"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, October 11, 2019

நவராத்திரியில் நவரசங்கள் தரும் நவதரிசனம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நவராத்திரி கொண்டாட்டங்கள் முடிந்து விட்டது. இதோ தீபஒளித் திருநாளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நம்மைப் பொறுத்த வரை, நவராத்திரியின் தரிசனம் இன்னும் நம் மனதுள் உள்ளது. இந்த ஆண்டு நம் தளத்தில் நவராத்திரி பதிவுகள் சிறப்பு பெற்றது அன்னையின் அருளாலே. தீப ஒளித் திருநாளும் அன்னையின் அருள் பெறவே தான். மகாலட்சுமியின் அருள் பெறவே இந்த நன்னாளில் வேண்டுவோம்.

பண்டிகை,விசேஷ நாட்களில் என்ன செய்ய வேண்டும்? அனைத்தும் மறந்து தொலைக்காட்சி பெட்டி முன்பு காலை முதல் மாலை வரை உட்கார்ந்து பொழுது போக்கவா? இல்லவே இல்லை. அன்றாட பணிச் சுமையில் முடியவில்லை என்றாலும், இது போன்ற பண்டிகை,விசேஷ நாட்களில் அருகில் இருக்கும் கோயில்களுக்கு செல்லுங்கள்.உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்.கோயில் குருக்களிடம் கேட்டு, இந்த தொண்டில் ஈடுபடுங்கள்.
தொழில்நுட்ப துறையில் வானளாவ  முன்னேற்றம்  பெற்றாலும், நாம் தஞ்சை பெரியகோயில் போன்றோ, ஸ்ரீரங்கம் கோயில்போன்றோ இந்த காலத்தில் நம்மால் ஏன் கட்ட முடியவில்லை. நம் முன்னோர்களின் அறிவை, தொழில்நுட்பத்தை,பண்பாட்டை, கலாச்சாரத்தைக் கண்டு வியக்கின்றோம். 
உடல் ரீதியிலும், மன ரீதியிலும் நம்மை வளர்க்கும் கடவுளுக்கு நன்றி சொல்ல கோயிலுக்கு செல்லுங்கள். அண்மையில் நம்மை வியப்படைய செய்ய  வைத்த  வாக்கியம் இது தான்.

ஞானத்தின் உச்சம் பக்தி
பக்தியின் ஆழமே ஞானம்

இது பார்க்க சாதாரணமாகத் தோன்றும் வரிகள் அல்ல. படித்துப் பார்த்து பொருளை அனுபவியுங்கள்.நாம் ஒவ்வொரு முறை ஆலய தரிசனம் செய்யும் போதும், இவை தான் நம் நினைவிற்கு வருகின்றன.

இந்த தீப ஒளி திருநாள் நாம் மட்டும் கொண்டாடும் திருநாள் அன்று. நம்மை சுற்றியுள்ளவர்களும் சேர்ந்து கொண்டாட வேண்டிய நாள். அதற்கு நம்மால் முடிந்த மாற்றத்தை நம்மில் இருந்து துவங்குவோம். சரி ! நவராத்திரி பதிவிற்கு வருவோம்.

நவராத்திரி என்று கேட்டவுடன் கொலு, நாள் ஒரு அம்மன் தரிசனம், அதுவும் நெய்க்குளம் தரிசனம் என்று ஒரு ஆத்மார்த்தமான நவராத்திரி கொண்டாட்டம் இவ்வாண்டு நமக்கு கிடைத்தது. அன்னையின் அருள் சொல்லும் லலிதா  சகஸ்ரநாமம் பற்றியும், கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள அன்னை வழங்கிய தரிசனம் அனைத்தும் ஒருங்கே இங்கே காணலாம்.

உலகெங்கும் அனைத்து ஆலயங்களிலும் பக்திமணம் கமழ ஒலித்துக்கொண்டு இருக்கும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான தலம் திருமீயச்சூர்.

பண்டாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தீராத தொல்லை கொடுத்து வந்தான். தேவர்கள் தங்களை காத்தருளும்படி அன்னை பராசக்தியை வேண்டினர். அசுரனை அழிப்பதற்காக தேவியானவள், ஒரு வேள்வி குண்டத்தில் இருந்து ஸ்ரீசக்ரத்தில் லலிதாம்பிகை என்ற திருநாமத்துடன் தோன்றினாள். அரக்கனுடன் கடுமையாக போர்புரிந்து அவனை அழித்தாள். அரக்கனை அழித்த பிறகும் அன்னையின் உக்கிரம் தணியவில்லை.

சிவபெருமான் அன்னையின் கோபத்தை தணிக்க 'மனோன்மணி' என்ற திருநாமத்துடன் ஸ்ரீபுரவாசினியாக பூலோகம் சென்று தவம் செய்யும்படி கூறினார். அன்னையும் திருமீயச்சூருக்கு வந்து தவம் செய்து சாந்தமானாள்.

அப்போது அங்கு சாப விமோசனத்திற்காக தவம் இருந்த சூரியன், சிவபெருமான் வர காலதாமதமானதால் 'வகுரா' என கத்துகிறான். 'வகுரா' என்பது திருமீயச்சூர் இறைவனின் பெயர். இது பார்வதிக்கு சினத்தை மூட்டியது. 'சூரியன் ஏற்கனவே பாதிக்கப்பட்டவன்' என்று கூறி பார்வதியை சமாதானப்படுத்தினார் சிவபெருமான். அன்னையின் கோபத்தை தணிக்க, வகினி தேவதைகள் ஆயிரம் திருநாமங்களால் லலிதா சகஸ்ரநாமத்தை பாடினர். இதுவே லலிதா சகஸ்ரநாமம் ஆயிற்று.

லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்?
=====================================
லலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத ஆதிப் பரம்பொருள். சிவசக்தி ஐக்கியம் என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை.
சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள்.
லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள், பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும்.

சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர் அகத்திய மகரிஷிக்கு கூறியது:
 ===========================================================
தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன். இவை ரகசியங்களுள் ரகசியமானது.
ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.
இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை.

யார் யார்க்கு இப்பாக்கியம் கிட்டும் :
===============================
பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும். தேவியின் அருளின்றி யாரும் இதனைப் பெறமுடியாது " என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.
இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைவிட்டு வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன்.
இதைக்கேட்ட அகத்தியர் பெரிதும் மகிழ்ந்து, ”லலிதா சகஸ்ரநாமத்தை எந்த தலத்திற்கு சென்று கூறினால் அன்னையின் அருள் முழுமையாக கிடைக்கும்?”என கேட்க,
அதற்கு ஹயக்கிரீவர்,
“பூலோகத்தில் அன்னை மனோன்மணியாக வீற்றிருக்கும் திருமீயச்சூர் சென்று அங்கு சகஸ்ரநாமத்தை கூறி அன்னையை வழிபடவும்” என்றார்.
அகத்தியர் உடனே தன் மனைவி லோபமுத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து, லலிதா சகஸ்ரநாமம் சொன்னார். அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள்.

லலிதா சகஸ்ரநாமம் பாராயண பயன்கள் :
=====================================
இது நோய்களைப்போக்கும்.

செல்வத்தை அளிக்கும்.

அபமிருத்யுவைப் போக்கும். (அப மிருத்யு என்றால் அகால மரணம் ) நீண்ட ஆயுள் தரும்.

பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.
கங்கை முதலியப புண்ணிய நதிகளில் முறைப்படி பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை செய்தல், கிரஹண காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம் செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.

பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும். பூத பிசாச உபாதைகள் விலகும்.

இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள். எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்துவிடுவாள். அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான். இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலேதோஷங்கள் விலகிவிடும்.

லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப்பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும்.
எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.

லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகள்:
==================================
சகஸ்ரநாம நூல்களிலேயே தனித்துவமும், தனிச்சிறப்பும் மிக்கதாக லலிதா சகஸ்ரநாமம் உள்ளது. அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது.
சாக்த நெறியின் தத்துவங்கள் பெரும் வீச்சோடும், காம்பீர்யத்தோடும் இதில் முன்வைக்கப் படுகின்றன.

(வேதாந்த தத்துவ உண்மைகளை மந்திரம், யந்திரம், தந்திரம் ஆகிய நுட்பமான குறியீடுகளாக வெளிப்படுத்துவது சாக்த உபாசனை.)

பிரம்ம வித்தை என்று வேதாந்தம் கூறும் உண்மைகளையே சக்தி உபாசகர்கள் ஸ்ரீவித்யை என்று அழைக்கிறார்கள்.

இந்தக் குறியீடுகளை சூனியத்தில் மிதக்க விடாமல் அவற்றுக்கு அழகும்,முழுமையும் அளிக்கும் விதமாகவும் லலிதா சகஸ்ரநாமம் அமைந்துள்ளது.

லலிதா சகஸ்ரநாமத்தின் அமைப்பு :
===============================
லலிதா சகஸ்ரநாமத்திற்கு ஒரு குறிப்பிட்ட வடிவமும், அமைப்பும், நடையும் உள்ளது. இதில் திருநாமங்கள் கோர்க்கப் பட்டிருக்கும் வரிசையே ஒரு குறிப்பிட்ட சித்தாந்தக் கருத்தை விளக்குவதாக உள்ளது.

ஆயிரத்தெட்டு நாமங்களும் கீழ்க்கண்ட வரிசையில் கீழ்க்கண்ட பேசுபொருள்களைக் குறித்து அமைந்திருப்பதாக உரைநூல்களை இயற்றிய பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள்

  •      ஸ்ரீமாதாவின் அவதாரம்
  •      கேசாதி பாத வர்ணனை (ஸ்தூல ரூபம்)
  •      பண்டாசுர வதம்
  •      மந்த்ர வர்ணனை (சூட்சும ரூபம்)
  •     குண்டலினீ ரூபம்
  •     பக்த அனுக்ரஹம்
  •     நிர்க்குண உபாசனை
  •    சகுண உபாசனை
  •    பஞ்சப்ரஹ்ம ரூபம்
  •    க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ ரூபம்
  •    பீடங்களும், அங்க தேவதைகளும்
  •    யோகினீ தியானம்
  •    விபூதி விஸ்தாரமும், மார்க்க பேதங்களின் சமரசமும்
  •    சிவசக்தி ஐக்கியம்

நாம் ஏன் லலிதா சகஸ்ரநாமம் பற்றி இந்த பதிவில் சொல்ல விரும்பினோம் என்று இப்போது தான் உள்ளுணர்வாக புரிகின்றது. கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் நவராத்திரி கடைசி நாளான விஜயதசமி அன்று காலை சண்டி ஹோமமும், மாலை குங்கும அர்ச்சனை நடைபெற்றது.இதனை யொட்டி, சுமார் 50 மகளிர் அன்றைய தினம் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்தனர். சிலர் ஊர்ப்பக்கம், மறைமலை நகர் மற்றும் சிங்கப்பெருமாள் கோயில் போன்ற ஊர்களில் இருந்து வந்து விழாவினை சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னையின் தரிசனத்தை ஒருங்கே காண்போமா?

























































அம்மனின் தரிசனம். நவரசங்கள் தருகின்ற நவ தரிசனம் கண்டீர்கள். எப்படி இருந்தது? இதை விட நமக்கு வேறென்ன வேண்டும்? இதேபோல் மீண்டும் கூடுவாஞ்சேரி வேலி அம்மன் ஆலய தரிசினமும், அலங்காரமும் ஒருங்கே காண அன்னையிடம் வேண்டுவோம்.

