"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, September 9, 2022

தமிழ்ப் பாராயணத்திரட்டு!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் நம் தளம் சார்பில் அனைத்து அறப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இம்மாத சேவைகளுக்கு வழக்கம் போல் நாம் அனைவரிடமும் நம் தளம் சார்பில் சிறு தொகை அனுப்பி உள்ளோம்.  இதில் மாதம் தோறும் இலுப்பெண்ணை டின் 1 க்காக நம் தளம் சார்பில் சேவையில் உள்ளோம். இம்மாதத்துடன் இலுப்பெண்ணெய் சேவை ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இவை அனைத்தும் குருவருளினால் தான் நடைபெற்று வருகின்றது என்பது கண்கூடு. இம்மாதம் மஹாளய பட்சம் வருகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மஹாளய பட்ச சேவை நம் தளம் சார்பில் செய்து வருகின்றோம்.இவ்வாண்டும் 11.09.2022 முதல் 26.09.2022 வரை  அன்னசேவையுடன் இனிப்பும், கோமாதாக்களுக்கு வாழைப்பழங்களும், இன்னும் சில சேவைகளும் செய்ய குருவின் தாள் பணிந்து நிற்கின்றோம். இதனையொட்டி நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் வழங்கியுள்ள உத்திரவு இங்கே சித்தன் அருள் தளத்திலிருந்து தருகின்றோம்.

அகத்தியப்பெருமானின் உத்தரவு!


வணக்கம் அகத்தியர் அவர்களே

"வரும் புரட்டாசி மாத மஹாளய அமாவாசைக்கு ஒன்பது நாள் முன்பிருந்து இயலாதவர்களுக்கு அன்னமிட்டு, தான தர்மங்கள் செய்து அமாவாசை தினத்தன்று முன்னோர்களையும் குலதெய்வத்தையும் வணங்கி அன்றைய தினமும் இயலாதவர்களுக்கும் ஏழை எளியோர்களுக்கும் அன்னதானமும் கோமாதாவிற்கும் உணவும் இனிப்புகளையும் பரிமாறி தர்மங்கள் செய்திடல் வேண்டும்" என்று அகத்தியபெருமான் உரைத்திருக்கின்றார்

இதை எத்தனை நாட்கள் செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு குருநாதர் அகத்தியபெருமான் "அப்பனே! நீங்கள் அனைவரும் கடைநாள் வரையிலும் இப்படி செய்து தர்மங்களை கடைபிடித்து வந்தாலே பெரும் புண்ணியமப்பா! கர்மாக்களை அழித்து விட முடியும் அப்பனே!" என தெரிவித்துள்ளார்.

இதை அடியவர்கள் அனைவரும் நல்முறையாய் கடைபிடித்து குருவருளும் இறையருளும் பெறுவோம் .

அடுத்து நம் தளம் சார்பில் திங்கள் முதல் வெள்ளி வரை கூட்டு வழிபாடு செய்து வருகின்றோம். இதில் குருவருளால்  தமிழ்ப் பாராயணத்திரட்டு படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதென்ன தமிழ்  தமிழ்ப் பாராயணத்திரட்டு என்று நீங்கள் கேட்பது நமக்கு கேட்கின்றது? ஸ்ரீ ரமண பகவான் திருத்தாள் பணிந்து ஸ்ரீரமணா வலைத்தளத்தில் இருந்து கீழ்காணும் செய்திகளை அப்படியே பகிர்கின்றோம்.








ஓர் ஞானியினால் அருளப்பெறும் ஓரோர் சொல்லும் ஒப்பற்ற வேதவாக்கே. ஆத்மானுபூதியையே பிரமாணமாய்க் கொண்டு வெளிவருவதால் அவ்வருண்மொழிகள் சத்தியத்திலும் மகிமையிலும் பிரமாணத்திலும் வேதத்திற்குச் சமமானவை என்பது தொன்றுதொட்டு வழக்கிலிருக்கும் ஓர் கருத்து. இளம்பிராயமான பதினாறு வயதினிலேயே முழுமையான முடிவை, முக்தியை அடையப்பெற்ற பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் தாமாகவே அருளிச் செய்த பாடல்களும் அன்னாரது மொழிபெயர்ப்பில் மிளிரும் வடமொழிப் பாடல்களும் அக்கருத்தினைப் பறைசாற்றி மெய்ப்பிக்கின்றன. தனது ஆத்மசாக்ஷாத்காரத்தின் பரிணாமம் அனைத்தையும் குறுகிய பாவினங்களில் பூர்ணமாக அடக்கி வெளிக்கொணரும் அசாதாரண வல்லமை பிற்காலத்தில் ஸ்ரீபகவானிடத்தில் விசேஷமாகப் பரிணமித்தது. சக்தி வாய்ந்த மந்திரங்களை ஒக்கும் இப்பாடல்கள் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டு, செலுத்தப் பெறும் இலக்கு தவிரா அம்புகள்போல் ஒளிக்கணைகளென உள்ளங்களில் பாய்ந்து மனவாக்குக்கெட்டாத அதிமர்மப் பாங்கில் மனத்தை ஈர்த்துச் செல்லும் அருட்சக்தி வாய்ந்தவை. ஊன்றிப் படிப்போரின் உள்ளங்களில் தெளிவையும் ஞானத்தையும் புகட்டும் ஆற்றல் படைத்தவை.
பெரும்பாலும் மோனநிலையில் அமர்ந்து மௌன உபதேசமே அருளிய பகவான் எழுத்தில் வடித்தது சிறிதேயாயினும், வினவப்படும் வினாக்களுக்கு வார்த்தையாலோ எழுத்து வடிவிலோ விடையளிக்கத் தயங்கியதேயில்லை. சிரத்தையுடன் இதயபூர்வமாகக் கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்திற்கும் விரிவான, தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. தானே பாடல்களை இயற்றிச் சரிபார்த்ததுடன் சிற்சில சந்தர்ப்பங்களில் பிறரால் இயற்றப்பட்ட பாடல்களையும் நேர்த்தியாகத் திருத்தியதுமுண்டு. முறையாகப் பயிலாத தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் அவருக்கு இயல்பாகவே தேர்ச்சி அமைந்திருந்தது வியப்பே. ஸ்ரீ பகவான் இயற்றிய, மரபிலிருந்து சற்றும் பிறழாத ஸம்ஸ்கிருதப் பாடல்களின் இலக்கணத் துல்லியத்தை மட்டுமன்றி வடமொழிப் புலமையையும் அதன் அழகையும் கோர்வையையும் கண்டு வியக்காத பண்டிதர்களே இல்லை எனலாம். ஸ்ரீபகவானின் இனிய தமிழ்ப் பாக்களும், அவை தோன்றிய நாள்முதல் இன்றுவரை தமிழ் இலக்கிய வல்லுநர்களால் ஓர் இலக்கிய மேதையின் படைப்புகளெனப் போற்றி மதிக்கப் பெறுகின்றன. இப்பாடல்கள் வெளிவர ஏதுவாய் இருந்த சந்தர்ப்பங்கள், அன்று நேரில் கண்டோரை பிரமிக்க வைத்ததைப் போன்றே இன்றும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்த வல்லன.

ஸ்ரீபகவான் விரூபாக்ஷ குகையில் இருந்த காலத்திலிருந்தே ஸ்ரீபகவானது அடியார்களால் செய்யப் பெற்றுவந்த இப்பாடல்களின் பாராயணத்தால் மனமலம் நீங்கப்பெற்று, உள்ளத்தூய்மையும் அமைதியும் பெற்றது பங்கு பெற்றோர் அனைவரின் அனுபவமாய்த் திகழ்ந்தது. இன்று ஸ்ரீரமணாச்ரமத்தில் பாடப்பெறும் இப்பாடல்களின் தொகுப்பே இப்பாராயண நூலாகும்.

ஸ்ரீ ரமணாச்ரம தமிழ்ப் பாராயணத்தின் வரலாறு

கந்தாச்ரம நாட்களிலிருந்தே நடைபெற்ற புனித நூல்களின் பாராயணமே தமிழ்ப் பாராயண ஆரம்பகாலமாகும். பண்டைய அத்வைதக் கிரந்தமான ரிபுகீதையும் (சிவரஹஸ்யத்திலுள்ளது) மற்றைய வேதாந்த மரபு சார்ந்த அத்வைத பரமான முக்கிய நூல்களும் ஸ்ரீபகவானால் பாராயணக் கிரமத்தில் கொண்டு வரப்பட்டன. சைவ சமயக் குரவர்களான அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் ஆகியோருடைய தேவாரப் பாடல்களும், முக்கியமாக மாணிக்கவாசகருடைய திருவாசகமும் பகவானால் பெரிதும் மதிக்கப்பட்டதுடன் அவையாவும் தாயார் அழகம்மாளது மஹா சமாதி தினத்தன்று இரவு முழுவதும் (மே மாதம் 19ஆம் தேதி 1922) பாடப்பெற்றன. பகவான் இயற்றிய பாடல்களின் பாராயணமும் பெரிதும் ஊக்குவிக்கப் பட்டது.


