"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, October 4, 2021

திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தின சிறப்பு பதிவு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று அக்டோபர் 5 ஆம் தேதி.

வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் இன்று. மிகப் பெரும் வாழும் சித்தர், மகான், வள்ளல். ஆன்மிகத்திற்கும் மட்டும் அல்ல..அறத்திற்கும் வள்ளல். ஆன்மிகமே அன்னதானத்தில் தான் அடங்கி இருக்கின்றது, ஒரு வேளை வயிற்றிற்கு சோறிடாது என்ன தான் ஆன்மிகம், அறம் என்று உபதேசித்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் தான். வள்ளலார் என்று சொன்னாலே அன்னதானம் தான் நம் கண் முன் நிற்கின்றது. எத்துணை எத்துணை சான்றோர் பெருமக்கள் இன்றும் அந்த அறப்பணியை செய்து கொண்டிருக்கின்றார்கள். வள்ளலாரும் அவர் தம் மார்க்கமும் பற்றி பேசுவது பெருங்கடலில் சென்று ஒரே ஒரு நீர்த்துளியை எடுத்து பருகுவது போன்றதாகும். எடுத்த உடனே திருவருட்பா, அகவல் என்று சென்றால் அது கண்ணை கட்டி காட்டில் விட்ட கதையாகி விடும். அதற்கு முதலில் அருகில் உள்ள  வள்ளலார் சபைக்கு சென்று சேர வேண்டும். 


அவர்களின் வழியொற்றி நடந்தால் தான் நமக்கு வள்ளலாரின் வழி என்ன என்றும் புரியும். அப்படி நமக்கு கிடைத்த செய்திகளை இங்கே தொகுத்து தர இருக்கின்றோம். 

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் என்று வள்ளலார் வேண்டுகின்றார் என்றால் அவரின் மனம்,மொழி,மெய் எவ்வளவு தூயதாக இருக்க வேண்டும். அந்த நிலையை அனைவரும் பெறுவதே அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் ஆணையும் கூட.

ஆன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே, அவரே அருட்பெருஞ்ஜோதி என்று கூறி மற்றும், அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்திடை செலுத்த இவ்வுலகில் இறைவனால் வருவுவிக்க வுற்ற அருளாளர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள். அவர்கள் 1823 ஆம் ஆண்டு அக்டோபர்  மாதம் 5 ஆம் நாள் மாலை 5:30 மணி அளவில் இராமையா பிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதியாருக்கு ஐந்தாவது மகவாக இறைவனால் வருவிக்க உற்றார். சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக் கணக்கான அருட்பாடல்களை அருளினார்கள். அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே திருவருட்பா என்று போற்றப் படுகிறது.

திருவருட்பா அனைத்தும் அடங்கிய ஒர் அருள் ஞானக்களஞ்சியம். திருவருட்பா என்பது உண்மை உரைக்க வந்த இறை நூலாகும். இதில் பற்பல சாதன ரகசியங்களும், சிவ ரகசியங்களையும், சித்துகளையும் உள்ளடக்கி பாடப்பெற்றுள்ளது. எந்த ஒரு சித்த புருஷரும் வெளிப்டையாக பகிரங்கமாக எடுத்துரைக்காத விசயங்களை எல்லாம் தெள்ளம் தெளிவாக எடுத்துரைக்கப் பெற்ற ஒரே ஒரு நூல் என்று சொன்னால் அதுவே திருவருட்பாவாகும்.

