"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, November 5, 2024

இறைவா! அனைத்தும் நீ!! நமச்சிவாயா! அனைத்தும் நீ!! - பாடல் பெற்ற தலங்கள்(14) - திருக்கழிப்பாலை (சிவபுரி)

                                                                    இறைவா..அனைத்தும் நீயே.

                                                                      சர்வம் சிவார்ப்பணம்..,

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் நாம் அவ்வப்போது திருமுறைகள் படித்து வருகின்றோம். நால்வர் காட்டிய வழியில் நாம் சென்றால் இறையை உணரலாம். நால்வர் பெருமக்கள் நமக்கு தந்துள்ள ஞானத்தை படிக்க வேண்டியது நமது வாழ்வின் நோக்கமாக கொள்ள வேண்டும். தித்திக்கும் திருமுறை பாராயணம் தினமும் செய்வோம் என்பதை நமது வாழ்வியல் கடமையாக எண்ணுதல் வேண்டும். 

பாடல் பெற்ற தலங்கள் என்ற பதிவு நம் தலத்தில் கண்டு வருகின்றோம். அந்த வகையில் திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில், திருநெடுங்களம்,திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில்,திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில்,திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில், அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோயில், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்,உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில், திருவேட்களம்  என பார்த்தோம். பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் சைவத் தலங்களாக பார்த்து வருகின்றோம். சைவம்,வைணவ பாகுபாடு நமக்கேது? இந்த தொடர்பதிவிலேயே வைணவத்தலங்கள், திருப்புகழ் தலங்கள் என தொடர விரும்புகின்றோம்.

குருவருளால் இன்று காலை தினம் ஒரு திருமுறை தொகுப்பில் இந்த தலத்தின் பதிகத்தை படிக்க வாய்ப்பு கிட்டியது . இன்றைய பதிகத்தை படித்த பிறகு பதிவின் தலைப்பின் காரணம் நமக்கு புரியும் . ஆம்! அனைத்தும் அவன் செயலே அன்றிநம்மால் என்ன செய்ய முடியும் என்று உணர்த்தப்பெற்றோம் . 

இன்றைய பதிவில் திருக்கழிப்பாலை சென்று தரிசனம் செய்ய உள்ளோம். 

இறைவர் திருப்பெயர் : பால்வண்ண நாதர்

இறைவியார் திருப்பெயர் : வேதநாயகி

தேவாரப்பதிகம் : திருஞானசம்பந்தர் - 2, திருநாவுக்கரசர் - 5, சுந்தரர் - 1

அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி 










சிதம்பரத்திற்கு தென்கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவார தலம் திருக்கழிப்பாலை. இறைவன் திருநாமம் பால்வண்ணநாதர். இறைவியின் திருநாமம் வேதநாயகி. இத்தலத்தின் சிவலிங்கப் பெருமான் வெண்ணிறமுடையவராக விளங்கிறார், அதனாலேயே இறைவன் பால்வண்ணநாதர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார்.

இத்தலம் முன்பு கொள்ளிட ஆற்றின் வடகரையில் கரைமேடு என்னுமிடத்தில் இருந்ததால், இத்தலத்திற்கு கழிப்பாலை என்ற பெயர் இருந்தது. கொள்ளிட ஆற்றின் வெள்ளப்பெருக்கால் கோயில் முழுவதும் சிதலமடைந்து விட்டது. எனவே தற்போது உள்ள இடத்தில் கோயில் கட்டி, அதில் கழிப்பாலை இறைவனையும், இறைவியையும் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

மூலவர் பால்வண்ணநாதர் ,வெண்ணிறமாக சுயம்பு மூர்த்தியாக மிகச் சிறிய பாணத்துடன் காட்சியளிக்கிறார். பாணத்தின் மேற்புறம் சதுரமாக, வழித்தெடுத்தாற்போல் நடுவில் பள்ளத்துடன் அதிசயமான அமைப்புடன் காட்சி தருகின்றது. அபிஷேகத்தின்போது பால் மட்டும்தான் இப்பள்ளத்தில் தேங்கும். மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்குத்தான் நடைபெறுகிறது. மூலவருக்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்.

கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும்போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி, சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது. முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து இலிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு, மணல் லிங்கத்தின்மீது பட்டு சிவலிங்கம் பிளந்து விடுகிறது. வருந்திய முனிவர் பிளவுபட்ட சிவலிங்கத்தை எடுத்துவிட்டு வேறு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்தபோது, இறைவன் பார்வதி சமேதராக காட்சி தந்து,'முனிவரே. பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த சிவலிங்கம் பிளவு பட்டிருந்தாலும், அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள். காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால்சொறிந்துள்ளது. எனவே இந்த சிவலிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள்' என்றார். இன்றும் பிளவு பட்ட வெண்ணிற சிவலிங்கம் தான் காட்சி தருகிறது.








தலச் சிறப்பு

    1. குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது.
    2. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் உருவ நிலையில் திருமணக்கோலத்தில் உள்ளனர்.
    3. கபிலமுனிவர் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் மூலவராக உள்ளது.
    4. இத்தலத்தில் சிவபெருமான் " பால்வண்ணநாதர் " என்ற திருப்பெயரிலும் உமையாள் " வேதநாயகி " என்ற திருப்பெயரிலும் அருள்கிறார்கள்.
    5. இவர்களுடன் புதல்வராக விநாயகர் " சித்தி புத்தி உடனுறை கணேசமூர்த்தி " என்ற திருப்பெயரிலும் முருகபெருமான் " வள்ளி தெய்வானை சமேதர் சண்முகநாதர் " திருப்பெயரிலும் அருள்கிறார்கள்.
  6.அதே போல் சுந்தரேஸ்வரர் உடனுறைய மீனாட்சி மற்றும் கொஞ்சிதபாதேசுவரர் உடனுறைய கோமதி என்ற திருப்பெயரிலும் அருள்கிறார்கள்.






நாம் சென்ற முறை கோயில் சென்ற போது அதாங்க..சிதம்பரம். அப்படியே அருகிலுள்ள சில சிவத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்போது சிவபுரி என்று அழைக்கப்படும் திருக்கழிப்பாலை தலம் சென்று தரிசிக்கும் வாய்ப்பு அடியேனுக்கு கிட்டியது. இதோ.வெளி பிரகாரம் சுற்றி தரிசனம் செய்திட்டோம்.







கோயிலினுள் சென்று தரிசனம் செய்ய உள்ளோம்.





நம் நண்பர் நம் குழு சார்பில் சிவராத்திரி வழிபாட்டிற்கு பூஜை பொருட்கள் கொடுத்த போது 





பிரார்த்தனை

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பாலை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


பாடல் எண் : 01

நங்கையைப் பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார்

அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார்

தம் கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார்

கங்கையைச் சடையுள் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.



பாடல் எண் : 02

விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார்

பண்ணினைப் பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார்

மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார்

கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.



பாடல் எண் : 03

வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார்

சோமனைச் சடைமேல் வைத்தார் சோதியுள் சோதி வைத்தார்

ஆமனெய் ஆட வைத்தார் அன்பெனும் பாசம் வைத்தார்

காமனைக் காய்ந்த கண்ணார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.



பாடல் எண் : 04

அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும் வைத்தார்

பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழலுண்ண வைத்தார்

பரிய தீ வண்ணர் ஆகிப் பவளம் போல் நிறத்தை வைத்தார்

கரியதோர் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.



பாடல் எண் : 05

கூரிருள் கிழிய நின்ற கொடுமழுக் கையில் வைத்தார்

பேரிருள் கழிய மல்கு பிறை புனல் சடையுள் வைத்தார்

ஆரிருள் அண்டம் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்

காரிருள் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.