பகவானது கவிதைத் தொகுப்புகளை மனம் ஊன்றிப் படித்தலுடன் பாராயணம் செய்வதனால் அடையும் ஆன்மிக லாபத்தை நன்குணர்ந்த அடியார்கள் பாராயண க்ரமத்தை முறையாக ஆரம்பித்தனர். 1920லேயே பகவானிடம் வந்தவரும் பகவானது நீண்டநாள் அடியவரும் அவரது அணுக்கத் தொண்டருமான ஸ்ரீகுஞ்சு சுவாமிகள் தனது அனுபவங்களை நினைவுகூறும் எனது நினைவுகள் புத்தகத்தின் மூலம் ஸ்ரீபகவானது தாயார் தினமும் காலை 4 மணியிலிருந்து 5 மணிவரை பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்யும் வழக்கத்தைக் கைக்கொண்டிருந்தார் என்பதை அறிகிறோம். அன்னையார் தனது பாராயணத்தை முடித்தவுடன் ஸ்ரீபகவானது பக்தர்கள், ஸ்ரீ பகவானருளிய அருணாசல அக்ஷரமணமாலை, அப்பளப்பாட்டு முதலியவற்றுடன் விசேடமாக ஸ்ரீபகவானால் தமிழாக்கப் பட்ட ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரத்தையும் பாராயணம் செய்வதை தினசரி வழக்கமாகக் கொண்டிருந்தனர். பகவான் அவ்வப்போது இயற்றிய புதிய பாடல்களையும் அந்தப் பாராயண முறையில் அவ்வப்போது உள்ளடக்கி வந்தனர். இவ்வாறாக 1940-லேயே 15 நாள் பாராயணக் கிரமமாக தமிழ்ப் பாராயணம் விரிவுற்றது.

நாள் 1 : அண்ணாமலையைப் போற்றி மூவர் பாடிய தேவாரத் தொகுப்பு
நாள் 2 : ஸ்ரீ அருணாசல தத்துவம், ஸ்ரீ அருணாசல மாகாத்மியம், ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை
நாள் 3 : ஸ்ரீ அருணாசல நவமணிமாலை, ஸ்ரீ அருணாசல பதிகம், ஸ்ரீ அருணாசல அஷ்டகம், அப்பளப்பாட்டு, ஆன்ம வித்தை
நாள் 4 : உபதேச உந்தியார் மற்றும் மலையாள, தெலுங்கு, வடமொழிகளில் உபதேச சாரம்
நாள் 5 : உள்ளது நாற்பது, உள்ளது நாற்பது - அனுபந்தம்
நாள் 6 : சத்தர்சனம் (உள்ளது நாற்பது அனுபந்தத்துடன் மலையாளத்தில்)
நாள் 7 : தேவிகாலோத்தரம்
நாள் 8 : ஆன்ம சாக்ஷாத்காரம், குரு ஸ்துதி, அத்தாமலகம்
நாள் 9 : பகவத் கீதாசாரம் (தமிழ், மலையாளம், வடமொழி மூன்றிலும்)
நாள் 10 : ஆன்மபோதம், ஏகான்ம பஞ்சகம்
நாள் 11 : தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம், விவேக சூடாமணி, சிவானந்த லஹரி இவற்றிலிருந்து ஸ்ரீ பகவானால் தேர்ந்து எடுக்கப்பெற்ற சில பாடல்கள் (தமிழிலும் சமஸ்கிருதத்திலும்) இவற்றுடன் தாயுமானவரின் பாடல்கள் சில
நாள் 12 : சத்தியமங்கலம் வேங்கடரமண ஐயர் இயற்றிய ஸ்ரீ ரமண ஸ்துதி பஞ்சகம்
நாள் 13 : சிவப்பிரகாசம் பிள்ளையவர்கள் இயற்றிய ஸ்ரீ ரமண சத்குரு மாலை, ஸ்ரீ ரமண தேவமாலை (1-28)
நாள் 14 : பிள்ளையவர்களின் ஸ்ரீ ரமண தேவமாலை, (29-42), விண்ணப்பம்
நாள் 15 : பிள்ளையவர்களின் ஸ்ரீ ரமண பாதமாலை, மணிவாசகரது திருக்கோவையார் (ஒரு பாடல்), சுந்தரமூர்த்தி நாயனாரது திருச்சுழி தேவாரம்

இந்தப் பாராயண முறை தமிழ், தெலுங்கு, மலையாளப் பாடல்களைக் கொண்டிருப்பினும், 1935இல் துவங்கிய வேதபாராயணத்திலிருந்து தனிப்படுத்திக் காட்டும் வகையில் தமிழ்ப் பாராயணம் என அழைக்கப்பட்டது. இத்தோத்திரத் தொகுப்பு நான்கு வகைத் துதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. அவை:

1. பகவான் இயற்றிய தமிழ், தெலுங்கு, மலையாள சம்ஸ்க்ருத பாடல்கள்
2. ஸ்ரீ பகவானால் வடமொழியிலிருந்து தமிழிலும் மலையாளத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்ட பாடல்கள்
3. பண்டைய தமிழ் மற்றும் வடமொழி நூல்களிலிருந்து ஸ்ரீ பகவானால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள்
4. அன்பர்களால் ஸ்ரீ பகவான் மீது பாடப்பெற்ற பாடல்கள்
மாலை 6.30 மணிக்குத் துவங்கும் இவற்றின் அன்றாட பாராயண வழக்கம் அன்றுமுதல் இன்றுவரை ஆச்ரமத்தில் (சில மாறுதல்களுடன்) நடைபெறுகின்றது.

ஆச்ரம இன்றைய பாராயண முறை:

தமிழ்ப் பாராயணத்தின் ஆரம்பகாலத்தில், பாராயணத்திற் குரிய பாடல்கள் ஓர் குறிப்பேட்டில் எழுதி வைக்கப்பட்டு, பாராயணம் செய்ய விரும்புவோரால் அவரவர் கையேட்டில் அவர்களாலேயே பிரதி எடுத்துக் கொள்ளப்பட்டன. சிற்சில சமயங்களில் ஸ்ரீபகவானே அவற்றை எழுதித் தந்தருள வேண்டுமென்று விண்ணப்பிக்கும் அடியவர்களின் வேண்டுகோட்கட்கு செவிசாய்த்து ஸ்ரீபகவானே அவையனைத்தையும் எழுதியருளியதும் உண்டு. சுவாமி சிவானந்தா என்ற ஸ்ரீ பகவானது அணுக்கத் தொண்டர் ஒருவரிடமிருந்து அத்தகைய கையேடு ஒன்று 1987இல் கண்வாச்ரம அறக்கட்டளையால் பெறப்பட்டு முதன்முறையாக அச்சேற்றப்பட்டது.
ஸ்ரீபகவானது சந்நிதியில் குஞ்சு சுவாமிகள் வழிகாட்டுதலில் முறையான தமிழ்ப் பாராயணம், மீண்டும் 1985இல் துவங்கப்பட்டது. ஸ்ரீ ரமண நூல் திரட்டில் உள்ள பாடல் வரிசைக்கிரமப்படி திங்கள் முதல் வெள்ளி வரையிலும், சனிக்கிழமை ஸ்ரீ ரமண ஸ்துதி பஞ்சகமும் தற்போது பாடப்பெற்று வருகின்றன.

1. திங்கட்கிழமை - பாடல்கள் வரலாறு

திங்கட்கிழமை

அருணகிரியின் விரூபாக்ஷ குகையில் ஸ்ரீபகவான் வசித்து வந்த காலத்திலேயே சுமார் 1914இல் ஸ்ரீ பகவானால் இயற்றப்பட்ட ஸ்துதிகளைச் சேர்ந்தவை ஸ்ரீ அருணாசல ஸ்துதி பஞ்சகம்.

அருணாசல மாஹாத்மியம்:

ஸ்ரீ அருணாசல ஸ்துதி பஞ்சகத்திற்கு முன்னோடியாய் அமைந்துள்ள இச்சிறிய துதி, ஸ்ரீபகவானால் ஸ்காந்த புராணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை. இவற்றுள் அருணாசல மகிமையை வலியுறுத்தும் முருகனாரால் இயற்றப்பட்ட பாடலும் அண்ணாமலையின் உச்சியில் கார்த்திகை பௌர்ணமியன்று ஒளிரும் தீபதர்சனத்தின் தத்துவத்தை விளக்கும் பகவானால் இயற்றப்பட்ட பாடலும் அடங்கும்.

