020 - https://tut-temples.blogspot.com/2020/11/2020.html

அருள்தரும் அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் தரிசனம் பெறலாமே! - ஸம்வத்ஸாரபிஷேகம் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_37.html

No comments:

Post a Comment