பாடல் எண் : 06

உட்டங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க்கு உள்ளம் வைத்தார்

விட்டங்கு வேள்வி வைத்தார் வெந்துயர் தீர வைத்தார்

நட்டங்கு நடமும் வைத்தார் ஞானமும் நாவில் வைத்தார்

கட்டங்கம் தோள்மேல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.



பாடல் எண் : 07

ஊனப்பேர் ஒழிய வைத்தார் ஓதியே உணர வைத்தார்

ஞானப்பேர் நவில வைத்தார் ஞானமும் நடுவும் வைத்தார்

வானப்பேர் ஆறும் வைத்தார் வைகுந்தற்கு ஆழி வைத்தார்

கானப்பேர் காதல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.



பாடல் எண் : 08

கொங்கினும் அரும்பு வைத்தார் கூற்றங்கள் கெடுக்க வைத்தார்

சங்கினுள் முத்தம் வைத்தார் சாம்பலும் பூச வைத்தார்

அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார்

கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.



பாடல் எண் : 09

சதுர் முகன் தானும் மாலும் தம்மிலே இகலக் கண்டு

எதிர் முகம் இன்றி நின்ற எரியுரு அதனை வைத்தார்

பிதிர் முகன் காலன் தன்னைக் கால்தனில் பிதிர வைத்தார்

கதிர் முகம் சடையில் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.



பாடல் எண் : 10

மாலினாள் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன்

வேலினான் வெகுண்டு எடுக்கக் காண்டலும் வேத நாவன்

நூலினான் நோக்கி நக்கு நொடிப்பது ஓர் அளவில் வீழ

காலினால் ஊன்றியிட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே.



திருச்சிற்றம்பலம்

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

கண்ணாரமுதக் கடலே போற்றி.

சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

பராய்த்துறை மேவிய பரனே போற்றி

சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி

சீரார் திருவையாறா போற்றி

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி

பாகம் பெணுரு ஆனாய் போற்றி

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி

இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி

குவளைக் கண்ணி கூறன் காண்க 

அவளுந் தானும் உடனே காண்க

காவாய் கனகத் திரளே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி




சர்வம் சிவார்ப்பணம்!!!!!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-
வழி வைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே - அருள்தரு வேதநாயகியம்மை உடனுறை 
அருள்மிகு பால்வண்ணநாதர் திருவடிகள் போற்றி! 
- https://tut-temples.blogspot.com/2024/08/blog-post.html
பாடல் பெற்ற தலங்கள் (13) - திருவேட்களம் - https://tut-temples.blogspot.com/2024/07/13.html
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே...!!! - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_20.html
பாடல் பெற்ற தலங்கள் (12) - திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2020/04/12.html
பாடல் பெற்ற தலங்கள் (11) - திருநணா சங்கமேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2020/03/11.html

பாடல் பெற்ற தலங்கள் (10) - வரம் தரும் வயலூர் முருகன் - https://tut-temples.blogspot.com/2020/02/10_13.html
பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் -
https://tut-temples.blogspot.com/2020/01/9.html
பாடல் பெற்ற தலங்கள் (8) - திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் -
https://tut-temples.blogspot.com/2019/12/8.html
பாடல் பெற்ற தலங்கள் (7) - அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் -
https://tut-temples.blogspot.com/2019/11/7_29.html பாடல் பெற்ற தலங்கள் (6) - திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/11/6_13.html
பாடல் பெற்ற தலங்கள் (5) - திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில் -
https://tut-temples.blogspot.com/2019/10/5.html பாடல் பெற்ற தலங்கள் (4) - திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/09/4.html தரிசிப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் & பாடல் பெற்ற தலங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3.html
பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் -
https://tut-temples.blogspot.com/2019/08/2.html
பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - https://tut-temples.blogspot.com/2019/07/1.html

No comments:

Post a Comment