"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, October 5, 2019

கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் நவ சண்டி மஹாயாகம்

அன்பர்களுக்கு அன்பு வணக்கங்கள்.

நவராத்திரி கொண்டாட்டம் சிறப்பாக இருக்கின்றது. இந்த கால கட்டத்தில் கலைமகள், திருமகள் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்கின்றோம். கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோயிலில் சண்டி ஹோமம் பற்றி சில செய்திகள் பார்த்து இருக்கின்றோம். ஹோமம் செய்வதால் நமக்கு என்ன பலன் என்று வேடிக்கையாக வினவுவதை விட்டுவிட்டு, ஹோமம் செய்வது ஆன்மிகத்தில் நம் படிநிலை உயர்த்தும் வழிபாடு என்று உணர் வேண்டும்.

ஹோமம் என்பதற்கு சரியான தமிழ் சொல் யாகம் என்பதே. யாகம் என்பதற்கு அர்ப்பணித்தல் என்று பொருள் கொள்க. இறைவனுக்கு கருதும் பொருட்களை அர்பணித்தலே யாகம் ஆகும். யாகம் செய்வதும் பஞ்ச பூத வழிபாடு ஆகும். இது நம் தமிழ் மரபில் இருந்துள்ளது. இதுவும் தீப வழிபாட்டை ஒத்த வழிபாடு ஆகும். யஜூர் வேதத்தில் முப்பது வகையான யாகங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கினி ஹோத்திரம், தரிசபூர்ணமாஸம், சாதுர்மாசியம், பசு பந்தம், சோமம், தேவயக்ஞம், பிதுர் யக்ஞம், பூதயக்கியம், மனுஷ்ய யக்கியம், பிரம யக்கியம் ஆகிய பத்து யக்கியங்கள் பற்றியும் விஷ்ணு புராணம் குறிப்பிடுகிறது. இவற்றில் இறுதி ஐந்தும் பஞ்ச மகாயெக்கியங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. சிபி சக்ரவர்த்தி நூறு அஸ்வமேத யாகங்களை செய்ததால், இந்திர பதவி கிடைத்ததாக விஷ்ணு புராணத்தில் குறிப்புகள் உள்ளன.

கீழே  சில யாகங்களின் பெயர்களை அறிய தருகின்றோம்.

    அஸ்வமேத யாகம்
    புத்திர காமேஷ்டி யாகம்
    சத்துரு சங்கார யாகம்
    இராசசூய வேள்வி
    கனகதாரா யாகம்
    அமாவாசை நிகும்பலா யாகம்
    கிரிகொரஹ யாகம்
    சத சண்டி யாகம்
    சந்தான கோபால யாகம்
    புஷ்ப யாகம்
    நிகும்பலா யாகம்

சண்டி ஹோமம், உலகத்தின் அன்னையாகத் திகழும் சண்டி தேவியைக் குறித்து செய்யப்படும் சக்தி வாய்ந்த ஹோமம் ஆகும். நிறைவான வாழ்க்கை வாழ விடாமல் நம்மைத் தடுக்கும் திருஷ்டி தோஷங்கள் போன்றவற்றைப் போக்குவதற்கும், இப்பிறவி, முற்பிறவியில் ஏற்பட்ட சாபங்களைக் களைவதற்கும், உடல், ஆன்மா போன்ற இரண்டையும் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும், இந்த ஹோமம் வரப்பிரசாதமாக விளங்குகிறது.

சாக்த வழிபாட்டில் கடுமையான உக்கிரத்துடன் இருக்கும் பராசக்திக்காக நடத்தப்படுவதே சண்டி ஹோமம். அப்படி உக்கிரத்துடன் இருக்கும் பராசக்தியே சிவன், விஷ்ணு, பிரம்மா  என மும் மூர்த்திகளை படைத்தார் என்கிறது புராணம். தேவியின் மீது நம் அன்பை காட்ட, தேவியின் அருள் பெற்று நம் தேவைகளை நிறைவேற்றி கொள்ள என இரு விதமாக இந்த ஹோமம் செய்யப்படலாம். சாக்த வழிபாட்டில் அனைத்து ஹோமங்களூக்கும் தலையாய ஹோமம் இது என கூறலாம். 

கேட்டதை உடனே அருளும் சக்தி படைத்தது இந்த ஹோமம். மிக அதீத பொருட்செலவு மற்றும் மிக உக்ரமானது என்பதால் இந்த ஹோமம் அடிக்கடி நிகழ்த்தப்படுவதில்லை. ஒவ்வொரு அத்தியாய பாராயணத்தின்  பொழுதும் தேவிக்கு அக்னியில் புடவை சாற்றப்படும். மொத்தம் பதினான்கு புடவைகள் சாற்றப்படும். உக்ரகம் அதிகம் என்பதால் வீட்டில் செய்யப்படுவதில்லை. கோவில்கள் அல்லது மடங்கள், மண்டபங்கள் போன்றவற்றில் மட்டுமே செய்விக்கப்படுகிறது. எவ்வளவு பரிகாரங்கள் செய்தும் பலன் இல்லாத நிலை,கிரகங்களினால் பிரச்சனைகள், பயம், மரண பயம், எதிரிகள் தொல்லை அழிய, எவ்வளவு பிரயத்தனம் செய்தும் முடிக்க முடியாத காரியங்கள் வெற்றி பெற, செல்வம் சேர இந்த ஹோமத்தை செய்தோ அல்லது கலந்து கொண்டோ தேவியின் அருளை பெறலாம்.

பாராயண பலச்ருதியிலேயே இந்த பாராயணத்தை செய்பவருக்கு மட்டுமின்றி இதை உடனிருந்து கேட்பவருக்கும்  அதீத பலன்கள் கிட்டும் என கூறப்பட்டுள்ளது.   மஹாலக்ஷ்மி, சரஸ்வதி,மஹாகாளி என மூவருக்குமே செய்யப்படும் இந்த ஹோமத்தில் 700 ஸ்லோகங்கள் வரை கூறப்படும். வெளியில் கூற முடியாத காரியங்கள் வெற்றி பெற வேண்டுமானால் சண்டியை அணுகுவதை தவிர வேறு வழி இல்லை.

