"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, June 1, 2019

திருநாங்கூர் 12 சிவபெருமானின் ரிஷப சேவை திருவிழா அழைப்பிதழ்

 அனைவருக்கும் வணக்கம்.

அம்மையையும் அப்பனையும் தனித்தனியாய் தரிசிப்பது சுலபம். அம்மையப்பனை அதுவும் நந்திதேவர்மேல் வலம் வருவதை தரிசிப்பது அபூர்வம். அப்படி ரிஷப வாகனத்தில் வரும் அம்மையப்பனை தரிசித்தால் ஈரேழு ஜென்மத்து பாவம் நீங்கும். ஒரு ரிஷப வாகன சேவையை தரிசித்தாலே இத்தனை பலனென்றால், ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பனிரெண்டு  சிவ தம்பதியரின் ரிஷப சேவையினை கண்டு களித்தால்?! மறுபிறப்பில்லா முக்தி கிடைக்கும் என்பது உறுதி. சரி, ஒரே நேரத்தில் 12 ரிஷப வாகனத்தில் அம்மையப்பன் எழுந்தருளும் இடம் எதுன்னு தெரிஞ்சுக்க பதிவுக்குள் போகலாம். வாங்க! 





நாகை மாவட்டம், சீர்காழிக்கு அருகே உள்ள திருநாங்கூரில் மதங்கீஸ்வரர் சுவாமி கோயிலில் 13.6.18 இரவு 8 மணியளவில் 12 சிவபெருமான்களின் ரிஷப சேவை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. சீர்காழியிலிருந்து தெற்கே 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மதங்கீஸ்வரர் ஆலயம். இது மதங்க முனிவர் பூஜித்து அருள் பெற்ற ஸ்தலம். ஒவ்வோர் ஆண்டும் திருநாங்கூரில் உள்ள திருமணிமாடக் கோயில் எனப்படும் நாராயணப் பெருமாள் கோயிலில் `11 கருட சேவை' நடைபெறும். அது போல இந்தக் கோயிலில்  சிவாலயங்களின் சார்பாக `12 ரிஷப சேவை' திருவிழா நடைபெற்று வந்தது. சில காரணங்களால் கடந்த 100 வருடங்களாகத் தடைப்பட்டு வந்த இந்த வைபவம் மீண்டும் 2016-ல் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து மூன்றாவது வருடமாக இந்த ரிஷப சேவை 13.6.18 அன்று   நடைபெற்றது. அதனை இங்கே அறியத் தருகின்றோம்.


ஸ்ரீ சுந்தரரின் திருவாக்கின்

தேங்கூரும் திருச்சிற்றம்பலமும்
சிராப்பள்ளி பாங்கூர் எங்கள் பிரான் உறையும்
கடம்பந்துறை பூங்கூரும் பரமன் பரஞ்சோதி
பயிலும் ஊர் நாங்கூர் நாட்டு நாங்கூர்
நறையூர் நாட்டு நறையூரே.

சரி..வாருங்கள்..இன்னும் உள் செல்வோம்.



 முன்னொரு  பிரளய காலத்தில் பிரம்மதேவர், சிவபெருமானை நோக்கி மதங்கம் எனும் யானை வடிவில் இருந்து தியானித்தார். அப்போது பிரம்மனின் மனதில் இருந்து அவரது புத்திரனாய் மதங்க முனிவர் தோன்றினார். மதங்க முனிவர் தவம் செய்ய வேண்டி தகுந்த இடம் தேடினார். அது பிரளய காலமென்பதால் பாரெங்கும் வெள்ளக்காடு. தவமியற்ற இடம் கிடைக்கவில்லை. அப்போது நாரத முனிவர், மதங்க முனிவரின் முன்தோன்றி, ‘மதங்கா! பூவுலகில் அனைத்து உயிர்களும் ஒடுக்கம் அடையும் திருவெண்காடு, பிரளயத்திலும் அழியாமல் இருக்கு. அங்கு சென்று தவமியற்று' எனக்கூறி மறைந்தார். 