நாம் யார்? நம் நிலை எப்படிப் பட்டது? கடவுள் நிலை என்ன? நாம் கடவுளை விரைந்து எவ்வாறு அடைவது? எங்கனம் அழியாத தேகத்தை பெற்று நித்திய வாழ்வு பெறலாம் என்று ஆராய்ந்து அதனை அடையும் வழியினை கண்டறிந்தார்கள் வள்ளலார். தான் கண்டு அடைந்த அந்த வழியை நாம் எல்லாரும் பெறவே வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். பல கோடி யுகங்கள் கழிந்தாலும், வேதங்கள் பல கற்றலும் மற்றும் எவ்வகையாலும் கண்டுகொள்ள முடியாத ஆண்டவரை மிகவும் சுலபமாக அனைவரும் அடைதற்பொருட்டு வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். இவ்வாறு சன்மார்க்க வழி புகுந்தால் நாம் பெறவேண்டிய அனைத்து ஆன்ம லாபமும் பெறலாம், அது மட்டுமல்ல ஏன் இந்த ஊன் உடம்பும் ஒளி உடம்பாகி ஒளிரும் என்கின்றார் ஒரு பாடலில்,

பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான் சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால்
நித்திய மாகியே நிகழும் என்பது சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே

என்று மலப்பிணியால் பொத்திய இந்த உடம்பை என்று என்றும் உள்ளவாறு அழியாத உடம்பைப் பெற்று நித்தயமாகலாம் என்று வள்ளலார் கூறுகிறார். அன்று தொட்டு இன்று வரை மனிதன் பல வழிகளிலே தெய்வங்களை தேடினான். பல தெய்வங்களை வணங்கிணான், வணங்கிக் கொண்டும் உள்ளான். இப்படி மனிதன் பல பல தெய்வங்களை கூறியும் சேர்கதி பல வற்றில் புகுந்தும் முடிவில் தெய்வத்தின் நிலையறியாது மாண்டுபோனன். இப்படி இருட்டுலகில் மடிந்து கொண்டுருக்கும் மனிதனை ஒளி நெறி பெற்றிட வள்ளல் பெருமானால் எற்படுத்தியதே சுத்த சன்மார்க்கம் ஆகும். அவர் ஒரு பாடலில் பாடுகிறார்,

தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும் சேர்கதி பலபல செப்புகின் றாரும்
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும் பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார் மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்

ஆக மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவகாருண்ய வழி நடத்தி மனிதனுக்கு தெய்வநிலையை அடையச் செய்விப்பதே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்குமாகும். சாதியிலே மதங்களிலே பேதமுற்று அலைந்து வீணே அழியும் இந்த உலகத்தவர்களுக்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை என்னும் சாதனத்தை கொண்டு வந்தார்கள், ஒரு படலில் பாடுகிறார்கள்,


சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே

ஆக பேதமற்று, கலவரங்கள் இல்லாத அமைதியான இயற்கை ஒட்டிய வாழ்வு பெறவும், என்றென்றும் தடைபடாது அழியாத மெய்வாழ்வு பெறவும் நமக்கு வள்ளல் பெருமான் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆதாவது, நமது ஆன்மாவின் கண் பல திரைகளால் முடப்பட்டுருப்பதாகவும் அவற்றை நீக்கி கொண்டு, ஏமசித்தி, சாகக்கல்வி, தத்துவநிக்கிரஹம் செய்தல், கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை நாம் பெறுமாறு நமக்கு எடுத்து அருளியுள்ளார்கள். இவ்வாறு முடிந்த முடவாகிய சிவானந்த அனுபவமே தவிர மற்றுவேரில்லை என்றும் அவ்வனுபத்தை எல்லோரும் தன்னைப் போல் பெற ஒரு மார்க்கத்தை கண்டார்கள், அது தான் சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் ஓளி நெறி மார்க்கமாகும்.

ஆக,சுத்த சன்மார்கத்தின் முக்கிய சாதனம் என்னவென்றால்: எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்பும் முக்கியமானவை. ஆதலால் காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போல் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்: அவனே ஆணடவனு மாவான். 

கூடலூர் சிவ துரைசாமி தேசிகர் அருளிச்செய்த "வருகைப் பதிகம்" நம் தளத்தில் தருகின்றோம். மீண்டும் மீண்டும் படித்து வள்ளலார் பற்றி உணருங்கள்.