அக்ஷரமணமாலை:

தினந்தோறும் நகரினுள் சென்று பிக்ஷை எடுக்கும் சாதுக்கள் பலர் பகவானது அடியார்களாக இருந்த சமயம் அது. திருவருணையைச் சார்ந்த ஏனைய சாதுக்கள் மகரிஷியைச் சார்ந்த அடியார்களாகத் தம்மைக் காட்டிக்கொண்டு பிக்ஷைபெற்றுச் செல்வோராயினர். மற்றையோரிடமிருந்து தம்மை மகரிஷியைச் சார்ந்தோராகப் பிரித்துக் காட்டுவதற்கும் பிக்ஷை இடுவோரின் ஆன்ம விளக்கத்திற்காகவும் பிக்ஷைக்குச் செல்கையில் இசைப்பதற்கு ஏதுவான பாடல் ஒன்றை இயற்றித் தரும்படி பகவானது அடியார்கள் விண்ணப்பிக்க, ஏற்கெனவே நாயன்மார்களது தேவாரம் பெருமளவில் இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டார் பகவான்.
திருவருள் கைகூட, ஒருநாள் கிரிவலம் செய்யும்போது பகவான் ஆங்காங்கே அமர்ந்து, தனக்கும் அருணாசலனுக்கும் இடையே ஏகாந்தத்தில் நிகழ்ந்த அதிசயத்தை பக்திப் பரவசத்துடன், 108 மந்திரங்கள் அடங்கியதான இந்நூலை எழுதியருளினார். இதற்குப் பொருள் என்ன என்று
ஸ்ரீ பகவானிடம் கேட்டபோது அதற்குப் பொருள் அதைப் பாராயணம் செய்வதுதான் என்று கூறியருளியுள்ளார். எனவே அக்ஷரமணமாலைக்குச் சரியான விளக்கம் தருவது இயலாத காரியம். அவரவர் பக்திக்கு ஏற்ப, இப்பாடல்களின் பொருளை ஒருவாறு உள்ளுணர்வால் பெறமுடியும். தனது மற்ற உபதேசப் பாடல்களுக்கு பலமுறை விளக்கம் அருளிய பகவானிடம் அக்ஷரமணமாலைக்கும் விளக்கம் வேண்டியபோது, அவை சிந்தனை செய்து எழுதப்பட்டவை அல்ல, நீங்களே விளக்குங்கள் கேட்கலாம் என அருளியுள்ளார் என்பது இங்குக் கவனிக்கத்தக்கதாம்.

நவமணிமாலை:

பாடல் 1: பகவான் இந்தப் பாடலை எழுதியதற்குக் காரணமாக ஒரு ரசமான சம்பவம் நடந்தது. விரூபாக்ஷ குகையில் பகவான் இருந்த காலத்தில் சிதம்பரத்திலிருந்து தீக்ஷிதர் ஒருவர் பகவானுடைய மகிமையைக் கேள்வியுற்று தரிசனத்திற்காக வந்தார். பேச்சுக்கிடையில் பகவானைப் பார்த்து, ஸ்வாமி! பஞ்சபூத க்ஷேத்திரங்களில் ஆகாயலிங்கமே உயர்வானதல்லவா! தாங்கள் ஒருமுறை வந்து நடராஜ தரிசனம் செய்ய வேண்டும் என்று அடிக்கடி கேட்டுக் கொள்வார்.
இவ்வாறு அவர் ஒருமுறை கேட்டபொழுது பகவான் அசலனேயாயினும் என்ற பாடலை ஒரு காகிதத்தில் எழுதி அவரிடம் கொடுத்தார். தீக்ஷிதர் நன்றாகப் படித்து விஷயம் தெரிந்தவர். பகவான் எழுதிக் கொடுத்த பாடலைப் படித்துப் புரிந்துகொண்டு, பிறகு அவர் பகவானைச் சிதம்பரத்திற்கு வரும்படி வற்புறுத்துவதை நிறுத்திக் கொண்டார். பிற்காலத்தில் இந்தப் பாடல் நவமணி மாலையில் முதல் பாடலாகச் சேர்க்கப்பட்டது. இதுபோல் பற்பல சந்தர்ப்பங்களில் பகவான் அருணாசலன்மீது இயற்றிய ஒன்பது தனிப்பாடல்களை ஒன்று சேர்த்து அத்தொகுப்பிற்கு நவமணி மாலை என்று பெயர் சூட்டப்பட்டது.
பாடல் 8: பகவான் விரூபாக்ஷ குகையில் இருந்த காலத்தில் ஈசுவர சுவாமிகள் பகவானுடன் இருந்தார். அவர் கவி பாடுவதில் சமர்த்தர்.
ஒரு சமயம் அவர், ஒட்டக்கூத்தர் எழுதிய பாடலில் சிங்களராஜன் தந்த சன்மானங்களைப் பற்றி சந்த விருத்தத்தில் பாடியிருப்பதைக் காட்டி ராஜாதிராஜனான அருணாசலேச்வரன் பகவானுக்கு என்னென்ன பரிசு கொடுத்தான் என்பதை, ஒட்டக்கூத்தர் பாடிய அதே சந்த விருத்தத்தில் பாடியருள வேண்டுமென்று பகவானை வேண்டினார்.
அப்பொழுது ஒட்டக்கூத்தர் இயற்றிய அதே சந்த விருத்தத்தில் பகவான் அருணாசலன் தன்பதம் எனக்குத் தந்தனன் என்று இயற்றிய பாடல்தான் இது. இதே சந்தத்தில் ஈசுவர சுவாமிகளும் ஒரு பாடலை இயற்றியிருக்கிறார்.

பதிகம், அஷ்டகம்:

பதிகம், அஷ்டகம் இவைகளைப் பற்றி ஸ்ரீபகவான் கூறியதாவது:
பிறரது தூண்டுதலின்றி தானாகவே உள்ளத்தில் ஸ்புரித்து என்னை வற்புறுத்தி எழுதத் தூண்டியவை பதிகமும் அஷ்டகமுமே. நான் விரூபாக்ஷ குகையில் இருந்த காலத்து (1916) கருணையால் என்ற சொல் மனதில் ஸ்புரித்துக் கொண்டே இருந்தது. இது எதற்கென்று அதைக் கவனியாது விட்டும் அந்த ஸ்புரணம் விடாமல் தொடரவே, அந்தச் சொல்லை வைத்து ஒரு விருத்தப் பாடலை (எழுசீர் விருத்தம்) எழுத, வார்த்தைகள் முயற்சியின்றியே தாரைபோல் ஊறி வரத் தொடங்கின. இதேபோன்று மறுநாள் முதல் முன்பாட்டின் கடைசி பதமானது முன்போலவே மனதில் திரும்பத் திரும்பத் தோன்றியது. அதை வைத்து இரண்டு, மூன்று என பத்து பாடல்கள் எழுதும்வரை நிகழ்ந்தது. இவ்வாறு அருணாசல பதிகம் உருப்பெற்றது. (பிறகு மேலும் ஒரு பாடல் சேர்க்கப்பெற்று ஏகாதசமாகியது). பத்தும் பதினொன்றும் ஆகிய இரண்டு பாடல்கள் மட்டும் ஒரே நாளில் இயற்றப்பட்டன.

பகவான் பதிகம் எழுதிய முறையை அறிந்த அய்யாசாமி என்பவர், பகவான் ஒருமுறை கிரிபிரதக்ஷிணத்திற்குப் புறப்படத் தயாரானபோது பழனிஸ்வாமியிடம் ஒரு காகிதமும் பென்சிலும் கொடுத்தார். அப்போது, பதிகத்தின் இறுதிப் பாடலின் இறுதிப் பதத்தின் தொடர்ச்சியாக, எண்சீர் விருத்தமாக அஷ்டகத்தில் ஆறு பாடல்கள் பகவானால் எழுதப்பெற்றன. நாராயண ரெட்டியார் என்பவர் அவற்றை அச்சுப் போட முன்வந்தபோது பகவான் அஷ்டகத்திற்குத் தேவையான மேலும் இரண்டு பாடல்களையும் எழுதி அவரிடம் கொடுத்தார். அவர் பதிகத்தையும், அஷ்டகத்தையும் அச்சிட்டு வெளியிட்டார்.

