"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, November 27, 2021

ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி - இன்று கால பைரவ ஜெயந்தி - 27.11.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்

இன்றைய கால பைரவ ஜெயந்தி நன்னாளில் பைரவர் தரிசனம் இங்கே பெற உள்ளோம். சித்தர் வழிபாட்டில் விநாயகர், ஆஞ்சநேயர், பைரவர், பாலாம்பிகை வழிபாடு மிக மிக முக்கியமான வழிபாடு ஆகும். சித்தர் மார்க்க வழிபாட்டில் நாம் சொன்ன வழிபாட்டை கண்டிப்பாக நீங்கள் தொட்டு இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது.

எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது.

ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும், இலுப்பை எண்ணை, விளக்கு எண்ணை, தேங்காய் எண்ணை, நல்லஎண்ணை, பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம்.


ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.

அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும்.

தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணை, விளக்குஎண்ணை, தேங்காய் எண்ணை, நல்லஎண்ணை, பசு நெய் ஆகும். இவற்றைத் தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம்.

ஸ்ரீ பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் அழிந்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம்.

வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும், தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது.

தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றிவர நல்ல பலன் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்த, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம்.

நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.

தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.

ஸ்வர்ணாக ர்ஷண பைரவ அஷ்டகம் தனச்செழிப்பைத் தரும் வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.

பவுர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு 18 முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். 9-வது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம்.

கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தில் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.

சித்திரை பரணி, ஐப்பசி பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில்தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.

தை மாதம் செவ்வாய்க் கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க் கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்.


அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.

மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டிற்கு எந்தக் கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும். சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பதுதான்.

  12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீ பைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.தேய்பிறை அஷ்டமி, குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது.

சாதாரணமாக நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.மிக அரிதாக சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய் வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார். இவ்வாறு இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான் மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம். ஏவல், பில்லி, சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய, வாழ்வில் வளம் பெற, திருமணத்தடைகள் நீங்கிட, பிதுர்தோஷம், சனி தோஷம், நீங்கி பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.

இனி பல்வேறு திருத்தலங்களில் இருந்து பைரவர் தரிசனம் பெற இருக்கின்றோம்.

இன்றைய தினம் காலை மகாதேவ பைரவாஷ்டமி வைபவம் சிறப்பாக நடைபெற்றது.
ஹோம,அபிஷேக,அலங்கார தீபாரதனைகள் சிறப்பாக நடைபெற்றன.அவற்றின் காட்சிகள் இங்கே.











இன்று மாலை பைரவருக்கு சந்தனக் காப்பு மற்றும் வடைமாலை அலங்காரம்.




கார்த்திகை மாத கால பைரவாஷ்டமி திருவிழா 

நிறைவு நாள் ஒன்பதாம் நாள் விழா

நவகிரக ஹோமம் ருத்ர ஹோமம் கால பைரவ ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகத்துடன் இனிதே நடைபெற்றது
















நவபைரவர், சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :-

சொர்ணாகர்ஷண பைரவர் பைரவி சூரியனின் பிராண தேவதை

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷணாய தீமஹி
தன்னோ : சொர்ணபைரவ ப்ரசோதயாத்.

ஓம் த்ரிபுரதயை ச வித்மஹே
பைரவ்யை ச தீமஹி
தன்னோ : பைரவி ப்ரசோதயாத்.

காலபைரவர் இந்திராணி
சந்திரனின் பிராண தேவதை

ஓம் கால தண்டாய வித்மஹே
வஜ்ர வீராய தீமஹி
தன்னோ : கபால பைரவ ப்ரசோதயாத்.

ஓம் கஜத்வஜாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ : இந்திராணி ப்ரசோதயாத்.

சண்டபைரவர் கௌமாரி செவ்வாயின் பிராண தேவதை

ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தன்னோ : சண்ட பைரவ ப்ரசோதயாத்

ஓம் சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ : கௌமாரி ப்ரசோதயாத்.

உன்மத்த பைரவர்  ஸ்ரீ வராஹி
புதனின் பிராண தேவதை

ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
வராஹி மனோகராய தீமஹி
தன்னோ : உன்மத்தபைரவ ப்ரசோதயாத்.

ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே
தண்ட ஹஸ்தாயை தீமஹி
தன்னோ : வராஹி ப்ரசோதயாத்.

அசிதாங்க பைரவர் பிராம்ஹி
குருவின் பிராண தேவதை


ஓம் ஞான தேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தன்னோ : அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்.

ஓம் ஹம்ஷத் வஜாயை வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தன்னோ : பிராம்ஹி ப்ரசோதயாத்.

ருரு பைரவர் மஹேஸ்வரி
சுக்கிரன் பிராண தேவதை

ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தன்னோ : ருருபைரவ ப்ரசோதயாத்.

ஓம் வ்ருஷத் வஜாயை வித்மஹே
ம்ருக ஹஸ்தாயை தீமஹி
தன்னோ : ரௌத்ரி ப்ரசோதயாத்.

குரோதன பைரவர் வைஷ்ணவி 
சனியின் பிராண தேவதை

ஓம் கிருஷ்ண வர்ணாய வித்மஹே
லட்சுமி தராய தீமஹி
தன்னோ : குரோதன பைரவ ப்ரசோதயாத்.

ஓம் தாக்ஷ்யத் வஜாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ : வைஷ்ணவி ப்ரசோதயாத்.

சம்ஹார பைரவர் சண்டீ 
ராகுவின் பிராண தேவதை

ஓம் மங்ளேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தன்னோ :ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்.

ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவி ச தீமஹி
தன்னோ :சண்டி ப்ரசோதயாத்.

பீஷண பைரவர் சாமுண்டி
கேதுவின் பிராண தேவதை

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
ஸ்வானுக்ராய தீமஹி
தன்னோ : பீஷணபைரவ ப்ரசோதயாத்.

ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே
சூலஹஸ்தாயை தீமஹி
தன்னோ :காளி ப்ரசோதயாத்.

குறிப்பு : அந்தந்த கிழமைகளில் அந்தந்த பைரவருக்கு உரிய காயத்திரி மந்திரங்களை படிப்பது மிகவும் நன்மை அளிக்கும். இவற்றுள் ராகு, கேது மட்டும் அந்தந்த கிழமைகளில் ராகு காலம் மற்றும் கேது காலங்களில் பாராயணம் செய்ய நன்மைகள் கிடைக்கும்.

இனி மீண்டும் தரிசனம் தொடர்வோம். 

பட்டீஸ்வரம் ஸ்ரீ பைரவர் அஷ்டமி சந்தனக்காப்பு அலங்காரம்



அடுத்து நாம் சோழபுரம் ஸ்ரீ பைரவேஸ்வரர் தரிசனம் காண உள்ளோம்.



இன்னும் கூடுவாஞ்சேரி பைரவர்  பெற காத்திருக்கின்றோம். அதனை தனி பதிவாக அளிக்க குருவிடம் வேண்டுகின்றோம். இன்றைய நன்னாளில் இந்தப் பதிவினை காணும் அனைவருக்கும் 64 பைரவர் ஆற்றல் அனைவரையும் காக்க வேண்டி, பிரார்த்தனை செய்து மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.


ஓம் ஸ்ரீ குருவே சரணம்
ஓம் ஸ்ரீ அகத்தீசாய நமோ நமஹா
ஓம் ஸ்ரீ காலபைரவா போற்றி போற்றி
ஓம் ஸ்ரீ பேரண்டமே போற்றி போற்றி

ஓம் ஶ்ரீகாலபைரவாய நமோ நமஹ
ஓம் ஶ்ரீ பிரபஞ்ச  ராஜ்ஜியமே போற்றி போற்றி

மீள்பதிவாக:-

இன்று கால பைரவ ஜெயந்தி - 07.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/07122020.html

இன்றைய தேய்பிறை அஷ்டமி வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_13.html

இன்றைய தேய்பிறை அஷ்டமியில் குரு அரிச்சந்திர பைரவர் திருக்கோயில் தரிசிக்கலாமே ! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_14.html

வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்! - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_61.html

 சிவகணங்கள் புடைசூழ செய்யூர் ஸ்ரீ கந்தஸ்வாமியார் திருக்கோயில் தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_10.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (6) - https://tut-temples.blogspot.com/2020/05/tut-6.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5)  - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html


தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

No comments:

Post a Comment