மீள்பதிவாக:-

 ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயம் - நவ சண்டி மஹா யாகம் & நெய்க்குள தரிசனம் காண வாருங்கள் - 08.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/08102019.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் நவ சண்டி மஹாயாகம் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_5.html

 நவராத்திரி சிறப்பு பதிவு - அம்மன் நெய்க்குளம் தரிசனம் (5) - https://tut-temples.blogspot.com/2019/10/5_5.html

 TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (4) - https://tut-temples.blogspot.com/2019/10/tut-4.html

  TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/10/tut-3.html

 TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2)  - https://tut-temples.blogspot.com/2019/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temples.blogspot.com/2019/09/tut.html


கொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவமும், நவராத்திரி அழைப்பிதழும் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_33.html
நவராத்திரி அழைப்பிதழுடன் வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகா சரணம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_28.html
நவராத்திரி விழா கொண்டாட வாருங்கள் - அருள்மிகு சுந்தர மகாலிங்கசுவாமி நவராத்திரி திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_5.html

Thursday, October 10, 2019

நாதுலா பாஸ் (Nathula Pass) கதாநாயகன் - சித்தர் பாபா ஹர்பஜன் சிங் கோயில் தரிசனம் பெறுவோம்

 அனைவருக்கும் வணக்கம்.

இன்றைய பதிவில் நாம் தற்போது சென்று வந்த சிக்கிம் யாத்திரையில் கிடைத்த அறிய வேண்டிய அரிய செய்திகளை தர இருக்கின்றோம். சரித்திரத்தோடு ஆன்மிகமும் இந்த பதிவில் இணைகின்றது. இந்த பதிவு நம் மனதிற்கு மிக மிக நெருக்கமான ஒன்று. சித்தர்கள் என்றால் நம் தமிழ் நாட்டில் மட்டும் தானா ? என்று யோசித்து கொண்டிருக்கும் வேளையில் நாங்களும் இருக்கின்றோம் என்று மார்தட்டி, இன்றும் சிக்கிம் மாநில மக்களால் தினசரி வழிபாட்டில் வைத்து வணங்கப்பெற்று வருகின்றார் பாபா ஹர்பஜன் சிங். ஒரு ராணுவ வீரரை மக்கள் வீட்டின் பூசையறை, வாகனங்களின் முகப்பு பகுதிகளில் வைத்து வழிபடுவதை பார்க்கும் போதே நமக்கு நெஞ்சு உருகியது. நாம் சிக்கிம் பயணத்தில் தங்கி இருந்த விடுதியின் வரவேற்பறையில் பாபா ஹர்பஜன் சிங் தரிசனம் கண்டோம்.


எங்கப்பா நம்ம கதாநாயகன் என்று தேடுகின்றீர்களா? விநாயகரின் வலப்பக்கத்தில் இதோ..ஜூம் செய்து அவரை மட்டும் கீழே காணலாம்.



நம்ம கதாநாயகன் பற்றி அறியும் முன்னர்,  நாதுலா பாஸ் பற்றி தெரிந்து கொள்வோம்.

 14790 அடி உயரத்தில் கடுங்குளிர் கொண்ட இந்த நாதுலா (நாது லா எனப்பிரித்து எழுதுவதுதான் சரி. நாது என்றால் கேட்கும் செவிகள் எனப்பொருள். லா என்றால் கணவாய். இரண்டு மலையடிவாரத்திற்கு இடையிலுள்ள இயற்கையான ஒற்றையடிப்பாதைப் போன்ற வழி) தற்போது இந்திய சீன எல்லைகளாக உள்ளன. உண்மையில் இது திபெத்தின் எல்லையாகும். சீனா அநியாயமாக திபெத்தை ஆக்ரமிப்பு செய்தப்பிறகு இவ்விடம் நமக்கு சீன எல்லையாக மாறிவிட்டது.

2014-ஆம் ஆண்டு நமது பாரதப்பிரதமரை சந்தித்த சீன அதிபர், இந்த நாதுலா வழியினை இந்திய யாத்ரீகர்களுக்காக திறந்துவிட ஒப்புதலளிக்கப்படும் எனச் சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடிக்கும் முன் பழைய சீன அரசுக்கும் இந்தியாவிற்கும் முக்கிய வழித்தடமாக இது இருந்தது. பல்வேறு ஆபத்துக்களையும் தடைகளையும் கொண்டதாக இந்த மலைப்பாதை இருந்தது. போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்த நாளில் யாக் எருமையின் மீது அமர்ந்துக்கொண்டு மிகச்சிரமப்பட்டு மக்கள் பயணம் செய்துள்ளனர். சீனாவிலிருந்து திபெத்திய கடுங்குளிர் பாலைவனத்தைத் தாண்டி 14790 அடி உயர நாதுலாவைக் கடந்து கொல்கத்தாவைச் சென்றடையும் இந்தப் பாதைக்கு 'ஓல்ட் சில்க் ரூட்' என்று பெயர். இதே வழியாகத்தான் நாமும் சீனாவிற்கு செல்லவேண்டும்.

