"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, October 30, 2019

கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற ஸ்ரீ கந்த ஷஷ்டி விழா (3)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முருகன் என்றாலே அழகு
முருகன் என்றாலே தமிழ்
முருகன் என்றாலே முக்தி

அனைவரும் கந்த ஷஷ்டி விரதம் இருந்து வருவீர்கள் என்று நம்புகின்றோம். கந்த ஷஷ்டி விரதம் மிக பிரசித்தி பெற்றது. இதனை முன்னிறுத்தும் விதமாக சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்றும் சொல்வதுண்டு. முருகன் என்று சொன்னாலே ஷஷ்டி விரதம் என்பது நமக்கு உணர்த்தப்பட்டு வருகின்றது. சென்ற ஆண்டில் முதன் முதலாக காப்பு கட்டி,விரதம் இருந்தோம். ஓராண்டு நிறைவில் எமக்கு என்ன வேண்டுமோ அதனை முருகப் பெருமான் இந்த ஆண்டு ஷஷ்டிக்குள் கொடுத்து விட்டார். இதோ..இந்த ஆண்டும் ஷஷ்டி விரதம் இருந்து வருகின்றோம்.இந்த ஆண்டு எம் இல்லத்துணைவியும் இந்த விரதத்தில் இணைந்துள்ளார்கள் என்பது குருவருளால் என்பது திண்ணம்.

சரி..சென்ற ஆண்டு நடைபெற்ற ஸ்ரீ கந்த ஷஷ்டி விழாவிற்கு செல்வோமா?





சென்ற ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு முடித்து நாம் கந்த ஷஷ்டி விழாவிற்கு காப்பு கட்ட நமக்கு குருக்கள் பணித்தார். அதே போல் நம் குழுவின் சார்பில் மூவர் காப்பு கட்டிக்கொண்டோம். அன்று முதல் விரதம் இருக்க ஆரம்பித்தோம்.



இதோ..நம்பியவர் வந்தால்... நெஞ்சுருகி நின்றால்..என்று முருகன் அருளில் திளைக்க நாம் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்து ஒரு வாரம் வந்தோம்.

 மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு

நூறு முகம் காட்ட இருக்கும் ஆறு முகனை தினமும் தொழுது கொண்டே வந்தோம்.



இதோ..அந்த நாளும் வந்தது. நாமும், சிவசங்கர்,பத்ம குமார் மூவரும் அன்று மாலை கோயிலை அடைந்தோம். முதன் முதலாக சூர சம்ஹாரம் காண இருக்கின்றோம். அன்று மாலை முழுதும் முருகா..முருகா என்று ஒலித்து கொண்டே இருந்தது. 



முருகன் கோயிலின் முன்னே வேல் வைக்கப்பட்டிருந்தது.


பின்னர் உற்சவர் இருக்கும் இடத்திற்கும் சென்றோம். நேரம் செல்ல செல்ல நமக்கு சற்று பதட்டமாக இருந்தது. குருக்கள் பூசையை ஆரம்பித்தார். இதோ சற்று நேரத்தில் வேல் வாங்கி சூர சம்ஹாரம் செய்ய முருகன் புறப்பட இருக்கின்றார். நாமும் முருகனுடன் செல்ல இருக்கின்றோம்.





அழகெல்லாம் முருகனே..அருளெல்லாம் முருகனே..என்று கேட்டிருப்போம், மேலே பாருங்கள்..பார்த்தால் இது புரியும். 





கந்த ஷஷ்டி விழா பற்றி கோயில் குருக்கள் சிறிய உரை நிகழ்த்தினார். மாலை நேரம் இரவு நோக்கி நெருங்கி கொண்டிருந்தது. நாமும் நம்முள்ளே உள்ள தீய குணங்களை சம்ஹாரம் செய்ய முருகனிடம் வேண்டினோம்.


நம் அன்பர் பத்ம குமார் முருகனுக்கு குடை பிடிக்க தயாராகி விட்டார். முருகனுக்கு குடை பிடிக்க இவர் ஒரு வாரம் விரதம் இருந்துள்ளார். சும்மாவா..சாட்சாத் அந்த பரம்பொருளின் கருணை நமக்கு சும்மா கிடைக்குமா என்ன?







