"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, June 15, 2020

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4) - உங்கள் குரு யார் ?

அனைவருக்கும் அன்பு வணக்கம்.

வாழ்வாங்கு வாழ என்ற  தொடர் பதிவு கேள்வி-பதில் வடிவில் நாம் தொடர்வது அனைவரும் அறிந்ததே.சென்ற பதிவில் இரண்டு கேள்வி பதில் பதிவாக இருந்தது.காரணமும் நீயே..காரியமும் நீயே.அனுபவிப்பதே நாம் தான்? மனம் உள்ளது. அனைத்துமே அவனாக இருந்தாலும், மனத்தில் இருந்து எண்ணத்தை உருவாக்குவது நாம் தானே? அப்படி இருக்க நாம் தானே விளைவுகளை அனுபவிக்க வேண்டும்.இனிமேலாவது நம்முடைய சிக்கல்களுக்கு மற்றவரை குறை கூறாதீர்கள்.நாம் விரும்பியபடியே தான் இறைவன் நமக்கு கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். நமக்கு சரியாக அவரிடம் கேட்க தெரியவில்லை. சிற்சில மாற்றங்கள் நம்மிடம் செய்தால் தான்,நாம் சரியானவற்றை அவரிடம் கேட்க முடியும்.அடுத்து கோபியர்கள் பற்றி ஒரு விரசமான கேள்வி.

ஆனால் பதிலின் மூலம்,நாம் பற்பல செய்திகளை உணர்ந்து இருப்போம்.பதிவின் இறுதியில் முந்தைய தொடரின் பதிவுகள் கொடுத்துள்ளோம்.பதிவினை பார்க்காதவர்கள் ஒருமுறை சென்று படித்து பார்க்கவும். ஏற்கனவே படித்து இருந்தாலும்,மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கவும்.அப்போது தான் நாம் சில மாற்றங்களை நம்முள் கொண்டு வர இயலும்.சரி.இந்த வார தொடருக்குள் செல்வோமா?

சரி..இந்த வாரக் கேள்விக்கு செல்வோமா?

கேள்வி - உங்கள் குரு யார் ? அறிமுகப்படுத்தினால் மற்றவர்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும் அல்லவா ? உங்கள் ஆரம்ப கட்ட தியான அனுபவத்தைச் சொல்லுங்களேன் !! 



இராம் மனோகர் - எனக்கு குரு திருக்கடையூர் அபிராமி அம்மையும், சீர்காழி கோவிந்த ராஜன் அவர்களும்தான். எனக்கும் தியானம் கற்றுக் கொள்ள விருப்பம் எழுந்தது. ஆனால், ஏதோ ஒரு பயம் இருந்தது. அதற்கு முன்னால் நான் தியானம் செய்ததும் கிடையாது. எனவே சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் அபிராமி அந்தாதியை டேப் ரிக்கார்டரில் போட்டு விட்டு கண்ணை மூடி அமர்ந்து கொண்டு அவரோடு சேர்ந்து பாடுவேன். எழுந்திருக்கவே மாட்டேன். அப்போது CDயெல்லாம் கிடையாது. இரண்டு கேசட். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பாடும். ஒரே டேப்ரிக்கார்டரில் இரண்டு கேசட்டையும் போட்டு விட்டு அமர்ந்தால் போதும். ஒன்று முடிந்ததும் அடுத்தது தானாகவே பாடும். வேறு எதிலும் என் கவனத்தைச் செலுத்த மாட்டேன். அது முடிந்த பிறகு பிரார்த்தனை செய்து விட்டுதான் எழும்புவேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகி விடும். குடந்தையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் கண்காணிப்பாளர் வேலையில் இருந்தேன். வேலை முடிந்த தும் குளித்து விட்டு தினமும் அமர்ந்து விடுவேன். 