அருணாசல பஞ்சரத்னம்:

ஸ்ரீபகவானது அடியாரும் சமஸ்கிருத கவியுமான கணபதி முனி, 1917இல் தமிழ் வெண்பா இலக்கணத்தை அனுசரித்து சமஸ்கிருதத்தில் கவிதை எழுத முயன்றார். அது முடியாமல் போகவே, ஸ்ரீபகவானிடம் சென்று சமஸ்கிருதத்தில் ஆர்யாகீதி யின் இலக்கண முறைப்படி சில சுலோகங்கள் இயற்றித் தருமாறு வேண்டினார். வடமொழியே சரியாகத் தெரியாத தனக்கு பாவின் யாப்பிலக்கணம் சற்றும் தெரியாதென பகவான் மறுக்க, ஆர்யா கீதி விருத்தத்தின் யாப்பிலக்கணத்தை விவரமாக கணபதிமுனி, எடுத்துரைத்தார். பின்னர் ஸ்ரீபகவான் ஆர்யா கீதையின் யாப்பிலக்கணத்தை ஒட்டி வடமொழியில் ஐந்து சுலோகங்களை இயற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தைவரதன் என்ற பகவானது அடியார் இவற்றின் இறுதிப் பாடலாக ஒரு பாடலை இயற்ற 5 வருடங்கட்குப் பிறகு ஐயாசாமிப் பிள்ளை என்ற அன்பரின் இரங்கலுக்கிணங்கி ஸ்ரீபகவான் பஞ்சரத்னத்தின் ஐந்து பாடல்களையும் தமிழில் மொழிபெயர்த்ததுடன் தைவரதரின் பாடலையும், அருணகிரி ரமணன் என்ற பாடலாக மொழிபெயர்த்தருளினார்.
இதன் வடமொழி சுலோகங்கள் ஆச்ரமத்தில் பகவான் சந்நிதியில் தற்போது தினமும் காலை 6.45 மணிக்கு ஸ்ரீகணபதி முனியின் ஸ்ரீ ரமண சத்வாரிம்சத்துடன் இணைத்து பாடப்பெறுகின்றன.

முடிவில் உள்ள மங்கலப் பாடல்கள்:

அம்ருதநாத யதி என்ற மலையாளத் துறவி பகவான் விரூபாட்ச குகையில் தங்கியிருந்த நாட்களில் ஸ்ரீ ரமணன் யாரோ? எனக் கேட்டு மலையாள மொழியில் கவிதை ஒன்றைப் புனைந்து பகவானிடம் அளிக்க, பகவான் அவ்வினாவிற்கு விடை அளிக்கும்முகத்தான் புனைந்ததே அரியாதி எனத் துவங்கும் பாடலாகும்.

ஸ்ரீமுருகனாரால் புனையப்பட்ட வாழ்க வான் என்ற வாழ்த்துப் பாடல் திங்கட்கிழமை இறுதியிலும், செவ்வாய் முதல் வெள்ளிக்கிழமை வரையிலான பாராயணத்தின் இறுதியில், தற்போது சத்தியமங்கலம் வேங்கடரமண ஐயரின் பொன்னொளிர் பத்து என்பதில் வரும் வாழி வாழி ரமண மகாகுரு என்ற பாடலும் பாடப்பெறுகின்றன.

திங்கட்கிழமை (அருணாசல ஸ்துதிபஞ்சகம்)

1.அருணாசல தீபதர்சன தத்துவம்

2.அருணாசல மாகாத்மியம்

3.அருணாசல அக்ஷரமணமாலை

4.அருணாசல நவமணிமாலை

5.அருணாசல பதிகம்

6.அருணாசல அஷ்டகம்

7.அருணாசல பஞ்சரத்னம்


2. செவ்வாய்க்கிழமை - பாடல்கள் வரலாறு

செவ்வாய்க்கிழமை

உபதேச நூன்மாலை

உபதேச உந்தியார்:
ஸ்ரீபகவானே எல்லா தெய்வ அவதாரங்களாகவும் பரிணமித்தார் என்ற தமது திண்ணிய கருத்தினை முருகனார் ஸ்ரீ ரமண சந்நிதி முறையில் சில பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் தமது திருஉந்தியாரில் சிவபுராணத்தில் வரும் பூர்வ மீமாம்ச காண்டிகளான ரிஷிகளின் சரிதையைச் சொல்லலுற்றார். அந்தத் தபஸ்விகள் அற்புத சக்திகளைப் பெற விரும்பி கர்மங்களை யன்றிக் கடவுள் இல்லை என நம்பி அவற்றையே அனுசரித்த வண்ணமிருந்தனர். அவ்வமயம் பரமேச்வரனாகிய சிவபெருமான் அவர்களிடையே அழகிய பிக்ஷாடனராகத் தோன்ற, ஸ்ரீமஹாவிஷ்ணு அனைவரையும் மயக்கும் மோஹினி ரூபத்தில் அவரைத் தொடர்ந்தார். மோஹினியின் லாவண்யத்தில் மயங்கிய தாருகாவன ரிஷிகள் தங்களது கர்மங்களை மறந்தனர். ரிஷி பத்தினிகளோ அந்த அழகிய பிக்ஷாடனர் வடிவில் வந்த மயக்கும் இளைஞனைக் கண்டு மோஹம் கொண்டு தத்தம் பதிகளைத் துறந்து கடமைகளையும் மறந்து சாதுவின் பின்சென்றனர். அதைக்கண்டு கடுங்கோபம் கொண்ட முனிவர்கள் தமது அற்புத சக்திகளின் துணைகொண்டு அபிசார ஹோமம் செய்து ஹோம குண்டத்திலிருந்து அச்சாதுவை மாய்க்கும் பொருட்டு ஓர் மதங்கொண்ட யானையையும் ஓர் கோரப் புலியையும் உண்டாக்கி அவற்றை அவர்கள் இருவர் மீதும் ஏவினர். ஈசன் அப்புலியைக் கொன்று அதன் தோலை அணிந்து யானையைக் கொன்று அதன் உரியைப் போர்த்திக் கொண்டார். தாருகாவன ரிஷிகள் தம் தவறை உணர்ந்து ஈசனிடம் பொறுத்தருள வேண்டி மன்றாடினர்.

இதுவரை இச்சரிதையை இயற்றிய முருகனார் அன்று தாருகாவன ரிஷிகளுக்கு உபதேசமருளிய அச்சிவனே இன்று ரமணனாக அவதரித்துள்ளதால் ஸ்ரீபகவானே அவ்வுபதேசத்தை அறைய வல்லவர் எனத் திடமாக நம்பி பகவானை அதனை அருளுமாறு வேண்ட, ஸ்ரீபகவானும் மூன்று வரிகளைக் கொண்ட உந்தியார் பாவினத்தில் உந்தீபற (மகளிர் விளையாடும் ஒரு விளையாட்டு) ஒவ்வொரு பாவின் முடிவிலும் வருமாறு அமைத்து முதல் 15 பாக்களில் தொன்றுதொட்டு வழக்கிலிருந்து வரும் கர்மம், பக்தி, யோகம் ஆகிய மார்க்கங்களையும் அவற்றை அனுசரிக்கும் முறைகளை விளக்கியும் அடுத்து வரும் 15 பாக்களில் ஆன்ம சாக்ஷாத்காரம் அடையும் மார்க்கத்தை விளக்கி நான் யார்? விசாரமே முடிவான பயனை அளிக்கவல்ல ஒரே சாதனம் என்றும் தெளிவுபட இசைத்துள்ளார்.

பின்னர் யோகி ராமையாவின் வேண்டுகோட்கேற்ப தெலுங்கில் இதனை அனுபூதி சாரம் என்ற தலைப்பிலும் குஞ்சு சுவாமியின் இரங்கலுக்கு இணங்கி மலையாளத்திலும் கணபதி முனி விண்ணப்பித்தவாறு சமஸ்கிருதத்திலும் மொழிபெயர்த்தருளினார். தமிழில் உபதேச உந்தியார் என அழைக்கப்பட்டாலும் உபதேச சாரம் என்ற சமஸ்கிருத தலைப்பிலேயே எல்லா மொழிகளிலும் இன்று அழைக்கப்படுகின்றது. ஸ்ரீபகவான் உடல் தாங்கியிருந்த காலத்திலேயே அதிகாலை நடைபெறும் வேதபாராயணத்துடன் ஸம்ஸ்க்ருத உபதேச சாரமும் சேர்த்து இசைக்கப் பட்டது போலவே இன்றும் மாலையில் ஸ்ரீரமண சந்நிதியில் வேதபாராயணத்துடன் சேர்த்து இசைக்கப்பட்டு வருகின்றது.

