இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் வழக்கம் போல் ஜூன் மாத சேவைகள் நடைபெற்று வருகின்றது. இதில் மாதந்தோறும் இலுப்பெண்ணெய் 1 டின், விருதுநகர் சிவகுரு மடம் கோயில். குன்றத்தூர் அருள்மிகு நகைமுகவல்லி சமதே கந்தழீஸ்வரர் ஆலயம், தஞ்சாவூர் சித்தர் அருட்குடில், சின்னாளபட்டி நீர் மோர் சேவை என அனைத்தும் தொடர்ந்து வருகின்றோம். இங்கே நாம் சில சேவைகளை மட்டுமே கூறி உள்ளோம். குருவருளால் அவ்வப்போது உள்ள நிதியை வைத்து பல சேவைகள் நடைபெற்று வருகின்றது. இன்று முதல் பள்ளி,கல்லூரி இந்த ஆண்டிற்காக தொடங்க உள்ளது. இதன் பொருட்டு பள்ளி கட்டணம், சீருடை, இன்னபிற கல்வி உதவிகள் வேண்டி நமக்கு பல செய்திகள் வரும். குருவருளால் இந்த கல்வி சேவையில் நாம் இணைந்து சேவை செய்ய விழைகின்றோம்.
மேலும் ஒரு சிறு குறிப்பாக சென்ற ஆண்டில் சின்னாளபட்டி அரசினர் துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு குருபூர்ணிமா அன்று பென்சில், தண்ணீர் பாட்டில் போன்ற பொருட்களை கொடுக்க பணிக்கப்பட்டோம். மேலும் சின்னாளபட்டி அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 20 பேருக்கு சீருடை எடுத்து, அவற்றை தைத்து கொடுத்து சேவையாற்ற பணிக்கப்பட்டோம். இவை அனைத்தும் குருநாதர் அருளால் மட்டுமே நடைபெற்று வருகின்றது. நம்மால் ஆவது ஒன்றும் இல்லை என்று நன்கு தெரிகின்றது.
இன்றைய பதிவில் குருநாதர் அருளிய மூன்று முத்தான உபதேசங்களை அறிய தருகின்றோம். மீண்டும் மீண்டும் இவற்றை படித்து மனதுள் இருத்தி , நம்மை நாம் இன்னும் செப்பனிட இன்றைய பதிவு உதவும் என்று நம்புகின்றோம்.
1. கோமாதாக்களுக்கு செய்ய வேண்டிய சேவை
2. ஏமாற்றும் கூட்டத்திற்கு தர்மம் செய்ய வேண்டுமா? என்பது குறித்தது
3. ஒரு மனிதன் விதியை மாற்ற செய்ய வேண்டிய எளிய வழி யாது ?
1. எல்லா உயிர்களையும் ரட்சிக்க வேண்டும் என்பது பொது விதி. அதிலும், ஆ இனங்களை ஒரு மனிதன் நல்ல முறையிலே பாதுகாத்து, உயர்வான முறையிலே போஷாக்கம் கொடுத்து, அதனை நன்றாக பராமரித்து, ஒரு பசுமாட்டை நல்ல விதமாக, அதிலும் இனி அதனால் எந்த வித பயனும் இல்லை என்று ஒதுக்கப்படுகின்ற பசுமாட்டை எல்லாம், அனுப்பாமல், எவன் ஒருவன் நன்றாக, உண்மையாக ஆத்மார்த்தமாக தன்னுடைய குழந்தையைப் போல் பராமரிக்கின்றானோ, அவனுக்கு இகுதே கடைசி பிறவி எனலாம். அவன் ஒரு பசுமாட்டை உண்மையாக பராமரித்து கரை சேர்த்தால், அவன் பன்னிரண்டு சிவாலயங்களை எழுப்பி, கலச விழா செய்த பலனை அடைவான்.
2. கேள்வி: ஏமாற்றும் கூட்டத்திற்கு ஒருவன் தர்மம் செய்தால் பயனற்று போய்விடுமே! அப்படியாயின், ஒருவன் ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும் தர்மம் செய்ய வேண்டுமா?
குருநாதர் பதில்: அப்படிப்பட்டவர்களுக்கு நாங்கள் தர்மம் செய்யச் சொல்லவில்லை. ஆனால், "ஏமாற்றுகிறானோ!!" என்று எண்ணி, தர்மம் செய்யாமல் இருந்துவிடாதே, என்றுதான் கூறுகிறோம். உதாரணமாக, ஒரு நூறு மனிதர்களுக்கு ஒருவன் உதவி செய்தால், அதில் பத்தில் ஒரு பங்குதான் உண்மையாக இருக்கும் என்று எமக்கும் தெரியும். ஆனாலும், இந்த பத்தை பிடிப்பதற்காகத்தான், அந்த நூறை செய்ய வேண்டி உள்ளது. எனவே, கொடுத்துக் கொண்டே போ! அதிலே, நல்லவை, தீயவை, நன்மை, தீமைகளை ஆராய வேண்டாம். எவன் இந்த தர்ம உபதேசத்தை கடைபிடிக்கிறானோ, அவன் பிறவி தோறும் இறையின் அருளுக்கு பாத்திரமாவான். அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வைப்பதுதான் மனிதனின் எண்ணம். ஆனால், யாங்களோ, அடுத்த பிறவிக்கு சேர்க்கச் சொல்கிறோம்.
3. ஒரு மனிதனானவன் தனக்கும், தன் குடும்பத்திற்கும் தனத்தை செலவு செய்வது இயல்பு. விதியை மாற்றுவதற்கு எளிய வழி தர்மம் ஒன்றுதான். ஒருவனுக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற சிந்தனையே, பூர்வ புண்ணியம் இருந்தால்தான் வரும். அவன் செய்கிற தர்மமே, அவன் எதிர்காலத்தை பார்த்துக்கொள்ளும்.
ஒரு மனிதன் என்ன பிரார்த்தனை செய்தாலும், எத்தனை மந்திரங்கள் உரு ஏற்றினாலும், எத்தனை அபிஷேகங்கள், யாகங்கள் செய்தாலும் கூட, அவனிடம் உதவும் குணம் இல்லை என்றால், இறை அருளை பெற முடியாது.
அதனால் தான் "கை நீட்டுபவனிடம் இல்லை என்று சொல்லாதே!" "பையில் வைத்துக்கொண்டு நாளை வா!" என்றிடாதே, என அடிக்கடி கூறுகிறோம்.
குருநாதர் நமக்கு பல்வேறு அறிவுரைகளை அளித்து வருகின்றார். இவற்றுள் இந்த மூன்றும் நமக்கு முத்தான உபதேசங்கள் ஆகும். இந்த மூன்று முத்துக்களையும், நம் சொத்தாக மாற்ற வேண்டியது நம் கடமை ஆகும்.
திருச்சிற்றம்பலம்
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
மீண்டும் சிந்திப்போம்.
No comments:
Post a Comment