இத்துணை விளக்கங்களை கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோயிலில் காணலாம்.







இந்த நவ சண்டி மஹாயாகம் கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோயிலில் நவராத்திரி விழா நிறைவில் சிறப்பாக  நடைபெற்று வருகின்றது. சென்ற ஆண்டு நம் தளம் சார்பில் ஒரு அத்தியாயத்திற்கு உபயம் செய்தோம்.


இனி சண்டி ஹோம காட்சிகளை காண்போமா?


















சிவாச்சாரியார் குமார் குருக்கள் சண்டி ஹோமம் பற்றி சில நிமிடம் விளக்கி கூறினார்.










அக்கினி நன்றாக வார்க்கட்ட நிலையில்...













































மேலே சென்ற ஆண்டில் நடைபெற்ற யாக காட்சிகளை காணலாம். அடுத்த பதிவில் அழைப்பிதழ் பகிர்கின்றோம்.


முந்தைய பதிவுகளுக்கு:-


 சகல கலாவல்லியே! - நவராத்திரி தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_93.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/10/tut-3.html

 TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2)  - https://tut-temples.blogspot.com/2019/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temples.blogspot.com/2019/09/tut.html

கொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவமும், நவராத்திரி அழைப்பிதழும் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_33.html

நவராத்திரி அழைப்பிதழுடன் வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகா சரணம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_28.html

நவராத்திரி விழா கொண்டாட வாருங்கள் - அருள்மிகு சுந்தர மகாலிங்கசுவாமி நவராத்திரி திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_5.html

நவராத்திரி சிறப்பு பதிவு - அம்மன் நெய்க்குளம் தரிசனம் (5)

நம் தள வாசகர்கள் அனைவரும் நாம் தினமும் இங்கே அளித்து வந்த நவராத்திரி பதிவுகளை கண்டு மகிழ்ச்சி கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். நாம் இது போன்ற ஒரு நிகழ்வினைக் காண,அன்னை நமக்கு கட்டளை இடுவார் என்று நம்பவில்லை. கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் பொதுவாக நாம் பேசிய போது, விஜயதசமி அன்று நடைபெறும் நெய்க்குளம் தரிசனம் பற்றி குருக்கள் கூறினார்கள். நாமும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டோம். அதன் பின்னர் மறந்தும் விட்டோம்.

நவராத்திரி ஏழாம் நாள் தொடர்ந்து நாம் இங்கே நவராத்திரி பதிவு தரவில்லை.அதற்கு முன்பாக இந்த அருள் காட்சியை அனைவரும் பெற வேண்டி இந்த பதிவைத் தருகின்றோம். நாம் இங்கே ஒரு கருவி மட்டுமே. அனைத்தும் அன்னையின் அருளாலே.

இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பாக, திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் பற்றிய பகிர்வைக் கண்டோம். இதே அருள் வெளிப்பாடு கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள அன்னையின் தரிசனத்தில் கண்டோம். இரண்டு கோயில்களிலும் உள்ள நெய்க்குளம் தரிசனம் காணுங்கள்.

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் நவராத்திரி காலத்தில் மிகவும் பிரசத்தி பெற்றது. காலம் தாழ்த்தி பதிவினை தருவது நமக்கு சற்று மாணவருத்தமாக உள்ளது.

அதென்ன நெய்க்குளம் தரிசனம் ?


திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் நவராத்திரி காலத்தில் மிகவும் பிரசத்தி பெற்றது. விஜயதசமி அன்று கருவறைக்கு முன்பாக 15 அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர்.  அத்துடன்  புளி சாதம், தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும். 
சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர். அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது என்று நம்பப்படுகிறது.

இதுதான் நெய்க்குள தரிசனம். நவராத்திரி நிகழ்வின் மிகவும் பிரசித்தி பெற்ற  தரிசனம். திருமீயச்சூரில்  உள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில் மட்டுமே கிடைக்கப் பெறும் தரிசனம்.இதோ உங்களுக்காக!


நெய்க்குள தரிசனம் 


மேலே நாம் கண்ட தரிசனத்தை அடுத்து, கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் கோயிலில் பெறப் போகின்றோம். இப்படியொரு தரிசனத்தை அன்னை அருள்வாள் என்று நாம் கனவில் கூட நினைத்ததில்லை. நாம் நமக்கு இது வேண்டும்? அது வேண்டும்? என்று கேட்டுக் கொண்டே போகலாம்.ஆனால் அன்னைக்குத் தானே தெரியும்,தம்  பிள்ளைக்கு என்ன தர வேண்டும் என்று ? அப்படிதான் அமைந்தது இந்த ஆண்டு விஜய தசமி தரிசனம்.

நாம்  அன்றைய தினம் திரு அண்ணாமலையார் தரிசனம் பெற்று, அன்று மாலை 6 மணிக்கு கூடுவாஞ்சேரி வந்தோம். நேரம் ஆகி விட்டதோ? என்று மனம் பதைபதைத்தது. கோயில் சென்றோம்.  நல்ல கூட்டம்.கூட்டத்தில் ஒருவனாய் நாம் இருந்தோம். அன்று லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து கொண்டு இருந்தார்கள். சரியாக 7 மணி அளவில் அம்மன் புகழ் பாடல்கள் பாடி, சங்கல்பம் செய்தோம். சற்று நேரத்தில் தீபாராதனை. நமக்கு நெய்க்குள தரிசனம் பற்றி தெரியவில்லை. திரையை விலக்கிய பின்னரே, குருக்கள் நெய்க்குளம் தரிசனம்  பற்றிய செய்தியைச் சொன்னார். மெய்  மறந்தோம். அன்னையின் அன்பில் பரவசம் அடைந்தோம். அன்று காலை சண்டி ஹோமம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாலை குங்கும அர்ச்சனையும் நடைபெற்றது.
இதோ..கூடுவாஞ்சேரி லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம்