உள்ளது நாற்பது & அனுபந்தம்:

ஸ்ரீபகவான் அவ்வப்போது தனது உபதேசங்களை உள்ளடக்கிப் புனைந்த தமிழ்ப் பாடல்கள் சுமார் 20 இருந்தமையால் மேலும் 20 பாடல்கள் இயற்றி பண்டைய தமிழ் இலக்கிய மரபிற்கொப்ப நாற்பது பாடல்கள் அருளிச் செய்யுமாறு ஸ்ரீபகவானை முருகனார் வேண்டினார். ஸ்ரீபகவானும் அதற்கிசைந்து பாடல்களை அருளினார். ஆனால் பாடல்கள் பாவினத்திலும் கருத்திலும் வேறுபட்டிருந்ததால் பலவற்றை நீக்க வேண்டி வந்தது. அதன்பொருட்டு ஸ்ரீபகவான் புதுப் பாடல்களைப் புனைய, முருகனார் ஒத்த கருத்திற்கும் பாவினத்திற்கும் ஏற்ப அவற்றை வரிசைப்படுத்தி வர உள்ளது நாற்பது உருவாயிற்று. இந்நாற்பதில் ஒரு பாடலை கணபதி முனி மங்கலச் செய்யுளாகத் தேர்வு செய்ய, அதனை ஈடு செய்ய ஸ்ரீபகவான் மேலும் ஒன்று புனைந்து நாற்பதாக ஆக்கியருளினார். வெவ்வேறு கருத்தினையும் உபதேசங்களையும் உள்ளடக்கிய நீக்கப்பட்ட பாடல்களை உள்ளது நாற்பது பிற்பகுதியாகத் தொகுக்கலாமெனத் தெரிவித்த முருகனாரது கருத்துக்கு ஸ்ரீபகவானும் சம்மதித்து புதிய பாடல்களை இயற்றினார். செய்யுட்களை ஆக்கியோன் என்பதில் சற்றும் நாட்டமற்று சத்தியத்தினை அடியவர்களுக்கு வெளிப்படுத்துவதிலேயே நாட்டமுற்ற ஸ்ரீபகவான் முதல்தர வடமொழி அத்வைத நூல்களிலிருந்தும் ஒத்த கருத்துடைய பாடல்களைத் தேர்ந்தெடுத்துத் தமிழில் மொழிமாற்றம் செய்தருளினார். இப்படியாக உள்ளது நாற்பது - அனுபந்தம் உருப்பெற்றது.

ஸ்ரீபகவான் எழுதியருளிய ஞான சாஸ்திரங்களிலேயே இந்த 80 பாடல்களும் அவரது உபதேசத்தை முற்றிலும் உள்ளடக்கி, உள்ளதைக் காட்டும் ஒளியெனச் சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றன. அநேக மொழிபெயர்ப்புகளையும் விளக்கவுரைகளையும் கண்டுள்ள இதனை ஸ்ரீபகவானே தெலுங்கில் உன்னதி நலுபதி என்ற தலைப்பில் உரைநடையிலும் மலையாளத்தில் ஸத்தர்சனம் என்னும் பெயரில் கிளிப்பாட்டாகவும் எழுதியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (உபதேச நூன்மாலை)

1.உபதேசவுந்தியார் - கலிவெண்பா

2.உள்ளது நாற்பது

3.உள்ளது நாற்பது - அனுபந்தம்


3. புதன் கிழமை - பாடல்கள் வரலாறு

புதன் கிழமை

உபதேச நூன்மாலையும்
அநுவாத நூன்மாலையும்

ஏகான்ம விவேகம்:
1947 ஆம் ஆண்டு ஒருநாள் திருச்சுழி வெண்பா அந்தாதி என்ற புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்ட ஸ்ரீ பகவான் நான் மலைமேல் இருந்தபோது நாயனாவிடம் வெண்பா லக்ஷணத்தைச் சொல்லி வடமொழியிலோ, தெலுங்கிலோ வெண்பா எழுதும்படி கூறினேன். நாயனா, நரசிங்கராவ் ஆகியோர் பலமுறை முயன்றும் பலனில்லை என்று சூரிநாகம்மாவிடம் கூறினார். நாயனாவே இந்த வெண்பா (சுக்ல சந்தஸ்) முறையில் பாடல் இயற்ற முடியவில்லை என்றால் ஸ்ரீ பகவான்தான் தெலுங்கில் எழுத வேண்டும் என்றார் சூரி நாகம்மா. மூன்று நாட்களுக்குப் பிறகு
ஸ்ரீ பகவான் சிறு காகிதத் துண்டுகளில் நாகம்மாவிடம் கொடுத்துத் தான் தெலுங்கிலும் பின்னர் தமிழிலும் எழுதிய வெண்பா சுலோகங்களைக் காட்டினார். நாகம்மாவும் முருகனாரும் ஸ்ரீ பகவானிடம் மேலும் சில வெண்பாக்களை தெலுங்கில் இயற்றினால் அந்த பாஷைக்கும் ஒரு புதிய சந்தஸ் கிடைத்த பெருமை உண்டாகும் என்று வேண்டிக் கொண்டார்கள்.
மறுநாள் ஸ்ரீ பகவான் மேலும் இரண்டு வெண்பாக்களை இயற்றி, ஆத்ம பஞ்சகம் என்ற தலைப்பில் ஆதிசங்கரரின் பாடல் முன்பே ஒன்று உள்ளதால், இதற்கு ஏகாத்ம பஞ்சகம் என்று பெயரிடலாம் எனக் கூறியதுடன் இதைச் சங்கராபரண ராகத்தில் சீர்வரிசைகளுக்குத் தக்க நிறுத்திப்பாட வேண்டும் என்றும் விரிவாகக் கூறியருளினார்.

ஸ்ரீ பகவான் இதனைத் தமிழில் இயற்றியதும் முருகனார் அதற்கு ஒரு முடிவுரைப் பாடல் இயற்றினார். இதனையும் ஸ்ரீ பகவான் தெலுங்கில் மொழிபெயர்த்தும் பின்னர் கலிவெண்பாவாக அமைத்தும் மற்றும் மலையாள மொழியிலும் இதனை மொழிபெயர்த்து அருளினார். ஏகாத்ம பஞ்சகம்; ஏகாத்ம விவேகம்; ஏகாத்ம தத்வம் என்று வழங்கப்படும் இதுவே
ஸ்ரீ பகவானால் இயற்றப்பட்ட மூலக் கிரந்தங்களில் கடைசியாகும்.
அப்பளப்பாட்டு:

அன்னை அழகம்மை மலைமேல் சமைக்க ஆரம்பித்த காலங்களில், ஒருநாள் பகவானுக்கு இரட்டை அப்பளம் பிடிக்குமே, அதைச் செய்யலாமே என்றெண்ணினார். பகவானுக்குத் தெரியாமல் ரகசியமாக ஊருக்குள் சென்று எச்சம்மாள், முதலியார் பாட்டி இவர்களிடமிருந்து அப்பளம் செய்வதற்குத் தேவையான சாமான்களைச் சேகரித்துக் கொண்டு வந்தார்.

அவர் எங்குப் போகிறார் என்பதை மரத்தடியிலிருந்து ஸ்ரீ பகவான் பார்த்துக் கொண்டே இருந்தார். டவுனுக்குச் சென்ற அழகம்மை தயாராகவிருந்த, அப்பளமிடுவதற்கு வேண்டிய சாமான்களை எடுத்துக்கொண்டு விரூபாக்ஷ குகைக்கு வந்து அவற்றைப் பத்திரமாக வைத்துவிட்டார். ஸ்ரீ பகவான் ஒன்றும் தெரியாதவர் போலிருந்துவிட்டார்.

தரிசனத்திற்கு வந்தவர்களெல்லோரும் சென்ற பிறகு ஸ்ரீ பகவான் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிட்டார். சாவகாசமாக அம்மா எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு அப்பளம் இடுவதற்குத் தயாரானார். சுமார் இருநூறு முன்னூறு உருண்டைகள் இருந்தன. தனியாக அவ்வளவையும் அப்பளமாக்க முடியாது. ஸ்ரீபகவானுக்கு அப்பளமிடத் தெரியும் என்பது அழகம்மைக்கும் தெரியும். ஆகையால் மெதுவாக ஸ்ரீ பகவானிடம் அப்பளம் இடுவதற்கு ஒத்தாசை செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு இடம் கொடுக்கக் கூடாதென்று ஸ்ரீபகவான் அம்மாவைப் பார்த்து, நீ எல்லாவற்றையும் விட்டுவிட்டாயல்லவா! கிடைத்ததைச் சாப்பிட்டுச் சும்மா கிடக்காமல் இவையெல்லாம் எதற்கு! நான் அப்பளம் செய்ய வரமாட்டேன். நீ செய்தாலும் சாப்பிட மாட்டேன். எல்லாவற்றையும் நீயே செய்து சாப்பிடு என்று சொல்லிச் சும்மாயிருந்து விட்டார்.

அன்னையும் சிறிது நேரம் சும்மாயிருப்பதும், திரும்பவும் கூப்பிடுவதுமாயிருந்தார். அம்மா தன்னை விடமாட்டார் என்று தோன்றியது ஸ்ரீபகவானுக்கு. சரி, அப்படியானால் நீ இந்த அப்பளம் செய். நான் வேறு ஒரு அப்பளம் செய்கிறே னென்று, மேற்கண்ட அற்புதமான ஞானப் பொக்கிஷமாகிய அப்பளப்பாட்டை அன்னையை முகாந்திரமாக்கி நம் அனைவருக்கும் ஸ்ரீ பகவான் பாடியருளினார்.

