"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, November 27, 2020

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! அரோகரா!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம்மை எப்பொழுதும் முன்னின்று நடத்தும்  முருகப் பெருமான் அருளால் கந்த ஷஷ்டி விழா சூரசம்ஹார நிகழ்வு கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் சிறப்பாக நடைபெற்றது. அடுத்து திருக்கார்த்திகை தீப விழா வருகின்றது.  ஒவ்வொரு விழாவும் அடுத்தடுத்து வருவது கண்டு சலிப்படைய வேண்டாம். திருவிழாக்கள் அன்பின் வெளிப்பாடு என்று பார்க்கும் போது அடுத்தடுத்து வருவது சரி தான். சென்ற ஆண்டில் நம் தளம் சார்பில் 30.11.2019 அன்று மகேஸ்வர பூஜை செய்தோம். இந்த ஆண்டில் தொற்றுக்கிருமி கட்டுப்பாட்டால் இன்னும் நாம் திருஅண்ணாமலை தரிசனம் பெறவில்லை. ஆனால் டிசம்பர் மாதம் கிரிவலம் மற்றும் மகேஸ்வர பூஜைக்கு நம் குருவிடம் வேண்டியுள்ளோம். 


நமது புண்ணிய பாரத தேசத்தில் - எண்ணற்ற தெய்வங்களுக்கு ஆயிரக்கணக்கான ஆலயங்கள் உள்ளது. பல ஆலயங்கள் வனங்களில், நதியோரம், கடலோரம், ஏரிக்கரை மீது, மலைகள், குன்றுகள் மீதும், மலை அடிவாரம் என்று பல இடங்களிலும், புராதன சிறப்புகளுடன் அமைந்துள்ளன.அப்படி அமைந்துள்ள ஆலயங்களில் நமது தமிழகத்தில் பல ஆலயங்கள் புகழும், மகிமையும் பெற்று அருள்கின்றன. இவற்றில் பாடல் பெற்றதும், பஞ்ச பூத தலங்களில் ஒன்று என அக்னி தலமாக போற்றப்படுவதும் திருஅண்ணாமலை ஆகும். நம் தளத்தில் சிறிய அளவில் திருஅண்ணாமலை பற்றி தொட்டுக் காட்டியுள்ளோம். கிரிவலம் பற்றியும் சிறிய அளவிலே பதிவுகள் உள்ளது. இந்த தலம் மூர்த்தி,தலம் ,தீர்த்தம் என்றளவில் பெருமை உடையது. ஏன் இங்கு கிரிவலம் பிரசித்தம்..அந்த அண்ணாமலையார் இங்கே மலை ரூபத்தில் அல்லவா காட்சி தருகின்றார். சிவனாகநினைத்தால் அவர் சிவனாக இருப்பார். மலையாக நினைத்தால் அவர் அங்கே மலையாக இருப்பார். பார்ப்பவரின் கண்களுக்குத் தான் இவை புலப்படும். கிரிவலம் முடித்து கண்ணார் அமுதக் கடலை அன்னையுடன் காண ஒன்பது ராஜ கோபுரங்களுடன், ஆறு பிரகாரங்கள் அங்கே உள.

திருவாரூரில் பிறந்தால் முக்தி 
காசியில் இறந்தால் முக்தி 
சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி 
திருஅண்ணாமலையை நினைத்தாலே முக்தி 

என்று நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலையை நாம் கண்ணால் கண்டு, மனத்தால் நடந்து, கிடந்து அருள் பெற வேண்டும். நம் மானிடப் பிறப்பின் நிலை அறிய கிரிவலம் ஒன்றே மாமருந்து என்பதில் துளி அளவும் ஐயமில்லை. இது மட்டுமா? பகவான் ரமணர், சேஷாத்திரி.விசிறி ஸ்வாமிகள் என அருள் ததும்பும் மலையாக திருஅண்ணாமலை இருக்கின்றது.