இன்னும் சற்று நேரத்தில் முருகன் வேல் வாங்கப் போகின்றார். வேல் வாங்கி விட்டு சூரனை சம்ஹாரம் செய்ய புறப்பட போகின்றார். மூன்று வேல்களை ஒவ்வொன்றாக முருக அடியார்கள் வாங்கினார்கள். நமக்கு கதாயுதம் கிடைத்தது. அப்படியே வாங்கி விட்டு, முருக சரணம் விண்ணப் பிளக்க முருகன் கோயிலை விட்டு வெளியே வந்தார்.




அலைகடலென கூட்டம் வந்துவிட்டது. இதற்கு மேல் நாம் காட்சியை பதிவு செய்யவில்லை. சிவசங்கர் முருகனை ஒருபக்கத்தில் தூக்கி கொண்டு வந்தார். பத்மகுமார் குடையையே அப்படி,இப்படி என ஆட்டிக்கொண்டு வந்தார். நாம் முருகனுக்கு முன்னே மூன்று வேல் உள்ள படையில் ,படை வீரனாக சென்றோம். கோயிலுக்கு வெளியே செல்ல, இருள் சூழ்ந்து விட்டது.
முதலில் சிங்க முகன் முருகனிடம் மோதுவதற்கு ஓடோடி வந்தார். முருகன் ஒரு வேல் சென்று தலையை கொய்தது.இரண்டாவதாக கஜ முகன் ஒரு கை பார்க்க வந்தார். முருகன் சும்மா விடுவாரா என்ன? மீண்டும் கஜமுகன் தலையைக் கொய்து அனுப்பினார். இறுதியில் சூரன் வந்தார். இவர் ஒரே முறை வரவில்லை. மூன்று முறை முருகனிடம் வந்தார். முருகப் பெருமான் மூன்றாவது முறை சூரனை சம்ஹாரம் செய்து சேவலாக மாற்றினார்.இது செய்தியாக பார்த்தால் ஒன்றும் விளங்காது. நேரில் சென்று பார்த்தால் தான் நாம் சொல்ல வரும் விஷயம் புரியும். நாம் அப்படியே கண்ணீர் கடலில் மிதந்தோம். நம்மை முருகப் பெருமான் அவரது போர்ப் படையில் முன்னே நிறுத்தி உள்ளார் என்றால் என்னே நாம் செய்த புண்ணியம். சூர சம்ஹாரம் முடிந்து உள்ளே சென்ற முருகப் பெருமானுக்கு அபிஷேகம், ஆராதனை என்று தொடர்ந்தது.

நாம் உள்ளே அரோகரா! அரோகரா என்று கோஷமிட்டுக் கொண்டே உள்ளே சென்ற போது, சில அடியார்கள் நம் காலை தொட்டுக் கும்பிட்டார்கள். முருகா சரணம் என்று அவன் புகழ் ஓதி, போர் கருவிகளை வேலொடு கொடுத்தோம்.

மீண்டும் இரவு சுமார் 9 மணி அளவில் கோயில் சென்று முருகனை தரிசித்தோம், 
நம்பியவர் வந்தால் ...நெஞ்சுருகி நின்றால்... என்று நமக்குத் தோன்றியது.




ஆம். நம்மிடம் உள்ள தான், தனது என்ற பற்றுக்களை கொஞ்ச கொஞ்சமாக கந்த ஷஷ்டி சூர சம்ஹாரத்தில் அழித்து விட்டார் என்று இன்று நம்மால் உணர முடிகின்றது.

சென்ற ஆண்டு செப்டம்பரில் கொண்டாடிய போது நமக்கு சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலர் பிரசாதம் கிடைத்தது. இன்னும் ஓராண்டு முழுமைக்குள் தற்போது ஜூலை மாதம் நேரிலே சென்று ஸ்ரீ சிங்காரவேலர் தரிசனம் பெற்று வந்தோம். விரைவில் தனிப்பதிவாக தருகின்றோம்.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்பதும் நமக்கு சத்தியமாக சாத்தியப்பட்டிருக்கின்றது.
எப்படியோ.. நம் கனவிலும் நினையாத கந்த ஷஷ்டி விரதம் நாம் முதன் முதலாக கைக்கொண்டிருக்கின்றோம். அடுத்த ஆண்டில் இன்னும் சீர்பட முருகனருள் வேண்டி நிற்கின்றோம். இந்தப் பதிவின் மூலம் சிவசங்கர் & பத்மகுமார் அவர்களுக்கும், கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில் குருக்களுக்கும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

- மீண்டும் முருகனருள் பெறுவோம்.