அம்மன் நெய்க்குளம் தரிசனம் பெற்றீர்களா? ஒரே கல்லில் ரெண்டு மாங்கா என்பது இதுதான் போலும். ஒரே பதிவில் திருமீயச்சூர் மற்றும் கூடுவாஞ்சேரியில் உள்ள லலிதாம்பிகை அம்மனின் தரிசனம் அதுவும் நெய்க்குளம் தரிசனம் என்றால் சும்மாவா? இப்படியொரு பதிவை நாம் அளிக்க இருக்கின்றோம் என்று  நாமும் நினைக்கவில்லை. எல்லாம் அவள் அருளாலே தான்.
திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகை அம்மன் பெற அன்னையிடம் பிரார்த்திக்கின்றோம். கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் பற்றி இனிவரும் பதிவுகளில் சொல்ல, விநாயகரிடம் வேண்டுகின்றோம்.
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை                            
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  – கோலஞ்செய்                                 
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு                           


சங்கத் தமிழ் மூன்றும் தா!

இது ஏதோ சாதாரணமான பாடல் என்று நினைக்காதீர்கள். பல முறை படித்துப் பார்த்தால் பல செய்திகளை நமக்கு நம் அவ்வைப் பாட்டி சொல்வது புரியும்.


Friday, October 4, 2019

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நவராத்திரி விழாவின் தொடக்கத்தை திருக்கச்சூரில் உள்ள கோயிலில் நம் தல அன்பர்களால் ஆரம்பித்தோம். சற்று நேரத்தில் குருக்கள் அடியவர்கள் பாட, யாம் கேட்க வேண்டும் என்றார்கள். அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்த போது, திரு.செல்லப்பன் அவர்கள் திருப்புகழ் ஒன்றை பாடுவதாக சொல்லி ஆரம்பித்தார். அந்த திருப்புகழை அனைவரும் பாட... குறைந்தபட்சம் படிக்காவாவது வேண்டும் என்பதே இந்தப் பதிவின் நோக்கம். அடுத்து கைத்தல நிறைகனி என்ற பாடலும், சாய் பாபா பாடலுமாக தொடர்ந்தோம். எமது தந்தையும் மாசில் வீணையும் என்ற பதிகமும், சில திருக்குறளும் பாட நவராத்திரி எங்களுக்கு குதூகலமாக ஆரம்பமானது.

திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா  உன் வேல் தடுக்கும்
நீ கொடுத்த தமிழ் அல்லவா புகழ்  எடுத்தது -அந்த
தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது
முருகா முருகா முருகா.

நீ சிரித்த பிறகல்லவோ சிரிப்பு வந்தது
உன் நினைவிருக்கும் மனம் அல்லவோ பெருமை கொண்டது

சந்தனத்தில் நிறமெடுத்ததால் அழகன் ஆனவன்
சரவணத்தில்  உருவெடுத்ததால்  வேதமானவன்
முருகா முருகா முருகா

கந்தன் என்னும் பேரெடுத்ததால் கருணை ஆனவன்
அந்த கருணையினால் தொண்டருக்கும் தொண்டனானவன்

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா, உன் வேல் தடுக்கும்
முருகா…… உன் வேல் தடுக்கும்!





திருப்புகழின் திருப்புகழை இதை விட எளிதாக சொல்ல முடியுமா? திருப்புகழ் யார் பாடியது? இன்று குருபூஜையில் அருள் தரும் அருணகிரிநாதர் பாடியது. ஏற்கனவே அவரைப் பற்றி சிறிது பார்த்தோம். இன்றைய நன்னாளில் மீண்டும் திருப்புகழ் பற்றி சிந்திப்போம்.

திருப்புகழ் என்ற பெயரைப் பின்னால் யாரும் வைக்கவில்லை. அருணகிரியே ஒரு பாடலில் திருப்புகழ் என்று குறிப்பிடுகிறார்.

பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
பட்சியெனும் உக்ர துரகமும் நீபப்
பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றிய பனிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே

'முருகக் கடவுளை முன்னிறுத்திப் பாடப்பட்டதுதான் திருப்புகழ்னாலும் கூட, அதில் மற்ற சுவாமிகள் பற்றியும் உருகி உருகிப் பாடியிருக்கார் அருணகிரிநாதர்.'' என்பது கூடுதல் சிறப்பு.

திருப்புகழில் இப்போது கிடைத்திருப்பது 1307 பாடல்கள்தான். இன்னும் பல்லாயிரம் பாடல்கள் இருந்ததாகவும் அவை மறைந்து போனதாகவும் கூறுகிறார்கள்.


திருப்புகழைப் பாடிய அருணகிரி அந்தப் பாடல்களை ஓலைசுவடிகளில்  எழுதி வைக்கவில்லை. யாத்திரையாக சென்று ஆலய தரிசனம் செய்த கோயில்களில்  இருக்கும் அன்பர்கள் அந்தப் பாடல்களை ரசித்து எழுதி வைத்தார்கள். அப்படி எழுதி வைத்த பாடல்கள்தான் இன்று தப்பிப் பிழைத்து நமக்குக் கிடைத்திருக்கின்றன.திருப்புகழை அருணகிரி அறிவால் பாடவில்லை. அறிவால் இப்படி பாட முடியுமா ?




முருகன் அருளால் பாடினார்.  அருளால் பாடியதால் தான் திருப்புகழ் இன்னும் அருள் தருகின்றது.தமிழில் எந்த நூட்களுக்கு திரு என்று பெயர் சேர்ந்து வருகின்றதோ, அவையெல்லாம் இறையால் அருளப்பட்டவை, திருக்குறள்,திருவாசகம், திருப்புகழ் என் கூறலாம். திருப்புகழை முருகன் அருணகிரியை வைத்து  பாட வைத்தான். அந்தப் பாடல்களில் எத்தனையெத்தனை சந்தநயம்! எத்தனை தாள வகைகள் உண்டோ அத்தனையும் திருப்புகழ் பாடல்களில் உள்ளனவாம். அத்தோடு அளவிட முடியாத கவிச்சுவை வேறு. சொல்,பொருள்,இன்பம் என அனைத்தும் ஒருங்கே பெற்றது திருப்புகழ்.

