"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, May 24, 2021

இன்று வைகாசி விசாகம் - காப்பாய் கந்தா!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தமிழ் நாட்காட்டி உபயோகப்படுத்திய பின்னர் தான் நமக்கு நம் முன்னோர்களின் ஒவ்வொரு செய்தியும் அதற்கான காரணமும் புரிந்து வருகின்றது. எந்த ஒரு மொழியிலும் பக்திக்கு என்று இத்தனை புராணங்கள், வரலாறுகள், பண்டிகைகள், இலக்கியங்கள் இருக்குமா என்றால் அது சந்தேகமே. ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பிலும் நிச்சயமாக ஒரு பண்டிகை இருக்கும். அதற்கும் இடம்,பொருள்,வாழ்வியல் சூழல்  கொண்டு காரணம் இருக்கும். நாம் காரணத்தையும் அறியவில்லை, காரியத்தையும் அறியவில்லை. ஆனால் நம் முன்னோர்களை ஏளனம் செய்ய மட்டும் கற்றுக் கொண்டோம். வேண்டாம் இந்த விபரீதம். மேற்கத்திய கலாச்சாரத்தை மொத்தமாக கை கழுவாது, வேண்டும் இடங்களில் உபயோகிக்க கற்றுக் கொள்வோம். நம் தமிழ் கலாச்சாரத்திற்கு வாருங்கள்.

வைகாசி விசாகம் சிறப்பு பதிவாக இன்றைய பதிவு வழங்கப்படுகின்றது.  

இன்று நரசிம்ம ஜெயந்தி மற்றும் முருகப்பெருமானின் அவதார தினமாக போற்றப்படும் வைகாசி விசாகமும் ஒருசேர வருகின்றது.

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தியும், வைகாசி விசாகமும் இணைந்து வருவதால் பெருந்தொற்று  விரட்ட சிறந்த நாளாக கருதப்படுகிறது.

முருகப்பெருமானும் நரசிம்மரும் நவக்கிரகங்களில் செவ்வாயின் அம்சம் கொண்டவர்கள் ஆவர். செவ்வாய் கிரகத்திற்கு காரகர் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக உருவாகி கொரோனா வைரஸ் விரட்ட அனைவரும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்.

அன்றைய தினம் காலையில் ஸ்ரீநரசிம்ம வழிபாடு காலை 6 மணி முதல் 7 மணிக்குள் வழிபட ஏற்ற நேரமாக உள்ளது இந்த நேரத்தில் வீடு முழுவதும் வெண் கடுகு கலந்து சாம்பிராணி புகை வீடு முழுக்க பரவ விட வேண்டும். 

 அன்றைய தினமே மாலை நேரத்தில் 6 மணிக்கு, முருகனின் வெற்றி தரும் மந்திரம்

 ஸ்ரீ கந்த சஷ்டி கவசம் முழுவதுமாகப் பாராயணம் செய்ய வேண்டும், அவ்வாறு பராயணம் செய்ய இயலாதவர்கள் கீழ்க்கண்ட இரண்டு வரி முருக மந்திரம் பாராயணம் செய்து சொல்லலாம்.

 காக்க காக்க கனகவேல் காக்க
 நோக்க நோக்க நொடியில் நோக்க

மாலை நேரத்திலும் சாம்பிராணியில் வெண்கடுகு கலந்து வீடு முழுக்க சாம்பிராணி புகை காட்ட வேண்டும்.

 எதுவுமே தனித்து செயல்பட்டால் பலம் இல்லை, எதுவும் நடக்கப் போவதில்லை,, அனைவரும் ஒன்று பட்டு இந்த நல்ல நாளை பயன்படுத்திஇருக்கும் உயிர்களை யாவது காப்பாற்றுவோம். 

 கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் நரசிம்மரும், வெற்றியையே மாலையாக சூடிக்கொண்ட முருகனும் இவர்கள் இருவரையும் ஒருசேர ஒரே கணத்தில் வழிபட  பெருந்தொற்று  இந்த உலகை விட்டு ஒழியும் என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கை. 

 தயவுசெய்து அனைவரும் நண்பர்கள் உறவினர்கள் என எல்லோரும் கூட்டு பிரார்த்தனை செய்து பெருந்தொற்றை  விரட்டுவோம்



முருகப்பெருமானுக்கு, வைகாசி விசாகத்திருநாள் ஓர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் முருகப்பெருமான் அவதரித்ததாக சொல்லப்படுகிறது.

ஒருமுறை அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானிடம் சென்று முறை யிட்டனர். சிவபெருமான், அசுரர்களுடைய கொடுமையை களைந்து தேவர்களை காத்தருள விரும்பினார். அதன்படி தமது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அவை தேவர்களால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கையானது, அந்த பொறிகளை சரவணப் பொய்கையிலே கொண்டுபோய் சேர்த்தது.

சரவணப்பொய்கையில் சேர்ந்த ஆறு தீப்பொறிகளும், ஆறு குழந்தைகளாக உருப்பெற்றன. இதுவே ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. அது ஒரு வைகாசி மாதம் விசாகம் நட்சத்திர தினமாகும். எனவே தான் வைகாசி விசாகத்தில் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.

உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு முருகன், சிவபெருமானின் திருவிளையாடலால் குழந்தையான நாள். ஆதலால் சைவ மக்கள் வழிபாட்டுக்கு வைகாசி விசாக நாள் மிகவும் சிறந்ததாகும்.

வைகாசி மாதம் வரும் ‘விசாக’ நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால், வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும். பகை விலகும். பாசம் பெருகும். எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால், குலம் தழைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு.