மீள்பதிவாக:-

முருகன் 60 - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு - (2) - https://tut-temples.blogspot.com/2019/10/60-2.html

சஷ்(ட்)டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு (1) - https://tut-temples.blogspot.com/2019/10/1.html

Tuesday, October 29, 2019

இறை, சித்தர், தாமிரபரணி அருளை பெறுவதற்கு தாமிரபரணி புஷ்கரம் மீண்டும் அழைக்கின்றது

 அடியார் பெருமக்களே...

நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழு சித்தர்களின் அருள் பெற்று வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. அதுவும் குறிப்பாக சித்தருக்கெல்லாம் தலைமை சித்தராய் விளங்கும் அகத்தியர் பெருமானின் அருளை பூரணமாக பெற்று வருகின்றது. இதனை நாம் ஒவ்வொரு மாத ஆயில்ய பூசையின் போது உணர்ந்து வருகின்றோம். இந்த பதிவும் அகத்தியர் பெருமானின் உத்தரவினால் தான் தரப்படுகின்றது. அகத்தியர் என்றதும் நமக்கு எப்படி பல செய்திகள் ( ஆயில்யம், தலைமை சித்தர்,பாபநாசம், அகத்தியர் அருவி, கல்யாண தீர்த்தம், பஞ்செட்டி, கூடுவாஞ்சேரி, பொதிகை மலை,தமிழ், மருத்துவம், சித்தர்கள்  என பட்டியல் நீளும்) தோன்றுகின்றதோ, அதில் குறிப்பிடத்தக்க இடம் பெறுவது தாமிரபரணி ஆகும்.








இந்த தாமிரபரணி அகத்தியரால் தனித்தன்மை பெற்று, தென்னாட்டிற்கு உயிர் கொடுத்து கொண்டு வருகின்றது. இத்தகு சிறப்பு மிக்க தாமிரபரணியில் புஷ்கரம் பூசை செய்ய உள்ளார்கள். இதனை தாமிரபரணி புஷ்கரம் என்றும் கூறுவார்கள். அதென்ன புஷ்கரம்?

புஷ்கரம் என்பது ஒவ்வொரு வருடமும் ஒரு புனித நதியின் கரையில் நடைபெறும் ஆன்மிகத் திருவிழா. குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதையொட்டி  இந்த விழா நடத்தப்படுகிறது. குரு எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது மரபு.

புராணப்படி, ஒவ்வொரு புண்ணிய நதிக்கும் ஒரு ராசி உண்டு. மேஷ ராசி கங்கைக்கும்; ரிஷப ராசி நர்மதைக்கும்; மிதுன ராசி சரஸ்வதிக்கும்; கடக ராசி யமுனைக்கும்; சிம்ம ராசி கோதாவரிக்கும்; கன்னி ராசி கிருஷ்ணா நதிக்கும்; துலாம் ராசி காவிரிக்கும்; விருச்சிக ராசி தாமிரபரணிக்கும்; தனுசு ராசி சிந்து நதிக்கும்; மகர ராசி துங்கபத்ரா நதிக்கும்; கும்ப ராசி பிரம்மபுத்ரா நதிக்கும்; மீன ராசி பரணீதா நதிக்கும் உரியதாக சொல்லப்பட்டிருக்கிறது.

குருபகவான் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கரம் கொண்டாடப்படும். அந்த வகையில் குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு அக்டோபர் மாதம் இடப்பெயர்ச்சி அடைகிறார். இதனை முன்னிட்டு அதிதேவதையாக விளங்கக் கூடிய தாமிரபரணி நதிக்கு 10 நாட்கள் மகா புஷ்கர விழா நடைபெற உள்ளது. தாமிரபரணி மகாபுஷ்கர விழா புரட்டாசி 25ஆம் தேதி அக்டோபர் 11 அன்று தொடங்கி ஐப்பசி 7ஆம் தேதி அக்டோபர் 24 வரை நடைபெற்றது. இது 144 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறக்கூடியதாகும்.




நம் பாரத தேசத்திலுள்ள கங்கை, நர்மதா, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பிரம்மபுத்ரா, துங்கபத்ரா, சிந்து, பரணீதா என்ற 12 நதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புஷ்கரம் கொண்டாடப்படுகிறது.