கிரிவலப் பாதையில் இருபுறமும் பலவிதமான மடங்களும், ஆலயங்களும், அன்னதான அருட்கூடங்களும்,சித்தர்களின் மகான்களின் ஆசிரமங்களும் உள்ளன. உதாரணமாக ரமணாஸ்ரமம், சேஷாத்திரி ஆலயம், விசிறி சுவாமிகள்  ஆசிரமம் என்று குறிப்பாக சொல்லலாம். இன்றைய காலகட்டத்தில் மழைக்கு முன் தோன்றும் காளான்களாக புதுப்புது ஆலயங்கள், மடங்கள் உருவாக்கி வருகின்றது. இது போன்ற புது மடங்கள்,ஆலயங்களின் சேவை கண்டு உங்கள் ஆன்மிகப்பணியை அவர்களோடு இயைந்து செய்யவும்.

இங்கு நம்பிக்கையுடன் கிரிவலம் வந்தால் நம் பிறவிகடன்கள் தீரும் என்பது உறுதி. கிரிவலத்துடன் அஷ்ட லிங்க தரிசனம், நாம் ஏற்கனவே சொல்வது போல் ரமணாஸ்ரமம், சேஷாத்திரி ஆலயம், விசிறி சுவாமிகள்  ஆசிரமம், வள்ளலார், ஸ்ரீ ராகவேந்திரர் நேர் அண்ணாமலை, ஆதி அண்ணாமலை, மாணிக்கவாசகர் கோயில், இடுக்குப் பிள்ளையார், பஞ்சமுக தரிசனம் என ஒரு நாளில் அடங்கா தித்திக்கும் தரிசனம் நமக்கு கிடைக்கும்.

கிரிவலம் மட்டுமா இங்கு விசேடம். இங்கு கார்த்திகை தீபமும் விசேடம் தான்.ஏற்கனவே சொன்னது போல் ஆன்மிக பூமியன்றோ? கார்த்திகை வழிபாடு பற்றி நமக்கு தெரிந்த சில செய்திகளை இங்கே பகிர விரும்புகின்றோம்.

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு பனையோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பனை"க்கு  அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.

கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர்.

    குமராலய தீபம்:முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள்.
    விஷ்ணுவாலய தீபம்: விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள்.
    சர்வாலய தீபம்:ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி

கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது. இதில் பத்து நாட்கள் உற்சவர்கள் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்து சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது.

சிவன் காத்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசைசெய்வர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும்.

பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர்.

மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இம்மலை 2,668 அடி உயரமானதாகும். மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீசுவரர் உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

இனி தித்திக்கும் திருஅண்ணாமலை தரிசனம் காண இருக்கின்றோம்.


அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2020 

மூன்றாம் நாள் இரவு பஞ்சமூர்த்திகள் அலங்காரம்  22..11..2020. ஓம் நமசிவாய வாழ்க








அடுத்து நான்காம் நாள் 23.11.2020 தரிசனம் காண்போமா?









அடுத்து ஐந்தாம் நாள்  அலங்காரம் காண திருஅண்ணாமலை செல்ல இருக்கின்றோம்.







25,11,2020 அன்று திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் திருவிழாவில்  பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா காண அனைவரும் தயாராக  இருக்கும்படி வேண்டுகின்றோம்.









அடுத்து எட்டாம் நாள் ஐந்தாம் பிரகாரம் வீதியுலா தரிசனம் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.












நம் அன்பில் கலந்த திருஅண்ணாமலையார் தரிசனம் இந்த ஆண்டில் அனைவரும் பெற்றிட வேண்டி, குருவிடம் பிரார்த்திக்கின்றோம்.

மீண்டும் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

தீப மங்கள ஜோதி நமோ நம... - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_0.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(5) - https://tut-temples.blogspot.com/2019/12/5.html

தெய்வத்தின் குரல் வழியே கார்த்திகை தீபம் (4) - https://tut-temples.blogspot.com/2019/12/4.html

தீபங்கள் பேசும் - கார்த்திகை தீப தொடர்பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/12/3.html

மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2) - https://tut-temples.blogspot.com/2019/12/2.html

கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1) - https://tut-temples.blogspot.com/2019/12/1.html

Saturday, November 21, 2020

மருத மலையோனே!...மருதமலை மாமணியே...!!