இது மட்டுமா?

வேதம் வேண்டாம்,சகல வித்தை வேண்டாம்
நாதம் வேண்டாம்,நாத நூல் வேண்டாம், ஆதி
குரு புகழை மேவுகின்ற கொற்றவன்தாள்
போற்றும் திருப்புகழை கேளீர் தினம்

என்பது ஆன்றோர் வாக்கு. சரி.வாருங்கள் மூழ்கி சில முத்தெடுக்கலாம்.




கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக ...... னடிபேணிக்

கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை ...... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய ...... மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே

முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை ...... இபமாகி

அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ...... பெருமாளே.

விநாயகர் துதி யுடன் திருப்புகழ் தொடங்குகின்றது. இந்த பாடலில் ஒரு சிறப்பு உள்ளது. இத்திருப்புகழில் உள்ள உயிர் எழுத்துக்களை மட்டும் கூட்டினால் 200 எழுத்துக்கள் வரும். சில ஊர்களில் 100 என்பதை பிள்ளையார் என்று கூறுவது மறைவு.இங்கு 200 வருகின்றது..எனவே இத்திருப்புகழை "இரட்டைப் பிள்ளையார்" என்பார்கள்.


அட..ஆரம்பமே அருமையாக உள்ளது. நமக்குத் தெரிந்த வரை "முத்தைத்தரு பத்தித் திருநகை" சில முறை கேட்டிருக்கின்றோம். இன்று "நாத விந்துக லாதீ நமோநம" என்ற பாடல் கேட்டோம். இன்னும் ஒரு நிகழ்வோடு பதிவை முழுமை செய்வோம்.

முருகனை வழிபடும் அடியாரைக் கண்டால் எமனும் பயப்படுவார். அருணகிரிநாதருக்கு அப்படியே. 
முருகன் அருள் பெறுவதற்கும் முன் அப்படியே பயப்படுகிறார்.

தமர குரங்களுங் காரி ருட்பி ழம்பு
மெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ழுந்தும் 
தழலுமிழ் கண்களுங் காள மொத்த கொம்பு
முளகதக் கடமாமேல் தனிவரு மந்தகன் பாசம் விட்டெ றிந்து
அடவரு மென்றுசிந் தாகு லத்தி ருந்து தமரழ 
மைந்தருஞ் சோக முற்றி ரங்க மரணபக் குவமாநாள்
என்று கூறுகின்றார். தமிழ்க் கடவுள் முருகன் அருள் பெற்ற பின்னர் எமனுக்கே சவால் விடுகின்றார்.
தண்டா யுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத்
திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலுனக்குத்
தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டா யடாவந்த காவந்து பார்சற்றென் கைக்கெட்டவே.

என்று எமனையே முடிந்தால் என்கைக்கு எட்டும்படி வந்து பார் என்று சவால் விடுகின்றார் என்றால் அது முருகன் அருள் முன்னிற்கத் தான். இதன் மூலம் நாம் உணர்வது யாதெனின் வேலும் மயிலும் சேவலும் துணையிருக்க பயமேன்?

இது போன்ற திருப்புகழ் செய்திகளை இனிவரும் பதிவுகளில் அறிய முருகன் அருள் புரியட்டும். சொல்,பொருள்,இன்பம் என அனைத்தும் பொருந்திய திருப்புகழைப் பாட பாட வாய் மட்டுமா மணக்கும்? பாடுபவர்களின் வாழ்க்கையும் மணக்கும்.


வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
     மாயமதொ ழிந்து ...... தெளியேனே

மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
     மாபதம ணிந்து ...... பணியேனே

ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
     ஆறுமுக மென்று ...... தெரியேனே

ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
     தாடுமயி லென்ப ...... தறியேனே

நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
     நானிலம லைந்து ...... திரிவேனே

நாகமணி கின்ற நாதநிலை கண்டு
     நாடியதில் நின்று ...... தொழுகேனே

சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
     சோகமது தந்து ...... எனையாள்வாய்

சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
     சோலைமலை நின்ற ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
வாதினை அடர்ந்த வேல் விழியர் தங்கள்
     மாயம் அது ஒழிந்து ...... தெளியேனே.

மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து,
     மாபதம் அணிந்து ...... பணியேனே.

ஆதியொடும் அந்தம் ஆகிய நலங்கள்
     ஆறுமுகம் என்று ...... தெரியேனே.

ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டது
     ஆடும் மயில் என்பது ...... அறியேனே.

நாதமொடு விந்து ஆன உடல் கொண்டு
     நானிலம் அலைந்து ...... திரிவேனே.

ந அகம் அணிகின்ற நாத! நிலை கண்டு
     நாடி அதில் நின்று ...... தொழுகேனே.

சோதி உணர்கின்ற வாழ்வு சிவம் என்ற
     ச அகம் அது தந்து ...... எனை ஆள்வாய்.

சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
     சோலைமலை நின்ற ...... பெருமாளே.
பதவுரை
      சூரர் குலம் வென்று --- சூரபன்மனாதி அவுணர் குலத்தை அழித்து வெற்றி பெற்று,
     வாகையொடு சென்று --- வெற்றிமாலை சூடிச்சென்று,
     சோலை மலைநின்ற --- பழமுதிர்சோலை என்னும் திருமலை மீது எழுந்தருளி நின்ற,
     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
      வாதினை அடர்ந்த --– வாது புரியும் தன்மையே நிறைந்த,
     வேல்விழியர் தங்கள் --- வேல் போன்ற கண்களுடைய பெண்களினால் வரும்,
     மாயம் அது ஒழிந்து --- மாயத்தை அறவே நீங்கி,
     தெளியேன் --- அடியேன் தெளிவடையவில்லை;
     மாமலர்கள் கொண்டு --- பெருமையுடைய மலர்களைக் கொண்டு,
     மாலைகள் புனைந்து --- திருமாமலைகள் தொடுத்து,
     மா பதம் அணிந்து --- தேவரீருடைய பெருமைமிக்க திருவடிகளிற் சூட்டி,
     பணியேன் --- அடியேன் ஒருபோதும் பணிந்திலேன்,
     ஆதியொடும் அந்தம் ஆகிய நலன்கள் --- முற்றறிவுடைமை முதலாக முடிவிலாற்றலுடையை ஈறாகவுள்ள ஆறு அருட்குணங்களே
     ஆறுமுகம் என்று --- தேவரீருக்கு ஆறுமுகங்களாக அமைந்திருக்கின்றன என்பதை,
     தெரியேன் --- அடியேன் இதுகாறும் தெரிந்து கொள்ளாதிருந்தேன்,
     ஆன தனி மந்தரரூப நிலை கொண்டு --- எல்லாக் கலைகளுக்கும் எல்லா தேவர்களுக்கும் பிறப்பிடமாக விளங்கும் ஒப்பற்ற ஒருமொழியாகிய ஓங்கார வடிவத்தைக் கொண்டு,
     அது ஆடும் மயில் என்பது அறிவேன் --- அந்த மயில் ஆடும் என்பதை அடியேன் அறிந்துகொண்டேனில்லை;
     நாதமொடு விந்து ஆன உடல் கொண்டு --- நாதவிந்துக்களான உடம்பை நிலையெனக் கொண்டு,
     நால் நிலம் அலைந்து --- நான்கு வகையான திணைகளுடன் கூடிய பூ மண்டலத்தில் வீணே அலைந்து,
     திரிவேன் --- அடியேன் திரிந்து கெடுகின்றேன்.
     ந அகம் அணிகின்ற நாத --- நான் அல்ல என்று அன்பர்கள் அர்ச்சிக்கும் சீவபோதமாகிய மலரை அணிகின்ற தலைவரே!
     நிலைகண்டு --- தேவரீருடைய நிலையைக் கண்டு,
     நாடி அதில் நின்று --- அந்நிலையை உற்றுப்பார்த்து அவ்வகப் பார்வையில் நிலைத்துச் சலனமற்று நின்று,
     தொழுகேன் --- ஒருபோதும் தொழுதேனில்லை;
     சோதி உணர்கின்ற வாழ்வு --- அருட்சோதியை உணர்கின்ற சுகவாழ்வே,
     சிவம் என்ற --- மங்கலம் என்று கூறுகின்ற,
     ச அகம் அது தந்து --- அது நான் என்ற சிவோகம் பாவனையைத் தந்து,
     எனை ஆள்வாய் --- அடியேனை ஆட்கொண்டருள்வீர்.

பொழிப்புரை

         சூரபன்மனாதி அவுணர்களின் குலத்தை வேருடன் களைந்து வெற்றிமாலை சூடிக்கொண்டு வந்து பழமுதிர் சோலையென்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே!

         வாது செய்யுந் தன்மை நிறைந்த வேல் போன்ற கூரிய கண்களையுடைய பெண்களின் மாயையை அறவே ஒழித்து தெளிவு பெற்றேனில்லை;

     பெருமை தங்கிய நறுமலர்கள் எடுத்து திருமாலைகளாகத் தொடுத்து தேவரீருடைய பெருமைமிகுந்த திருவடிகளில் அணிந்து தொழுகின்றேனில்லை;

     முற்றறிவு முதலாக முடிவிலாற்றலுடைமை ஈறாகவுள்ள அருட்குணங்கள் ஆறுமே ஆறு திருமுகங்களாக அமைந்தன என்பதை அறிந்தேனில்லை;

     எல்லாக் கலைகட்கும் பிறப்பிடமான ஓகாதவடிவத்தைக் கொண்டு தேவரீருடைய ஊர்தியாகிய மயில் ஆடுகின்றது என்ற நுட்பத்தையும் அடியேன் உணர்கின்றேனில்லை;

     நாதவிந்துக்களான இவ்வுடம்பை விடாதுகொண்டு குறிஞ்சி மருதம் நெய்தல் முல்லை யென்று நான்கு வகையாகப் பிரித்துள்ள உலகில் அவமே அலைந்து திரிகின்றேன்;

     நான் அல்ல என்று சீவபோதத்தை மலராக அன்பர்கள் அர்ச்சிக்க அம்மலரினையணிகின்ற தலைவரே!

     உமது திருவருள் நிலையை ஊன்றிப் பார்த்து அந்நிலையில் உறைத்து நின்று தொழுகின்றேனில்லை.

     அருட்சோதியை யுணர்கின்ற சுகவாழ்வே சிவானந்தப் பேறு என்று தெளிந்து அது நான் என்ற சிவோகம் பாவனையைத் தந்து அடியேனை யாட்கொண்டருள்வீர்.

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (4)

அனைவருக்கும் நவராத்திரி சிறப்பு வாழ்த்துக்கள்.

இன்றைய பதிவில் அம்மனின் நான்காம்  நாள் அலங்காரம் காண இருக்கின்றோம். நவராத்திரி பதிவுகள் அனைத்தும் கண்களுக்கு விருந்தாய் அமைந்து கொண்டிருக்கின்றது. எனவே பதிவுகளில் அம்மன் அருள் பெற காட்சிப் படங்களை இணைத்து வருகின்றோம். அனைவரும் கண்டு களித்து அம்மன் அருள் பெறுக !

துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி மூன்று சக்திகளும் நவராத்திரியின் 9 நாட்களும் எந்தெந்த வடிவில் நமக்கு காட்சித் தருகிறார்கள்? அவர்களை எப்படி வணங்க வேண்டும்? என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்? அதனால் என்ன பலன் கிடைக்கும்? என்பன போன்றவற்றை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

முதலில் அம்மனின் அலங்காரம், தரிசனம் பெற்று விடுவோம்.





கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் ஸ்ரீ லலிதாம்பாள் கஜலட்சுமி அலங்காரத்தில்



கூடுவாஞ்சேரி  வேலி அம்மன் கோயிலில்  கஜலட்சுமி அலங்காரத்தில் அன்னை தரிசனம்.


முதல் நாள் 

வடிவம் : மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)
பூஜை: 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.
திதி: பிரதமை
கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : மல்லிகை, சிவப்புநிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டை, பருப்பு வடை.
ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.
பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.

இரண்டாம் நாள் 

வடிவம் : ராஜராஜேஸ்வரி (மகிஷனை வதம் செய்ய புறப்படுபவள்)
பூஜை : 3 வயது சிறுமியை கவுமாரி வடிவமாக வணங்க வேண்டும்.
திதி : துவிதியை
பூக்கள் : முல்லை, துளசி, மஞ்சள்நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : புளியோதரை, எள் பாயாசம், தயிர்வடை, வேர்க்கடலை சுண்டல், எள் சாதம்.
ராகம் : கல்யாணி ராகத்தில் கீர்த்தனைகள் பாடலாம்.
கோலம் : பச்சரிசி  மாவினால் கோலம் போட வேண்டும்.
பலன் : நோய்கள் நீங்கும், உடல் ஆரோக்கியம் பெருகும்.



மூன்றாம் நாள் 

வடிவம் : வாராகி (மக்கிஷனை அழித்தவள்)
பூஜை : 4 வயது சிறுமியை கல்யாணி வேடத்தில் பூஜித்து வணங்க வேண்டும்.
திதி : திருதியை
கோலம் : மலர் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : கோதுமை சர்க்கரைப் பொங்கல், காராமணி சுண்டல்.
ராகம் : பாட வேண்டிய ராகம் காம்போதி.
பலன் : தன தானியம் பெருகும், வாழ்வு சிறப்பாக அமையும்.

நான்காம் நாள்

வடிவம் : மகாலட்சுமி (சிங்காசனத்தில் வெற்றி திருக்கோலம்)
பூஜை : 5 வயது சிறுமிக்கு ரோகிணி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.
திதி : சதுர்த்தி.
கோலம் : அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிட வேண்டும்.
பூக்கள் : செந்தாமரை, ரோஜா மற்றும் ஜாதி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.
நைவேத்தியம் : தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்துவடை, பட்டாணி சுண்டல்.
ராகம் : பைரவி ராகத்தில் பாடலாம்.
மாலை : கஸ்தூரி மஞ்சள், முத்து போன்றவற்றால் மாலை செய்து போடலாம்.
பலன் : கடன் தொல்லை தீரும்.

ஐந்தாம் நாள்

வடிவம் : மோகினி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்)
பூஜை : 6 வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.
திதி : பஞ்சமி.
கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.
பூக்கள் : கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.
நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல்.
ராகம் : பஞ்சமாவரணை கீர்த்தனைகள் பாட வேண்டும். பந்துவராளி ராகமும் பாடலாம்.
பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

ஆறாம் நாள்

வடிவம் : சண்டிகாதேவி (சர்பராஜ ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கோலம்)
பூஜை : 7 வயது சிறுமியை இந்திராணி, காளிகாவாக நினைத்து பூஜிக்க வேண்டும்.
திதி : சஷ்டி.
கோலம் : கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்.
பூக்கள் : பாரிஜாதம், விபூதிப் பச்சை, செம்பருத்தி, சம்பங்கி, கொங்கம்.
நைவேத்தியம் : தேங்காய் சாதம், தேங்காய் பால்பாயாசம், ஆரஞ்சு பழம், மாதூளை, பச்சைப்பயறு சுண்டல், கதம்ப சாதம்.
ராகம் : நீலாம்பரி ராகத்தில் பாடலாம்.
பலன் : வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.

ஏழாம் நாள்

வடிவம் : சாம்பவித் துர்க்கை (பொற் பீடத்தில் ஒரு பாதம் தாமரை மலரில் இருக்க வீணை வாசிக்கும் தோற்றம்)
பூஜை : 8 வயது சிறுமியை பிராக்மி மகா சரஸ்வதி, சுமங்கலியாக கருதி பூஜிக்க வேண்டும்.
திதி : சப்தமி
கோலம் : நறுமண மலர்களால் கோலமிட வேண்டும்.
பூக்கள் : தாழம்பு, தும்பை, மல்லிகை, முல்லை.
நைவேத்தியம் : எலுமிச்சம் பழசாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம், புட்டு.
ராகம் : பிலஹரி ராகத்தில் பாடி பூஜிக்க வேண்டும்.
பலன் : வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும்.



எட்டாவது நாள்

வடிவம் : நரசிம்ம தாரினி (கரும்பு வில்லுடன் சுற்றிலும் அணிமா முதலிய அஷ்ட சக்திகளுடன் ரக்த பீஜனை சம்காரம் செய்த வடிவம்)
பூஜை : 9 வயது சிறுமியை மகா கவுரியாக பூஜிக்க வேண்டும்.
திதி : அஷ்டமி.
கோலம் : பத்ம கோலம்
பூக்கள் : மருதோன்றி, சம்பங்கி பூக்கள், வெண்தாமரை, குருவாட்சி.
நைவேத்தியம் : பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை சுண்டல்.
ராகம் : புன்னகை வராளி ராகத்தில் பாடி பூஜிக்கலாம்.
பலன் : நமக்கு இஷ்ட சித்தி உண்டாகும்.

ஒன்பதாம் நாள் 

வடிவம் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி (கையில் வில, பாணம், அங்குசம், சூலத்துடன் தோற்றம்)
பூஜை : 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் வழிபட வேண்டும்.
திதி : நவமி
கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.
பூக்கள் : தாமரை, மருக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள்.
நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை, சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை.
ராகம் : வசந்த ராக கீர்த்தனம் பாடி தேவியை மகிழ்விக்க வேண்டும்.
பலன் : ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கியமாக இருப்பார்கள்.