புராதனப் பெருமை மட்டுமல்ல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததும் கூட. 1956-ஆம் ஆண்டு தற்போதுள்ள 14-வது தலாய்லாமா இந்தியாவிற்கு இந்த வழியாகத்தான் அடைக்கலம் தேடி தப்பிவந்தார். ஏழாம் அறிவு-நமது தமிழகத்தைச் சேர்ந்த போதி தர்மர்கூட இந்த வழியாகத்தான் சீனா சென்றிருக்கக்கூடும். தற்போது இக்கணவாய் வர்த்தகத்திற்கோ யாத்திரைகளுக்கோ பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டுள்ளது. இதன் இருபுறமும் எந்நேரமும் இந்திய-சீன இராணுவத்தினர் காவல் புரிந்து வருகின்றனர். 14700 அடி உயரத்தில், பனியும் குளிரும் சூழ்ந்த இடத்தில், இருநாட்டு இராணுவ வீரர்களையும், இருநாட்டு எல்லையில் சென்று பார்ப்பதுதான் இந்த நாதுலா பாஸ் சுற்றுலாவின் பாக்கியம். புதன், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அனுமதி பெற்று இங்குச் செல்லமுடியும்.




  நாதுலா பாஸ்  அனுபவம் அலாதியானது, நாங்கள் தற்போது சென்று வந்தோம். இப்பொழுது பனிப்பொழிவு இல்லை. அக்டோபர் முதல் செல்லும்  போது பனிப்பொழிவு இருக்கும். கடுங்குளிரான பகுதி. இந்திய சீன எல்லை கண்டோம்.இது தான் முதல் அனுபவம். அடுத்து நாங்கள் தரிசித்த பாபா கோவில் பற்றி தற்போது பார்ப்போம்.

 ஜேலேப்லா பாஸ் மற்றும் நாதுலா பாஸ் ஆகிய இரு மலைப்பாதைகளுக்கிடையே இந்த பாபா ஹர்பஜன் சிங் நினைவான  கோவில் உள்ளது. யார் இந்த பாபா? பார்ப்போம் வாருங்கள்.... இந்திய சீன எல்லையில் அமைந்திருக்கும் நாதுலா என்ற கணவாயை இன்று வரை சீனாவிடமிருந்து பாதுகாத்துவருவதும், சீன வீரர்களை நடுங்கவைத்துக்கொண்டிருப்பதும் எது தெரியுமா? இந்தியாவின் பிரமோஸ் ஏவுகனைகளோ, சுகாய் போர் விமானங்களோ அல்ல. சாதாரண இந்திய சிப்பாய் ஒருவரின் ஆவி. அந்த ஆவிக்குச் சொந்தக்காரர் 'பாபா ஹர்பஜன் சிங்'. இங்குள்ள இராணுவ வாகனங்களில் எல்லாம் இவருடைய படத்தினைக் காணலாம். ஹர்பஜன் சிங் பஞ்சாப்பில் 1941-ஆம் ஆண்டு பிறந்தார். இராணுவத்தில் பஞ்சாப் ரெஜிமென்டில் 23-வது பட்டாலியனில் சேர்ந்தார். 1968-ஆம் ஆண்டு சிக்கிம்மில் உள்ள நாதுலா எல்லைக்கு மாற்றப்பட்டார். இந்தக் காலக்கட்டத்தில் நாதுலாவில் அடிக்கடி எல்லைச் சண்டைகள் நடைபெற்றுவந்த நேரம். இரு நாட்டு வீரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வந்த நேரம். 1968-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 04-ஆம் தேதி கோவேறு கழுதைகள் தொகுதி ஒன்றுடன் பட்டாலியன் தலைமையகத்திலிருந்து சென்றபோது மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். அவரது உடலை தேடினார்கள். உடல் கிடைக்கவில்லை. அவர் படையிலிருந்து ஓடிவிட்டார் என்ற செய்தியும் பரவியது.


பாபா ஹர்பஜன் சிங் கோயிலில் இருந்து 


அந்நிலையில், வீரர் ஒருவரின் கனவில் தோன்றிய ஹர்பஜன் சிங், தன்னுடைய ஆயுதங்கள் இந்த இடத்தில் இருக்கின்றது, தன்னுடைய உடல் இந்த இடத்தில் கிடக்கின்றது என்றும் சொல்லியிருக்கின்றார். இதனை கனவு கண்ட வீரர் அலட்சியப்படுத்தியுள்ளார். ஹர்பஜன் சிங் காணாமல் போய் நான்கு நாட்கள் கழித்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. (அப்போதய வழக்கப்படி, இறந்த வீரர்களின் உடல் அங்கேயே அடக்கம் செய்யப்படும். அவருடைய சீருடை மட்டுமே குடும்பத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.) கனவில் தெரிவித்த அதே இடத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதால், பட்டாலியன் வீரர்களுக்கு ஹர்பஜன் சிங் மீது மரியாதை வரத்தொடங்கியுள்ளது. அவ்வப்போது ஹர்பஜன் சிங், வீரர்களின் கனவில் வந்து, 'நான் உங்களைக் காப்பாற்றுகிறேன், உங்களுக்காக எல்லையில் காவல் காக்கின்றேன், சீனா - இந்தியா மீது படையெடுத்தாலோ பிரச்சனை எழுப்ப முயன்றாலோ அதனை மூன்று நாட்களுக்கு முன்பே எச்சரிக்கின்றேன்' என்று கூறிவந்துள்ளார்.