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் சென்ற ஆண்டில் நாம் பெற்ற கந்த ஷஷ்டி விரத மகிமையால் மருதமலை தரிசனம் பெற்றோம். அந்த தரிசனத்தை இங்கே பகிர விரும்புகின்றோம். ஆம். சென்ற ஆண்டு ஷஷ்டி விரத சூரசம்ஹாரம் முருகனருளால் சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் நடைபெற்றது. சூரசம்ஹாரத்தில் நாமும் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்து. அந்த நிகழ்வில் மனம் முழுதும் முருக சிந்தனையில் ஆழ்ந்தது. வாய் முழுதும் சரண கோஷத்தில் திளைத்தது. அன்றைய தினம் முருகன் அருள் பெற்ற பிறகு, கோயம்புத்தூர் செல்ல வாய்ப்பு கிடைத்தது. அதுவும் மருதமலை செல்லும் வாய்ப்பு என்றால் எப்படி இருக்கும்? தேனில் ஊறிய பலாச்சுளைகளை சுவைத்தால் எப்படி இருக்குமோ அப்படி தான் இருந்தது. என்னப்பா? புற அனுபவம் பற்றி சொல்கின்றோம் என்று நினைக்க வேண்டாம். இந்த உதாரணம் நம் அக அனுபவம் தான். இனி மருதமலை மாமணி பற்றி மனதுள் நிறைப்போம்.

மருத மலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களே பல இடங்களில் கூறியுள்ளார்.அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம்.அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல்.ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்"....குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில்முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று மிகக்கடினமாகவும் வேகமாகவும் வாசித்துவிட்டாராம்..கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று "மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி" என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலினை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா, என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்... குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்.இப்படிப்பட்ட கவிஞர் கிடைக்க நாம் என்ன தவம் செய்தோமோ!

அடுத்து தமிழில் தான் எத்தனை பக்தி இலக்கியங்கள். தமிழில் உள்ள பக்தி இலக்கியங்கள் உலகில் மிக மிக தலை சிறந்தவை. இதனை நாம் உணர வேண்டும். இதனை நாம் உணர்ந்து அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டும். மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்,திருப்புகழ் போன்ற பாடல்களோடு நாமும் சேர்ந்து பாட வேண்டும். குழந்தைகள் இப்படிப்பட்ட பாடல்களை பாடுவதன் மூலம் அவர்களின் மனன திறன் கூடும். இன்று பட்டிமன்ற பேச்சுக்களில் தலைசிறந்து பேசும் அனைவரும் மனன திறன் மிக்கவர்கள்..மேலும் இவர்கள் அனைவரும் அடியார்,அருளாளர்களின் பாடல்களை அப்படியே பாடும் திறனும் பெற்றவர்கள்.இது போன்ற பாடல்கள் மனன திறனுக்கு மட்டுமன்று. இது போன்ற அருட்பாடலால் மன உறுதி பெறலாம், வாழும்  வகை அறியலாம்.

முருகனின் திருப்பாதங்களைப் பற்றுங்கள், கர்ம வினைகள் காணாமல் போகும், முருகனின் அகராதியில் தண்டித்தல் என்பதே கிடையாது. தண்டிப்பதற்கு பதிலாக நம்மை சோதித்துப் பார்ப்பார்.நாம் சோதனைகளை கடந்து விட்டால், பிறகென்ன..முருகனின் அருள் நிச்சயமாக கிடைக்கும்.அசுரர்கள் அனைவரும் வதம் செய்யப்பட்டதாக நாம் அறிவோம். ஆனால் முருகன் என்ன செய்தார்? வதம் செய்யாது சூரபத்மனுக்கு அருள் செய்தார். நம்பிக்கையோடு சரண் அடையுங்கள், அருள் செய்வார் நம் முருகப் பெருமான்.