இந்த நிலையில் என் நண்பர் ஒருவர் தியானம் கற்றுத் தருகிறார்கள் என்று சொல்லி வேதாத்ரி மகரிஷியின் மனவளக்கலை மன்றத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு எல்லோரையும் அமர வைத்து ஒரு சில உபதேசங்களைச் சொல்லி விட்டு, தீட்சை கொடுக்கப் போகிறோம் கண்களை மூடிக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள் என்றார்கள். நானும் அமர்ந்திருந்தேன். எல்லோரும் புருவ மத்தியில் மனதை வைத்தபடி இருக்கச் சொன்னார்கள். ஒரு குருவானவர் வேதாத்திரி மகரிஷியின் பெயரால் ஒவ்வொருவராக தீட்சை வழங்கிக் கொண்டு வந்தார். என்முறை வந்தது. என் புருவ மத்தியில் விரலை மெதுவாக வைத்தவர் டக்கென்று கைகளை இழுத்துக் கொண்டார். நான் கண் விழித்து அவரைப் பார்த்தேன். அவர், நீங்கள் இதற்கு முன் வேறு எங்காவது தியானம் கற்றுக் கொண்டிருக்கிறீர்களா ? என்று கேட்டார். நான் இல்லை என்று தலையாட்டினேன். மந்திரங்கள் ஏதாவது உச்சரிப்பீர்களா ? என்று கேட்டார். ஆம் நான் அபிராமி அந்தாதியை முழுவதும் பாடிக் கொண்டு அமர்ந்திருப்பேன் என்றேன். அவர், உங்கள் ஆக்கினை ஏற்கனவே நல்ல துடிப்பாக இருக்கிறது. எங்களுக்குக் கூட இவ்வளவு அழுத்தமான துடிப்பு இருக்காது என்றார். அந்த வாலையான அபிராமியே நமக்கு வாசலை ஏற்கனவே திறந்து வைத்திருக்கிறாள். நாம் அது தெரியாமலேயே இருந்து கொண்டிருக்கிறோம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். 

மற்ற பயிற்சிகளையெல்லாம் பத்து தினங்களாக, தினமும் ஒன்றரை மணி நேரத்தில் கற்றுக் கொண்டேன். அதில் ஒன்பது மைய தவம் என்று ஒன்று உண்டு. மிகவும் ஆனந்தமாக இருக்கும். தியானத்தை முடித்துவிட்டு எழுந்தால் கிடைக்கும் ஒரு நிறைவை வார்த்தைகளால் சொல்லி விட முடியாது. முதலில் மூலாதாரம்,அடுத்து சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, அக்கினை, துரியம், துரியாதீதம், சந்திர மணடலம், சூரிய மண்டலம், சக்தி களம், சிவ களம் வரை போய் பிறகு வந்த வழியே மெதுவாக இறங்கி வர வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் ஒரு 3 நிமிடங்கள் மனதை வைத்து தவம் செய்ய வேண்டும்.

இப்போது நான் சொல்லப் போவதும் அவ்வாறான ஒரு தியானம் தான். இதை குண்டலினித் தியானம், சக்கரத்தியானம் என்பார்கள். வேதாத்ரியத்தில் இதை துரிய தவம் என்பார்கள். உடலில் அந்தந்த சக்கரங்கள் உள்ள பகுதியில் மனதை நிறுத்தி, மெதுவாக சுவாசத்தை செய்து தியானிக்க வேண்டும். இந்த தியானத்தின் மூலம் சக்கரங்கள் நல்ல முறையில் இயங்கும் போது கிரகங்கள் மூலம் நாம் நல்ல ஆற்றல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். 