பத்தாவது நாள்

வடிவம் : அம்பிகை. இவளுக்கு விஜயா என்ற பெயரும் உண்டு (ஸ்தூல வடிவம்)
திதி : தசமி
பலன் : புரட்டாசி மாதம் சுக்ல பட்சமியே விஜயதசமி. மூன்று சக்திகளும், தீய சக்தியை அழித்து, வெற்றி கொண்டு அனைவருக்கும் நன்மைகளை அள்ளித்தந்து அருள் பாலிக்கும் சுபநாள். இன்று தொடங்கும் எல்லா காரியங்களும் வெற்றி மீது வெற்றி பெறும்.
நைவேத்தியம் : பால் பாயாசம், காராமணி சுண்டல், இனிப்பு வகைகள். பூக்கள் : வாசனைப் பூக்கள்.

சுண்டல் நிவேதனம் :

நவராத்திரியில், அம்பாளுக்கு விதவிதமான சுண்டல், பாயாச வகைகள் நிவேதனம் செய்யப்படுகிறது. அறிவியல் ரீதியாகவும் இதற்கு காரணம் உண்டு.. தேவர்களுக்கு சிவன், விஷ்ணு அமிர்தம் தந்து, அவர்களை காத்தது போல, பூமி உயிர்வாழ “மழை என்னும் அமிர்தத்தைத் தருகிறார்கள்.

இதனால் பூமி “சக்தி பெறுகிறது. அந்த சக்தி எனும் பெண்ணுக்கு, பூமியில் விளைந்த விதவிதமான தானியங்கள் பக்குவப்படுத்தப்பட்டு நிவேதனம் செய்யப்பட்டது. அதில் சுண்டல் பிரதான இடம் பெற்றது. நவராத்திரி காலமான புரட்டாசி, ஐப்பசியில் அடைமழை ஏற்படும். இதனால் தோல்நோய் போன்றவை அதிகமாகும். இதைப் போக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு.  

மூன்றாம் நாள் அலங்காரம் தரிசனம் செய்வோமா?


அன்னபூரணி அலங்காரம் 







அழகின் சிரிப்பில் 




                                                            வேலி அம்மன் கோயிலில்





                                                           புவனேஸ்வரி அலங்காரம்



                               
இந்த புவனத்தைக் காக்கும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி புவனேஸ்வரி அம்மனின் அலங்காரம் கண்டோம். நவராத்திரி பதிவுகளில் மீண்டும் சிந்திப்போம்.

Thursday, October 3, 2019

சகல கலாவல்லியே! - நவராத்திரி தரிசனம்

அன்பர்களுக்கு அன்பு வணக்கங்கள்.

நவராத்திரி கொண்டாட்டம் சிறப்பாக இருக்கின்றது. இந்த கால கட்டத்தில் கலைமகள், திருமகள் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்கின்றோம். மேலும் சகலகலா வல்லிமாலை படிப்பதும் கேட்பதும் மிக உத்தமம்.

நம் தமிழ் மொழியில் இல்லாத சிறப்பா? தமிழ் மொழியின் அருமையை பற்றி பேச ஒரு நாள் போதாது..எழுத ஒரு பதிவு போதாது. எத்தனை அருளாளர்கள், மகான்கள். எத்தனை பக்தி நூல்கள். இன்றைய பதிவில் நாம் சகல கலாவல்லிமாலை படிக்க இருக்கின்றோம். இந்த பதிவை படிக்கும் உங்களிடமும் இதைத் தான் கேட்கின்றோம். இது போன்ற தமிழ் சிறப்பை எடுத்து கூறும் நூட்களை, பாடல்களை எங்களுக்கு தொட்டுக் காட்டுங்கள்.

 எந்த ஒரு கலையில் தேர்ச்சி பெறவும், எந்த ஒரு தொழிலில் வளர்ச்சி பெறவும். அன்னை கலைவாணியின் அருள் அவசியம். அந்த கலைவானியையே கண்ணால் கண்ட ஞானிகளின் வாக்கில் இருந்து வரும் ஒவ்வொரு சொல்லுமே நமது கர்ம வினைகளை தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் ஆகும்.

இந்த தொகுப்பில் சகலகலாவல்லி மாலை பற்றி சிறிது காண்போம். சகலகலாவல்லி மாலை என்ற நூலை கருவாக்கியவர் குமரகுருபரர் ஆவார். யார் இந்த குமரகுருபரர்?

குமர குருபரர். 17 ம் நுற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய ஞானி. முருகன், தேவி சரஸ்வதி இருவரையும் கண்ணால் கண்டவர். பல அதிசயங்களும், அற்புதங்களும் செய்தவர்.

குமரகுருபரர் திருவைகுண்டம் என்னும் ஊரில் பிறந்தவர். இவரது தந்தையார் சண்முக சிகாமணிக் கவிராயர்; தாயார் சிவகாமி அம்மையார். குமரகுருபரர் ஐந்து வயதுவரை வாய் பேசாது இருந்தார். தங்கள் மகன் வாய் பேசாது இருப்பதைக் கண்ட குமரகுருபரரின் பெற்றோர் மனம் வருந்தினர்; குமரகுருபரருடன் திருச்செந்தூருக்குச் சென்றனர். அங்கே முருகன் அருளால் குறை நீங்கப் பெற்று முருகனைப் போற்றும் வகையில் கந்தர் கலிவெண்பாப் பாடலைப் பாடினார். இவரது காலம் பதினேழாம் நூற்றாண்டு.