இந்த விழாவையொட்டி பாபநாசத்தில் தொடங்கி புன்னக்காயல் வரை தாமிரபரணிக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெற்றது. தாமிரபரணி ஆற்றின் இருகரைகளிலும் உள்ள 200 புஷ்கரணி படித்துறைகள் (தீர்த்தக்கட்டம்) சீர் செய்யப்பட்டு, பொதுமக்களின் தீர்த்தமாடினர். பாபநாசம் தொடங்கி புன்னைக்காயல் வரை தாமிரபரணி ஆறு பாய்கின்ற 127 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் தீர்த்தமாடினர். தொடர்ந்து மகா ஆரத்தி விழா நடைபெற்றது.புஷ்கர விழாவுக்குப் பின்னால் ஒரு புராண சம்பவம் இருக்கிறது. இந்த புராண சம்பவம் பற்றி தனிப்பதிவில் காண்போம்.




தாமிரபரணி தோற்றம் பற்றி 
"திங்கள் முடிசூடும் மலை
தென்றல் விளையாடும் மலை
தங்கும் முகில் சூழும் மலை
தமிழ் முனிவர் வாழும் மலை
அங்கையற்கண் அம்மைதிரு
அருள் சுரந்து பொழிதெனப்
பொங்கருவி தூங்குமலை
பொதிய மலையென்மலையே”
என குற்றால குறவஞ்சியில் குற்றால குறத்தியிடம் பொதிகை மலை குறத்தி பொதிகை மலை பெருமையை கூறுவதாக உள்ள பாடல் இது. குற்றால மலையை திரிகூட மலை என்று கூறுவார்கள். தாமிரபரணி தோன்றும் இடத்தை ஐந்து தலை பொதிகை என்பர். தாமிரபரணி பற்றி தனியாக தொகுத்து தரும் அளவிற்கு செய்திகள் நமக்கு கிடைத்திருக்கின்றது. குருவருளால் மட்டுமே இதனை பற்றி நாம் சிந்திக்க முடியும். நதி,நீர்நிலைகள் வழிபாடு என்பது நம் முன்னோர்கள்,சித்தர்கள் வழிபாட்டில் மிக மிக முக்கியமானது. இதனை நாம் தொடர் வேண்டும் என்பதே சிறப்பு செய்தியாகும்.தினசரி வழிபாட்டில் நாம் நீர்நிலைகளை நினைத்து வழிபட வேண்டும். அன்றைய காலத்தில் நீர்நிலைகள் அருகில் தான் பல பூசைகள் நடைபெறும்.ஆனால் இன்று நீர்நிலை என்பது வெறும் எழுத்தின் மூலம் தான் சொல்ல முடிகின்றது.இருக்கின்ற நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இது நம் பொறுப்பும் கடமையும் கூட.
புஷ்கர புண்ணிய காலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் போன்றோர் நதிகளில் வாசம் செய்வதால், இந்த புண்ணிய காலங்களில் நதியில் நீராடுவதால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் புனித நீராடிய பலன் கிடைக்கும். அன்னதானம், வஸ்திரதானம் போன்ற பல தானங்கள் செய்தால் பன்மடங்கு பலனை தந்து நம்மை மோட்சத்திற்கு போக வழி வகுக்கும். புஷ்கர புண்ணிய காலத்தில் நீராடி பிதுர்களுக்கு தர்ப்பணம் முதலிய சடங்குகள் செய்வதால் பிதுர்சாபம் நீங்கி நல்வாழ்க்கை வாழ வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது.