ஊழிக்காலத்திலும் அழியாத அத்தலத்தைக் கண்ட மதங்க முனிவர் அங்கேயே தவமியற்றினார். அப்போது மகாவிஷ்ணு மோகினி வடிவில் தோன்றி, மதங்க முனிவருக்கு ஆசி வழங்க, விநாயகப்பெருமான் மதங்க முனிவருக்கு அஷ்டமா சித்திகளையும் அருளினார். இந்த மோகினி வடிவ பெருமாள் ‘நாராயணி’ எனும் திருநாமத்திலும், விநாயகர் ‘மதங்க விநாயகர்’ எனும் பெயரிலும் திருநாங்கூர் மதங்கீஸ்வரர் திருத்தலத்தில் எழுந்தருளி அருள்கின்றனர். உடனே பார்வதி தேவி ‘மதங்க முனிவரே! எம் வடிவம் கொண்ட மந்திரிணியான சியாமளா தேவி உமக்கு மகளாக வந்து பிறப்பாள்' என அருளி மறைந்தாள். அதன்படி, ஆடிமாதம் வெள்ளிக்கிழமை அதிகாலை மதங்க தீர்த்தம் எனும் பொய்கையில் நீலோத்பல மலர் மேல் சியாமளாதேவி குழந்தையாக வந்துதித்தாள். அப்போது பொய்கைக்கு நீராடவந்த மதங்கர் - சித்திமதி தம்பதியினர், அக்குழந்தையை எடுத்து தங்கள் மகளாக வளர்த்து வந்தனர்.  பின்னாளில் சிவபெருமானுக்கு மணம் முடித்து வைத்தனர். 

இந்த மாதங்கிதேவியே சியாமளை, மந்திரிணி, ராஜசியாமளா, ராஜமாதங்கி எனவும் அழைக்கப்படுகிறாள். லலிதை ஆதிபராசக்தியின் கரும்பு வில்லில் இருந்து தோன்றி, தம் அடியவர்களுக்கு கல்வி, நுண்ணறிவு, சொல்லாற்றல், இசையறிவு, வசீகரிக்கும் சக்தி, திரண்ட செல்வம் என அள்ளித்தருபவள் இந்த ராஜமாதங்கி. இந்த ராஜமாதங்கி அருளும் இடம் சீர்காழி மற்றும் திருவெண்காடு அருகிலுள்ள திருநாங்கூர் திருத்தலம் ஆகும்.

மாதங்கிதேவி வளர்ந்து தக்க பருவம் வந்ததும் சிவப்பெருமானுக்கு மணமுடித்து வைத்தார் மதங்க முனிவர். பின்னர் ரிஷபத்தில் சக்தி மாதங்கியுடன் சிவபெருமான் எழுந்தருளி, திருக்கல்யாண சேவை நல்கி அருளினார். அந்த ரிஷப சேவை திருக்காட்சியின் தொடர்ச்சியாய் இன்றுவரை திருநாங்கூர் ராஜமாதங்கி சமேத மதங்கீஸ்வரர் திருக்கோவிலில் ‘ரிஷப சேவை திருக்காட்சி' நடைபெற்று வருகிறது.

ஈசனின் ஒரு ரிஷபாரூட திருக்காட்சி கண்டாலே பெரும் பாக்கியம். ஆனால் இங்கு ஒரே தலத்தில் பன்னிரு திருக்கோவில்களில் உள்ள ஈசன்களும் அம்மை உமையவளுடன் பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி அருள்கிறார். இதனைக் காண்பது வெகு புண்ணியம். ஈரேழு ஜென்மத்து பாவங்கள் விலகுமென்பது ஐதீகம்.

இதோ. நம் தள உறவுகள் அனைவருக்காக நமக்குக் கிடைத்த தரிசனத்தை இங்கே பகிர்கின்றோம்.