இவர் தமிழ்நாட்டுத் திருநெல்வேலி மாவட்டத்தில், சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார். பிறவியில் ஊமையாகப் பிறந்த இவருக்கு ஐந்து வயதுக்குப் பின்னரே பேசும் திறன் அமைந்தது எனப்படுகிறது. கந்தர் கலி வெண்பா, கயிலைக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றிய குமரகுருபரர் மதுரைக்குச் சென்றார். அக்காலத்தில் மதுரையில் இருந்து அரசு புரிந்த திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கு இணங்க மதுரை மீனாட்சி அம்மன் பெயரில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை இயற்றினார். பின்னர் தருமபுரம் ஆதீனத்தில், மாசிலாமணி தேசிகர் என்பவரிடம் சீடராக இருந்தார். அக்காலத்தில் மேலும் பல நூல்களை எழுதிய குமரகுருபரர்,காசிக்குப் பயணமானார்.



அங்கே காசி மடம் என அழைக்கப்பட்ட ஒரு மடத்தை நிறுவிச் சைவ சமயத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதன் கிளையொன்றைத் திருப்பனந்தாளிலும் நிறுவினார்.
கயிலாசபுரத்தில் அடிகள் பிறந்த வீட்டுப் பகுதி அடிகளின் மடமாக 31.8.1952 இல் அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகளால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

குமரகுருபரர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து, தவழ்ந்து, வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்து காவிரியாற்றங் கரையிலும் கங்கை ஆற்றங்கரையிலும் மடமமைத்து தமிழையும் சைவத்தையும் வளர்த்து கங்கை ஆற்றங்கரையில் இறைவனடி சேர்ந்தார்.மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமார சாமி பிள்ளைத்தமிழ், காசிக் கலம்பகம், சிதம்பர மும்மணிக்கோவை, சகலகலாவல்லி மாலை என்பன இவர் இயற்றிய பிற நூல்களாகும்.

குமரகுருபரர் காசிக்குச்சென்று அங்கோர் மடத்தை நிறுவ முயன்றார். அதற்கான இடம் வேண்டும்; பொருளும் வேண்டும். அப்போது ஷா ஜஹான் டில்லி/ஆக்ராவில் முகலாய பாத்ஷாவாக இருந்தார்.

அவருடைய மூத்த மகனாகிய தாரா ஷிக்கோஹ் காசி உட்பட்ட பிரதேசங்களில் பாத்ஷாவின் பிரதிநிதியாக ஆளுனராக இருந்தார். அவரைப் பார்த்து தமக்கு வெண்டிய உதவியையும் அனுமதியையும் குமரகுருபரர் பெறவேண்டியிருந்தது. தாரா ஷிக்கோஹ்வுக்குத் தமிழ் தெரியாது. குமரகுருபரருக்கு ஹிந்துஸ்தானி தெரியாது. தமக்குப் பன்மொழியாற்றல் வேண்டும் என்பதால் குமரகுருபரர் சரஸ்வதியை வேண்டி 'சகலகலாவல்லி மாலை'யைப் பாடினார். சரஸ்வதியின் அருளால் அவருக்குப் பன்மொழியாற்றல் ஏற்பட்டது.
தம்முடைய சித்த ஆற்றலால் ஒரு புலியை வசப்படுத்தி அதன் மீது அமர்ந்துகொண்டு தாரா ஷிக்கோஹ்வைக் காணச்சென்று அவருடன் ஹிந்துஸ்தானியிலேயே உரையாடினார். அவருடைய விருப்பத்தை அறிந்துகொண்ட தாரா ஷிக்கோஹ்மடம் கட்டிக்கொள்ள இடமும் தந்து பொருளும் கொடுத்து உதவினார்.
அக்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தில் இந்துக்கள் கோயில் முதலானவற்றைக் கட்டுவதற்குத் தடைகள் இருந்தன. அதனால்தான் குமரகுருபரர் தாரா ஷிக்கோஹ்விடம் விசேஷ அனுமதியையும் உதவியையும் பெறவேண்டியிருந்தது. காசியில் கட்டப்பட்ட அந்த மடம் 'காசிமடம்' என்ற பெயரில் மிகவும் சிறந்து விளங்கியது. 

இவர் இயற்றிய சகலகலா வல்லி மாலை கீழே தரப்பட்டுள்ளது

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளைஉள்ளத்
தண்தாமரைக்குத் தகாதுகொலோ? ஜகம்ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே! 1


நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய்! பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே! கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே! 2


அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருட்கடலில்
குளிக்கும்படிக்கு என்றுகூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே! 3


தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 4


பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாத பங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடும்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகலகலாவல்லியே! 5


பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே! 6







பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே! 7


சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும்செல்வப் பேறே! சகலகலாவல்லியே. 8


சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலா வல்லியே! 9


மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே! 10


பொருளை ஒட்டிப் பிரித்து எழுதுகையில் கீழ்க்கண்டவாறு அமையும்:

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளைஉள்ளத்
தண்தாமரைக்குத் தகாதுகொலோ? சகம்ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே! 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய்! பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே! கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே! 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருட்கடலில்
குளிக்கும்படிக்கு என்றுகூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே! 3


தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 4

பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாத பங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடும்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகலகலாவல்லியே! 5

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே! 6

பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே! 7

சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும்செல்வப் பேறே! சகலகலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலா வல்லியே! 9


மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே! 10
  
எத்துணை சக்தி உள்ளது தமிழ் மொழிக்கு என்று பார்த்தீர்களா? நீங்களும் உங்களுடைய தினசரி வழிபாட்டில் சகல கலாவல்லியிடம் வேண்டுங்கள்.



















இது போதுமா? நாம் எப்பொழுதும் வேணும்..வேணும் என்று தானே சொல்வோம்.






 - மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்


முந்தைய பதிவுகளுக்கு:-

 TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/10/tut-3.html

 TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2)  - https://tut-temples.blogspot.com/2019/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temples.blogspot.com/2019/09/tut.html


கொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவமும், நவராத்திரி அழைப்பிதழும் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_33.html



 நவராத்திரி அழைப்பிதழுடன் வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகா சரணம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_28.html

 நவராத்திரி விழா கொண்டாட வாருங்கள் - அருள்மிகு சுந்தர மகாலிங்கசுவாமி நவராத்திரி திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_5.html