"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, October 22, 2024

நலம் தரும் பதிகங்கள் - திருநீற்றுப் பதிகம்!

                                                                 இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் நாம் காண இருப்பது நலம் தரும் பதிகங்கள் வரிசையில் திருநீற்றுப் பதிகம் ஆகும். திருநீற்றுப் பதிகம் என்பது பாண்டிய மன்னன் கூன் பாண்டியனின் வெப்ப நோயை நீக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும்.இதனால் மன்னன் நோய் நீங்கி நலம் பெற்றான்.இன்றும் காய்ச்சல் போன்ற வெப்பு நோய்களுக்கு திருநீற்றுப் பதிகம் பாடலைப் பாடி திருநீறு பூசிக்கொள்ளும் பழக்கம் மக்களிடையே உள்ளது.

திருநீறு பற்றி பேசுவது என்றால் இந்த ஒரு பதிவு போதாது. அதனை திருஞானசம்பந்தர் வாய்மொழியால் காண உள்ளோம்.


உஷ்ணம் அதிகரிப்பதால் வரும் வயிற்று நோய், கொப்புளம் உள்ளிட்ட வெப்பநோய்களும், தொற்று நோய்களான காய்ச்சல் முதலியனவும் குணமாகச் சொல்ல வேண்டியது திருநீற்றுப் பதிகம். அதே சமயம், உயர்வான அந்த திருநீற்றுப் பதிகத்தைச் சொல்வதால் வாட்டும் பிணி எதுவானாலும் நிச்சயம் நீங்கும்.

முறையாக விபூதி தரித்து, பூரண நம்பிக்கையுடன் தினமும் இதைச் சொல்லிவந்தால் முழுமையான ஆரோக்யம் கிட்டும். பிணியால் பாதிக்கப் பட்டவருக்காக அவரது உறவினர்களும் சொல்லலாம். சிறிது விபூதியை சுவாமி முன் வைத்து, இந்தப் பதிகத்தை ஓதியபின் அந்த விபூதியை, பாதிக்கப்பட்டவர்க்குப் பூசிவிடுவதாலும் பலன் கிடைக்கும்.













திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப்  பதிகம் - தீராத நோய்கள் தீர ஓத வேண்டிய பதிகம் 

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்தில்  உள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே!

 

வேதத்தில்  உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு

போதம்  தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு

ஓதத் தகுவது நீறு உண்மையில்  உள்ளது நீறு

சீதப்புனல் வயல் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே!

 

முத்தி தருவது நீறு முனிவர்  அணிவது நீறு

சத்தியம்  ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு

பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு

சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே!

 

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு

பேணி அணிபவர்க்கு  எல்லாம் பெருமை கொடுப்பது நீறு

மாணம்  தகைவது நீறு மதியைத் தருவது நீறு

சேணம்  தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே!

 

பூச இனியது நீறு புண்ணியம்  ஆவது நீறு

பேச இனியது நீறு பெருந் தவத்தோர்களுக்கு  எல்லாம்

ஆசை கெடுப்பது நீறு அந்தம்அது ஆவது நீறு

தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே!

 

அருத்தமதாவது நீறு அவலம் அறுப்பது நீறு

வருத்தம்  தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு

பொருத்தம்  அது ஆவது நீறு புண்ணியர் பூசும்வெண் நீறு

திருத் தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே!

 

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு

பயிலப்படுவது நீறு பாக்கியம்  ஆவது நீறு

துயிலைத் தடுப்பது நீறு சுத்தம்அது ஆவது நீறு

அயிலைப் பொலிதரு சூலத்து  ஆலவாயான் திருநீறே!

 

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு

பராவணம் ஆவது  நீறு பாவம்  அறுப்பது நீறு

தராவணம்  ஆவது நீறு தத்துவம்  ஆவது நீறு

அரா அணங்கும்  திருமேனி ஆலவாயான்திருநீறே!

 

மாலொடு   அயன்  அறியாத  வண்ணமும்  உள்ளது நீறு

மேல் உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு

ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம்  தருவது நீறு

ஆலம்அது  உண்ட மிடற்று  எம் ஆலவாயான் திருநீறே!

 

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும்கூடக் 

கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு

எண் திசைப் பட்ட பொருளார் ஏத்தும்  தகையது நீறு

அண்டத்தவர் பணிந்து  ஏத்தும் ஆலவாயான் திருநீறே!

 

ஆற்றல் அடல்விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்

போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்

தேற்றித் தென்னன் உடல் உற்ற  தீப்பிணியாயின தீரச்

சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே!


திருச்சிற்றம்பலம்!  திருச்சிற்றம்பலம்!! திருச்சிற்றம்பலம்!!!



தென்னாடுடைய சிவனே போற்றி!

      எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
 
       அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

கண்ணாரமுதக் கடலே போற்றி.
 
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
 
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
 
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
 
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
 
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
 
சீரார் திருவையாறா போற்றி
 
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
 
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
 
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
 
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
 
குவளைக் கண்ணி கூறன் காண்க 

அவளுந் தானும் உடனே காண்க
 
காவாய் கனகத் திரளே போற்றி
 
கயிலை மலையானே போற்றி போற்றி

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

மீள்பதிவாக:-

 நலம் தரும் பதிகங்கள் - திருநீலகண்டப் பதிகம் - https://tutthamizhthirumurai.blogspot.com/2021/12/blog-post.html

நால்வர் பொற்றாள் எம் உயிர்த்துணையே… - https://tutthamizhthirumurai.blogspot.com/2021/11/blog-post_30.html

அகத்தியர் தேவாரத் திரட்டு அனுதினமும் பாராயணம் செய்வோம்! - https://tutthamizhthirumurai.blogspot.com/2021/11/blog-post_29.html

 நலம் தரும் பதிகங்கள் - https://tutthamizhthirumurai.blogspot.com/2021/11/blog-post_27.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tutthamizhthirumurai.blogspot.com/2021/11/7-1.html

தித்திக்கும் திருமுறை பாராயணம் தினமும் செய்வோம்! - https://tutthamizhthirumurai.blogspot.com/2021/11/blog-post.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

No comments:

Post a Comment