இந்த பனிரெண்டு ரிஷபாரூட சேவை  திருநாஞ்கூர் ராஜமாதங்கி சமேத மதங்கீஸ்வரர் ஆலயத்தில் 13/6/2018 அன்று  நடைபெற்றது. அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள் பன்னிரு திருக்கோவில் சிவபெருமானின் உற்சவ திருமேனிகளுக்கும், ஒரேநேரத்தில் திருக்கல்யாணம் செய்யப்படும். பின்னர் சிவசக்தி தம்பதிகள் ரிஷபாரூடத்தில்  மக்களுக்கு திருக்காட்சி தரும் வைபவம் நடைபெறும். பின்பு அன்று இரவு 9.30 மணிக்கு மேல் பன்னிரு ரிஷபாரூட மூர்த்திகளும், திருமுறை பாராயணங்கள் ஒலிக்க, மங்கல வாத்தியங்கள் முழங்க, திருவீதியுலா வருவார்கள். இந்த பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி காண்பதன் மூலம் நம் பாவ வினைகள் அகன்று ஒளிமயமான நல் வாழ்க்கை அமையும். இருள் நீங்கி ஒளி கிடைத்திட,  திருநாங்கூர் 12 சிவபெருமானின் ரிஷப சேவை திருவிழா  காட்சிகள் பகிர்கின்றோம்.


விழாவினை முன்னிட்டு நாங்கூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலிருந்து ஆரண்யேஸ்வரர், யோகநாத சுவாமி, சொர்ணபுரீஸ்வரர் , அமீர்தபுரீஸ்வரர், நாக நாத சுவாமி, நம்புவார் கன்ய சுவாமி, சுந்தரேசுவர சுவாமி, ஐராவதேஸ்வரர், கலிங்கமேஸ்வர சுவாமி, ஸ்ரீநயன வரதேஸ்வரர் சுவாமி ஆகியோர் தங்களின் அம்பாள்களுடன் மதங்கீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளினர். பின்னர் அனைத்து மூர்த்திகளுக்கும் மகா தீபாராதனை செய்யப்பட்டது. 8 மணியளவில் சிவபெருமான்- அம்பாள் அலங்கரிக்கப்பட்டு ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். பின்பு மங்கல வாத்தியங்கள் முழங்க ஒரே நேரத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இரவு 9.30 மணியளவில் திருமுறை பாராயணங்கள் ஒலிக்க சிவபெருமான்களின் ரிஷப வாகன வீதியுலா நடைபெற்றது.


அடுத்த ஆண்டு நேரில் சென்று தரிசிக்க குருவிடம் விண்ணப்பம் வைக்கின்றோம். நேரிடையாக சென்று தாம் பெற்ற அருளை, நம் அனைவருக்கும் கிடைக்க செய்த, நம் அன்பர் திரு.குமார் ஐயா அவர்களுக்கு நம் தளம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


இடைமரு துறையும் எந்தாய் போற்றி
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஆரூ ரமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவை யாறா போற்றி
அண்ணா மலையெம் அண்ணா போற்றி

கண்ணா ரமுதக் கடலே போற்றி
ஏகம் பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு வானாய் போற்றி
பாராயத்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

 மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி
குற்றா லத்தெம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி
பாங்கார் பழனத் தழகா போற்றி

கடம்பூர் மேவிய விடங்கா போற்றி!
திருநாங்கூர் தேவனே போற்றி 


இத்தகு சிறப்புமிக்க  திருநாங்கூர் 12 சிவபெருமானின் ரிஷப சேவை திருவிழா இந்த ஆண்டு வருகின்ற திங்கட்கிழமை 03/06/2019 அன்று நடைபெற உள்ளது. அழைப்பிதழை இணைத்துள்ளோம்.வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு இறையருள் பெறும்படி வேண்டுகின்றோம்.


மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

 அற்றார் அழி பசி தீர்த்தல் - அன்னம்பாலிப்பு சிறப்புப் பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_27.html



1 comment:

  1. Thank you Rakesh. I have gone there continuously for 3 years. But this year I am doubtful.

    ReplyDelete