உங்களுக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் சரி..உடனே ஏதேனும் ஒரு குன்று உள்ள குமரனை சென்று வழிபடுங்கள். வலியுடன் குன்றில் ஏறும் போது ...முருகா..முருகா..என்று அவன் சரணம் கூறி, நீங்கள் செய்த பிழைகளை உணர்ந்து , உணர்ந்து மலை ஏறுங்கள். அவன் சன்னிதியில் உங்கள் மனக்குமுறல்கள் அனைத்தையும் சமர்ப்பியுங்கள். நீங்கள் செய்த பாவத்தையும் முறையிட்டு அழுங்கள்..அவரிடம் தானே நாம் அழுது,தொழுது பெற முடியும். இனி நடக்கப் போவது நன்மையாக இருக்க அருள் செய் முருகா என்று வேண்டுங்கள். திருநீற்றுப் பிரசாதத்தை நெற்றி நிறைய பூசுங்கள். ஆலயத்தை மூன்று முறை வலம் வாருங்கள். முருக..முருகா..என உருகுங்கள்..
ஆலயத்தில் வழிபடுவதோடு நிறுத்தி விடாமல் வீட்டில் தினமும் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல்மாறல் போன்றவை படித்து அவனை வழிபடுங்கள்.

சரி,,அப்படியே மருதமலை முருகன் பாதம் பற்றுவோம்...

மருதமலை முருகன் கோயில் , கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற தலமிது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார். மருதமலையின் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் என்ற ஒரு சிறிய விநாயகர் கோயிலும் உள்ளது.





மருதமலை தரிசனமும், பாம்பாட்டி சித்தர் தரிசனமும் இனி காண இருக்கின்றோம். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம். அதுபோல் தான் மருதமலை திருக்கோயில் ஆகும். முதலில் மருதமலை அடிவாரத்தை அடைந்தோம். 




மருதமலை மலைக்கோயில் செல்வதற்கு சிற்றுந்துகள் அடிவாரத்தில் உண்டு. நாம் நடை பயணமாக மலை ஏற விரும்பினோம். அங்கே அருகில் இருந்த நுழைவாயில் கண்டு, முருகா..முருகா என்று உள்ளத்தில் தொழுது நடையைக் கட்டினோம்.






இயற்கை எழில் கொஞ்ச நுழைவாயில் தாண்டி நாம் நடந்து கொண்டிருந்தோம். இந்த மலையாத்திரையில் நாம் நடந்து செல்வதற்கு வசதியாக நன்கு படிகள், இளைப்பாற மண்டபங்கள் என ஒருங்கே இருந்தது. அப்படியே நடந்து சென்று கொண்டிருந்தோம்.






இதோ..தான்தோன்றி விநாயகர் தரிசனம் பெற இருக்கின்றோம். 


மருதமலை அடிவாரத்தில் படிக்கட்டு பாதையின் தொடக்கத்தில் தான் தோன்றி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த விநாயகரின் இயற்கை அமைப்பு மிக அழகு உடையது. பிற தலங்களில் காண்பதற்கு அரிதாகும். விநாயகரின் அழகையும் பெருமைகளையும் மருதமலை தான்தோன்றி பதிகத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கூறியுள்ளார்.

தான் தோன்றி விநாயகரை வணங்கி சென்றால் சரியாக 18 படிகளை கொண்ட பதினெட்டாம்படி உள்ளது. சபரிமலைக்கு சென்று அய்யப்பனை வழிபட இயலாதவர்கள் இந்த பதினெட்டாம்படிக்கு வந்து வணங்கி செல்கிறார்கள்.




அடுத்து மீண்டும் ஆங்காங்கே ஓய்வு எடுத்து நடந்து கொண்டே இருந்தோம்.




















இதோ..அடுத்து இடும்பன் சன்னிதி தரிசனம் காண இருக்கின்றோம்.








இடும்பனை அழித்த இனியவேல் முருகா என்று ஷஷ்டி கவசத்தில் கேட்டிருப்போம். இடும்பனை வேண்டி மீண்டும் மலை நோக்கி சென்றோம்.