                                                                      இராமலிங்காய நம:

திருச்சிற்றம்பலம்

திருஅருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்க அடிகளின் திவ்விய சிறப்புகளை மக்கள் உணரும் பொருட்டு பெருமானாரை தலைவராய் கொண்டு அடிகளின் மீது

கூடலூர் சிவ துரைசாமி தேசிகர் அருளிச்செய்த

"வருகைப் பதிகம்".

உலகம் தழைக்க வந்துஉதித்த உருவே வருக! ஓதாதே
உற்றகலைகள் அனைத்தினையும் உணர்ந்தோய் வருக! ஒன்றுஇரண்டு அற்று
இலகும் பரமானந்த சுக இயல்பே வருக! இம்பர் தமை
இறவாக் கதியில் ஏற்றுகின்ற இறையே வருக! என்போல்வார்
கலகம் தவிர்த்துக் கதியளிக்கும் கண்ணே வருக! கண்ணிறைந்த
களிப்பே களிப்பில் ஊறுகின்ற கனிவே வருக! கலைமதிதோய்
வலகம் செறிந்த வடற் பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் என்னும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (1).

வெளியில் சிறந்த சுத்தபர வெளியே வருக! வெம்மலமாம்
வெய்ய திமிரம் ஒழிக்கவரு விளக்கே வருக! வேதாந்தத்
தளியிற் சிறந்த மெளன நறுந் தருவே வருக! சன்மார்க்கம்
தழைக்க உலகில் அவதரித்த தலைவா வருக! சமநிலையாம்
அளியில் சிறந்த பெருங்கருணை அப்பா வருக! ஆப்தரெலாம்
அண்ணிப் பரவும் புண்ணிய மெய் அருளே வருக! வதிநலம்சேர்
வளியிற் சிறந்த வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் என்னும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (2)

கருணை நிறைந்து வழியும் அருட்கடலே வருக! கற்பகத்தில்
காய்ந்து முதிர்ந்து பழுத்தநறும் கனியே வருக! கருதுகிற்போர்
இருணை யுறவே யெரிவிளக்கா மிறையே வருக! எழுமையினும்
இம்மை யம்மைப் பயனளிக்கும் எந்தாய் வருக! இடைசெயும்ஓர்
மரணந் தவிர்த்து வாழ்வளிக்கும் மருந்தே வருக! என் இதய
மலரை மலர்த்தும் வான்சுடரேசெம் மணியே வருக! வழுத்தஅரிதாம்
வருண நிறைந்த வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் என்னும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (3)

வேதமுடிவில் விளங்கும் அருள் விளக்கே வருக! மெய்ஞ்ஞான
வீட்டின் பயனாய் ஓங்குகின்ற விருந்தே வருக! விளங்குபர
போத மயமாய் ஓங்கும்உயர் பொருப்பே வருக! ஆனந்தம்
பொங்கித் ததும்பி வழியும் அருட்புனலே வருக! பூரணமாய்
ஏதம் அகன்றார் உள்ளகத்தில் இருப்போய் வருக! இதம்அகிதம்
இரண்டு கடந்த இறுதிசுகம் ஈவோய் வருக! எஞ்ஞான்றும்
வாதம் அகன்ற வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் என்னும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (4)

செப்பும் சடாந்தநிலை முழுதும் தெரித்தோய் வருக! திரிவிதமாம்
தீக்கை* உடையார் பரவும் அருட்செல்வா வருக! செகதலத்தில்
ஒப்பும் உயர்வும் நீத்த பர உருவே வருக! ஒற்றியிலே
உவட்ட அமுதம் உண்டுஉவக்கும் உணர்வே வருக! உறுபசியாம்
வெப்பும் தவிர்த்து சுகமளிக்கும் விபுவே வருக! விண்ணோரும்
வேண்டிப்பரவும் ஒருதெய்வ வெளியே வருக! விழுமியர்தம்
வைப்பென்று இலகும் வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் என்னும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (5)