பகவான் பின்னாளில் இதைப்பற்றிக் கூறும்போது, அன்னை சாதப்பாட்டு, குழம்புப் பாட்டு என வேதாந்தபரமான பாடல்களை எப்பொழுதும் பாடிக்கொண்டே வேலை செய்வது வழக்கம். அப்பளப்பாட்டு என ஒருவரும் இதுவரை எழுதியதில்லை. எனவேதான் இதை எழுதவேண்டுமெனத் தோன்றியது. பாடுவது அன்னைக்கு மிகவும் பிடிக்கும். இதையும் கற்றுப் பாடட்டுமே என்றுதான் இயற்றினேன். அவள் அப்பளம் செய்து முடிக்கையில் எனது அப்பளப்பாட்டும் தயாராகிவிட்டது. நான் இதை (அப்பளப்பாட்டை) புஜிக்கிறேன். நீ தயாரித்த அப்பளத்தை நீ சாப்பிடு என்று கூறினேன் என்றார்.

ஆன்மவித்தை:

ஒருநாள் அடியவர் ஒருவர் ஸ்ரீபகவானிடம், ஆன்மவித்தை எப்படிச் சுலபமாகும்? முக்தி அவ்வளவு சுலபமா? ஆனால் ஐயே! அதிசுலபம் ஆன்மவித்தை என்று கூறப்பட்டுள்ளதே என்று கேட்டார். உடனடியாக ஸ்ரீபகவான், எனக்கெப்படித் தெரியும்? என்று முருகனாரைச் சுட்டிக்காட்டி அவரல்லவோ எழுதினார்? அவரைத்தான் கேட்க வேண்டும் என்று கூறினார். தமிழ் இலக்கியத்தில் பிரசித்தி பெற்ற இசைநாடக ஆசிரியர் கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரம் மக்களின் மனதைக் கவர்ந்ததொன்று. அதில் ஒரு பாடல் ஐயே! மெத்தக் கடினம்; உமதடிமை ஐயே! மெத்தக் கடினம் என்பது. ஸ்ரீமுருகனார் இதைத்தழுவி, ஐயே! அதிசுலபம் ஆன்மவித்தை ஐயே அதிசுலபம் என்ற பல்லவியையும், அனுபல்லவியையும் எழுதி அதன்மேல் அவரால் அதைத் தொடர்ந்தெழுத முடியாத காரணத்தால் சரணங்கள் எழுதி பூர்த்தி செய்ய வேண்டுமென்ற வேண்டுகோளுடன் ஸ்ரீபகவானிடம் சமர்ப்பித்தார். இது 1927இல் நடந்தது. முதலில் பகவான் ஒரு சரணமெழுதி முடித்தவுடன் முருகனார் குறைந்தது 4 சரணங்களாவது வேண்டுமென விழைய பகவான் மேலும் 3 எழுதி முடித்துப் பாடலைப் பூர்த்தி செய்தார். ஆனால் நந்தனார் பாட்டில் கடைசி சரணத்தில் பொன்னம்பலத்தைக் குறிப்பிட்டுக் கூறியிருப்பதுபோல் அண்ணாமலையைக் கூறாமல் விட்டதை நினைவுகூர்ந்து கடைசி சரணத்தையும் எழுதியதாக ஸ்ரீபகவானே விவரித்துள்ளார்.

தேவிகாலோத்தர ஞானாசார விசார படலம்:

ஸ்ரீதேவிக்கு உபதேசிக்கப்பட்ட இந்தப் பரவித்தையானது காலத்தைக் கடந்த ஞானத்தைப் பொருளாகக் கொண்டது. அனாதிகாலம் முதலே இந்து சமய பாரம்பரியத்தில் வேதத்திற்குச் சமமான பிரமாண முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தெய்வ வாக்குகளாகவும் கருதப்படுபவை. 28 ஆகம சாஸ்திரங்கள், அவற்றில் ஒரு உப ஆகமமான ஸ்ரீதேவிகாலோத்தரம் 24000 பாக்களைக் கொண்டது. ஸ்ரீபகவானால் மொழிமாற்றம் செய்யப்பட்டு இங்கருளப்பட்ட 85 பாடல்களும் ஞானகாண்டத்தில் 65வது அத்தியாயத்தில் உள்ளவை. ஞானமார்க்கத்தை விரிவாக அறைதலுடன் அதனை ஆசிரயித்தவன் அனுசரித்தற்குரிய அத்வைதபரமான ஆசாரங்களைக் கூறி சாதகர்களை ஊக்குவிக்கும் உபதேசங்களையும் அருளுகிறது.

ஸ்ரீ பகவான் மலைமீது விரூபாக்ஷ குகையிலிருந்த காலத்தில், அன்பர் ஒருவர் கிரந்தாக்ஷர ஸம்ஸ்க்ருத ஆகம நூலின் ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு வந்து ஸ்ரீபகவானிடம் காட்டினார்.

அதைப் புரட்டிப் பார்த்த ஸ்ரீபகவான், கிரியைகளையும் சரியைகளையும் பற்றி விஸ்தாரமாகக் கூறும் ஆகமங்களுக்குள், அதிலும் உப ஆகமங்களுக்குள், பூரண அத்துவித ஞானத்தைப் போதிக்கும் தேவிகாலோத்தர ஞானாசார விசார படலம், சர்வ ஞானோத்தர ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் இரண்டிலும் நிர்விகார பரப்பிரம்மத்தைப் பற்றி மிகத் தெளிவாகக் கூறப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.

இந்த இரண்டு பிரகரணங்களும் ஈசனால், தேவிக்கு உபதேசிக்கப் பட்டதொன்றும்; குகனுக்கு உபதேசிக்கப்பட்டதொன்றுமாகும். இவை இரண்டும் தமது அனுபூதியை ஒட்டியேயிருப்பதைக் கண்டு, இவற்றை ஒரு புத்தகத்தில், நாகராக்ஷரத்தில் அழகாக அச்சுப்போல் எழுதிவைத்துக் கொண்டார்.

விரூபாக்ஷ குகையிலிருக்கும் போதே 85 சுலோகங்கள் கொண்ட, தேவிகாலோத்தர ஞானாசார விசார படலத்தை, சுலோகத்திற்கொரு வெண்பாவாக தமிழில் மொழி பெயர்த்து அருளினார். அது அக்காலத்திலேயே அன்பர்களால் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

ஸ்ரீபகவான் கீழ்வரும் அவதாரிகையை இதற்கு அருளி யுள்ளார்:

உபாகமங்களு ளொன்றாய ஸ்ரீ தேவிகாலோத்தரத்தின் கண் சகலாகம சாரத்தின் சாரமாய்ப் பக்குவான்மாக்கள் பரிபாக காலாநந்தர மடையத்தகுந்த ஞானத்தையும் ஆசாரத்தையும் விவரித்துப் பரமசிவன் பரமசிவைக் கருளிச்செய்த இந்த ஞானாசார விசார படலக் கிரந்தமானது, சனன மரண ரூப சம்சார துக்க சமுத்திரத்தில் வீழ்ந்து முங்கிப் பொங்கித் தத்தளிக்குஞ் சீவர்களைத் தாங்கி நேர்வழி கொடுபோய் முத்தியெனு மக்கரையிற் சேர்க்கும் அரும் பெருந் தோணியாயிருத்தலின், முமுட்சுக்க ளனைவருந் திகைத்து வழிதப்பி யலையாம லிதன் றுணையால் நேர்மார்க்கமே சென்று அச்சாந்தானந்த பரமபத மடைவாராக.


புதன் கிழமை ( I.உபதேச நூன்மாலை)

1.ஏகான்ம விவேகம்

2. அப்பளப்பாட்டு

3.ஆன்மவித்தை

II.அனுவாத நூன்மாலை


4. வியாழக்கிழமை - பாடல்கள் வரலாறு

வியாழக்கிழமை

அநுவாத நூன்மாலை

சர்வஞானோத்தரம் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம்:
சர்வ ஞானோத்தரம் எனப்படும் உப ஆகமத்தில் ஓர் அத்யாயமே ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம் ஆகும். இது 1933-இல் ஸ்ரீபகவானால் வடமொழியிலிருந்து ஓர் உள்ளுந்துதலால் தாமதமின்றி உடனுக்குடன் மொழி பெயர்க்கப்பட்டது. ஞான மார்க்கத்தில் பிரவேசித்துள்ள சாதகர்களுக்கேற்ற உபதேசங்களை, ஈஸ்வரன் குகனுக்கு அருளியவாறாக அமைந்துள்ள இக்கிரந்தம் ஸ்ரீபகவானது உபதேசங்களுக்கு உப-பாகமாக அமைந்துள்ளது எனக் கூறலாம்.

பகவத் கீதாசாரம்:

உபநிஷத்துக்கள், பிரம்மசூத்ரம், பகவத்கீதை, இந்த மூன்றும் பிரஸ்தானத்ரயம் எனக் கூறப்படும். இந்த மூன்றிலும் பகவத் கீதையானது தனிச் சிறப்புடையது.