இறைவன் அருளால்,  2018ம் ஆண்டு 12.10.2018 முதல் 23.10.2018 முடிய தாமிரபரணி மகா புஷ்கரவிழா சிறப்பாக  நடைபெற்றது.
இந்த ஆண்டு  (2019) குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்வதால் அதற்குரிய பிரம்மபுத்திரா நதியில் புஷ்கரவிழா கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக தாமிரபரணி மகாபுஷ்கரத்தின் நிறைவு நிகழ்ச்சியாக "தாமிரபரணி அந்திம புஷ்கர விழா"  1.11.2019 முதல் 4.11.2019 முடிய நடைபெற உள்ளது.
இந்த விழா நெல்லை குறுக்குத்துறை, திருப்புடைமருதூர் ஆகிய பகுதிகளில் நான்கு நாட்கள் வேதபாராயணம், நதிபூஜை, நதி நீராடல், சிறப்பு பூஜைகள் ஆகியவையுடன் நடைபெற உள்ளது. விழாவில் மடாதிபதிகள் கலந்து கொள்கிறார்கள். விழாக்குழுவினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
தாமிரபரணி புஷ்கர விழாவின் தொடக்கத்தில் கலந்துகொள்ளவேண்டும் என ஆசைப்பட்டு, பின்னர் முடியாமல் போன அகத்தியர் அடியவர்களுக்கு, இந்த ஜென்மத்தில் கிடைக்கும் ஒரு அரிய வாய்ப்பு.  01.11.2019க்கும் 04.11.2019க்கும் இடையில் ஒருநாள் சென்று தாமிரபரணியில் ஸ்நானம் செய்து, இறை அருள், உன்னத நதியாம் தாமிரபரணியின் அருள் பெற்று நலமாக வாழ வேண்டுகிறேன்.

இறை, சித்தர், தாமிரபரணி அருளைப் பெறுவதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். 

மீண்டும் சிந்திப்போம்.

Monday, October 28, 2019

முருகன் 60 - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு - (2)

முருகனருள் முன்னிற்க!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

கந்த ஷஷ்டி விரதம் தொடங்கி விட்டது. ஷஷ்டி விரதம் இருப்பவர்கள் தொடரட்டும். மற்றவர்கள் தினசரி வழிபாட்டில் கந்த ஷஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்ற பாடல்களை பாடி, முருகனை வீட்டிற்கு அழையுங்கள். முருகா ! என்ற நாமத்தை ஒருமுறையேனும் சொல்லுங்கள். நீங்கள் அப்படி சொல்ல வேண்டும் என்று நாம் தினமும் அளிக்கும் பதிவில் அவரின் திருநாமத்தை சேர்க்கின்றோம்.

இப்பொது எங்கு பார்த்தாலும். வேகம்..வேகம்... அதிலும் மின்னல் வேகம். எல்லாவற்றிலும் வேகம் என்றால் எப்படி? உதாரணத்திற்கு கிரிக்கெட் விளையாட்டை எடுத்துக் கொள்வோம். முதல் 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி இருந்தது. பின்னர் அது சுருங்கி ஒரே நாளில் விளையாடும் 50 ஓவர் போட்டி என்றானது. அதுவும் இப்போது சுருங்கி 20-20 என்ற 20 ஓவர் போட்டி என்றானது. நம் வாழ்க்கை பயணமும் அப்படித் தான். நம் முன்னோர்கள் இறப்பின்றி முதுமக்கள் தாழியில் வைக்கும் வழக்கம் இருந்தது. அப்புறம் 100 ஆண்டுகள் வாழும் தலைமுறை இருந்தது.இப்போது சொல்லவே வேண்டாம் சுமார் 40 வயதைத் தாண்டுவதே கடினமாகி விட்டது. எல்லாம் துரித உணவின் செயல். துரித உணவை உண்கின்றோம்..துரிதமாக இவ்வுலகை விட்டுச் செல்கின்றோம். எல்லாவற்றிற்கும் துரிதம் தான் காரணம்.

இந்த பதிவும் ஒரு துரித வகை என்றே சொல்லலாம். முருகன் 60 என்ற தலைப்பில் துரிதமாக 60 தகவல்கள்... அறிய இருக்கின்றோம்.







1. முருகனின் திருவுருவங்கள்:
1, சக்திதரர்,
2. கந்த சுவாமி,
3. தேவசேனாதிபதி,
4. சுப்பிரமணியர்,
5. கஜவாகனர்,
6. சரவணபவர்,
7. கார்த்திகேயர்,
8. குமாரசுவாமி,
9. சண்முகர்,
10. தாரகாரி,
11. சேனாபதி,
12. பிரமசாத்தர்,
13. வள்ளி கல்யாண சுந்தரர்,
14. பாலசுவாமி,
15. கிரவுஞ்ச பேதனர்,
16. சிகிவாகனர் எனப்படும்.


2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம்.

3. முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேலமரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.

4. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.
1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர்,
2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம்,
3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.