அன்றைய தினம் அதிகாலையில் விநாயகப்பெருமானை வழிபட்டு, வீட்டின் பூஜை அறையில் முருகப்பெருமான் படம் வைக்க வேண்டும். அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கு வைத்து, அதில் ஐந்து வித எண்ணை ஊற்றி, ஐந்துவித புஷ்பம் சமர்ப்பித்து, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும்.

இந்த நன்னாளில் முருகப் பெருமானை நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்து வழிபட்டால் நல்லன யாவும் நடை பெறும். பசும் பாலால் அபிஷேகம் செய்தால் ஆயுள் கூடும். பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால், பட்ட கடன்கள் தீரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால், கையில் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் கைகூடும்.

சர்க்கரையால் அபிஷேகம் செய்தால், சந்தித்தவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவர். இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால், இனிய சந்ததிகள் பிறக்கும். எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால், எம பயம் நீங்கும். மாம்பழத்தில் அபிஷேகம் செய்து பார்த்தால், மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வநிலை உயரும். திருநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால், திக்கட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிடைக்கும்.

அன்னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால், அரசு வழி ஆதரவு நமக்கு கிடைக்கும். சந்தனத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால், சரும நோய் அத்தனையும் தீர்ந்து போகும். பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால், பார்போற்றும் செல்வாக்கு நமக்கு சேரும். தேன் அபிஷேகம் செய்து பார்த்தால், தித்திக்கும் சங்கீதம் விருத்தி யாகும்.

குழந்தை பாக்கியத்திற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியர் இன்றும் இருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்கள், வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மழலைப்பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

முருகா!

மு’ என்றால் ” முகுந்தன்

‘ரு’ என்றால் ” ருத்ரன் ”

‘கா’ என்றால் ” பிரம்மா ”

இதனால் “முருகா ” என்ற நாமத்தைச் சொன்னால் மூன்று பெருங்கடவுள்களின் பெயர்களைச் சொன்ன புண்ணியம் கிடைக்கும்.

இது மட்டுமல்ல.

” முகுந்தன் ” தமது மார்பில் மகாலட்சுமியை வைத்துக் கொண்டிருக்கிறார்.

” ருத்ரன் ” எனும் சிவபெருமான் உமையவளுக்கு உடலில் ஒரு பாகத்தையே கொடுத்திருக்கிறார்.

 ” பிரம்மா ” தமது மனைவியான சரசுவதியை நாக்கில் வைத்திருக்கிறார்.

இதனால் ” முருகா ” என்றால் ஆறு பேர்களைத் தொழுத புண்ணியம் கிடைக்கிறது.

இதனால்தான் முருகா என்பவை நாமங்கள் என்றார் அருணகிரிநாதர்.

முருகா!முருகா!முருகா!முருகா!முருகா

முருகா!முருகா!முருகா!முருகா!முருகா

நாளெல்லாம் நின் புகழை பாட போதுமா?

2018 ஆம் ஆண்டில்  நமக்கு கிடைத்த வைகாசி விசாக  கொண்டாட்டங்களை ஒரு சேர இங்கே தொகுத்து தருகின்றோம்.





அமெரிக்காவில் உள்ள மிட்சிகன் மாகாணத்தில் உள்ள ஸ்ரீ பராசக்தி ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாக காட்சிகள் மேலே 

கூடுவாஞ்சேரி வேலி அம்மன் திருக்கோயிலில் நாம் பெற்ற தரிசனம்.




 வைகாசி விசாகம் அன்று பிரம்மமுகூர்த்த வேளையில் (காலை 4.30-6) மணிக்குள் எழுந்து நீராடவேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள், ஒருவேளை மட்டும் உணவு உண்ணலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரம், ‘ஓம் சரவணபவாய நம’, ‘ஓம் முருகா’ ஆகிய மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுவதும் ஜெபித்து வர வேண்டும்.

திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம் பாடல்களில் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்யலாம். முருகன் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும். முருகனின் திருத்தலங்களுக்கு அருகில் இருப்பவர்கள் கோவிலுக்கு குழுவாகச் செல்லலாம். முருகன் கோவில் அமைந்துள்ள மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு புத்திரதோஷம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் மழலைச்செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இன்றைய  வைகாசி விசாகம் ஸத்குரு ஸ்வாமிகள் மற்றும் ஸ்வாமிநாத ஸ்வாமி அபிஷேகம் வீபூதி காப்பு அலங்காரம் இதோ...



கொளத்தூர் திருப்பதி நகரில் உள்ள திருமால் மருகன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் முருகப் பெருமானுக்கு இன்றைய வைகாசி விசாக தினத்தில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பக்தர்கள் அனைவரும் விரதமிருந்து பால் குடம் தூக்கினார்கள். பின்னர் பக்தர்கள் கையாலேயே வேலிற்கு பால் அபிஷேகம் செய்தார்கள்.









அனைவருக்கும் நம் தளம் சார்பில் வைகாசி விசாக திருநாள் வாழ்த்துக்கள். 



இன்று வைகாசி விசாகம்.முருகப் பெருமானுக்கு விசேஷமான பொன்னான நாள் இன்று.அனைவரும் வீட்டில் முருகப் பெருமான் வழிபாடு செய்து கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து முருகப் பெருமானின் அருளால் சகல நலன்களும் வளங்களும் பெற பிரார்த்திக்கின்றோம்.

நன்றி

- அடுத்த பதிவில் மீண்டும் இணைவோம்.

மீள் பதிவாக :-

வைகாசி விசாகத்தை வரவேற்போம் - 04.06.2020 - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post.html

வைகாசி விசாகத்தை வரவேற்போம்  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_51.html

வைகாசி விசாக பெருந்திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_15.html

No comments:

Post a Comment