சகல உபநிஷத்துக்களின் சாரத்தைப் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அருச்சுனனுக்கு, கீதாம்ருதமாக வடித்துக் கொடுத்தார்.

இந்த பகவத் கீதை எழுநூறு சுலோகங்கள் கொண்டது. பதினெட்டு அத்தியாயங்களாக வகுக்கப்பட்டு இருக்கின்றது.

1940இல் ஓர் சமயம் பகவான், தரிசனத்திற்கு வந்திருந்த பண்டிதர் ஒருவருடன் பகவத்கீதையின் பெருமையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது ரமண பகவானது சீரடியார் அன்பர் குர்ரம் சுப்பராமய்யா, ஸ்ரீ பகவானிடம், 700 சுலோகங்களையும் படிப்பதற்கு அதிக நேரம் தேவைப்படுவதால், பகவத்கீதையை நித்ய பாராயணத்திற்கு அனுகூலமாக, சுருக்கமாக வகுத்துத் தந்தருளுமாறு வேண்டினார். அவருடைய வேண்டுகோளுக்கிரங்கிய பகவான், எழுநூறு சுலோகங்களைக் கொண்ட பகவத் கீதையிலிருந்து, மணிகளைப் போன்ற நாற்பத்திரண்டு சுலோகங்களை எடுத்துத் தொகுத்துக் கொடுத்தார். அதுவே பகவத் கீதாசாரம் எனும் இவ்வரிய படைப்பு.

வெளிநாட்டவர் ஒருவர் பகவானுக்கு மிகவும் பிடித்த கீதை சுலோகம் எது எனக் கேட்டபொழுது, எல்லாமே என்று பதிலளித்தார் ஸ்ரீபகவான். ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லும்படி வினவ, 10ஆம் அத்தியாயத்தில் 20ஆவது சுலோகத்தைக் குறிப்பிட்டார். அச்சுலோகமும் இந்த 42இல் அடங்கும்.
பிறகு ஸ்ரீ பகவான் அந்த நாற்பத்திரண்டு வடமொழி சுலோகங்களை, தமிழ் வெண்பாவாகவும், மலையாளத்தில் கும்மிப் பாட்டாகவும் மொழிபெயர்த்து அருளியுள்ளார். இம்மொழிபெயர்ப்புகள் வடமொழி சுலோகங்களை ஒட்டியே செய்தருளப்பெற்றன. 


வியாழக்கிழமை (அநுவாத நூன்மாலை )


5. வெள்ளிக்கிழமை - பாடல்கள் வரலாறு


வெள்ளிக்கிழமை

அநுவாத நூன்மாலை

சனாதன இந்து தர்மம் இறங்குமுகமாக இருக்குங் காலத்தில், அதை மீண்டும் அதற்குரிய உயரிய நிலையில் ஸ்தாபிக்க ஆசாரிய ஸ்ரீசங்கரர் அவதரித்தார். அவர் வாழ்ந்த 32 வருட குறுகிய காலத்தில் சனாதன வைதிக தர்மத்தையும் அத்வைதத்தையும் மீண்டும் நிலைநாட்டியதுடன் ஜைனம், புத்தம் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மதவாதிகளையும் வாதத்தில் வென்றார். போற்றற்குரிய ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீநரசிம்மர், ஜகன்னாதர் போன்ற தெய்வங்களையும் எழில்மிகு துதிகளால் போற்றியுள்ளார். ஆஸேது ஹிமாசலம்வரை உள்ள புண்ய பாரத பூமியைத் தனது பல பாதயாத்திரைகளால் இணைத்து ஒன்றாக்கியதுடன் பாரதத்தின் 4 மூலைகளில் ஸ்ரீமடங்களை ஏற்படுத்தினார். சந்நியாச தர்மத்தை முறைப்படுத்தி நிலைநாட்டியதுடன் அர்ச்சகப் பரம்பரையையும் ஆரம்பித்து வைத்தார். மிகவும் உயரிய அற்புதமான அத்வைத க்ரந்தங்களை இயற்றியதுடன் ஒவ்வொரு உயிரினுள்ளும் எங்கும் விண்ணெனப் பரவியுள்ள ஆத்மாவின் இருப்பை ஊர்ஜிதம் செய்தார்.

அதற்குப் பிறகு வெகுகாலத்திற்குப் பின்வந்த ஸ்ரீ ரமண மகரிஷியின் உபதேசங்கள் ஆதிசங்கரரின் போதனைகளையே பிரதிபலித்து அவற்றை விரிவாக்கின. ஸ்ரீபகவான் அவ்வப்பொழுது ஸ்ரீசங்கரரின் நூல்களைத் தாமாகவே முன்வந்தோ அல்லது அடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்கியோ மொழிபெயர்த்ததுடன் ஆன்மாவாய் என்னகத்தே இருந்து இன்று தமிழ் சொல்வானும் அச் சங்கரனன்றி மற்றார்? எனவும் கூறியுள்ளார்.

தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்:

பிரம்மா தனது மானசீக புத்ரர்களான ஸனகர், ஸனந்தனர், ஸனத்குமாரர், ஸனத்ஸுஜாதர் முதலியோரை ஜகத் ஸ்ருஷ்டியாதி காரியங்களுக்காகத் தோற்றுவிக்கினும் அதில் விரக்தியுற்றவர்களாய் தமக்கு உபசாந்தி அளிப்பாரைத் தேடிவந்தனர். அத்தகைய அதிதீவிர பக்குவர்களுக்கு உதவ பரமகாருண்ய வடிவான ஈசனும் தக்ஷிணாமூர்த்தியாய் ஆலின்கீழ் மௌனமாய்த் தன்னிலையில் சின்முத்ரையுடன் இருக்க, அதைக்கண்ட ஸனகாதியர் காந்தத்தினால் கவரப்பட்ட இரும்புபோல் ஆகி அவரருகில் சென்று அவ்வாறே தம் உண்மை நிலையில் அமர்ந்தனர். அதிதீவிர பக்குவிகளும் இத்தன்னிலையின் உண்மையை அறியவல்லார் அல்லர். உலகமும் காண்பானும், உலகத்தைக் காட்டும் ஒளியும் அதற்குத் தடையாக இருப்பவை. ஆனால் இம்மூன்றையும் விரித்து பின்னர் தன்னுள் ஒடுக்கும் சக்தி தன்னை, ஆன்மாவை அன்றி வேறன்று என்ற இந்த சர்வாத்ம தத்துவத்தை ஸ்ரீசங்கரர் இத்தோத்திரத்தில் விளக்கியுள்ளார்.

ஆன்மபோதம்:

1948இல் மின்ன நூருதின் என்ற முஸ்லிம் பண்டிதர் ஆதிசங்கரரின் ஆன்ம போதத்தைத் தமிழில் பாக்களாக மொழிபெயர்த்து, ஸ்ரீபகவானுக்கு ஒரு பிரதியை அனுப்பியிருந்தார். ஸ்ரீபகவான் அதைப் படிப்பதும் கீழே வைப்பதும் திரும்பவும் திறந்து புரட்டுவதும் வைப்பதுமாக இருந்தார். அவர் முகத்தில் உள்ளிருந்து புறப்படும் ஓர் உந்துதலை அடியவர்களால் தெளிவாக உணர முடிந்தது. பின்னர் பகவான் வெங்கடரத்னம் என்ற தொண்டரைக் கூப்பிட்டு ஆச்ரம நூலகத்திலிருந்து ஆதிசங்கரரின் வடமொழி ஆன்ம போதத்தைக் கொண்டு வருமாறு கூறினார். அதைப் புரட்டிப் பார்த்த பகவான் இரு வெண்பாக்களை தமிழில் எழுதிப் பின்னர் அதை ஜி.வி. சுப்பரமாய்யாவிடம் காட்ட, அவர் மற்ற பாடல்களையும் எழுதும்படி வேண்டிக்கொண்டார். ஆனால் பகவான், அதெல்லாம் எதற்கு? என விட்டுவிட்டார். ஆனால் இருநாட்களில் மேலும் சில பாடல்கள் எழுதி, இது எதற்கு என்று சும்மாயிருந்தாலும் நம்மை விடாதுபோல் இருக்கிறது; ஒன்றன்பின் ஒன்றாக எதிரே வந்து நிற்கிறது எனக் கூறியதுடன் அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே 68 பாடல்களையும் தமிழ் வெண்பாக்களாக எழுதி முடித்தார்.