5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது. சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் இப்பள்ளம் ஏற்பட்டது.

6. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

7. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

8. ஈரோடு அருகே வெண்ணைமலை உள்ளது. அங்கு முருகன் யார் துணையும் இல்லாமல் தன்னந்தனியாகத் தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கிறார். வெண்ணெய் மலையை வலம் வருபவர்கள் கயிலையை வலம் வந்த பலனைப் பெறுவார்கள்.

9. முருகன் இறைபணிச் செல்வர்கள்:
1. அகத்தியர்
2. அருணகிரி நாதர்
3. ஒளவையார்
4. பாம்பன் சுவாமிகள்
5. அப்பர் அடிகளார்
6. நக்கீரர்
7. முசுகுந்தர்
8. சிகண்டி முனிவர்
9. குணசீலர்
10. முருகம்மையார்
11. திருமுருககிருபானந்த வாரியார்
12. வள்ளிமலைச் சுவாமிகள்
ஆகியோர் ஆவார்கள்.



10. திருப்பங்குன்றத்தில் பிரம்மகூபம் என்று அழைக்கப்படும் சந்தியாசிக் கிணற்று நீரே முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்காகப் பயன்படுகின்றது. இக்கிணற்று நீரில் குளிப்போருக்கு முருகனது அருளால் வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்களும் நீங்குகின்றன என்பது அதிசயமாகும்.

11. திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள் விழாவில் தங்கப் பல்லகக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான் முன்புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சி அளிப்பார்.

12. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

13. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.

14. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் “கார்த்திகேயன்” என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

15. குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும். இது காஞ்சீபுரத்தில் உள்ளது.

16. வேலன், கந்தன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணபவன், குமரன், சண்முகன், தாரகாரி, கிரௌஞ்ச போதனன், சக்திதரன், தேவசேனாபதி, சேனாதிபதி, காக வாகனம், மயில் வாகனன், சேனாளி, பிரம்ம சாஸ்தா, பாலசுவாமி, சிகிவாகனன், வள்ளி கல்யாண சுந்தரன், அக்கினி ஜாதன், சாரபேயன், குகன், பிரம்மசாரி, தேசிகன், காங்கேயன் ஆகியவை முருகனின் வேறு பெயர்களாகும்.

17. கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான “திருப்புகழ்” நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர்.

18. “முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்” என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.

19. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.

20. அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன் எனவும், சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன் எனவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.



21. முருகனைக் குறித்துக் “குமார சம்பவம்” என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மகாகவி காளிதாசர்.

22. யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.

23. கதம்ப அரசர்கள் கார்த்திகேயனை வழிபட்டனர்.

24. முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள் தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலியோர் இவர்கள் மீனாய் இருந்து, முருகன் அருளால் மீண்டும் மனிதர் ஆகினர்.

25. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

26. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.

27. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.

28. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.

29. முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும்.

30. கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும்.

31. தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.

32. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.

33. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

34. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

35. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

36. பொருள், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்கிற ஆறு குணங்களே ஆறுமுகம்.

37. பல்லவ மன்னர்கள் முருகனைப் பரம பாகவதன், பரம மகேஸ்வரன், பரம வைஷ்ணவன், பரம பிரம்மண்யன் என்று அழைத்தார்கள் என்று செப்பேடுகள் கூறுகின்றன.

38. எத்தனை துன்பம் எதிர் கொண்டு வந்தாலும் சரவணப் பொய்கையில் நீராடிய நொடிப் பொழுதிலேயே துன்பங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்று முருகன் கோயிலின் திருக்குளம் குறித்துத் தணிகையாற்றுப் படை கூறுகின்றது.

39. வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.

40. முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.



41. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.

42. முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.

43. பத்துமலை என்ற பெரியமலை மீது முருகன் உள்ளார். இந்த கோயில் (மலேசியா), கோலாலம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. தைப்பூசம் இங்கு விசேஷம்.





44. முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில் ஆகும். முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகையில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள் பாலிக்கிறார்.

45. சிறுவாபுரி சென்னை-நெல்லூர் வழியில் பொன்னேரிக்கு 20 கி.மீ. தூரமுள்ளது புதுமனை புகுவோர் முன்னர் இவ்வூரில் முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்தால் வீட்டில் சகல சவுபாக்கியங்களும் முருகனால் உண்டாகும்.