இரவில் வெள்ளை உடை அணிந்த ஒருவர் குதிரையில் ரோந்துப்பணியில் சுற்றுவதாக சீனர்கள் பலமுறைத் தெரிவித்துள்ளனர். இதனால் ஹர்பஜன் சிங் மீது பயம் கலந்த பக்தி இருநாட்டு வீரர்களுக்கும் ஏற்பட்டது. இந்திய வீரர்கள் நாதுலாவில் அவருக்கென ஆலயம் கட்டி வழிபட்டனர். (சீன வீரர்களும் அங்கு ஹர்பஜன் சிங்கை வழிபடுகின்றனர்.) வழிபாட்டுத் தலத்தில் மூன்று அறைகள் வரிசையாக உள்ளன. அதில் மத்திய அறையில் அவர் படம் மாட்டப்பட்டுள்ளது. அவரது சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் கோவில் போன்றே தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வலது புற அறையானது அவரது அலுவலமாகும். அங்கு மேசை, நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. அவர் அங்கு அமர்ந்து தனது அலுவலக வேலைகளை பார்ப்பதாக கூறுகிறார்கள். இடது புற அறையில் அவர் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு தினமும் அவருடைய பூட்ஸ்-க்கு பாலீஷ் செய்து வைக்கப்படுகின்றது. படுக்கை விரிப்பும் நன்கு விரித்து வைக்கப்படுகின்றது. மறுநாள் காலையில், அவருடைய பூட்ஸ் மண்ணாகி இருக்கும். விரித்துவைத்தப் படுக்கை கலைந்து இருக்கும்.


பாபா ஹர்பஜன் சிங் கோயிலில் இருந்து
ஹர்பஜன் சிங் கட்டுப்பாடு நிறைந்தவர். இரவு காவலில் இருக்கும் ஏதேனும் வீரர் கண்ணயர்ந்து தூங்கி விட்டால், அவர் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைவதுண்டு. ஹர்பஜன் சிங் தங்கள் மத்தியில் இன்னும் உயிரோடு இருப்பதாக வீரர்கள் நினைத்ததால், அவர் இறந்ததைப் பதிவு செய்யவில்லை. அவருக்கு இராணுவம் தொடர்ந்து சம்பளத்தை வழங்கியது. அவர் திருமணம் செய்யாததால் அவரது தாயாருக்கு அவரது சம்பளத்தை அனுப்பி வைத்தது இந்திய இராணுவம். (ஹர்பஜன் சிங் உடல் மீட்கப்படவில்லை, எனவே அவர் இறந்ததாக பதிவு செய்ய முடியாது. அவர் இறந்ததாக அறிவிக்க முடியாத நிலையில் அவருக்கான சம்பளத்தை இராணுவம் வழங்கியதாகவும் ஒரு கருத்து நிலவுகின்றது.)


ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ஆம் தேதி அவர் பெயரில் அமிர்தசரஸ் செல்லும் இரயிலில் பஞ்சாப் மாநிலம் கபுர்தாலாவில் உள்ள அவர் கிராமத்திற்கு அவருக்கு என டிக்கெட் பதிவு செய்யப்படும். அவருடைய இருக்கைக்குக் கீழ் அவருடைய பெட்டி வைக்கப்படும். இரயில் படுக்கையில் அவர் படுக்கை விரிக்கப்படும். அவருக்குத் துணையாக மூன்று வீரர்களும் உடன் சென்று அவருடைய குடும்பத்தாரிடம் இந்தப்பெட்டியை ஒப்படைப்பார்கள். பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து அவர்கள் அந்தப்பெட்டியை வாங்கிக்கொண்டு நாதுலா திரும்புவார்கள். இந்த வழக்கம் மிகச்சமீபம் வரை நடந்தது. இராணுவத்தின் இந்த நடவடிக்கை பலதரப்பில் இருந்து விமர்சனத்திற்கு ஆளானது. பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் படைவீரர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததையடுத்து, இந்திய இராணுவம் சத்தமில்லாமல் ஹர்பஜன் சிங்கிற்கு ஓய்வு கொடுத்துவிட்டது. இதற்குள்ளாக இவருக்கு கெளரவ கேப்டன் பதவியும், பின்னர் கெளரவ மேஜர் பொறுப்பும் வழங்கப்பட்டது. மேலும் இவருக்கு மகாவீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டது. நாதுலாவில் இருக்கும் போர் நினைவிடத்தில், முதலாவதாக இவரது பெயரையே பொறிக்கப்பட்டுள்ளது.