 














மலையின் மீது சென்றதும் அங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் இறுதிப் படிக்கட்டுகள் ஆதிமூலஸ்தானத்திற்கு நேரெதிராக உள்ளன. இப்பாதைவழிச் செல்பவர்கள் ஆதி மூலஸ்தானத்தில் சுயம்புவாக உள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையையும் அதற்கடுத்து, பஞ்சமுக விநாயகரையும் வழிபட்டபின் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்லலாம்.

மருதமலைக் கோயிலின் ஆதி மூலஸ்தானத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வயானையுடன் மூவரும் சுயம்புலிங்க வடிவில் உள்ளனர். இங்கு வள்ளியின் சுயம்பு உருவம், தெய்வயானையை விட சற்று உயரமாகக் காணப்படுகிறது. ஆதிமூலஸ்தான கருவறை விமானமும், முன்புறம் தைப்பூசக் கல்யாண உற்சவ மண்டபமும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. 



இதோ..மருதமலை கோயிலை நெருங்கி விட்டோம். 


புதியதாக அமைக்கப்பட்ட பாதை இராஜகோபுரத்தின் வழியே நேராக தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்கிறது. இராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லாலான கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர், அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கு, அடுத்து உலோகக் கொடிமரம், மயில்வாகனம், முன்மண்டபத்தில் வரதராஜப் பெருமாள் சன்னிதி, அர்த்தமண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறத்திலும் விநாயகரும் (இடப்புறம்) வீரபத்திரரும் (வலப்புறம்), கருவறையில் தண்டத்துடன் காட்சிதரும் தண்டாயுதபாணி என இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வலம்புரி விநாயகரின் முன்னுள்ள மயில்முக விளக்கின் அடிப்புற ஆமைவடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் குறிப்பிடத்தக்கவை.
இது தனிப்பட்ட முருகன் கோயிலாக இருந்தாலும் இங்கு முருகன், சோமாஸ்கந்தனாக வெளிமண்டபத்தில் வலப்புறம் பட்டீசுவரர், இடப்புறம் மரகதாம்பிகை சன்னிதிகளுடன் உள்ளார். மரகதாம்பிகை சன்னிதிக்கு எதிராக வெளி மண்டபத்தில் நவகிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளது. மற்றும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் ஆகியோருக்கும் வெளிமண்டபச் சுவற்றில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
மலையின் அடிவாரத்திலிருந்து நடைப்பயணமாகச் செல்லும் போது, பாதையின் தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னிதியும், சற்று மேலே சென்றால் இடும்பன் சன்னிதியும் அமைந்துள்ளன. மலையின் மீது சென்றதும் அங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் இறுதிப் படிக்கட்டுகள் ஆதிமூலஸ்தானத்திற்கு நேரெதிராக உள்ளன. இப்பாதைவழிச் செல்பவர்கள் ஆதி மூலஸ்தானத்தில் சுயம்புவாக உள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையையும் அதற்கடுத்து, பஞ்சமுக விநாயகரையும் வழிபட்டபின் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்லலாம்.


 மருதமலைக் கோயிலின் ஆதி மூலஸ்தானத்தில் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வயானையுடன் மூவரும் சுயம்புலிங்க வடிவில் உள்ளனர். இங்கு வள்ளியின் சுயம்பு உருவம், தெய்வயானையை விட சற்று உயரமாகக் காணப்படுகிறது. ஆதிமூலஸ்தான கருவறை விமானமும், முன்புறம் தைப்பூசக் கல்யாண உற்சவ மண்டபமும் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.



அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பாம்பாட்டி சித்தர் தரிசனம் பெற உள்ளோம்.



 இக்கோவிலின் தெற்குமூலையில் பாம்பாட்டி சித்தர் குகைக்கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் கீழிறங்குகின்றன. இக்குகைக்கோயில் சிறு குடைவரை அமைப்பில் உள்ளது.உட்புறத்தில் ஒரு பாறை பாம்பு வடிவில் உள்ளது. பாம்பாட்டி சித்தருக்கு முருகன் பாம்பு வடிவில் காட்சியளித்ததார் என்பது மரபு வரலாறு. பாம்பாட்டி சித்தர் சன்னிதி முன்புறமுள்ள தியான மண்டபத்தில் இங்கு வருகை தருவோர் அமர்ந்து அமைதியாக தியானம் செய்து வழிபடுகின்றனர். தண்டாயுதபாணி கோயில் தலவிருட்சம் இக்கோயிலுக்கு முன்னால் உள்ளது. இக்கோயிலுக்கு இறங்கி வரும் பாதையில் சப்த கன்னியருக்கு ஒரு சிறு சன்னிதி அமைந்துள்ளது.