மூலாதாரம் சனி கிரகத்தின் ஆற்றலையும், சுவாதிஷ்டானம்- குரு, மணிபூரகம் - செவ்வாய், அனாகதம் - சூரியன், விசுத்தி - சுக்ரன், ஆக்ஞை - புதன், சகஸ்ராரம் - சந்திரன் என கிரகங்களின் ஆற்றலைப் பெற்று சிறப்பாக இயங்கி சித்திகளை அடைய துணை நிற்கும். ஒவ்வொரு சக்கரத்தையும் குண்டலினி அடைகையில் ஒவ்வொரு விதமான சித்திகளும் கைவரப் பெறும். முதலில் மூலாதாரத்தில் மனதை நிறுத்தி, அதாவது ஆசனவாய்க்கும், பிறப்புறுப்புக்கும் இடையில் இருக்கிறது. முதுகுத்தண்டின் அடிப் பகுதியில் மனதை நிறுத்தி தியானித்தால்  இந்தச் சக்கரம் நல்ல முறையில் இயங்கும். அதில் தியானிக்கும் போது ஏற்படும் உஷ்ணத்தால் குண்டலினி மேல் எழும்பும். பிராணாயாமம் போன்ற பயிற்சியில் உள்ளவர்களுக்கு இது மிக எளிது. மூலாதாரத்தில் மனதை நிறுத்தி லங் என்ற மந்திரத்தை ஒரு மனதுடன் உச்சரித்து வந்தால் மனம் அங்கு நிலைக்க உதவியாக இருக்கும். ஆரம்ப நிலை சாதகர்கள் மந்திரத்தை உச்சரிக்கலாம். அனுபவம் உள்ளவர்கள் மனதைச் சக்கரங்களில் நிறுத்தி தியானித்தால் போதும்.



அடுத்தது சுவாதிஷ்டானம். இது அடி வயிற்றுப் பகுதியில் மனதை நிறுத்தி தியானிக்க வேண்டும். இதற்கான மந்திரம் வங். அடுத்தது மணிபூரகம் தொப்புள் பகுதியில் மனதை நிறுத்தி தியானிக்க வேண்டும். இதற்கான மந்திரம் ரங். அடுத்தது அனாஹதம். இதற்கு நம் இதயத்தில் மனதை நிறுத்தி தியானிக்க வேண்டும். இதற்கான மந்திரம் யாங். அடுத்து விசுத்தி. இதற்கு தொண்டைப் பகுதியில் மனதை நிறுத்தி தியானிக்க வேண்டும். இதற்கான மந்திரம் ஹாங். அதற்கு அடுத்தது ஆக்ஞா. இதற்கு புருவ மத்தியில் மூக்கின் மேல் பகுதியில் மனதை வைத்து தியானிக்க வேண்டும். இதற்கான மந்திரம் ஓம். அதற்கும் மேல் உச்சியாகிய சகஸராரம். தலையின் உச்சிப் பகுதியில் மனதை நிறுத்தி தியானிக்க வேண்டும். இதற்கான மந்திரமும் ஓம்தான். ஒவ்வொரு சக்கரத்திற்கும் கால்மணி நேரம் தியானிக்கலாம். பயிற்சி வலுவடைந்து விட்டால் நேரம் அதிகமாவது உங்களுக்கே தெரியாது. விடா முயற்சியுடனும், ஒரே சிந்தனையுடனும் செய்து வரவர என்றாவது ஒருநாள் குண்டலினி கிளம்பிவிடும். ஒவ்வொரு ஆதாரமாக நுழைந்து அது மேலே செல்வதை சாதகர் உணரலாம். இறுதியில் சகஸ்ராரத்தில் நுழைந்தவுடன் அமுதபானம் பருகித் திளைக்கலாம். அதுவே சாதனை. அதுவே கைலாயம். அங்கே சிவசக்தி ஐக்கியத்தைக் காணலாம். சிவனருள் செல்வனாகலாம். சக்கரங்களின் சீரான இயக்கத்தால் சாதகர் உடல்நலம், மனவளம் பெற்று தேஜஸுடன் திகழுவார்.

வாழ்க வையகம்!வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!


-  மற்றொரு கேள்வியில் மீண்டும் சிந்திப்போம்.

முந்தைய பதிவிற்கு:-

வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2020/05/3.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (2) - https://tut-temples.blogspot.com/2020/04/2.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - https://tut-temples.blogspot.com/2020/03/1.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_11.html

No comments:

Post a Comment