 இராணுவம் இவரை பணியிலிருந்து விடுவித்தாலும், ஹர்பஜன் சிங் என்பவர் 'பாபா ஹர்பஜன் சிங்' என்று வீரர்களால் போற்றப்படுவதால், எல்லைப்புற சாலைகள் அமைப்பான 'கிரெப்' (GREF) ஹர்பஜன் சிங்கிற்கு மறுவேலை வழங்கியுள்ளது. இப்போது கிரெப் ஊழியராக அவர் வருடத்திற்கு இரண்டு மாத விடுப்பில் சொந்த ஊருக்கு சென்று வருகின்றார். நாதுலாவில் உள்ள அவர் கோவிலில் வரும் வருமானத்தில் ஒரு பகுதி அவருடைய குடும்பத்திற்கு அனுப்பப்படுகின்றது. பாபா ஹர்பஜன் சிங் பெட்டிப் படுக்கைகள் ஊருக்கு வரும்போது அவருடைய கிராமத்தில் விழா எடுக்கின்றார்கள். இந்தியா-சீனா எல்லைப்பகுதி வீரர்கள் சந்திப்பின் போது ஹர்பஜன் சிங்கிற்கு ஒரு இருக்கையை சீனர்கள் ஒதுக்குவதாகவும் சொல்கிறார்கள். ஹர்பஜன் சிங் சொல்லை மீறி செயல்பட எந்த படைவீரரும் தயாராக இல்லை. நாதுலா மட்டுமல்ல, வடக்கு சிக்கிம்மில் உள்ள இராணுவத்தினரும் தங்கள் கூடாரத்திற்கு வெளியே ஒரு சிறு விளக்கை ஏற்றி, அதனை பாபா ஹர்பஜன் சிங் என்று கருதி வழிபட்டு வருகின்றனர். பாபா ஹர்பஜன் சிங் எல்லையில் காவல் புரியும் வீரர்களுக்கு காவல் தெய்வமாகவே இருக்கின்றார்.





மேற்கண்ட (கற்பனை) நிகழ்வுகளை நாம், கதையாகவும் கொள்ளலாம். உண்மையாகவும் கொள்ளலாம். அது அவரவர் மன நிலையைப்பொறுத்தது. நம்மைப் பொறுத்த வரையில் இது உண்மையே. இன்னும் நம்மால் அந்த கோயிலிலிருந்து மீண்டு வர இயலவில்லை.இதோ..காட்சிப்பதிவுகளை கீழே பதிவு செய்கின்றோம்.

























வெகு நல்ல உயரமான இடம், நல்ல குளிர், அப்பழுக்கற்ற பஞ்ச பூதங்கள் நிரம்பிய இடம். மனதை இலகுவாக குவிக்க முடிந்தது, பாபா ஹர்பஜன் சிங் அங்கே சூட்சுமமாக இருப்பதை உணர முடிகின்றது. சிறிது நேரம் மௌனித்து நின்றோம், மண்டியிட்டு வேண்டினோம். நாதுலா பாஸ் கதாநாயகன் கேட்க கேட்க இப்படி நடக்குமா? என்று தோன்றுகின்றது. ஆனால் பரம் உள்ளே இறங்கிவிட்டால் பாமரனும் விதி விலக்கல்ல.

பாபா ஹர்பஜன் சிங் பொற்பாதம் வணங்கி அங்கிருந்து விடை பெற்றோம். அடுத்து நாம் தரிசிக்க இருப்பது சிவனார் தான். மீண்டும் மேலே சென்று பாருங்கள். சில காட்சிகளில் சிவா பெருமான் இருப்பது தெரியும்.இங்கிருந்து நடந்து செல்லும் தூரம் தான்.மீண்டும் அடுத்த பதிவில் அங்கிருந்த சிவ பெருமான் தரிசனம் பெறுவோம்.

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி

முருகன் அருள் முன்னிற்க!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். முந்தைய பதிவில் ஆப்பூர் பெருமாள் கோயில் சென்று உழவாரப் பணி செய்ய அருள் கிடைத்ததை பார்த்தோம். இன்று மீண்டும் ஒரு அண்மைக்கால அற்புதக் கோயில் பற்றி காண இருக்கின்றோம்.

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஜீவ நாடி பற்றிய தேடலில் நமக்கு இந்தக் கோயில் பற்றிய செய்தி கிடைத்தது. காலத்தின் போக்கில் அப்படியே விட்டு விட்டோம். இதற்கு முந்தைய ஜீவ நாடி அற்புதங்கள் ஆப்பூர் பெருமாள் கோயிலும் இதே போன்று தான் நமக்கு கிடைத்தது. பின்னர் இப்போது மீண்டும் மீண்டும் இவர் நம்மை அழைப்பதை சில நாட்களாக உணர்ந்து வருகின்றோம். அவர் தான் திமிரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரர் ஆவார். 





ஞான பூமியான தமிழகம் எத்தனயோ ஆன்மீக அற்புதங்களை கொண்டது. அப்படிப்பட்ட அற்புதங்களில் ஒன்றுதான் தீராத நோய்களை தீர்த்து வைக்கும் திமிரி பாஷாண லிங்கம். கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைத்து அருள் பாலிக்கும் அரியதொரு தெய்வ சாட்சி, திமிரி ஸ்ரீ சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர்.

திமிரி பாஷாண லிங்கம் உருவான வரலாறு தெரிய வேண்டுமா ? அதற்கு நாம் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜய நகர பேரரசுக்கு செல்ல வேண்டும்.

விஜய நகர பேரரசில் சிற்றரசர்களாக திம்மி ரெட்டி , பொம்மி ரெட்டி இருவரும் வேலூர்க் கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். அவர்களது வழித்தோன்றலான சதாசிவராய மன்னர் ஆற்காட்டை அடுத்த திவாகராயர் எல்லை (திமிரி) பகுதியில் பல நற்காரியங்கள் புரிந்தார். இன்றைய திமிரி, அன்று திவாகராயர் எல்லை என்று பெயர் பெற்று விளங்கியது. ஒரு சமயம் தொற்றுநோய் விஷகிருமிகளால் மக்கள் நோய்களுக்கு ஆளாகி அவதியுற்றனர். இரக்க குணமும் இறைபற்றும் மிக்க சதாசிவராயர் இதனைகண்டு வேதனையுற்றார். பிணியும், வறுமையும் தன் நாட்டிலிருந்து நீங்க வேண்டும் என்று விரும்பிய அவர் , உடனடியாக தமது அமைச்சரவையைக் கூட்டி ஆலோசித்தார். பின்னர் தமது ராஜவைத்தியரான இராச பண்டித சிரோன்ம்னி, மந்திர வைத்திய கேசரி என்று புகழப்பட்ட கன்னிகா பரமேஸ்வரர் அந்தனரிடம் அதற்கான வழியை கண்டறிய ஆணையிட்டார்.