பத்தி சுவைக்கும் உயர்ஞானப் பழமே வருக! பரவுகிற்போர்
பந்தம் தொலைக்க வந்தகுரு பரனே வருக! பழிச்சரிதாம்
சித்தி நிலைகள் பலபுரிந்த சிவமே வருக! முத்தேக
திறம்பெற்று அழியாது ஓங்குஅருட் செல்வா வருக! சிவயோக
முத்திநிலையாம் சோபான மொழிவோய் வருக! முழுதுணர்ந்த
முனிவர்அகத்தும் புறத்தும் ஒளிர் முத்தே வருக! மூவாசை
மத்தர் அறியா வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் என்னும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (6)

ஓடும்பொருளும் ஒன்று எனக்கண்டு உவப்போய் வருக! ஓங்காரத்து
உண்மை அறிந்த யோகியர் தம் உளவே வருக! உவப்புடனே
பாடும் தொழிலை மேற்கொண்ட பதியே வருக! பதிநிலையிப்
பாரில் உரைக்க அவதரித்த பண்பே வருக! பரிவுடனே
கூடும் அடியார் குழுஅமர்ந்த குருவே வருக! குணமெனும் ஓர்
குன்றில் விளங்கும் எமதுகுலக் கொழுந்தே வருக! குவலயத்தில்
வாடும் தகவுஇல் வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் என்னும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (7)

பாசக் கிழங்கை பறித்தெடுக்கும் பரசே வருக! பழவடியார்
பகரும் வேத ராசியமாம் பண்ணே வருக! பவப்பிணியை
நாசம் புரிந்து நலம்அளிக்கும் நட்பே வருக! நாதாந்த
நடனம் காணும் திறலளித்த நாதா வருக! நதிமதியம்
வீசும் சடையோன் அருள்வடிவாம் வித்தே வருக! வியனிலத்தில்
விருப்பும் வெறுப்பும் அற்றசுக விழைவே வருக! விளம்புபல
வாச நிரந்த வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் என்னும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (8)

கண்டால் இனிக்கும் அதிமதுர கனியே வருக! காதலித்தோர்
கன்றல் கழியக் கண்களிக்கும் களிப்பே வருக! கடவுளர்தன்
தொண்டால் யாவும் வருமென்றே சொல்வோய் வருக! துரியபரஞ்
ஜோதி நிலையைக் காட்டவந்த துரையே வருக! சூக்குமத்தை
விண்டால் அனைத்தும் விளங்கும்என விரிப்போய் வருக! விண்ணோரும்
வேண்டும் பரமானந்த சுக விளைவே வருக! வியன்பொழிலில்
வண்டார் வலஞ்சூழ் வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் என்னும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (9)

சாகாக் கல்வி கரைகண்ட சதுரா வருக! சாந்தமெனும்
தவளக் கலையை உடுத்துஅமர்ந்த தலைவா வருக! சற்குணர்க்கே
வேகாக் காலை விளம்பவந்த விபுவே வருக! வெறிவிலக்காம்
வெண்பா உரைத்த தமிழ்த்தலைமை வேந்தே வருக! வியனிலத்தில்
பாகார் மொழியார் பற்றறுத்த பரமே வருக! பத்திதனைப்
பாரில் எவர்க்கும் படவிரிக்கும் பாங்கே வருக! பல்காலும்
வாகார் தெய்வ வடற்பதியின் வாழ்வே வருக! இராமலிங்க
வள்ளல் என்னும் ஓர் மாணிக்க மணியே வருக வருகவே! (10)

- கூடலூர் சிவ துரைசாமி தேசிகர்.

- மீண்டும் அடுத்த பதிவில் பேசுவோம்.

மீள்பதிவாக:-

உலகம் தழைக்க வந்துஉதித்த உருவே வருக! - திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் இன்று - https://tut-temples.blogspot.com/2021/10/blog-post_4.html

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் இன்று - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_5.html

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_25.html

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html

திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html

No comments:

Post a Comment