குருஸ்துதி:

ஆதிசங்கரர் திக்விஜயம் செய்கையில் மற்ற மதங்களைச் சார்ந்த வல்லுநர்களுடன் வாதம் செய்து அவர்களை வென்று பின் வடதிசையிலுள்ள மாஹிஷ்மதி நகரத்திற்குச் சென்றார். அங்கு வசித்த மண்டனமிச்ரர் என்னும் கர்மகாண்டப் பிரவர்த்தருடன் வாதம் செய்து அவரை வென்றதும், அவரது மனைவி தன்னையும் சங்கரர் வாதத்தில் வென்றாலன்றி அவரது வெற்றி பூரணமாகாது எனக்கூற சங்கரரும் வாதம் செய்தார். பல்வேறு விஷயங்களைப் பற்றிய எல்லா வாதங்களிலும் தோற்ற பாரதி என்ற மண்டனமிச்ரரின் மனைவி, காமசாஸ்திரத்தில் வாதிக்க ஸ்ரீசங்கரர் வாதத்தை மீண்டும் துவக்க ஒருமாத கால அவகாசம் கேட்டார். பின் தன் சரீரத்தை ஓர் மலைக்குகையில் தன் சீடர் காவலில் வைத்து, மரித்த அமருகன் என்ற அரசனுடல் புகுந்து, அவ்வரசனது மனைவியர் நூறுபேருடன் காமபோகம் அனுபவித்துக் கொண்டிருக்கையில், குரு கூறிப் போந்த காலம் கடந்து விட்டதால் கவலையுற்றுச் சில சீடர், பாடகர் வேடம் தரித்து அவ்வரசர் முன்நின்று இத்தோத்திரத்தினால் துதித்தனர். இதனைக் கேட்டவுடன் சங்கரரும் அரசனின் உடலை விட்டு நீங்கித் தம்முடல் புகுந்து வாதத்தில் பாரதியை வென்று கணவன் மனைவி இருவரையும் தமது சிஷ்யர்களாக ஏற்றுக் கொண்டு திக்விஜயத்தைத் தொடர்ந்தார்.

அத்தாமலகம்:

ஸ்ரீசங்கரர் மேற்குக் கடலோரமாகச் செல்கையில், பிற சித்தாந்தத்தைத் தழுவியவர்களை வாதத்தில் வென்றுகொண்டே ஸ்ரீவலி என்னும் கிராமம் வந்தடைந்தார். அவரது வரவை அறிந்த அவ்வூரைச் சேர்ந்த பிரபாகரன் என்ற பிராமணர், தனது 13 வயதுச் சிறுவனுடன் அவரைக் காணச் சென்றார். அவரது சந்நிதியில் தானும் நமஸ்கரித்து தனயனையும் நமஸ்கரிக்கச் செய்தார். பின் தன் மகன் எவ்வாறு சிறுவயது முதல் மூகனாய், ஒன்றிலும் ப்ரவிருத்தியற்று, விருப்பு-வெறுப்பு, மான-அவமானம் முதலியவை சற்றும் இன்றி, அவன் வயதினை ஒத்த பாலர்களின் இயற்கைக்கு மாறாக இருப்பதையும் கூறினார். ஜகத்குரு ஸ்ரீசங்கரர், அப்பாலனது நிலையையுணர்ந்து கரங்களால் அவனைத் தூக்கி மிகவும் மகிழ்ந்து வினவலாயினர். இக்கேள்விகளே இத்துதியின் தொடக்கம். அப்பாலன் அளித்த பதில்களே தொடரும் பாக்கள்.

அப்பாலனது உன்னதமான விடைகளைக் கேட்ட தந்தை வியப்பால் வாயடைத்து நிற்க ஆசார்யர் அவரிடம், இப்பாலகன் உமக்கு மகனானது உமது பாக்கியமே. தவம் முடிவுறாமையால் பிறந்த இப்பாலகனால் உமக்கு ஒரு பயனுமில்லை. நம்பால் இருக்கட்டும் எனக்கூறி பாலனை உடன் இட்டுச் சென்றார்.

பின்னர் சீடர்கள் இச்சிறுவன் சிரவணம் போன்ற சாதனங்கள் ஏதுமின்றி இப் பிரம்ம நிட்டை அடையக் காரணமென்ன என்று வினவினர். சங்கரர், இவன் தாய் யமுனை தீரத்தில் தவம் செய்து கொண்டிருந்த சகல சக்திகள் கொண்ட ஓர் சித்த யோகியிடம் தன் இருவயதுக் குழந்தையை விட்டுவிட்டு, மற்றைய பெண்களுடன் யமுனையில் நீராடச் செல்கையில், சிசு மெல்ல நடந்து நதியில் வீழ்ந்திறக்க, துக்கத்தை ஆற்றவியலாத தாயைத் தேற்றக் கருணை மிகுதியால் அந்தச் சாது தம் உடலைவிட்டு அச்சிசுவின் உடலில் புக அதனாலேயே இப்பெரும் பேறு பெற்றனன் என்று கூறினார்.


வெள்ளிக்கிழமை (அநுவாத நூன்மாலை )


6. சனிக்கிழமை - பாடல்கள் வரலாறு

சனிக்கிழமை

ஸ்ரீ ரமண ஸ்துதிபஞ்சகம்

இப்பாடலாசிரியர் சத்தியமங்கலம் வேங்கடரமண ஐயர், ஸ்ரீ பகவான் விரூபாக்ஷ குகையில் இருந்த காலத்தில் வந்தவர். முதல் நான்கு பாடல்களையும் தான் தங்கியிருந்த நாட்களில் நாளுக்கு ஒன்று வீதம் இயற்றி, ஐந்தாவதான ஸ்ரீ ரமண ஸத்குரு பாடலை ஊருக்குத் திரும்பிச் சென்றபின் இயற்றிப் பகவானுக்கு அனுப்பினார். ஸ்ரீ பகவானைப் போற்றும் துதிகளில், காலத்தால் மூத்த இவை (1910-1911) உயரிய வேதாந்த உண்மைகள் பலவற்றை உள்ளடக்கிய அரியதோர் பொக்கிஷமாக இலங்குகின்றன.

பிரம்மஞானியாகிய குருவின் சந்நிதி மாத்திரத்தில் முதன்முறையாக மலர்ந்து இதயத்தினின்றும் பெருக்கெடுத்த ஊற்றாகிய இப்பாடல்கள் ஒப்பற்ற எளிமையுடன் இருப்பினும் அதிசயிக்கத்தக்க நிரந்தரமான புதுப்பொலிவைக் கொண்டுள்ளது வியப்பே. ஒருவார காலம் மட்டுமே சிவனைப் பூஜித்த கண்ணப்ப நாயனார் சிவன் அருள் பெற்றார்போல், வேங்கடரமண ஐயரும் பகவானருகில் ஒருவாரம் மட்டுமே இருந்தார். ஆனால் அந்த ஒருவார காலம் ஆழ்ந்த பக்தியும் உயரிய அருளும் பெருகிப் பரவிய நாட்களாகும். ஸ்ரீபகவான் அவற்றை நினைவு கூறுங்கால், அவர் கும்மிப்பாட்டு இயற்றின அன்று மணவாசி ராமசாமி ஐயர், ராமநாத தீட்சிதர் மற்றவர்களும் சேர்ந்து அன்று இரவு இந்தப் பாடலைப் பாடிக் கும்மியடித்தனர் என்று கூறினார்.


சனிக்கிழமை (ஸ்ரீ ரமண ஸ்துதிபஞ்சகம்)






நம்மைப் பொறுத்தவரை  தமிழ்ப் பாராயணத்திரட்டு என்ற பாடல்கள் அனைத்துமே ஸ்ரீ ரமண கீதை தான். ஏற்கனவே நம் தளத்தில் ஸ்ரீ ரமண பகவான் பற்றி பேசி இருந்தாலும், இது போன்ற ஒரு அருள்நிலையில்  தமிழ்ப் பாராயணத்திரட்டு மூலம் நமக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ ரமண பகவானை போற்றி மகிழ்கின்றோம். இதுவும் குருவருள் துணை கொண்டு தான் நடைபெற்று வருகின்றது.

ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை PDF வடிவில் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய! 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

சத்தியமே அகத்தியம்! அகத்தியமே ஜெயம்!!  - https://tut-temples.blogspot.com/2022/08/blog-post_25.html

ஓம் நமோ பகவதே ஶ்ரீ ரமணாய! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_87.html

அருணா! கருணா ! என உருக்கும் அருணாசல அக்ஷரமணமாலை - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_17.html

 குரு தரிசனம் : அருணாச்சலத்திலிருந்து வருகின்றேன் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_64.html

 பாலகுமாரனின் பார்வையில் பகவான் ஸ்ரீரமண மகரிஷி  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_4.html

நான் யார்? - பகவான் ஸ்ரீ ரமணமகரிஷிகளின் 141 ஆவது ஜெயந்தி தின விழா - https://tut-temples.blogspot.com/2020/12/141.html

குரு தரிசனம் : அருணாச்சலத்திலிருந்து வருகின்றேன் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_64.html

கேட்பது விவேகானந்தரோ? - இது ரமணர் வழி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_55.html

மகான்களின் வி(வ)ழியில்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_38.html

தீப மங்கள ஜோதி நமோ நம... - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_0.html

No comments:

Post a Comment