46. சிவகாசி அருகே 51 படிக்கட்டுகள் கொண்ட மலைமீது முருகன் கோவில் உள்ளது. 108 வைஷ்ணவத் திருப்பதிகளில் ஒன்று இது. இங்கு சிவன் கோவிலும் உண்டு. இந்த தலத்தின் பெயர் திருத்தங்கல்  ஆகும்.

47. தமிழ்நாட்டில் முதல் தங்கத்தேர் பழனி முருகன் கோவிலில் 1957-ல் இழுக்கப்பட்டது.

48. முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத்தாசலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இதனைக் கூறுவார்கள்.

49. கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார்.

50. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது.




51. கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது.

52. முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை திருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில் அமைந்துள்ள நெடியமலை ஆகும்.

53. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

54. கந்தனுக்குரிய விரதங்கள்:
1. வார விரதம்,
2. நட்சத்திர விரதம்,
3. திதி விரதம்.

55. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.

56. வேலும் மயிலும் இல்லாத வேலவன் ஆண்டார் குப்பத்தில் உள்ளார்.

57. முருகப் பெருமான் தோன்றிய இடம் சரவணப் பொய்கை.

58. வேடுபறி என்பது முருகப் பெருமான் வள்ளியைச் சிறை எடுத்ததைக் கொண்டாடும் விழாவாகும்.

59. பொன்னேரிக்கு அருகில் உள்ள பெரும்பேடு முருகன் கோவிலில் முருகன் 6 அடி உயரத்தில் உள்ளார். இங்கு தெய்வானை கிரீடத்துடனும் வள்ளிக் குறத்தி கொடையுடனும் காட்சி தருகிறார்கள். இப்படி வேறு எங்குமில்லை.

60. முருகப் பெருமானின் திருவடி பட்ட இடம் ஞானமலை ஆகும்.



60 தகவல்களும் சிறப்பாக இருந்திருக்கும் என்று நம்புகின்றோம். சில தகவல்கள் நமக்கு புதியது தான். இவற்றை நீங்கள் அறிவதோடு மட்டும் இன்றி உங்கள் சுற்றம்,நட்பு என்று சொல்லுங்கள். முருகன் அருள் முன்னின்று அனைவரையும் வழி நடத்தட்டும்.

- அடுத்த பதிவில் மீண்டும் சிந்திப்போம்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே... குரு பெயர்ச்சி சிறப்பு பதிவு

அன்பார்ந்த மெய்யன்பர்களே.

அனைவருக்கும் வணக்கம்.

இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி வருடம் ஐப்பசி 18 ஆம் நாள் 4.11.2019   நாள் மதியம் 1.09 க்கு விருச்சிகம்  ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்

வாக்கிய பஞ்சாங்கபடி (இதுதான் கோயில்களில் கடைபிடிக்கப்படுகிறது ) விகாரி வருடம் 29.10.2019  ஐப்பசி 11ஆம் நாள் விடியற்காலை 3.55க்கு விருச்சிகம்  ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்

கு என்றால் இருள் ரு என்றால் நீக்குவது ..நம் வாழ்வின் இருளை போக்கி வெளிச்சத்தை தரும் ஒப்பற்ற துணைவர்தான் குரு.அறியாமை இருளை போக்கும் அனைவரையும் குரு என்கிறோம் ஒன்றை தெளிவாக்குபவர் புரிய வைப்பவர் குரு.நம் வாழ்வின் வழிகாட்டியாக வருபவர் குரு

குரு பெயர்ச்சி பலன்கள், பரிகாரங்கள் என்று எங்கு பார்த்தாலும் அமோகமாக தெரிகின்றது. குரு பெயர்ச்சி பற்றி எந்த கவலையும் பட வேண்டாம்.குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள்.நம் குரு நம்மை எப்பவும் பார்த்து கொண்டே உள்ளார்.எனவே பயப்பட வேண்டாம். பல ஆலயங்களில் இரவு நேரத்தில் பரிகார யாகங்களும் பூசைகளும் நடைபெறுகின்றது.தயவு செய்து யாரும் அதில் பங்குகொள்ள வேண்டாம்.இது அபத்தமான செயல் ஆகும். இரவில் 9 மணிக்கு மேல் யாகம் செய்ய கூடாது என்பது சாத்திரம்.அதை மீறி சில ஆலயங்கள் வருமானம் பார்க்க இந்த மாதிரி செயல்களில் ஈடுபடுகின்றனர்.