இதோ..இங்கே தான் பாம்பாட்டி சித்தர் தரிசனம் பெற்றோம். பாம்பாட்டி சித்தர் பற்றி தனிப்பதிவில் காண்போம். ஒரே தலத்தில் முருகப் பெருமான் தரிசனமும், பாம்பாட்டி சித்தர் தரிசனமும் மருதமலையில் பெற முடிகின்றது.

அருணகிரிநாதர் திருப்புகழில் மருதமலை முருகனைப் பாடியுள்ளார்.

திரிபுரம் அதனை ஒரு நொடியதனில்
எரிசெய் தருளிய சிவன் வாழ்வே!
சினமுடைஅசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி விடுவோனே!
பருவரை யதனை உருவிட எறியும்
அறுமுகமுடைய வடிவேலா!
பசலையொ டணையும் இளமுலை மகளை
மதன்விடு பகழி தொடலாமோ!
கரிதிரு முகமும் இடமுடை வயிறும்
உடையவர் பிறகு வருவானே!
கனதனமுடைய குறவர்தம் மகளை
கருணையொ டணையும் மணிமார்பா!
அரவணை துயிலும் அரிதிரு மருக
அணிசெயு மருத மலையோனே!
அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு பெருமாளே!

பதிவின் தலைப்பில் உள்ள பாடலை அனைவரும் ஒரு முறை பாடுவோமா?

 மீண்டும் ஒருமுறை பாடலை எழுத்து வடிவில் தருகின்றோம்.

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே புனித மலை எந்த மலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை
அ அ அ அ அ அ ஆ
அ அ அ அ அ அ ஆ
அ அ ஆ
மருத மலை 
மருத மலை
முருகா
மருதமலை மாமணியே முருகய்யா (2)

தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் அய்யா
உனது மனம் பெற மகிழ்ந்திடவே
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா

தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா
அ.அ..அ..அ..ஆ...
தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும் பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா
அ.அ..அ..அ..ஆ...
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா.
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
அ.அ..அ..அ..ஆ...
ஆ ஆ ஆ
அ அ அ அ அ அ அ அ அ அ அ அ ஆஆ ஆ ஆ
ஆ ஆ ஆ
அ அ அ அ அ அ
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன் (2)

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்
அ.அ..அ..அ..ஆ...
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்
அ.அ..அ..அ..ஆ...
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் - நான் மறவேன்
பக்திக் கடலென பற்றி பெருகிட வருவேன் - நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் - நான் மறவேன்
பக்திக் கடலென பற்றி பெருகிட வருவேன் - நான் வருவேன்

பரமனின் திருமகனே
அழகிய தமிழ் மகனே
பரமனின் திருமகனே
அழகிய தமிழ் மகனே
காண்பதெல்லாம்.. உனது முகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா
காண்பதெல்லாம்.. உனது முகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனது மனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே (2)

பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதுரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதுரு கருணையில் எழுவது
வருவாய்
குகனே
வேலய்யா
அ அ அ அ அ அ ஆ
அ அ அ அ அ அ ஆ
அ அ ஆ
தேவர் வணங்கும் மருதமலை முருகா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா
மருதமலை மாமணியே முருகய்யா

 முருகன் அருள் முன்னிற்க மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

பழமுதிர்ச்சோலை பரமகுருவே வருக! வருக!! (6) - https://tut-temples.blogspot.com/2020/11/6.html

குன்றுதோறாடும் குமரா போற்றி (5) - https://tut-temples.blogspot.com/2020/11/5.html

திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! (4) - https://tut-temples.blogspot.com/2020/11/4.html

திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3) - https://tut-temples.blogspot.com/2020/11/3.html

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html