மன்னரின் அன்பான ஆணைப்படி அரசவை வைத்தியரும் 12 ஆண்டு காலம் உழைத்து, தன்வந்திரி வைத்திய முறையில் நவபாஷாணத்தில் ஒன்றான திமிரி பாஷாணத்தால் தெய்வாம்சமும் மருத்துவ குணமும் கலந்த சோமநாத ஈஸ்வர லிங்கத்தை வடிவமைத்துத் தந்தருளினார். திமிரி என்பதற்கு தீ என்ற பொருளும் உண்டு.


அதன் உயரம் 6 அங்குலம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி. 1379 ஆம் ஆண்டு தைத் திங்கள் திருவாதிரை நன்னாளில் திமிரி நகரின் கோட்டைப் பகுதியல் அப்போதைய சிருங்கேரி மடத்தின் 12வது பட்டம் சங்கராச்சாரியார் ஆசிர்வாதத்துடன் திமிரி பாஷாண லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஆகம முறைப்படியும் சித்த மருத்துவ முறைப்படியும் சீரும் சிறப்புமாக அமையப்பெற்ற இந்த பாஷாண லிங்கம் பக்தர்களுக்கு அருள்விருந்தை வழங்கியது! அதன் மருத்துவ குணங்கள் மிகுந்த அபிஷேக தீர்த்தம் அருமருந்தாய் விளங்கியது!.

மருத்துவ குணங்களை உள்ளடக்கிய இந்த லிங்கத்தின் அபிஷேக தீர்த்த பிரசாதம் இதய நோய், சிறுநீரக நோய், மன நோய், சரும நோய்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களை குணமாக்குகிறது. மருந்தும் ஈசனும் இணைத்து மருந்தீசராகி நோய் தீர்ப்பது அற்புதம்தானே! திமிரி லிங்கம் பாஷாணத்தால் உருவாக்கப்பட்டதல் புகையும் தன்மை கொண்டது ஆகையால் எப்போதும் லிங்கத்தின் மீது நீர் விழுமாறு செய்யப்பட்டது . அந்த அபிஷேக தீர்த்தத்தை உட்கொண்டவர் நலமும் வளமும் பெற்றனர்.


அதுவரை திவாகராயர் எல்லை என்று அழைகப்பட்ட அப்பகுதி திமிரி பாஷாண லிங்கத்தின் பெருமையால் திமிரி நகரம் என்று பெயர் மாற்றம் கொண்டது!.

மக்கள் பிணிதீர்த்து மகிழ்வதைக் கண்ட சதாசிவராயர் பெருமகிழ்ச்சியடைந்தார். பக்திப் பரவசத்தில் நெகிழ்ந்தார்.

காலப்போக்கில் ஆற்காடு நவாப் படையெடுத்து வேலூர்க் கோட்டையைக் கைப்பற்றினான். புராதன சின்னங்களையும், ஆலயங்களையும் மொகலாயர் கொள்ளையிட்டனர். இந்த கொள்ளையிலிருந்து, தாம் அரும்பாடுபட்டு உருவாக்கிய அருள்நிறை பாஷாண லிங்கத்தை காக்க கன்னிகா பரமேஸ்வரர் முற்பட்டார்.

லிங்கத்தின் மீது தேன் மெழுகு பூசி வேதியியல் கலவையிலான கூர்ம (ஆமை) வடிவ கவசத்துள் மறைத்து எக்காலத்தும் அழியாத வண்ணம் புவியியல் தத்துவத்தின்படி முக்கோண பெட்டகத்துள் வைத்து ஆலயத்து திருக்குளத்தில் கி பி 1454இல் புதைத்து வைத்தார். பிறகு, மாற்றாரிடம் பிடிபடுவதை தவிர்க்க, அண்டை அரசான காஞ்சிக்கு அரச வைத்தியர் தம் குழுவினருடன் விரைந்தார்.

இதை அறிந்த முகலாய சிப்பாய்கள் இவர்களை கைது செய்து திமிரியை அடுத்த ஆணைமல்லூர் ஸ்ரீரேணுகாம்பாள் ஆலயத்தின் முன்பு கொண்டு வந்தனர். அவர்களை யானைக்காலால் இடறச் செய்தனர். உயிர் நீங்கும் தருணத்திலும் கன்னிகா பரமேஸ்வரர், 'மற்றொரு பிறவி இருக்குமேயானால் அதிலும் என் கையாலேயே பாஷாண லிங்கத்தை மீண்டும் எடுத்து பிரதிஷ்டை செய்ய வேண்டும்' என்று அரனிடம் தியானித்துக் கொண்டார்.

பாஷாண லிங்கம் மறைந்து ஆண்டுகள் 500 ஓடி விட்டன. மனித குலத்தைக் காத்து அருள இறைவன் திருவுளம் கொண்டான் போலும். 1985 ஆம் ஆண்டு திமிரி கோட்டை பகுதியில் ஓர் ஐயப்பன் ஆலயம் அமைக்க ஏ.எஸ்.இராதாகிருஷ்ணன் என்ற அன்பர் முயற்சி செய்து வந்தார். பண வசதி இருந்தும் ஆலயம் முற்றுப் பெறாத நிலைமை. காரணத்தை அறிந்து கொள்ள வேலூர் சென்று திரு ஜெயஹரி என்பவரிடம் கந்தர் நாடி ஒலைச் சுவடியை பார்த்தார்.