குரு பெயர்ச்சி நாளில் குருவாய் என்ற சொல்லின் செல்வர் முருகப்பெருமான் பற்றி இங்கே அறிய உள்ளோம். மிகவும் நீண்ட நாட்களாக அகரம் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி பற்றி சொல்ல விழைந்தோம். ஆனால் அது இன்றைய நாளில் நடந்தேறுகிறது. காரியமின்றி காரியமில்லை என்பதற்கு இந்த பதிவும் ஒரு உதாரணம்.

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!





உருவாக, உருவமில்லாததாக, உள்ளதாக, இல்லாததாக, நறுமணமாக, மலராக, மணியாக, உலகின் மூலப்பொருளாக, உயிருக்கு உயிராக, வீடுபேறை அடைகின்ற விழியாக விளங்கும், என் முருகா, வந்து அருள் புரிவாய்.

அகாலங்களை தவிர்க்க, அகரம் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி தரிசனம் பெற வாருங்கள்.



தென்பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ள போச்சம்பள்ளி தாலுகாவில் உள்ள அகரம் என்ற ஊரில் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி அருள் பாலித்து வருகின்றார். இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோயில் ஆகும். இந்த கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது மிக மிக விசேஷம் ஆகும்.கோயிலில் முருகப் பெருமான் வள்ளி,தெய்வானையோடு காட்சி தருகின்றார்.சுமார் 5 அடி உயரத்தில் கிழக்கு நோக்கி முருகப் பெருமான் காட்சி தருவது இங்கே குறிப்பிடத்தக்க ஒன்றாகும். குருவை கண்டால் அனைத்தும் துன்பங்களும் சூரியனைக்  கண்ட பனி போல் விலகி விடும். அது போல் தான் அகரம் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி தரிசனம் பெற உள்ளோம்.

சரி.இந்த கோயிலின் சிறப்புகள் ஒவ்வொன்றாக காண்போமா?

அகரம் ஊருக்கு சென்று, தென்பெண்ணை ஆற்றில் குளித்து, ஓம் சுப்ரமண்யாய நமஹ என்று முருகப்பெருமானை அழைத்து, எவரொருவர் வழிபடுகின்றாரோ, அவருக்கு அகலா நிகழ்வுகள் மற்றும் அகால மரணம் எதுவும் நடைபெறா.

அகரம் ஊரில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக யாருக்கும் அகால மரணம் ஏற்படவில்லை. குறிப்பாக யாரும் பாம்பு தீண்டி இறக்கவில்லை.

இந்த தலம் சர்ப்ப தோஷ பரிகாரத்  தலம் ஆகும். பாம்பு தீண்டி யாராவது இங்கு வந்தால், தீண்டிய பாம்பின் விஷம் ஏறாது, மேலும் சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை அளித்து, முருகப் பெருமானிடம் வேண்ட, உடல் சுகம் பெறுவது .

இந்த தலத்தில் வரும் பாம்புகளுக்கு விஷம் இருக்காது என்பது திண்ணம்.

முன்னரே சொன்னது போல் இங்கு முருகப் பெருமான் தம்பதி சகிதமாக வள்ளி,தெய்வானையோடு காட்சி தருகின்றார். எனவே யோகம் வேண்டியும் போகம் வேண்டியும் இங்கே வழிபடலாம். இங்குள்ள தென்பெண்ணையாற்றில் குளித்து விட்டு, இங்குள்ள முருகப்பெருமானிடம் வேண்ட, ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் நீங்கப் பெறுவது உறுதி.

கல்யாணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும், புத்ர பாக்கியம் பெறவும் இங்கு வேண்டுவது உடனடி பலன் தரும்.

இங்கு ஞானம் வேண்டியும் வழிபடலாம் என்பது கூடுதல் சிறப்பு.

காட்சிப்பதிவுகளாக தல வரலாற்றை இங்கே தருகின்றோம்.









இனிவரும் பதிவுகளில் அகரம் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி தரிசனம் பெறுவோம்.

மீள்பதிவாக:-

நால்வரின் பாதையில்... திருப்புகழ் தலங்கள் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_23.html