கந்தர் நாடி ஒலைச் சுவடி காலக்கண்ணாடி போன்று லிங்கத்தை புதைத்த அரசவை மருத்துவரின் மறு பிறவியே அன்பர் திரு இராதாகிருஷ்ணன் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்து காட்டிற்று. மற்றும் பாஷாண லிங்கம் புதைக்கப்பட்ட குளத்தின் விவரத்தையும் எடுக்க வேண்டிய வழிமுறைகளையும் தெளிவுபடுத்திற்று.

யானை காலால் மிதிபட்டு இறந்த அதே ஆனைமல்லூரில் திரு இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறப்பு அமைந்தது குறிப்பிடத்தக்கது. 500 ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைப்பட்டிருந்த பாஷாண லிங்கத்திலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சிலிருந்து பாதுகாக்கவும் நாடி வழிகாட்டியது. அதன்படி குற்றாலம் ஸ்ரீசெண்பகாதேவி ஆலயம் அருகில் உள்ள புற்றில் முத்து ஒன்று காணக்கிடைக்கும் என்றும், அதை எடுத்து வெள்ளி மோதிரம் ஒன்றில் பதித்து அதை அணிந்து கொண்டு பிறகு லிங்கத்தை எடுத்தால், கதிர்வீச்சின் பாதிப்பு இருக்காது என்றும் சொன்னது. அவ்வாறே தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொண்டு திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் திமிரி கோட்டை சோமநாத ஈஸ்வரர் ஆலயத் திருக்குளத்தில் 32 அடி ஆழத்தில் புதைந்து கிடந்த பாஷாண லிங்கத்தை தேடும் பெரும் முயற்சியை மேற்கொண்டார். இம்முயற்சியில் அவரது ஆன்மிக நண்பர்களும் ஊர்ப் பொதுமக்களும் துணை நின்றனர்.

1985 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அந்த அதிசயம் நிகழ்ந்தது!. நம்பிக்கையுடன் பெருமுயற்சிகொண்டு தேடிய அன்பர் திரு இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தனது தர்ம கர்ம யோகத்தால் பூர்வ ஜென்ம பலனாக சுமார் 600 ஆண்டுகளாக குளத்தில் புதையுண்டுகிடந்த திமிரி பாஷாண லிங்கம் கிடைத்தது!

இச்செய்திகள் யாவும் திருவாவடுதுறை ஆதினம் ஸ்கந்தர் மணிமாலை சதகம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

குளிர்ந்த நீர் நிரம்பிய கண்ணாடிப் பேழையில் ஸ்ரீபாஷாணலிங்கேஸ்வரர் அமர்த்தப் பெற்று ஓலைச்சுவடியில் தெரிவித்த வண்ணம் ஆத்மார்த்தமான பக்தியோடு அருளாளர் திரு இராதாகிருஷ்ணன் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக அபிஷேக ஆராதனைகள் செய்து வருகிறார்.
எத்தனை காலம் ஆனபோதிலும் ஆற்றல் குன்றாத சூரிய-சந்திரர்போல இந்த பாஷாண லிங்கேஸ்வரரின் பேராற்றல் தனித்தன்மையுடன் ஓங்கி நிற்கிறது. மருத்துவ முறைப்படியும், அகத்திய மகரிஷி அருளிய பட்டியல்படியும் சுத்தமான தண்ணீர், தேன், பால், விபூதி, சந்தனம் ஆகியவற்றை பாஷாண லிங்கத்தின் மீது சார்த்தி, அவற்றை முறையாக அருந்தி வர சரும, நரம்பு நோய்களும், ரத்த அழுத்தமும் தீர்கின்றன.

எல்லையில்லா பெருங்கருணை கொண்ட உலகநாயகனான அந்த வைத்திய நாதப்பெருமான் மனித குலத்தின் மீது கொண்ட அளவற்ற அன்பினால் இந்த கலியுகத்தில் திமிரியில் அமர்ந்து பிணி தீர்க்கும் பெரும்பணியைச் செய்து வருகிறார். நோயுற்ற அன்பர்கள் திமிரி இறைவனை ஒரு முறை தரிசனம் செய்து தீர்த்த பிரசாதத்தை அருந்தி வந்தால் நோய்கள் நீங்கி வாழ்வில் வளமும் நலமும் சேரும் என்பது திண்ணம். 

திருச்சிற்றம்பலம்.

குறிப்பு : ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று எல்லாம் வல்ல அருள்மிகு ஸ்ரீ சோமநாத  பாஷாண லிங்கேஸ்வரருக்கு அபிஷேக  ஆராதனைகள்  வெகு சிறப்பாக  நடைபெற்று  கொண்டிருக்கிறது.

தொடர்புக்கு :
திரு A.S.இராதாகிருஷ்ணன் சுவாமிகள்,
அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் திருக்கோயில்,
திமிரி - 632512.
ஆற்காடு வட்டம், வேலூர் மாவட்டம்.

எப்போ நம்மை அழைப்பார் என்று வழி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கின்றோம். எப்படிப்பட்ட அருள்நிலை நமக்கு கிடைக்க உள்ளது. எல்லாம் நம் குருநாதர் அகத்தியருக்கு தான் தெரியும்.மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html